

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிட்டு போரை நிறுத்த வேண்டும், எவ்வகையிலும் இலங்கைக்கு இராணுவ உதவி வழங்கக் கூடாது என அரசை வலியுறுத்தவும், அகில இந்திய கட்சிகளிடம் ஆதரவுத் திரட்டவும் புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்களின் தலைவர்கள் தில்லி பயணம் மேற்கொண்டனர்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவெறிப் போரை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, 15.12.2008 திங்களன்று மதியம் 12.30 மணிக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி அவர்களை பாராளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில், புதுச்சேரியை சேர்ந்த அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கத் தலைவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் சு.பாவாணன், செயலர் ப.அமுதவன், மறுமலர்ச்சி தி.மு.க. பொறுப்புக் குழு உறுப்பினர் வ.செல்வராசு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் கோ.சுந்தரமூர்த்தி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் செயலாளர் உ.முத்து, லோக் ஜனசக்தி தலைவர் புரட்சிவேந்தன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், பெரியார் திராவிடர் கழகச் செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ ஆகியோர் மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
இலங்கைத் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். இப்போராட்ட்த்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான போரை தீவிரமாக நடத்தி வருகிறது.
தமிழர்களுக்கு எதிரான இந்த இனவெறி போரில் இதுவரையில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். வீடு, வாசல் இழந்து 3.5 லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 9 லட்சம் தமிழர்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர்.
தமிழர்கள் மீது இலங்கை அரசு இனவெறி போக்கோடு போரை தொடர்ந்து வருகிறது. ஐ.நா. அவையின் இனவெறிக்கு எதிரான பிரகடனத்தின்படி இலங்கை அரசின் போர் அப்பட்டமான இனவெறி என்பதோடு கிரிமினல் குற்றமாகும்.
இந்திய அரசு இலங்கை இனப் பிரச்சனையில் தலையிட்டு அங்கு நடைபெறும் போரை தடுத்து நிறுத்த வேண்டும். இந்தியா இலங்கைக்கு எந்த வகையிலும் இராணுவ உதவி வழங்க கூடாது.
இலங்கைப் பிரச்சனைக்கு இராணுவ ரீதியான தீர்வுக்குப் பதிலாக அரசியல் தீர்வுக்கு இந்தியா முன்முயற்சி எடுக்க வேண்டும். இந்தியா சார்க் நாடுகளுக்குத் தலைமை வகிப்பதால், இலங்கைப் பிரச்சனையில் தலையிட்டு கால் நூற்றாண்டு இனப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட பிரனாப் முகர்ஜி அதனை முழுமையாக படித்து பார்த்தார். பின்னர் அவர் 'இலங்கையில் மக்கள் பாதிக்கப்படுவது உண்மைதான். அரசுக்கு எல்லாம் தெரியும். இதுகுறித்து அரசு அக்கறையோடு இருக்கிறது. தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றி ஒன்றும் சொல்ல இயலாது. போரை இலங்கை அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. போரினால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பது அரசின் கவனத்தில் உள்ளது. தாங்கள் அளித்த மனுவில் சொல்லப்பட்டவைப் பற்றி பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக' உறுதியளித்தார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி அவர்களுடனான சந்திப்பிற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், எம்.பி.யுமான டாக்டர் பருண் முகர்ஜி ஏற்பாடு செய்திருந்தார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியிடம் ' இலங்கைக்குச் செல்லும் திட்டம் உள்ளதா?' என டாக்டர் பருண் முகர்ஜி கேட்டார். அதற்கு அவர் ' நாம் எடுக்கும் நடவடிக்கைக்கு இலங்கை உடனுக்குடன் எதிர் நிலை எடுக்கிறது. பொறுத்திருங்கள், பார்ப்போம்' என்று கூறினார்.
பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.க்கள் பி.மோகன், பெல்லார்மீன், ம.தி.மு.க. எம்.பி. சிப்பிப்பாறை இரவிச்சந்திரன் ஆகியோரையும் இக்குழுவினர் சந்தித்து தில்லி வந்த நோக்கத்தை விளக்கினர். அப்போது அவர்களோடு இருந்த அதிமுக ராஜசபா எம்.பி. ஒருவர் 'இக்குழுவில் எங்கள் கட்சியினர் வந்திருக்கிறார்களா?' என்று அப்பாவித்தனமாக கேள்வி எழுப்பினார்.
மேலும், 15.12.2008 அன்று அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலர் பிஸ்வாஸ், 16.12.2008 அன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், லோக் ஜனசக்தி தலைவர் இராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இச்சந்திப்பின் போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ‘இந்த பிரச்சனை என் துறையின் கீழ் வரவில்லை. எனவே, இலங்கையில் போர் நிறுத்தம் பற்றி வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியிடம் நாளை நேரில் பேசுகிறேன். எங்கள் கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும்’ எனக் கூறினார்.
லோக் ஜனசக்தி தலைவர் இராம்விலாஸ் பஸ்வான் ‘தங்கள் கட்சி இது குறித்து ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகவும், தமிழர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்’ உறுதியளித்தார்.
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிஸ்வாஸ் நீண்ட நேரம் கலந்துரையாடினார். ‘எங்கள் கட்சி நேதாஜி வழியில் வந்த புரட்சிகர கட்சி. நாங்கள் அடக்குமுறை எந்தவடிவில் இருந்தாலும் அதை எதிர்ப்போம். நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து மக்கள் போராடிய போது, மன்னருக்கு ஆதரவாக இந்திய அரசு நிலை எடுக்ககக் கூடாது என்று நாங்கள் வலியுறுத்தினோம். அதற்கு தீவிரமாக ஆதரவுத் திரட்டினோம். தற்போது தேர்தல் நேரம். அரசும், கட்சிகளும் தேர்தலிலேயே கவனமாக இருப்பார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் குறித்து எங்கள் கட்சி தீவிரமாக வலியுறுத்தும். தமிழர்கள் பாதிக்கப்படுவது பற்றி இலங்கையில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவை திரட்ட வேண்டும். மேலும் ஜனவரி மாதம் நான் இலங்கைச் சென்று நிலைமைகளை நேரில் கண்டறிந்து தமிழர்களைப் பாதுகாக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவேன்’ என உறுதிபட கூறினார்.
புதுச்சேரி கட்சி, இயக்கத்தினர் மேற்கொண்ட தில்லிப் பயணத்தைத் தொடர்ந்து, 18.12.2008 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், எம்.பி.யுமான சீத்தாராம் யெச்சூரி தலைமையில் தமிழக எம்.பி.க்கள் பி.மோகன், டி.கே.ரங்கராஜன் ஆகியோர் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களைச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
அதில், 'இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும். இனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரமான அரசியல் தீர்வுக் காண வேண்டும். இதற்கு இந்தியா தன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்' எனக் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பேராசிரியர் இராமதாஸ், எம்.பி. தலைமையில் பா.ம.க. எம்.பி.க்கள் அகில இந்தியக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இந்தியா என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.