


சமத்துவப் போராளிகள் அமைப்பு சார்பில் மதுரை அருகேயுள்ள மேலவளவில் "ஆதிக்க ஒழிப்பு சமத்துவ விழா" நடைபெற உள்ளது. இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.
வரும் 25.01.2009 ஞாயிறன்று, காலை 10 மணி முதல் மதியம் 3.30 வரை, மேலவளவு தலித் மக்கள் குடியிருப்புப் பகுதியில் நடைபெறும் விழாவிற்கு வழக்கறிஞர் பொ.இரத்தினம் தலைமை தாங்குகிறார்.
மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர் கடந்த 30.06.1996 அன்று ஆதிக்கச் சாதி வெறியர்களால் பட்டப் பகலில் கொடூரமாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்டனர். தலித் ஒருவர் தங்களுக்குப் பஞ்சாயத்துத் தலைவராக வருவதா என்ற ஆதிக்க எண்ணத்தில் திட்டமிட்டு இந்த படுகொலையை அரங்கேற்றினர் ஆதிக்கச் சாதியினர். தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில் தொடர் போராட்டத்தின் விளைவாக குற்றவாளிகள் 17 பேருக்கு சேலம் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இதனை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. தற்போது இவ்வழக்கு குற்றவாளிகளால் மேல்முறையீடு செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாதி ஆதிக்க வெறிக்குப் பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவரது குடும்பத்தினர், சாதி ஆதிக்கத்திற்கு எதிராக போராடி வருபவர்கள் என பல்தரப்பினரும் ஒன்று திரளும் விழா நடைபெற உள்ளது.
காலையில், புரட்சியாளர் அம்பேத்கர் பெயர்ப் பலகையைத் தோழர் ப.பாரதி திறந்து வைக்கின்றார்.
மேலவளவு படுகொலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விடுதலைப் போராளிகளின் உருவப் படங்கள் வழங்கப்பட உள்ளன. கார்ல் மார்க்ஸ் படத்தினைத் தோழர் லெனின் (தமிழ்நாடு இளைஞர் பெருமன்றம்), அம்பேத்கர் படத்தினை வழக்கறிஞர் பானுமதி, தந்தை பெரியார் படத்தினை வழக்கறிஞர் தஞ்சை இராமமூர்த்தி ஆகியோர் வழங்குகின்றனர்.
தன் மகனுக்கு அம்பேத்கர் என பெயரிட்டுள்ள தலித் அல்லாத குடுபத்தினரை தோழர் தி.மு.உமர்பாரூக் (நீலப் புலிகள் இயக்கம்), கீழ்வெண்மனியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த தோழர்களைத் தோழர் பி.சம்பத் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), ஈரோட்டிலுள்ள சாதி மறுப்பு திருமணப் பாதுகாப்பு இயக்கத்தினை வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆகியோர் அறிமுகப்படுத்துகின்றனர்.
மேலவளவு மக்களுக்கானப் பொது நூலகத்திற்குப் புத்தகங்களை பேராசிரியர் அ.மார்க்ஸ், எழுத்தாளர் யாக்கன், வழக்கறிஞர்கள் ஜெகதீஸ், லஜபதிராய், ஜெயசீலன் ஆகியோர் மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் ப.மலைச்சாமியிடம் வழங்குகின்றனர்.
விழாவில் பங்கேற்போருக்கு தியாகி இமானுவேல் பேரவை தலைவர் பூ.சந்திரபோசு, தோழர் தமிழரசி, வழக்கறிஞர்கள் சு.க.மணி, பாலமுருகன், தங்கவேல், வனஜா, விஜயேந்திரன், திலகேஸ்வரன், அழகுமணி, கதிர்வேல், சத்தியசந்திரன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்கின்றனர்.
தமிழக அளவில் சாதி மறுப்புத் திருமணம் செய்து சவால்களைச் சந்திப்போரை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோ.சுகுமாரன் அறிமுகம் செய்து வைக்கிறார்.
விழாவில் அருட்திரு பாக்கியநாதன், தோழர்கள் ஜேம்ஸ், புதுவை சுப்பையா ஆகியோர் எழுச்சிப் பாடல்களைப் பாடுகிறார்கள்.
விழா முடிவில் மாட்டுக்கறி உணவை இழிவுப்படுத்தியுள்ள சதியை உடைக்கும் விதமாக அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு விருந்து அளிக்கப்படும் என விழாக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
சாதி ஆதிக்கத்திற்கு எதிரான இந்த விழாவில் பங்கேற்க அனைவரையும் அழைக்கின்றோம்.
தொடர்புக்கு:
வழக்கறிஞர் பொ.இரத்தினம் - 94434 58118.
வழக்கறிஞர் கு.ஞா.பகத்சிங் - 94439 17588.
2 comments:
சாமிங்களா ஒண்ணு புரிஞ்சிகோங்க பெருசா ஒண்ணும் மாறாது போங்கடா போங்க போயி புள்ளைங்களை படிக்க வைக்கிற வழியை பாருங்க.
அனானிக்கு...
படித்தால் மட்டும் சாதி ஒழிந்து விடுமா என்ன?
சாதி ஆதிக்கத்தை எதிர்த்து தொடர்ந்துப் போராடினால் தான் முடியும். இதைத் தான் அம்பேத்கர், பெரியார் போன்ற சாதி ஒழிப்புப் போராளிகள் வலியுறுத்தியுள்ளனர். தாங்கள் அவசியம் அம்பேத்கர் பெரியார் ஆக்கங்களைப் படிக்கவும்.
'போங்கடா' என்று விளித்துள்ள தங்கள் பார்வைக்கு:
நம்மை இந்து மதம் "சூத்திரர்கள் (தேவடியா மகன்)" என்று கூறுகின்றது. அதைப் பார்க்கும் போது 'போங்கடா' ஒன்றும் பெரிதல்ல. நன்றி.
Post a Comment