Friday, October 09, 2009

பழங்குடி இருளர் தாக்கப்பட்ட வழக்கு: குற்றவாளிகளை விடுவிக்க காரணமாக இருந்த அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணி (கல்யாணி) ஆகியோர் 08.10.2009, காலை 11 மணிக்கு, புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாவது:

பழங்குடி இருளர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய வழக்கில், எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளியை விடுவிக்க காரணமாக இருந்த மத்திய இணை அமைச்சர் வே.நாராயணசாமி, ஏம்பலம் எம்.எல்.ஏ. ஆர்.ராஜாராமன் மற்றும் கண்டமங்கலம் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளோம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பழங்குடி இருளர் வகுப்பைச் சேர்ந்தவர்களிடம் முன்பணமாக ஒரு தொகை கொடுத்துவிட்டு, செங்கல் சூளைகளில் அவர்களை கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்குவது வழக்கம். விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இருளர் வகுப்பைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் அவரது மனைவி சகுந்தலா ஆகியோர் புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் செங்கல் சூளையில் ரூபாய் 36 ஆயிரம் முன் பணம் பெற்றுக் கொண்டு கொத்தடிமையாக வேலைப் பார்த்து வந்தனர். அங்கு மேற்சொன்ன வெங்கடேஷ் இருவரையும் அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால், இருவரும் செங்கல் சூளையில் இருந்து வெளியேறி சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், மேற்சொன்ன வெங்கடேஷ் இந்த இருவரையும் தேடி அவர்களது சொந்த ஊரான ரெட்டணைக்கு இரண்டு முறை சென்றுள்ளார். அவர்கள் அங்கு இல்லாத காரணத்தால் கடந்த 24.09.2009 அன்று மேற்சொன்ன வெங்கடேஷ் மற்றும் அவரது அடியாட்கள் மூன்று பேர், விக்கிரவாண்டி அருகேயுள்ள தக்காமேடு இருளர் குடியிருப்பில் உள்ள அவர்களது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு ஏழுமலை மற்றும் சகுந்தலா ஆகியோரின் மகள் தனம் (வயது: 25) மற்றும் அவரது கணவர் விஜி (வயது: 28) ஆகியோர் இருந்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த தனத்திடம் ‘எங்கே உன் அப்பா, அம்மா’ என்று கேட்டு விசாரித்துள்ளனர். அதற்கு தனம் ‘எங்கள் அப்பா, அம்மா செங்கல் சூளையில் வேலை செய்ய வெளியூர் சென்றுள்ளனர்’ என்று பதில் கூறியுள்ளார். அப்போது மேற்சொன்ன வெங்கடேஷ் மற்றும் அவரது அடியாட்கள் மூவரும் தனத்தின் கணவர் விஜியை கடுமையாக அடித்து உதைத்து வலுக்கட்டாயமாக தாங்கள் கொண்டு வந்த காரில் ஏற்றிக் கடத்திச் சென்றுள்ளனர். அதைத் தடுக்கச் சென்ற தனத்தையும் தாக்கியுள்ளனர்.

பின்னர் அவரை கரிக்கலாம்பாக்கத்திலுள்ள ஒரு பழைய வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். பின்னர், தனம் தன் கணவர் செல் போனிற்குப் பல முறை தொடர்புக் கொண்டு கேட்டதற்கு ‘உன் அப்பா பெற்ற பணத்தைக் கொடுத்துவிட்டு உன் கணவரை அழைத்துச் செல்’ என்று வெங்கடேஷ் கூறியுள்ளார்.

இதுகுறித்து, தனம், கடத்தப்பட்ட தன் கணவரை மீட்கக் கோரியும், கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட மேற்சொன்ன வெங்கடேஷ் மற்றும் அவரது அடியாட்கள் மூவர் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989-ன் கீழ் நடவடிக்கை எடுக்கும்படியும் விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் 25.09.2009 அன்று பிற்பகல் தன் உறவினர்களோடு சென்று புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட விக்கிரவாண்டி போலீசார் புகார் மனு ஏற்புச் சான்றிதழ் வழங்கியுள்ளனர். பின்னர் அங்குப் பணியில் இருந்த விக்கிரவாண்டி காவல்நிலைய எஸ்.ஐ. ராஜாராம் கடத்தலில் ஈடுபட்ட வெங்கடேசை தொடர்புக் கொண்டுப் பேசியுள்ளார். அதன் பின்னர், அன்றைய தினம் மாலை 7 மணியளவில் மேற்சொன்ன வெங்கடேஷ் கடத்தப்பட்ட விஜியுடன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். பிறகு எஸ்.ஐ. ராஜாராம் புகார் அளித்த தனம் மற்றும் அவரது உறவினர்களை மறுநாள் காலை வந்து முதல் தகவல் அறிக்கை பெற்றுக் கொள்ளும்படி கூறியுள்ளார்.

அதன் பின்னர், மறுநாள் (26.09.2009) காலை மேற்சொன்ன தனத்தின் குடியிருப்புக்கு அருகிலுள்ள ரைஸ் மில் உரிமையாளரும், அதிமுக பிரமுகர்களுமான ரமேஷ், சேகர் ஆகியோர் புகாரை வாபஸ் வாங்கும்படி மிரட்டியுள்ளனர். பிறகு தனம் மற்றும் அவர்களது உறவினர்கள் விக்கிரவாண்டி காவல்நிலையம் சென்று முதல் தகவல் அறிக்கை கேட்டுள்ளனர். அப்போது, பணியிலிருந்த எஸ்.ஐ. ராஜாராம் ‘உங்கள் புகாரை டி.எஸ்.பி-க்கு அனுப்பி வைத்துவிட்டோம். செங்கல் சூளை உரிமையாளரையும் டி.எஸ்.பி.யிடம் அனுப்பி வைத்துள்ளோம். அங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், தன் கணவரை கடத்தியவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி. மற்றும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கு மேற்சொன்ன தனம் விரிவான புகார் மனு ஒன்றை கடந்த 26.09.2009 அன்று அனுப்பி வைத்துள்ளார்.

இதனிடையே, விக்கிரவாண்டி போலீசார் மேற்சொன்ன தனம் அளித்த புகார் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். (FIR No. 425/09 U/s 352, 363 IPC r/w 3 (I) (X) SC ST (Prevention of Atrocities) Act). ஆனால், காவல்நிலையத்தில் சரணடைந்த குற்றாவாளி வெங்கடேஷ் மற்றும் அவரது அடியாள் ஒருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்புவதற்குப் பதிலாக, குற்றவாளிகளைக் காவல்நிலையத்தில் இருந்து விடுவித்துள்ளனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்குப் போட்டால், குற்றவாளிகள் முன் ஜாமீன் பெற முடியாது. இந்த சட்டப் பிரிவுகள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விசாரித்ததில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் வே.நாராயணசாமி, தி.மு.க. ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.ராஜாராமன் மற்றும் கண்டமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. புஷ்பராஜ் ஆகியோர் இவ்வழக்கில் தலையிட்டு, மேற்சொன்ன குற்றவாளிகள் சிறைக்கு செல்லாமல் இருக்க போலீசாருக்கு நிர்பந்தம் கொடுத்துள்ளது தெரிய வந்தது. இது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கடந்த 28.09.2009 அன்று விழுப்புரம் எஸ்.பி.யிடம் நாங்கள் இருவரும் புகார் மனு ஒன்றை அளித்துள்ளோம்.

மேலும், பழங்குடியின இருளர் வகுப்பை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட வழக்கில், அதாவது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி பதியப்பட்ட வழக்கில் அரசியல்வாதிகள் தலையிட்டு குற்றவாளைகளை விடுவித்ததை வன்மையாக கண்டிக்கின்றோம். மேலும், இச்செயல் சட்டத்திற்குப் புறம்பானது என்பதோடு, பழங்குடியின மக்களின் உரிமையில் தேவையில்லாமல் தலையிட்டு அவர்களுக்கு அநீதி இழைப்பதாகும்.

இதற்கு காரணமான மத்திய இணை அமைச்சர் வே.நாராயணசாமி, ஏம்பலம் எம்.எல்.ஏ. ஆர்.ராஜாராமன் மற்றும் கண்டமங்கலம் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். இதுகுறித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு கடந்த 06.10.2009 அன்று விரிவான மனு அனுப்பியுள்ளோம்.

No comments: