

புதுச்சேரி வி-5 குழு ஓவியர்கள் மற்றும் ஓவியக் கலைஞர்கள் சார்பில் ஈழத்தமிழர் நிவாரண நிதிக்காக வீதியோர ஓவியக் கண்காட்சி கடற்கரைச் சாலை காந்தி திடலில் இரண்டு நாட்கள் (6,7-12-2008) நடைபெற்றது.
கண்காட்சிக்கு ஓவியர் தனசேகர் தலைமைத் தாங்கினார். ஓவியர் ஸ்ரீதர் வரவேற்றார். ஓவியர்கள் எழிலரசன், திருநாவுக்கரசு, வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச்சேரியைச் சேர்ந்த ஓவியர்கள் கலந்துக் கொண்டு ஆதரவுத் தெரிவித்தனர்.
கண்காட்சியில் இளம் ஓவியர்கள் தங்கள் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். மேலும் காண்காட்சிக்கு வருவோர்களின் முகபாவங்களை ஓவியர்கள் உடனுக்குடன் வரைந்தும் அதன்மூலம் தொகை ஈட்டினர்.
ஓவிய விற்பனை மற்றும் ஓவியம் வரைந்ததின் மூலம் கிடைக்கும் நிதியை ஈழத்தமிழர் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர். அத்தொகையை தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர்.
நீர் வண்ண ஓவியங்கள் ரூ.100 முதல் நெய் வண்ண ஓவியங்கள் அதிக பட்சம் ரூ.50 ஆயிரம் வரையில் விலையுள்ள ஓவியங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. குறைந்த விலை ஓவியங்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
ஆயிரக்கணக்கானவர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டனர். கண்காட்சிக்கு வந்திருந்தவர்களுக்கு ஈழத் தமிழர் படும் துயரங்களை விளக்கிய துண்டறிக்கை அளித்தனர்.
இக்கண்காட்சி மூலம் ரூ50 ஆயிரம் நிதி திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை வீரமோகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
புதுச்சேரி ஓவியர்களின் இந்த முயற்சியை அனைவரும் பாராட்டினர். பல்வேறு அமைப்பினர் ஓவியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
1 comment:
ஓவியக் கண்காட்சி நடத்தி ஈழத் தமிழ் உறவுகளுக்கு கை கொடுத்த உறவுகளுக்கு நன்றி!
Post a Comment