இக்பால் சிங் |
பல்வேறு குற்றச்சாட்டிற்கு ஆளான புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங்கை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங் வரி ஏய்ப்பு செய்து சிறையிலுள்ள அசன் அலிக்கு பாஸ்போர்ட் எடுக்க உதவிய விவகாரம் குறித்து மத்திய அமலாக்கப் பிரிவினர் அவரை கடந்த 20ந் தேதியன்று விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் மீண்டும் நாளை விசாரணை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், கவர்னரின் மகன்கள், உறவினர்கள் பெயரில் துவங்கப்பட்ட “தி சவுத் எஜீகேஷன் டிரஸ்ட்” என்ற அறக்கட்டளைக்கு காரைக்காலில் மருத்துவ கல்லூரி துவங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரிக்கு அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேற்சொன்ன மருத்துவ கல்லூரிக்காக காரைக்காலில் 32 ஏக்கர் நிலம் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. சுகாதார துறையின் பயன்பாட்டிற்கு அரசு கையகப்படுத்த இருந்த நிலத்தை சுகாதார துறை அதிகாரிகள் இடைத்தரகர்களாக இருந்து மருத்துவ கல்லூரி துவங்க அந்த இடத்தை வாங்கித் தந்துள்ளனர்.
அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் கேட்டு புதுவை பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளையினர் விண்ணப்பம் செய்துள்ளனர். எந்தவித அடிப்படை கட்டுமானமும், வசதியும் இல்லாததை சுட்டிக்காட்டி பல்கலைக்கழக அதிகாரிகள் அங்கீகாரம் அளிக்க மறுத்துள்ளனர். ஆனால், மருத்துவ கல்லூரி துவங்க வங்கியில் கடன் பெற வசதியாக கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர்.
மருத்துவ கல்லூரி விவகாரத்தில் கவர்னருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என தொடர்ந்து மறுத்து வரும் கவர்னரின் சிறப்பு அதிகாரி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் பல்கலைக்கழகம் கடன் பெற அளித்த கடிதத்தை கவர்னர் மாளிகையின் உயரதிகாரி ஒருவர் கையெழுத்துப் போட்டு பெற்றது ஏன் என்று விளக்க வேண்டும்.
இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக மருத்துவ கல்லூரிக்கு அனுமதி அளித்த தலைமைச் செயலர், சுகாதார துறை அதிகாரிகள் உட்பட பின்னணியில் உள்ள அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் போது முதல்வர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோர் கவர்னரை
சந்தித்துவிட்டு வந்து அவர் குற்றம் செய்யவில்லை என பேட்டி அளித்துள்ளனர். இது கவர்னரை காப்பாற்றும் நோகத்தோடு குற்றத்தை மூடிமறைக்கும் முயற்சி ஆகும். மேலும், இது திட்டமிட்டே அமலாக்கப் பிரிவினரின் விசாராணைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும்.
இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பேன் என பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டு, அதை மீறி குற்றமிழைத்த கவர்னருக்கு வெளிப்படையாக ஆதரவாக செயல்பட்டுள்ள முதல்வர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவரை வலியுறுத்துகிறோம். இதுகுறித்து ஆதரங்களுடன் குடியரசுத் தலைவருக்கு விரிவான புகார் மனு ஒன்றை அனுப்ப உள்ளோம்.
கவர்னர் இக்பால் சிங் தனது அரசு அதிகாரத்தை பயன்படுத்தி தனது மகன்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி பெற்றுள்ளதும், அசன் அலிக்கு பாஸ்போர்ட் எடுக்க உதவியதும் அப்பட்டமாக சட்டத்திற்குப் புறம்பான செயல்களாகும். எனவே, கவர்னர் இக்பால் சிங்கை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களில் கவர்னருக்கு இந்திய அரசியல் சட்டப்படியும், யூனியன் பிரதேச சட்டப்படியும் உச்சபட்ச அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று கவர்னருக்கு அதிகாரம் உள்ளதால்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நிர்பந்தித்து சட்டத்திற்கு விரோதமாக பல்வேறு பயன்களைப் அடைந்து வருகின்றனர். எனவே, கவர்னருக்கு உள்ள அதிகாரத்தைக் குறைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு கவர்னரை நியமிக்கும் போது தொடர்புடைய மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை கலந்தாலோசிப்பது கிடையாது. இதனால், மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்கு வேறு எந்த உயர் பதவியும் அளிக்க முடியாத நிலையில் கவர்னராக நியமிக்கப்படுகிறார்கள். இதனால், தவறிழைத்த கவர்னர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டால் மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அவர்களை காப்பாற்ற அனைத்து வகையிலும் முயற்சிக்கிறது.
எனவே, கவர்னரை நியமிக்கும் போது அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை கலந்தாலோசித்த பிறகே நியமிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
No comments:
Post a Comment