Friday, October 14, 2011

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது தாக்குதல்: இந்துத்துவ சக்திகளுக்கு கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 13.10.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன் இந்து மதவாத சக்திகளால் தாக்கப்பட்டதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

நேற்றைய தினம் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்திற்கு எதிரில் உள்ள வழக்கறிஞர்களின் அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டிடத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அத்துமீறி நுழைந்த இந்து மதவாத கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரை தாக்கியுள்ளனர். தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த வன்முறை செயலுக்கு ராம் சேனா என்ற அமைப்புதான் காரணம் என்பது சம்பவ இடத்தில் பிடிபட்டவரிடம் நடந்த முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராம் சேனா கடந்த 2008ம் ஆண்டு கர்நாடகாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மிகப் பெரிய தாக்குதலை நடத்திய வன்முறை கும்பல் என்பது குறிப்பிடத்தக்கது.
 
காஷ்மீர் தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இது கருத்து சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவாலாகும். காஷ்மீர் பிரச்சனையை பேசுவது ஒன்றும் தேச விரோத செயல் அல்ல.

பிரசாந்த் பூஷன் ஒரு சிறந்த சட்ட வல்லுநர் மட்டுமல்ல, சமூக தளங்களில் பல்வேறு பிரச்சனைகளை முன்னெடுத்து, அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் தொடர்ந்து செயலாற்றி வருபவர். ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்தவர். குறிப்பாக நீதித்துறையில் நடக்கும் ஊழலுக்கு எதிராக உறுதியாக போராடி வருபவர்.

பிரசாந்த் பூஷனை தாக்கிய அனைவரையும் போலீசார் உடனடியாக கைது செய்வதோடு, இத்தாக்குதல் குறித்த பின்னணியை கண்டறிந்து அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

2 comments:

komagan said...

giving details why he was assaulted,what is the views and stand of the people who assaulted Bhushan may fill the vacuum in the statement

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

உங்கள் கேள்விக்கு அறிக்கையின் இந்த பத்தி பதிலாக அமையும் என நம்புகிறேன்.

"இந்த வன்முறை செயலுக்கு ராம் சேனா என்ற அமைப்புதான் காரணம் என்பது சம்பவ இடத்தில் பிடிபட்டவரிடம் நடந்த முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராம் சேனா கடந்த 2008ம் ஆண்டு கர்நாடகாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மிகப் பெரிய தாக்குதலை நடத்திய வன்முறை கும்பல் என்பது குறிப்பிடத்தக்கது."