மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 18.02.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:
கூடுதல் கலால் வரி கட்டாமல் அரசை ஏமாற்றி சுமார் 5 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள மும்பையைச் சேர்ந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது சி.பி.ஐ. விசாரணக்கு உத்தரவிட்டு உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி துணை நிலை ஆளுநருக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் இன்று மனு அளித்துள்ளோம்.
மும்பையைச் சேர்ந்த திலக்நகர் இன்டஸ்ட்ரீஸ் லிட் என்ற நிறுவனம் ‘மேன்ஷன் ஹவுஸ் பிராண்டி’ உள்ளிட்ட மது வகைகளை தயாரித்து விற்பனைச் செய்து வருகிறது. இந்த மது வகை தயாரிக்கப்படும் மொத்த அளவில் 80 சதவீதம் புதுச்சேரி உள்ளிட்ட தென் இந்தியாவில் விற்பனைச் செய்யப்படுகிறது.
இந்த நிறுவனம் கூடுதல் கலால் வரி செலுத்தாமல் அரசை ஏமாற்றி சுமார் 5 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. புதுச்சேரி அரசு மக்களுக்குத் பல்வேறு திட்டங்களுக்காக செலவிடும் மொத்த தொகையில் 70 சதவீதம் கலால் வரி மூலம் ஈட்டுகிறது.
புதுச்சேரி அரசு மது தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு 58 சதவீத விற்பனை வரி விதித்துள்ளது. புதுச்சேரியிலுள்ள நான்கு மது தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு இந்த விற்பனை செலுத்துவதில் இருந்து வரி விலக்கு அளித்துள்ளது. இதனால், பல்வேறு மது தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த தொழிற்சாலைகளில் மதுவை நிரப்பி விற்பனைச் செய்வதன் மூலம் குறுக்கு வழியில் வரி விலக்கை அனுபவித்து வருகின்றன. இதனால், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி அரசு இந்த வருவாய் இழப்பை ஈடுகட்ட கூடுதல் கலால் வரி விதித்து அரசாணை ஒன்றை கடந்த 23.04.2007 அன்று வெளியிட்டது. அதில், பல்வேறு வரிக் கட்டண வரம்புகளை நிர்ணயித்துள்ளது. மேற்சொன்ன மது தயாரிக்கும் நிறுவனம் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ. 850 முதல் ரூ. 1049-ஐ வரம்பாக வைத்து மது தயாரிப்பதாக அரசுக்கு தெரிவித்தது. இதன்படி ஒரு கேஸ் மது விற்பனைக்கு அரசுக்கு ரூ. 522 கூடுதல் கலால் வரி செலுத்தி வருகிறது. மேற்சொன்ன ரூ. 850 முதல் ரூ. 1049 வரம்பை தாண்டினால் கூடுதலாக கலால் வரி கட்ட வேண்டும்.
இந்நிலையில், இந்த வரையறுக்கப்பட்ட வரம்பை மீறி அரசை ஏமாற்றும் நோக்கத்தோடு மேற்சொன்ன நிறுவனம் மது தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த வரம்பைத் தாண்டி ரூ. 1050 முதல் ரூ. 1349 என்ற அடுத்த வரம்பு அளவுக்கு மது தயாரித்தால் ஒரு கேசுக்கு ரூ. 99 கூடுதலாக கலால் வரி செலுத்த வேண்டும். மேற்சொன்ன மது நிறுவனத்தினர் இந்த கூடுதல் தொகையை ஆண்டு விற்பனை லாபமாக கணக்குக் காட்டி, அந்த தொகையை மது விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகியோரிடம் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்கின்றனர். இதனால், வரியாக அரசுக்குச் சேர வேண்டிய தொகை முதலாளிகளிடமே திரும்பவும் சென்றுவிடுகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்த நிறுவனம் புதுச்சேரியில் மொத்தம் 5 லட்சம் மதுப் பாட்டில்களை விற்பனைச் செய்து, அதன் மூலம் ரூ. 300 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதன்படிப் பார்த்தால் அரசுக்கு சேர வேண்டிய கூடுதல் கலால் வரி ரூ. 5 கோடியை திட்டமிட்டு ஏமாற்றி மோசடி செய்துள்ளது. இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஒரு நிறுவனத்தின் மோசடி கணக்கே பல கோடிகளைத் தாண்டும் போது இன்னும் இதுபோல புதுச்சேரியில் உள்ள பல்வேறு மது தயாரிக்கும் நிறுவனங்களின் கணக்கைப் பார்த்தால் புதுச்சேரி அரசுக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டு வரும் ஆபத்தை புரிந்துக் கொள்ள முடிகிறது.
புதுச்சேரி அரசு பல்வேறு மக்கள் நலம் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்த நிதி பற்றக்குறையால் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், இதுபோன்ற மோசடி தொடர்ந்து பல ஆண்டுகளாக நடப்பது கடும் கண்டனத்திற்குரியதோடு, அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து இதுபோன்று வரும் காலங்களில் நடக்காமல் தடுக்க வேண்டும்.
எனவே, புதுச்சேரி அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி, மோசடிக் குற்றம் செய்துள்ள சம்பந்தப்பட்ட மது நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், இதுகுறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவும் வேண்டிக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment