மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 22.01.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:
இலங்கைத் தமிழர்களின் நிலைமைகளை நேரில் கண்டறிய முறைப்படி அனுமதி பெற்று அங்கு சென்ற தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் பேத்தியும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான கயல்விழியையும், அவரது உதவியாளரையும் இலங்கை இராணுவம் கைது செய்துள்ளதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிகிறோம்.
விடுதலைப்புலிகளுக்கும், அரசுக்கும் இடையேயான போர் முடிவுற்ற நிலையில் அங்குள்ள தமிழர்கள் முள்வேலி முகாம்களில் வதைப்பட்டு வருகின்றனர். இதனை மனித நேயத்தில் அக்கறையுள்ள அனைவரும் கண்டித்து வருகின்றனர். இதில் ஐ.நா. சபை தலையிட்டு இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டுமென இலங்கை அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கயல்விழி, அவரது உதவியாளர் திருமலை ஆகியோர் முறைப்படி விசா பெற்று இலங்கை சென்றுள்ளனர். அங்குள்ள முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலைமைகளை நேரில் கண்டுள்ளனர். அப்போது ஓமந்தை என்னுமிடத்தில் அவர்கள் இருவரையும் இலங்கை இராணுவம் கைது செய்து ரகசியமான இடத்தில் வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
உலகம் முழுவதும் இருந்தும் பலர் இலங்கை சென்று, அங்குள்ள நிலைமைகளை அறிந்து வரும் நிலையில், இவர்களை இலங்கை இராணுவம் கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் உடனடியாக விடுதலை செய்து, அவர்களை இந்தியாவிற்கு பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்க மத்திய அரசு இலங்கை அரசோடு பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்கறிஞர் கயல்விழி மறைந்த தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் பேத்தி என்பதும், தமிழறிஞர் இறைக்குருவனாரின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருவதோடு, மனித உரிமைப் பணிகளில் ஈடுபட்டு வருபவர்.
இதுகுறித்து பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோருக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் தந்தி அனுப்பி உள்ளோம்.
No comments:
Post a Comment