Wednesday, February 10, 2010

சேலத்தில் பியூஸ் சேத்தியா கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: கொளத்தூர் மணி, அ.மார்க்ஸ் பங்கேற்பு!




சேலத்தில் செயல்பட்டு வருகிற சுற்றுச்சுழல் ஆர்வலரும் பழங்குடி மக்கள் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவருமான பியூஸ் சேத்தியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சேலத்தில் 5.2.2010 காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் பழைய பேருந்து நிலையம் மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமைத் தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. வழக்குரைஞர் ப.பா. மோகன், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் செயலாளர் சா.பாலமுருகன், தமிழ்நாடு மனித உரிமை இயக்கத் தலைவர் பூமொழி, டாக்டர் ஜீவானந்தம், நிலவன், மா.செந்தில், கோ.சீனிவாசன், மாயன், பிந்துசாரன், ஆனந்தராஜ், எத்திராஜ, மாதேஸ்வரன், ராமு, குமார் அம்பாயிரம், பார்த்திபன், நெப்போலியன், அசோகன்ஆகியோர் கலந்துக் கொண்டு பேசினார்கள்.

வெளிநாட்டு நிறுவனங்களுக்காகவும் கார்ப்பரேட்டுக்களுக்காகவும் இன்று நாடெங்கும் கனிம வளமும் நீர் வளமும் நிறைந்த நிலைகள் ஏராளமாக வாரி வழங்கப்படுகின்றன. இதனால் பாதிக்கப்படக் கூடிய பழங்குடி மக்களும் விவசாயிகளும் இந்நிலையை எதிர்த்துப் போராடி வருகின்றனர், இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இன்று மத்திய அரசு ‘பச்சை வேட்டை நடவடிக்கை’ என்கிற பெயரில் சுமார் 1 லட்சம் துணை ராணுவப் படைகளை பழங்குடி மக்களுக்கு எதிராக இறக்கியுள்ளது. இது தவிர தாக்குதல் பயிற்சிப் பெற்ற மாநில போலீசும் அரசே நடத்துகிற ‘சல்வா ஜுடும்’ போன்ற சட்ட விரோத கூலிப்படைகளும் இன்று பழங்குடி மக்களைத் தாக்கிக் கொண்டுள்ளனர். இதன் விளைவாக சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் 3 லட்சம் பழங்குடி மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு முகாம்களில் வாழ்கின்றனர். பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பழங்குடிப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.

இந்திய அரசு இவ்வாறு தம் சொந்த மக்கள் மீதே ஒரு யுத்தம் தொடங்கியிருப்பதை எதிர்த்து இன்று ஹிமான்சு குமார் போன்ற காந்தியவாதிகளும், ஆனந்த பட்வர்தன் போன்ற கலைஞர்களும் நோம் சோம்ஸ்கி போன்ற உலகப்புகழ் பெற்ற அறிஞர்களும் கண்டித்துள்ளனர். பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் ராபி ரே, முன்னாள் மத்திய அமைச்சர் சாந்தி பூக்ஷன் ஆகியோரும் இதைக் கண்டித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய இந்த எதிர்ப்புக் போராட்டத்தின் ஒரு அங்கமாக தமிழகத்தில் ‘நீதிக்கும் அமைதிக்குமான இயக்கம்’ என்கிற அமைப்பு மத்திய உள்துறை அமைச்சருக்குக் கடிதங்கள் அனுப்புவது, சைக்கிள் பிரச்சாரம் செய்வது ஆகிய நடவடிக்கைகளைத் திட்டமிட்டது.

சென்ற ஜனவரி 26 அன்று சேலத்தில் குடியரசு தின விழா முடிந்த பின் இது குறித்த துண்டறிக்கை விநியோகிப்பதற்காக சென்றிருந்த பியூஸ் சேத்தியாவை சேலம் மாநகர காவல்துறை கைது செய்து அடித்து இழுத்துச் சென்றது. அவர் மீது இன்று தேசத்துரோக வழக்கு உள்பட பல கடுமையான பிரிவுகளின்படி வழக்குகள் தொடரப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளது.

அமைதியான முறையில் செயல்பட்டு வந்த ஒரு மனித உரிமைப் போராளி இவ்வாறு துன்புறுத்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும், நாடெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இயக்கத்தின் ஓரங்கமாகச் செயல்பட்ட ஒருவர் மீது இத்தகைய கொடும் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்திருப்பதையும் அவருக்கு பிணை மறுக்கப்படுவதையும் கண்டித்து இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பியூஸ் சேத்தியா உடனே விடுதலை செய்யப்பட்ட வேண்டும். அவர் மீதுள்ள வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும். அவரை அடித்து வாகனத்தில் ஏற்றிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலான கோரிக்கைகளை வற்புறுத்தியும் தொடர்ந்து மனித உரிமைப் போராளிகள் மீது பொய் வழக்குகளைப் போடும் சேலம் மாநகர காவல்துறையை கண்டித்தும் உரையாற்றியவர்கள் பேசினார்கள்.

‘நீதிக்கும் அமைதிக்குமான இயக்கம்’ சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

No comments: