இந்திய தலைமை நீதிபதியின் ஊழல் பற்றிப் பார்த்தோம். ஊழல் செய்யும் நீதிபதிகளை எதிர்த்துப் போராட முடியாது என்ற கருத்து பரவலாக மக்களிடம் இருந்து வருகிறது. அதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று நீதித்துறை மீது மக்களுக்கு இருக்கும் இயல்பான அச்சம். இரண்டு நீதிபதிகளை விமர்சித்தால் அது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாக கருதப்பட்டு, தண்டனைக் கிடைக்கும் என்ற பயம். ஆனால், நீதிபதிகளின் ஊழல்களை ஆதாரத்தோடு விமர்சித்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
ஊழல் நீதிபதியான பி.டி.தினகரன் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வைகை தலைமையில் நடந்த போராட்டம் பற்றி அறிந்திருப்பீர்கள். சில மாதங்களுக்கு முன்னர் அந்த நீதிபதியின் சட்டவிரோதமான நடவடிக்கைகள் பற்றி பத்திரிகைகளும், ஊடகங்களும் வெளிப்படுத்தாத நாளே இல்லை என்று சொல்லலாம். அதேபோல் தலித் மக்களின் உரிமைகளுக்காக அயராது போராடி வரும் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் 90-களில் இருந்து ஊழல் மற்றும் சாதியத்தோடு பணியாற்றிய, பணியாற்றும் நீதிபதிகள் குறித்து மிக வெளிப்படையாக துண்டறிக்கைப் போட்டு விநியோகித்தும், சுவரொட்டி அச்சிட்டு ஒட்டியும், கூட்டங்கள் நடத்தியும் செய்த பிரச்சார நடவடிக்கைகள் போதிய பயன் அளித்தன என்றே சொல்ல வேண்டும். சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும், ஊழல் செய்யும் கீழ்நீதிமன்ற நீதிபதிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அக்கறை காட்டுகின்றனர். ஆனால், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அது அவ்வளவு எளிதானதல்ல என்பதை கடந்த கால அனுபவங்கள் உணர்த்துகின்றன.
ஊழல் செய்வது என்பது ஊழல் தடுப்புச் சட்டப்படி கைது செய்யப்படக் கூடிய (Cognizable Offence) குற்றமாகும். குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி (Criminal Procedure Code) கைது செய்யப்படக் கூடிய குற்றம் அனைத்திற்கும் முதல் தகவல் அறிக்கை (F.I.R.) பதிவுச் செய்யப்பட வேண்டும். ஆனால், நீதிபதிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.வீராசாமி 1974-ல் லஞ்சம் வாங்கும் போது சி.பி.ஐ. போலீசாரிடம் கையும் களவுமாகப் பிடிபட்டார். அவர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், குற்றவியல் சட்டத்திற்குப் புறம்பாக 1991-ல் உச்சநீதிமன்றம் ‘எந்த நீதிபதி மீதும் இந்திய தலைமை நீதிபதியின் அனுமதியின்றி முதல் தகவல் அறிக்கை பதியக் கூடாது’ என்று தீர்ப்பு வழங்கி ஊழல் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழலை உருவாக்கியது. இந்த தீர்ப்புக்குப் பின்னர் இதுநாள்வரையில் எந்தவொரு நீதிபதி மீதும் வழக்குப் பதிய எந்த தலைமை நீதிபதியும் அனுமதி அளிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
ஊழல் செய்த உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 124 (4) படியும், நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968-ன் படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியரசுத் தலைவர் மூலம் அதுவும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். நீதிபதியின் ஊழல் குறித்த ஆதாரங்களைப் பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்கள் 100 பேர் அல்லது மாநிலங்களவை உறுப்பினர்கள் 50 பேர் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க மூவர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். அக்குழுவில் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஒரு சட்ட வல்லுநர் ஆகியோர் உறுப்பினராக இருப்பார்கள். இக்குழு விசாரணை மேற்கொண்டு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவோடு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் ஊழல் செய்த ஒரு நீதிபதி மீதும் சின்ன நடவடிக்கைகூட எடுக்க முடியவில்லை.
1993-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த, உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி மீது பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு (Impeachment) சுமத்தப்பட்டது. அவர் சண்டிகரில் தலைமை நீதிபதியாக இருந்த போது அவரது அதிகாரபூர்வ இல்லத்திற்கு அளவுக்கு அதிகமாக செலவு செய்தது பற்றி குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க பாராளுமன்றத்தால் அமைக்கப்பட்ட மூவர் குழு முன் அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. காங்கிரஸ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்காததால் அவர் நடவடிக்கையிலிருந்து தப்பித்துக் கொண்டார். அவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்ற காரணத்தைக் காட்டி தி.மு.க. அன்று அந்த ஊழல் நீதிபதியைக் காப்பாற்றியது. வெறும் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆதரவுத் தெரிவித்தனர்.
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சென் 1993-ல் ஒரு வழக்கில் 34 லட்ச ரூபாய் பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டும் அவரை மேற்குவங்க ‘லாபி’ காப்பாற்றி வருவதாக செய்திகள் வருகின்றன. அவரை பணியிலிருந்து ராஜினாமா செய்யவும் அல்லது விருப்ப ஓய்வில் செல்லவும் அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியும் அவர் அதனை மதிக்கக்கூட தயாராக இல்லை. அவர் மீது பாராளுமன்றத்தில் 58 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அளித்த குற்றச்சாட்டின் மீது விசாரணை நிலுவையில் உள்ளது. பாராளுமன்றத்தில் நடவடிக்கையை எதிர்கொள்ளும் இரண்டாவது நீதிபதி சவுமித்ரா சென்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவருமான நீதிபதி பி.டி.தினகரன் 540 ஏக்கர் அளவுள்ள புறம்போக்கு நிலங்களையும், தலித் மக்களின் நிலங்களையும் அபகரித்த குற்றச்சாட்டு குறித்தும், அனுமதியின்றி அடுக்குமாடி வணிக வளாகம் கட்டியது உள்ளிட்ட ஏராளமான சட்டவிரோத நடவடிகைகள் பற்றியும் 75 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அளித்த 12 குற்றச்சாட்டுகள் பற்றி பாராளுமன்ற குழு விசாரித்து வருகிறது. அவர் மீது ஆதாரங்கள் பல இருந்தும் அவரை பணிநீக்கம் செய்ய முடியவில்லை. அவருக்கு நீதித்துறை வழங்கியிருக்கும் மிகப் பெரிய தண்டனை, அவரை சிக்கிம் மாநிலத்திற்கு மாற்றல் செய்துள்ளதுதான். இன்றைக்கு தலித் நீதிபதி என்று கூறி பி.டி.தினகரன் செய்த ஊழல்களையும், நில அபகரிப்புகளையும் நியாயப்படுத்தி வரும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.
இந்திய அரசியல் சட்ட மறுஆய்வுக் குழு, 2003 மார்ச் 31-ல் அரசுக்கு அளித்த அறிகையில் நீதிபதிகள் பணிநீக்கம் செய்வது பற்றிய 7-வது அத்தியாயத்தில் தேசிய நீதித்துறை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது. மேலும், நீதிபதிகள் தவறு செய்வதைக் கட்டுப்படுத்த சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது. அதாவது இந்திய தலைமை நீதிபதி மற்றும் இரண்டு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணை மேற்கொண்டு அதன் அறிகையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். குடியரசுத் தலைவர் அந்த அறிகையின் மீது விரிவான விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கைக்காக எழு நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்சுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் மீது உரிய விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் ஊழல் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளது. மேலும், ஊழல் நீதிபதிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தவுடன் அவர்களை வேறு நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்வதை கடுமையாக ஆட்சேபித்துள்ளது.
இந்திய அரசியல் சட்ட அவையில் ஊழல் நீதிபதிகள் மீதான நடவடிக்கை குறித்து அதிகம் விவாதம் நடந்ததாக தெரியவில்லை. ஏன்னென்றால் நீதிபதிகள் இந்தளவு ஊழல் செய்வார்கள் என்று அரசியல் சட்ட அவை உறுப்பினர்கள் கருதவில்லை போலும். அதனால்தான் பாராளுமன்ற குற்றச்சாட்டு மூலம் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் போன்ற சிக்கலான, சாத்தியமற்ற நடைமுறையை கொண்டு வந்தனர் அரசியல் சட்ட அவையினர்.
நீதிபதிகள் மீது பாராளுமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கும் முறையில் பல மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்து. பாராளுமன்றத்தில் 100 உறுப்பினர்கள் கையெழுத்திட்டால்தான் ஊழல் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்ற நிலையை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்படுகிறது. மேலும், ஒரு சில ஊழல் நீதிபதிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதற்காக பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்கும் முறையை எளிதாக்கினால், அது நீதித்துறை மீது அரசியல்வாதிகள் அதிகாரம் செலுத்தும் நிலையை ஏற்படுத்திவிடும் என சில நேர்மையான நீதிபதிகள் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
நீண்ட போராட்டத்திற்குப் பின் ‘நீதிபதிகள் தரம் மற்றும் பொறுப்பாதல் மோசோதா’ பரிசீலிக்கப்பட்டு சென்ற அக்டோபர் 5-ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்ட மசோதாவில் ஒரு சில அம்சங்கள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அதிலுள்ள பெரும்பாலான பிரிவுகள் நீதிபதிகளின் ஊழல்களைத் தடுக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கவில்லை என சட்டவல்லுநர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதனைப் பிறகுப் பார்ப்போம்.
அடுத்த இதழில் முடியும்...
நன்றி: மக்கள் உரிமை.
No comments:
Post a Comment