Thursday, October 14, 2010

கறைபடிந்த நீதித்துறையும், போராட்டமும்.. பகுதி (2)

1950-க்கு முன்னர் நீதித்துறையில் ஊழல் இருந்ததில்லை என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். அப்போதெல்லாம் நீதித்துறையில் ஊழல் என்பதைப் பெரும் குற்றமாக கருதினார்கள். சிறிய தவறு நேர்ந்தாலும் நீதிபதிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்ட காலமது. 1949-ல் ‘பெடரல் நீதிமன்றங்கள்’ (Federal Courts) இருந்த போது அலகாபாத் நீதிபதியாக இருந்த சிவபிரசாத் சின்கா நீதித்துறையின் வரம்புக்கு அப்பாற்பட்டு இரண்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டதற்காக பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர் ஊழல் செய்ததாக ஆதாரங்கள் நிறைய இருந்தும் நீதிபதிகள் ராமசாமி முதல் பி.டி.தினகரன் வரை யாரையும் பதவி நீக்கம் செய்ய முடியவில்லை. இதற்கு பாராளுமன்ற நடைமுறையில் உள்ள குறைபாடு ஒரு பெரும் காரணமாக இருக்கிறது.

பிரசாந்த் பூஷன் டெகல்காவிற்கு அளித்த பேட்டியில் ‘கடைசியாக இருந்த 16 தலைமை நீதிபதிகளில் பாதி பேர் ஊழல்வாதிகள்’ என்று கூறியதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வருவது குறித்துப் பார்த்தோம். இவ்வழக்கில், அவரது தந்தையார் சாந்தி பூஷன் தன்னையும் இணைத்துக் கொள்ள உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மேலும் பல தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளது.

இந்திய தலைமை நீதிபதிகளாக இருந்த ரங்கநாத் மிஸ்ரா, கே.என்.சிங், எம்.எச்,கனியா, எல்.எம்.சர்மா, எம்.என்.வெங்கடசல்லயா, ஏ.எம்.அகமதி, ஜெ.எஸ்.வர்மா, எம்.எம்.பூஞ்சி, ஏ.எஸ்.ஆனந்த், எஸ்.பி.பருச்சா, பி.என்.கிரிபால், ஜி.பி.பட்நாயக், ராஜேந்திர பாபு, ஆர்.சி.லகோதி, வி.என்.கரே, ஒய்.கே.சபர்வால் ஆகிய 16 நீதிபதிகளில், 8 நீதிபதிகள் நிச்சயமாக ஊழல்வாதிகள், 2 நீதிபதிகள் ஊழல்வாதிகளா அல்லது ஊழலற்றவர்களா என்பதைக் கூற முடியவில்லை, 6 நீதிபதிகள் உறுதியாக நேர்மையானவர்கள் என்று கூறியதோடு அல்லாமல், இதில் யார் யார் எந்தப் பட்டியலில் வருகிறார்கள் என்பதைக் குறிப்பிட்டு அதனை ‘சீலிட்ட உறையில்’ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் சாந்தி பூஷன்.

பிரசாந்த் பூஷன் இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் இந்திய தலைமை நீதிபதி கப்பாடியா மீது கூறும் குற்றச்சாட்டு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. நீதிபதி கப்பாடியா பணம் பெற்றுக் கொண்டு ஊழல் செய்தவராக கூறப்படாவிட்டாலும், அவர் தனக்கு வேண்டப்பட்ட கம்பெனிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார் என்பதும் ஊழலின் ஒரு பகுதி என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.

பிரபலமான ‘ஸ்டெர்லைட் ஆலை’ தனது சுத்திகரிப்புத் திட்டம் ஒன்றை ஒரிசா மாநிலத்திலுள்ள லஞ்சிகார்க் என்னும் ஊரிலுள்ள வனப் பகுதியில் தொடங்க ‘வேதாந்தா அலுமினா லிட்’ என்ற தன்னுடைய துணை நிறுவனத்திற்கு மாற்றியது. இத்திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், பழங்குடியின மக்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இந்த திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய தனக்கு கீழுள்ள நிபுணர் குழு (Centrally Empowered Committee - CEC) ஒன்றை 12.05.2005-ல் அமைத்தது. இக்குழு விரிவான விசாரணை மேற்கொண்டு தனது அறிக்கையை செப்டம்பர் 2005-ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதில் ‘வேதாந்தா தனது சுத்திகரிப்பு திட்டத்தோடு, சுரங்கத் திட்டத்தையும் தொடங்குவதை மறைத்து சுற்றுச்சூழல் அனுமதியை முறைகேடாக பெற்றுள்ளது. இத்திட்டத்திற்காக நியம்கிரி மலைப் பகுதியில் சுத்திகரிப்பு ஆலைக்காக 58.93 ஹெக்டர் வன நிலமும், சுரங்கத்திற்காக 672.018 ஹெக்டர் வன நிலமும் தேவைப்படுகிறது. இதனால், வன நிலங்களும், காடுகளும், விலங்குகளும், நீர் நிலைகளும், அரிய வகை உயிரினங்களும் அழிந்துப் போகும். காட்டையே நம்பியிருக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்கள் முற்றிலும் அழிந்துப் போகும். மேலும், இத்திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அனுமதி அளித்ததன் மூலம் அளவற்ற உதவி செய்துள்ளது. பெரும் நிதி முதலீடு உடைய இத்திட்டம் குறித்து சுற்றுச்சூழல், வனம் ஆகிய கோணங்களில் தொடக்கத்திலேயே எதிர்ப்பு வந்ததால், இந்த இடத்தில் இந்த திட்டத்தைத் தொடங்குவதைக் கைவிட வேண்டும். மேலும், மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை திரும்பப் பெற வேண்டும். அதுவரையில் அங்கு எந்தப் பணியும் நடக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று தெளிவாக கூறியிருந்தது.

இந்த வழக்கு 26.10.2007-ல் உச்சநீதிமன்றத்தில் வனம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு அறிக்கைப் பற்றி எதுவும் விவாதிக்காமலும், இத்திட்டத்திற்கு அளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய பழங்குடியினர் சார்பில் தாக்கல் செய்திருந்த ரிட் மனு மீது வாதிட அவர்களது வழக்கறிஞ்ர் சஞ்சய் பாரிக்கை அனுமதிக்காமலும் நேரிடையாக சுரங்கம் அமைப்பது தொடர்பான வரைமுறைகள் குறித்து விவாதம் நடந்துள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்தி வரும் வேதாந்தா, ஒரிசா அரசு, மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை மற்றும் நீதிமன்றம் அமைத்த நடுநிலை விரிவுரையாளரான (Amicus Curiae) ஜீனியர் வழக்கறிஞர் உதய லலித் ஆகியோரின் வாதங்களை மட்டுமே நீதிபதிகள் செவிமடுத்தனர்.

இவ்வழக்கில் 23.11.2007 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை நீதிபதி கப்பாடியா எழுதியிருந்தார். அதில் ’வேதாந்தா அலுமினியா லிட்’ கீழுள்ள ஸ்டெர்லைட் ஆலை இத்திட்டத்தை தொடங்க விண்ணப்பிக்கலாம்’ எனக் கூறியிருந்தார். மேலும், நிபுணர் குழு சுற்றுச்சூழல் அனுமதி அளித்ததை ஆட்சேபித்தும், அதற்கு ஆதராவாக பல்வேறு காரணங்களையும் கூறியிருந்ததைச் சுட்டிக் காட்டிய நீதிபதி கப்படியா, ‘இன்னொரு பக்கம் லஞ்சிகார்க் பகுதியிலுள்ள பழங்குடியினர் உள்ளிட்ட உள்ளூர் மக்கள் மிகுந்த வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு ஒழுங்கான வீடுகள் இல்லை. மருத்துவமனைகள் இல்லை. பள்ளிக்கூடங்கள் இல்லை. அங்கு மக்கள் மிகவும் வறுமை நிலையில் வாழ்கின்றனர் எனபதில் யாருக்கும் பிரச்சனை இல்லை. இந்திய பொருளாதாரம் அண்மைக் காலமாக வளர்ந்து வருகிறது. இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். இந்த இரண்டு எல்லைகளையும் கணக்கில் கொண்டு இந்த நீதிமன்றம் சுற்றுச் சூழல் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்கவும், வளர்ச்சி (Sustainable Growth) கொள்கைகளையும் மனத்தில் கொண்டுள்ளது’ எனக் கூறி அனுமதி வழங்கியுள்ளார்.

வேதாந்தா தொழிலாளர் சட்டங்களையும், மனித உரிமைகளையும் கடைப்பிடிக்காததால் நார்வே நாட்டினால் கறுப்புப் பட்டியலில் (Black Listed) வைக்கப்பட்டுள்ள நிறுவனமாகும். கறுப்புப் பட்டியலில் உள்ளதால் வேதாந்தாவிற்கு அனுமதி அளிக்க மறுத்த நீதிமன்றம் அதன் கீழுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தான் அமைத்த நிபுணர் குழு அறிக்கையை உச்சநீதிமன்றம் முற்றிலுமாக நிராகரித்தது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் பழங்குடியின மக்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களையும் நீதிமன்றம் பரிசீலிக்க தவறியது.

மேலும், இது தொடர்பாக அதே நீதிபதிகள் மற்றொரு உத்தரவை 8.8.2008-ல் பிறப்பித்தனர். அதில், இத்திட்டத்திற்காக நியம்கிரி மலைப் பகுதியில் சுத்திகரிப்பு ஆலைக்காக 58.93 ஹெக்டர் வன நிலத்தினையும், சுரங்கத்திற்காக 672.018 ஹெக்டர் வன நிலத்தினையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறியிருந்தனர். சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை வழங்கிய அனுமதியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பு வழங்கியது ஆச்சரியத்தை அளிக்கிறது.

இதனிடையே, நீதிபதி கப்பாடியா ஸ்டெர்லைட் ஆலையில் பங்குதாரராக இருந்தார் என்பது குறித்து பிரசாந்த் பூஷன் நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்தார். ஆனால், இந்த வழக்கில் ஆஜராகிய வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் தவிர யாரும் இந்த வழக்கிலிருந்து நீதிபதி கப்பாடியா விலகிக் கொள்ள வேண்டுமென கோரவில்லை. இந்தியாவிலும் சரி, சர்வ தேச அளவிலும் சரி ஒரு நீதிபதி வழக்கில் தொடர்புடையவர்களோடு சிறிய அளவில் தொடர்பு இருந்தாலும் அந்த வழக்கிலிருந்து சம்பந்தப்பட்ட நீதிபதி விலகிக் கொள்வதே நெறியாகும். ஆனால், நிதிபதி கப்படியா அவ்வாறு செய்யாமல் வழக்கை நடத்தியதோடு அந்த நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பளித்தது “ஊழல்” இல்லாமல் வேறு என்ன?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோற்றைப் பதம் பார்த்தால் போதும் என்பது போல தற்போதைய இந்திய தலைமை நீதிபதியின் நிலையே இதுவென்றால் மற்ற நீதிபதிகளின் நிலைக் குறித்து இங்குக் கூறத் தேவையில்லை.

நீதித்துறையில் அளவற்ற ஊழல் புரியும் நீதிபதிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா? நீதிபதிகள் மக்களுக்குப் பொறுப்பாகுதல் குறித்து தற்போது மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள சட்டம் இவற்றைக் கட்டுப்படுத்துமா? என்பது பற்றி பிறகுப் பார்ப்போம்.


தொடரும்...

நன்றி: மக்கள் உரிமை.

No comments: