புதுச்சேரி மத்திய சிறையில் தொடரும் மரணங்களால் அங்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு அண்மையில் நடந்த பழங்குடியின இளைஞர் மரணம் சாட்சியாக விளங்குகிறது.
திண்டிவனத்தைச் சேர்ந்த பழங்குடியின குறவர் வகுப்பைச் சேர்ந்த சரவணன் கடந்த 23-ந் தேதியன்று சந்தேக வழக்கில் ஒதியஞ்சாலை போலீசாரால் கைது செய்யப்பட்டு காலாபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு வலிப்பு நோய் வந்ததாக கூறி சிறைக் காவலர்கள் 25-ந் தேதியன்று காலை 8.30 மணிக்கு அவரை புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அன்றைய தினம் இரவு 10.55 மணிக்கு சரவணன் இறந்து போனார்.
சரவணன் மரணம் சந்தேகத்திற்குரியது என்று அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் 27-ந் தேதியன்று மருத்துவமனை சவக் கிடங்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சாவுக்கு காரணமான சிறைத்துறையினர், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரினர். இப்போராட்டத்திற்குப் பல்வேறு அமைப்புகள் ஆதரவுத் தெரிவித்தன.
சரவணன் மரணம் குறித்த சந்தேகங்கள், மர்மங்கள் குறித்து பார்ப்பதற்கு முன், கடந்த சில அண்டுகளாக சிறையில் நடந்த தற்கொலைகள், மரணங்கள் பற்றி குறிப்பிடுவது அவசியம். 3.5.2005: சிறைச்சாலை நகரத்தின் மையப் பகுதியான நேரு வீதியிலிருந்த போது வெளியிலிருந்து வீசப்பட்ட பாக்கெட்டில் இருந்த விஷச் சாராயத்தை அருந்திய கைதிகள் அலி, ஜெகன், பெரியய்யா அகியோர் மரணமடைந்தனர். இச்சம்பவத்தை கண்டித்து அப்போது எதிர்க்கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் போராடின. சிறையில் இருந்த வேறு கைதிகளைக் கொல்ல நடந்த சதி என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையொட்டி அரசு உடனடியாக ஓய்வுப் பெற்ற மாவட்ட நீதிபதி வேணுகோபால் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்தது.
இக்கமிஷன் அறிக்கை தாக்கல் செய்து பல ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. அறிக்கை சட்டமன்றத்தின் முன் விவாதத்திற்கு வைக்கப்பட்டு அதன்மீது நடவடிக்கை எதுவும் எடுக்க அரசு முயலவில்லை. குற்றவாளிகளைக் காப்பாற்றவே அரசு இவ்வழக்கை மூடிமறைத்துள்ளது. சிறையில் இறந்த கைதிகள் குடும்பத்தினருக்கு இதுவரையில் குறைந்தபட்ச நிவாரணம்கூட வழங்கப்படவில்லை.
புதுச்சேரி அரசு கண்துடைப்பிற்காக சிறைக்கண்காணிப்பாளர் ஜெயகாந்தன் உள்ளிட்ட சில சிறை வார்டர்களை தற்காலிக பணிநீக்கம் செய்தது. ஆனால், ஒரு சில நாட்களிலேயே பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர். இன்றைய நாள் வரை இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
4.5.2007: ராம்மூர்த்தி (வயது: 31), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான இவர், மனைவியை விவாகரத்து செய்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவின்படி மனைவிக்கு வழங்க வேண்டிய தொகை ரூ. 20 ஆயிரத்தை வழங்கததால் தண்டனைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட ஓரிரு தினங்களிலேயே சிறையின் இரண்டாவது மாடியில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். இந்த வழக்கு தற்கொலை வழக்காகப் பதியப்பட்டு முடிக்கப்பட்டது.
21.4.2008: 1999-இல் தன் அண்ணன் மனைவியான பார்வதி என்ற இளம் பெண்ணை பாலியியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி கொலை செய்த கமல் ஷா ஆயுள் தண்டனைப் பெற்று காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு மிகவும் பிரபலமான வழக்கு என்பதை அறிவோம்.
கைதி கமல் ஷா திடீரென ஸ்பூனால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார் என சிறைத் துறை கூறியது. ஆனால், இதை யாரும் நம்ப தயாராக இல்லை. கமல் ஷா கொல்லப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதுவும் புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகேயுள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது விட்டை அபகரிக்கும் நோக்கத்தோடு இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற பேச்சு அடிப்பட்டது. ஆனால், இந்த கோணத்தில் வழக்கை போலீசார் விசாரிக்கவில்லை.
6.6.2009: கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனைப் பெற்று காலாப்பட்டு புதிய சிறையில் இருந்த அரியாங்குப்பத்தைச் சேர்ந்த முருகன் (வயது: 31) உயர்நீதிமன்றத்தில் தண்டனை உறுதி செய்யப்படும் என யாரோ சொன்னதை நம்பி, மனமுடைந்து சிறையிலுள்ள கண்காணிப்பு டவரில் ஏறி துண்டால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்.
நேரு வீதியிலிருந்த பழைய சிறை போதிய இடவசதி இல்லாததால் இதுபோன்ற சம்பங்கள் நடக்கின்றன என்று அப்போதைய சிறைத் துறை ஐ.ஜி. வாசுதேவ ராவ் கூறியதை பொய்யாக்கியது இச்சம்பவம். இதிலும் இரண்டு வார்டர்களை தற்காலிக பணிநிக்கம் செய்ததோடு நடவடிக்கை முடிக்கப்பட்டது. வார்டர்களை பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு ஒரு அரசு ஊழியர் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது தனிக்கதை.
கைதிகள் கமல் ஷா முருகன், ஆகியோரின் மரணம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுப் பெற்ற மாவட்ட நீதிபதி வீரநாத் ராவ் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை அரசு அமைத்தது. கமல் ஷா தற்கொலை பற்றிய விசாரணை அறிக்கை கடந்த 23.1.2009 அன்று தாக்கல் செய்யப்பட்டும், இதுவரையில் அதன்மீது நடவடிக்கை இல்லை.
இதெல்லாம், புதுச்சேரி சிறையில் கடந்த காலங்களில் நடந்த அவலங்களின் தொகுப்பு. மேலே குறிப்பிட்ட எந்த வழக்கிலும் இதுநாள் வரையில் சிறைத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை இல்லை. பாதிக்கப்பட்ட கைதிகளின் குடும்பத்தினருக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை.
கடந்த கால நிலையே இதுவென்றால் அண்மையில் பழங்குடியின இளைஞர் மரணத்திற்கு நீதிக் கிடைக்கும் என்ற நம்பிக்கை பொதுமகளிடம் துளியும் இல்லை என்பதை அரசு உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனை சவக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சரவணனின் உடலைப் பார்த்த போது, அவரது காது, மூக்கு, வாய் வழியாக ரத்தம் கசிந்திருந்தது. உடல் எங்கும் சிராய்ப்பு காயங்கள் இருந்தன. ஒரு பல் உடைந்திருந்தது. இவற்றை எல்லாம் பார்க்கும் போது சரவணன் வலிப்பு வந்து இறந்த்தாக கூறுவது நம்பும்படி இல்லை. அவர் கடுமையான சித்தரவதையை அனுபவித்து இறந்ததாகவே கருத வேண்டியுள்ளது.
மேலும், அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா? ஒன்றுமில்லை. அவர் மீது ஒதியஞ்சாலை போலீசார் சந்தேக வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளனர். அவரைப் பார்க்கும் போது சந்தேகப்படும்படி இருந்ததால் இந்த வழக்குப் போட்டதாக போலீசார் கூறுகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே அவரது மரணம். மிகவும் வறுமை நிலையில் உள்ள பழங்குடியின குறவர் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பார்ப்பதற்கு சந்தேகப்படும்படி இருக்கிறார் என்று போலீசார் சொல்வது அவர்களது சமூக பார்வையில் உள்ள குறைப்பாட்டையே காட்டுகிறது.
ஒருவரைக் கைது செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள 11 கட்டளைகள் இவரைக் கைது செய்யும் போதும் பின்பற்றப்படவில்லை. கைது செய்த போது தகவல் தராத போலீசார் இறந்த போது வீடு தேடி வந்து தகவல் சொன்னதாக அவரது மனைவி தெரிவித்தார்.
இதுபோன்ற மரணங்கள் நிகழும் போது சிறைத் துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை. இதனாலேயே இதுபோன்ற சம்பங்கள் தொடர்கின்றன. கைதி ஒருவர் சிறையில் இருப்பது என்பது நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தான் என்பதால் அது ‘நீதிமன்ற காவல்’ ஆகும். அதாவது சிறைக் கைதிகளின் உயிருக்கு முழுப் பொறுப்பு நிதிமன்றமாகும். ஆனால், நீதிமன்றம் இதுபோன்ற வழக்குகளில் போதிய அக்கறை செலுத்துவதில்லை. இது தொடருமானால், மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதே நம்பிக்கை போய்விடும் ஆபத்துள்ளது.
தற்போது அமைந்துள்ள காலாப்பட்டு சிறை பல ஏக்கர் அளவுக் கொண்ட பெரிய சிறை. இதனை நிர்வகிக்க தற்போதைய ஊழியர் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், தற்போதைய ஊழியர் எண்ணிக்கையில் ஒரு சிறைத் துணைக் கண்காணிப்பாளர், இரண்டு உதவி சிறைக் கண்காணிப்பாளர், 10 வார்டர்கள் பதவிகள் நிரப்பபடாமல் உள்ளன. இதனால், கைதிகளை கண்காணிப்பதில் மிகுந்த சிரமம் இருப்பதாக கூறுகின்றனர் வார்டர்கள்.
‘குற்றத்தை வெறு குற்றவாளிகளை வெறுக்காதே’ என்று காந்தி கூறியதை இங்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஒரு குற்றம் சாட்டப்பட்டவருக்கோ, குற்றவாளிக்கோ இவ்வாறு அநீதி இழைக்கப்படும்போது அனைவரும் அமைதியாக இருப்பது மிகப் பெரும் மனித உரிமை மீறலுக்கு மறைமுகமாக துணைப் போவதாகும். மெளனத்தைக் கலைந்து, உயர்ந்து நிற்கும் மதில் சுவற்றுக்குள் இருக்கும் சிறைக் கம்பிகளுக்குள் அடைப்பட்டிருக்கும் ‘கைதி’ எனும் மனிதனுக்கும் எதிராக குரல் கொடுப்போம் வாருங்கள்.
1934-இல் மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்களால் தொடங்கப்பட்டு தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி பிரிவினரால் நடத்தப்படும் "சுதந்தரம்" இதழில் வெளியானது.
1 comment:
காவல் நிலையத்தில்,வேலை செய்யுமிடத்தில்,சாலையில், ஏன் வீட்டில் கூட பாதுகாப்பில்லாத நிலையில் சிறையில் பாதுகாப்பு குறித்து யோசித்த நீங்கள் ரொம்பவே யோ........சிக்கிறிங்க. (சாரி..கிண்டல் இல்லிங்க)
Post a Comment