Tuesday, December 09, 2008

புதுச்சேரி: தமிழக தலைவர்களை இழிவுப்படுத்திய இலங்கை இராணுவ தளபதி சரத் பொன்சேகா உருவபொம்மை எரிப்பு!









தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்திப் பேசிய இலங்கை இராணுவ தளபதி சரத் பொன்சேகா உருவபொம்மை எரிப்புப் போராட்டம் புதுச்சேரியிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் சார்பில், 9-12-2008 செவ்வாயன்று, காலை 10.30 மணியளவில், ஒதியஞ்சாலை, அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.

போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் சு.பாவாணன் தலைமைத் தாங்கினார். போராட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் ப.அமுதவன், ம.தி.மு.க. அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் நா.மணிமாறன், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கபிரியேல், வ.செல்வராசு, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், அகில இந்திய பார்வர்டு பிளாக் செயலாளர் யூ.முத்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜி.சுந்தரமூர்த்தி, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, லோக் ஜனசக்தி தலைவர் புரட்சிவேந்தன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, முரசொலி மாறன் பேரவைத் தலைவர் நடராசன் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்களின் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.

போராட்டத்தில் பல்வேறு கட்சி, இயக்கத் தோழர்கள் 250 பேர் கலந்துக் கொண்டனர். போராட்டத்தில் கீழ்காணும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன:

1) தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை கோமாளிகள் என இழிவுபடுத்திப் பேசிய இலங்கை இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை வன்மையாக கண்டிக்கிறோம்.

2) மத்திய அரசு உடனடியாக இந்தியாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரை அழைத்து விளக்கம் கேட்க வேண்டும். இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.

3) இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தை மூட இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய அரசு இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.

1 comment:

Anonymous said...

இழிவாகப் பேசிய இராணுவ தளபதி சரத் பொன்சேகா சார்பில் இராணுவ அமைச்சர் கோட்டாபய மன்னிப்பு கேட்டுள்ளார். அது போதாது..