Saturday, January 01, 2011
டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் - அரங்குக் கூட்டம்!
அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குப் பின், டாக்டர் பினாயக் சென் மீதான வழக்கில் ராய்பூர் நீதிமன்றம் அவருக்கு தேச துரோக குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பினாயக் சென்னிற்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை தங்களுக்கு வழங்கப்பட்டதாக கருதி மனித உரிமை ஆர்வலர்கள் அவரை விடுதலை செய்ய கோரி போராடி வருகின்றனர்.
58 வயது நிரம்பிய டாக்டர் பினாயக் சென் சட்டிஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர். வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் பயின்றவர். உலக அளவில் புகழ் பெற்ற மனித உரிமை ஆர்வலர். மிகவும் பின்தங்கிய பகுதியான சட்டிஸ்கரில் பழங்குடியினர் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருபவர். நக்சலைட்டுகளை ஒடுக்க அரசு உருவாக்கிய “சல்வார் ஜீடும்” என்ற தனியார் படைக்கு எதிராகவும், வளம் மிக்க காட்டு நிலங்களை ஆக்கிரமிக்கும் முயற்சியையும் எதிர்த்தும் போராடி வருபவர். அவர் “சல்வார் ஜீடும்” படைக்கு எதிராக போராடியதை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது இங்கு நினைவு கூரத்தக்கது.
வன்முறையில் துளியும் நம்பிக்கை இல்லாத அவர் மீது சட்டிஸ்கர் காவல்துறை மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தார் எனக் கூறி 2007-இல் அவரை கைது செய்தது. நீண்ட போராட்டத்திற்குப் பின் உச்சநீதிமன்றம் பிணை வழங்கியதால் 2009-இல் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கு விசாரணை ராய்பூர் நீதிமன்றத்தில் நடந்து முடிந்து, சென்ற டிசம்பர் 24 அன்று, டாக்டர் பினாயக் சென்னிற்கு தேசதுரோகம் (124-ஏ), கூட்டுச் சதி (120-பி), சட்டிஸ்கர் சிறப்புப் பொதுப் பாதுகாப்புச் சட்டம் (8 (1)) ஆகியவற்றின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி பி.பி.வர்மா தீர்ப்பளித்தார். மேலும், மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நாராயண சன்யால், பியூஷ் குகா ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை வழங்கினார்.
இவ்வழக்கில் பெரும்பாலான சாட்சிகள் பினாயக் சென்னிற்கு எதிராக சாட்சியம் அளிக்காத நிலையில், சட்டிஸ்கர் காவல்துறையின் புனைவு நிறைந்த குற்ற அறிக்கையை ஏற்றும், சட்டத்தைச் சாராமலும் ராய்பூர் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. நீதித்துறையில் நடக்கும் ஊழல்கள் பற்றி தினம் ஒரு செய்தி வெளியாகி வரும் இவ்வேளையில் இத்தீர்ப்பு நீதி வழங்கும் முறையை மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது.
பினாயக் சென் மற்றவர்கள் போல் நகரத்தில் தொழில் செய்து வசதி வாய்ப்புகளைத் தேடிக் கொள்ளாமல், பழங்குடியின மக்களின் நலனுக்காக கிராமங்களில் மருத்துவ சேவை புரிந்து வருபவர். அவரது மருத்துவ சேவையைப் பாராட்டி அவருக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல பெருமைகள் நிறைந்த பினாயக் சென்னிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது எவராலும் ஏற்றுக் கோள்ள முடியாது என்பதோடு கண்டனத்திற்குரியது.
மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் தேசதுரோக குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டுள்ள நிலையில் பினாயக் சென்னுக்கு தண்டனை வழங்கியுள்ளது அவருக்கு பெருமை குறைவு இல்லை என்றாலும், சட்டத்தை மதித்து நடக்கும் ஒருவரை ‘தேசதுரோகி’ என நீதிமன்றம் கூறியுள்ளது ஏற்புடையதல்ல. அவரது மனைவி லீனா கூறியது போல் “இத்தீர்ப்பு இந்திய ஜனநாயகத்திற்கே விடப்பட்டுள்ள சவாலாகும்”.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 124-ஏ தேசதுரோக பிரிவு வெள்ளையர்களை எதிர்த்து சுதந்தரத்திற்காக போராடியவர்கள் மீது அடக்குமுறையை ஏவ 1898-இல் கொண்டு வரப்பட்ட்து. இச்சட்டத்தை நேரு பிரதமராக இருந்த போது “மிகவும் ஆட்சேபகரமானது, ஏற்புடையதல்ல” என பாராளுமன்றத்தில் எதிர்த்துக் கூறியது கவனிக்கத்தக்கது.
சர்வ தேச மனித உரிமை அமைப்பான “ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்” முதல் உள்ளூர் மனித உரிமை அமைப்பு வரை அனைவரும் இத்தீர்ப்பை எதிர்த்துள்ளனர். உலகப் புகழ் பெற்ற அறிஞர் நோம் சாம்ஸ்கி, வரலாற்றறிஞர் ரொமீலா தாப்பர், முன்னாள் நீதிபதி ராஜேந்தர் சச்சார் உள்ளிட்டவர்களும் இத்தண்டனையை எதிர்த்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடர்ந்து தற்போது காங்கிரசும் இத்தீர்ப்பை நிராகரித்துள்ளது.
மனித உரிமை ஆர்வலர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவும் வேளையில், நீதி வேண்டி மக்களின் கடைசி புகலிடமாக உள்ள நீதிமன்றமும் அவர்களுக்கு நீதி வழங்க மறுப்பது மனித உரிமையை குழிதோண்டி புதைத்துவிடும் ஆபத்துள்ளது.
எனவே, மனித உரிமையில் அக்கறையுள்ள நாம் அனைவரும் டாக்டர் பினாயக் சென்னிற்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்ப்போம். அவரை உடனடியாக பிணையில் விடுதலை செய்ய கோருவோம். நீதித்துறையின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து நீதி வழங்கும் முறையை ஒழுங்குப்படுத்துவோம்.
நாள்: 2.1.2011 ஞாயிறு. நேரம்: காலை 10 மணி.
இடம்: வணிக அவை, புதுச்சேரி.
பங்கேற்போர்:
தலைமை: திரு.கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.
தொடக்கவுரை: திரு. நாரா.கலைநாதன், சட்டமன்ற உறுப்பினர், மாநிலச் செயலர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புதுச்சேரி.
முன்னிலை: திரு.கே.இராம்குமார், தலைவர், புதுவை மாநில பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு.
சிறப்புரை: பேராசிரியர் அ.மார்க்ஸ், தலைவர், மனித உரிமைக்கான் மக்கள் கழகம், பேராசிரியர் பிரா.கல்விமணி, ஒருங்கிணைப்பாளர், இருளர் பழங்குடி பாதுகாப்புச் சங்கம்.
உரை: திரு.இரா.அழகிரி, தலைவர், தமிழர் தேசிய இயக்கம், திரு.கொ.செ.சந்திரன், தலைவர், சிங்காரவேலர் முன்னேற்ற கழகம், கோ.அ.ஜெகன்நாதன், துணை அமைப்பாளர், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு, திரு.சி.மூர்த்தி, அமைப்பாளர், புரட்சியாளர் அமபேத்கர் மக்கள் படை, திரு.எம்.ஏ.அஷரப், மாவட்ட தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், ஐ.முகம்மது சலீம், மாவட்ட செயலாளர், மனித நேய மக்கள் கட்சி, திரு.ஜோசப் விக்டர் ராஜ், தேசிய இணைச் செயலர், இந்திய சமூக செயல்பாட்டு பேரவை, திரு.கு.மோகனசுந்தரம், தலைவர், குடிசை வாழ்வோர் பெருமன்றம்.
நிகழ்ச்சி ஏற்பாடு: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment