Thursday, January 29, 2009
ஈழத் தமிழர் படுகொலை: தீக்குளித்து மரணமடைந்த முத்துக்குமார் - படங்கள் - வீடியோ!
தற்கொலை செய்துக் கொண்டு
மாண்ட முத்துக்குமார்.
எரிந்த நிலையில் முத்துக்குமார்.
சம்பவம் நடந்த சாஸ்திரி பவன்.
மருத்துவமனையில் மருத்துவர் இராமதாசு, வைகோ,
தொல்.திருமாவளவன், பழ.நெடுமாறன் உள்ளிட்டோர்...
முத்துக்குமாரின் மரண வாக்குமூலத்தைப்
படிக்கிறார் வைகோ.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு இன்று (29.01.2009) வியாழக்கிழமை காலை முத்துக்குமார் எனும் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் "பெண்ணே நீ" மாத இதழில் நிருபராக பணியாற்றி வந்தவர் முத்துக்குமார் . அதற்கு முன்பு தொலைக்காட்சி தொடர்களில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். சென்னை கொளத்தூர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்த இவருக்கு வயது 30.
தமிழ் மீது அதிகம் ஆர்வம் கொண்ட இவர் எப்போதும் தமிழர்கள் குறித்து ஆர்வமாக பேசுவார். கடந்த சில மாதங்களாக இலங்கையில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படுவது முத்துக்குமாரின் மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அலுவலகத்துக்கு இன்று காலை 10:30 மணியளவிற்கு வந்த அவர், தன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அப்போது, ஈழத் தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களை காப்பாற்றக் கோரியும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவைக் கண்டித்து முழக்கமிட்டபடி சாஸ்திரி பவனுக்குள் அங்கும் இங்கும் அலறியபடி ஓடினார். இதற்கிடையே உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமார் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார்.
அங்கு வந்த காவல்துறையினர் கரிக்கட்டையாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முத்துக்குமாரை மீட்டனர். அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, ஈழத் தமிழர் நலன் காக்க 14 அம்ச கோரிக்கை அடங்கிய ஒரு துண்டுப் பிரசுரத்தை முத்துக்குமார் வைத்திருப்பது தெரிந்தது. அது தொடர்பான விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் நிலையில் முத்துக்குமார் உடல்நிலை மோசமானது. பின்னர் அவர் இறந்துப் போனார்.
முன்னதாக காவல்துறையினர் முத்துக்குமாரிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர் கூறியதாவது:
எனது பெயர் முத்துக்குமார், எனது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் கொழுவை நல்லூர் ஆகும். எனது தந்தை தாம்பரத்தில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். எனக்கும் அவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது. எனவே நான் கொளத்தூரில் உள்ள எனது சகோதரி தமிழரசியுடன் வசித்து வருகிறேன். இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும்.
மத்திய அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன். வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் மத்திய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன். இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது.
இவ்வாறு முத்துக்குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழருக்காக இளைஞர் ஒருவர் தீக்குளித்து மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழகமே இந்த சம்பவம் அறிந்து பதற்றம் அடைந்துள்ளது.
தீக்குளிப்பு போன்றவற்றை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்த்து உணர்வு வயப்பட வேண்டும். மனித நேயமுள்ளவர்கள் அனைவரின் அன்பு வேண்டுகோள் இது!
Labels:
ஈழம்,
தொல்.திருமாவளவன்,
மருத்துவர் இராமதாசு,
முத்துக்குமார்,
வைகோ
Tuesday, January 20, 2009
ஜனவரி 25-இல் மேலவளவில் "ஆதிக்க ஒழிப்பு சமத்துவ விழா"
சமத்துவப் போராளிகள் அமைப்பு சார்பில் மதுரை அருகேயுள்ள மேலவளவில் "ஆதிக்க ஒழிப்பு சமத்துவ விழா" நடைபெற உள்ளது. இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.
வரும் 25.01.2009 ஞாயிறன்று, காலை 10 மணி முதல் மதியம் 3.30 வரை, மேலவளவு தலித் மக்கள் குடியிருப்புப் பகுதியில் நடைபெறும் விழாவிற்கு வழக்கறிஞர் பொ.இரத்தினம் தலைமை தாங்குகிறார்.
மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர் கடந்த 30.06.1996 அன்று ஆதிக்கச் சாதி வெறியர்களால் பட்டப் பகலில் கொடூரமாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்டனர். தலித் ஒருவர் தங்களுக்குப் பஞ்சாயத்துத் தலைவராக வருவதா என்ற ஆதிக்க எண்ணத்தில் திட்டமிட்டு இந்த படுகொலையை அரங்கேற்றினர் ஆதிக்கச் சாதியினர். தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில் தொடர் போராட்டத்தின் விளைவாக குற்றவாளிகள் 17 பேருக்கு சேலம் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இதனை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. தற்போது இவ்வழக்கு குற்றவாளிகளால் மேல்முறையீடு செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாதி ஆதிக்க வெறிக்குப் பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவரது குடும்பத்தினர், சாதி ஆதிக்கத்திற்கு எதிராக போராடி வருபவர்கள் என பல்தரப்பினரும் ஒன்று திரளும் விழா நடைபெற உள்ளது.
காலையில், புரட்சியாளர் அம்பேத்கர் பெயர்ப் பலகையைத் தோழர் ப.பாரதி திறந்து வைக்கின்றார்.
மேலவளவு படுகொலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விடுதலைப் போராளிகளின் உருவப் படங்கள் வழங்கப்பட உள்ளன. கார்ல் மார்க்ஸ் படத்தினைத் தோழர் லெனின் (தமிழ்நாடு இளைஞர் பெருமன்றம்), அம்பேத்கர் படத்தினை வழக்கறிஞர் பானுமதி, தந்தை பெரியார் படத்தினை வழக்கறிஞர் தஞ்சை இராமமூர்த்தி ஆகியோர் வழங்குகின்றனர்.
தன் மகனுக்கு அம்பேத்கர் என பெயரிட்டுள்ள தலித் அல்லாத குடுபத்தினரை தோழர் தி.மு.உமர்பாரூக் (நீலப் புலிகள் இயக்கம்), கீழ்வெண்மனியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த தோழர்களைத் தோழர் பி.சம்பத் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), ஈரோட்டிலுள்ள சாதி மறுப்பு திருமணப் பாதுகாப்பு இயக்கத்தினை வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆகியோர் அறிமுகப்படுத்துகின்றனர்.
மேலவளவு மக்களுக்கானப் பொது நூலகத்திற்குப் புத்தகங்களை பேராசிரியர் அ.மார்க்ஸ், எழுத்தாளர் யாக்கன், வழக்கறிஞர்கள் ஜெகதீஸ், லஜபதிராய், ஜெயசீலன் ஆகியோர் மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் ப.மலைச்சாமியிடம் வழங்குகின்றனர்.
விழாவில் பங்கேற்போருக்கு தியாகி இமானுவேல் பேரவை தலைவர் பூ.சந்திரபோசு, தோழர் தமிழரசி, வழக்கறிஞர்கள் சு.க.மணி, பாலமுருகன், தங்கவேல், வனஜா, விஜயேந்திரன், திலகேஸ்வரன், அழகுமணி, கதிர்வேல், சத்தியசந்திரன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்கின்றனர்.
தமிழக அளவில் சாதி மறுப்புத் திருமணம் செய்து சவால்களைச் சந்திப்போரை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோ.சுகுமாரன் அறிமுகம் செய்து வைக்கிறார்.
விழாவில் அருட்திரு பாக்கியநாதன், தோழர்கள் ஜேம்ஸ், புதுவை சுப்பையா ஆகியோர் எழுச்சிப் பாடல்களைப் பாடுகிறார்கள்.
விழா முடிவில் மாட்டுக்கறி உணவை இழிவுப்படுத்தியுள்ள சதியை உடைக்கும் விதமாக அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு விருந்து அளிக்கப்படும் என விழாக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
சாதி ஆதிக்கத்திற்கு எதிரான இந்த விழாவில் பங்கேற்க அனைவரையும் அழைக்கின்றோம்.
தொடர்புக்கு:
வழக்கறிஞர் பொ.இரத்தினம் - 94434 58118.
வழக்கறிஞர் கு.ஞா.பகத்சிங் - 94439 17588.
Labels:
தலித்,
நிகழ்வுகள்,
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு,
மேலவளவு
Sunday, January 18, 2009
புதுச்சேரியில் எழுச்சியாக நடந்த அ.மார்க்ஸ் எழுதிய "கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்" நூல் வெளியீட்டு விழா!
பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள ‘கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல் ஒரிசா – கர்நாடகம்’ நூல் வெளியீட்டு விழா புதுச்சேரியில் 12.01.2009 திங்களன்று, மாலை 6.00 மணி முதல் 9.00 மணிவரையில், லப்போர்த் வீதியிலுள்ள பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் அரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பு தலைவர் சாமி ஆரோக்கியசாமி கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சே.சாதிக் இந்நூலை வெளியிட்டு கருத்துரை வழங்கினார். புதுச்சேரி – கடலூர் மறை மாவட்ட முதன்மைக் குரு மேன்மைமிகு பொன்.அந்தோணிசாமி அடிகள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு பேசினார். இந்நூலை தொகுத்து எழுதியுள்ள பேராசிரியர் அ.மார்க்ஸ் ஏற்புரை வழங்கினார். முடிவில் அமைப்புக் குழு உறுப்பினர் உளவாய்க்கால் பெ.சந்திரசேகரன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி – கடலூர் மறை மாவட்ட முதன்மைக் குரு மேன்மைமிகு பொன்.அந்தோணிசாமி அடிகள் 'அமைதியாக வாழும் சமூகங்களிடையே வெறுப்பை உண்டாக்கி பிளவு ஏற்படுத்தும் சக்திகளிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற சமயத்தில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் ஒன்றாக, ஒற்றுமையாக இருக்க வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார்.
டாக்டர் சே.சாதிக் 'மதவாதிற்கு எதிராக நாம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் இந்தப் பிரச்சனையை அனுகும் போது உணர்ச்சிக்கு இடமளிக்க கூடாது. உணர்வுபூர்வமாக அனுக வேண்டும். மதவதிற்கு எதிரான இந்த நூலை எழுதிய அ.மார்க்ஸ், வெளியிட்ட மக்கள் உரிமைக் கூட்டமைப்பு நண்பர்களுக்கு என் பாராட்டுக்கள்' என்றார்.
மேலும், இந்த நூல் வெளியீட்டிற்கு ரூ.5000/- அன்பளிப்பாக அளித்தார். மேலும், நூல் வெளியீட்டு அரங்கில் கலந்துக் கொண்டவர்களில் நூல் வாங்க வசதி இல்லாதவர்களுக்கு நூல் வழங்கும்படியும், அதற்கான தொகையை அளிப்பதாகவும் உறுதியளித்தார். அரங்கத்தில் இருந்தவர்கள் இந்த அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கைத்தட்டி வரவேற்றனர்.
நிகழ்ச்சியின் முடிவில், கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள் மீது காவல் (காவி) துறை நடத்திய தாக்குதல் குறித்து 13 நிமிடங்கள் கொண்ட காட்சிகள் திரையிடப்பட்டன. அதைப் பார்த்த பல கன்னியஸ்திரிகள் கண்கலங்கினர். அமைதியை நேசிக்கும் கிறிஸ்தவர்களுக்கு இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மீளாத அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது.
நிகழ்ச்சிக்கு ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு புதுச்சேரி நகரம், கிராமம் என அனைத்துப் பகுதிகளிலும் வண்ண சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தன. வண்ண பதாகைகள் நகரெங்கும் வைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சி குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, தினகரன், மாலை மலர் உள்ளிட்ட தமிழ், ஆங்கில நாளேடுகளும், உள்ளூர் தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டிருந்தன.
வண்ண சுவரொட்டி...
Labels:
கிறிஸ்தவர்கள்,
நிகழ்வுகள்,
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு,
மதவெறி
Sunday, January 11, 2009
புதுச்சேரியில் அ.மார்க்ஸ் எழுதிய ‘கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல் ஒரிசா–கர்நாடகம்' நூல் வெளியீட்டு விழா!
புதுச்சேரியில் 12.01.2009 திங்களன்று, மாலை 6.00 மணியளவில், லப்போர்த் வீதியிலுள்ள பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் அரங்கில், பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள ‘கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல் ஒரிசா – கர்நாடகம்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
விழாவிற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்குகிறார். மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் மு.முத்துக்கண்ணு முன்னிலை வகிக்கிறார். கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பு தலைவர் சாமி ஆரோக்கியசாமி வரவேற்புரை ஆற்றுகிறார்.
சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சே.சாதிக் இந்நூலை வெளியிட்டு கருத்துரை வழங்குகிறார். புதுச்சேரி – கடலூர் மறை மாவட்ட முதன்மைக் குரு மேன்மைமிகு பொன்.அந்தோணிசாமி அடிகள் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார். இந்நூலை தொகுத்து எழுதியுள்ள பேராசிரியர் அ.மார்க்ஸ் ஏற்புரை வழங்குகிறார். முடிவில் அமைப்புக் குழு உறுப்பினர் உளவாய்க்கால் பெ.சந்திரசேகரன் நன்றி கூறுகிறார்.
நிகழ்ச்சியின் முடிவில், கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து 13 நிமிடங்கள் கொண்ட காட்சிகள் திரையிடப்பட உள்ளது.
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்நூலில் ஒரிசா, கர்நாடகா மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது இந்து மதவெறியர்கள் நடத்திய தாக்குதல்கள், இந்திய கிறிஸ்துவம், அதை இந்துத்துவம் எதிர்கொண்ட வரலாறு, மதமாற்ற தடைச் சட்டங்கள் குறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நூல் மொத்தம் 136 பக்கங்கள். விலை ரூ. 65.
Labels:
கிறிஸ்தவர்கள்,
நிகழ்வுகள்,
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு,
மதவெறி
Subscribe to:
Posts (Atom)