ஆயுதம் தயாரித்த வழக்கொன்றில் கைது செய்யப்பட்டு கொல்கத்தா
சிறையில் இருக்கும் 9 மாவோயிஸ்டுகளை
அரசியல் கைதிகள் என வரையறுத்து, அவர்களுக்கு
சிறப்புச் சலுகைகள் வழங்க கொல்கத்தா அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு
தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) தெரிவித்த
எதிர்ப்பை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 8 அன்று வழங்கிய தீர்ப்பொன்றில்
மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்களில் ஒருவரான சத்திரதார் மகதோ மற்றும் 7 மாவோயிஸ்டுகளை அரசியல் கைதிகள் எனக்
கூறியுள்ளதை அமர்வு நீதிமன்றம் சுட்டிக்காட்டி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதன்படி சிறையில் அரசியல் கைதிகளுக்கு வழங்கக்கூடிய சலுகைகள்
இவர்களுக்கு வழங்கப்படும். அதாவது தனி அறை, வீட்டுச்
சாப்பாடு, செய்தித்தாள்கள், புத்தகங்கள், உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களை
முன்பைவிட சுதந்திரமாக சந்தித்தல் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்.
West Bengal Correctional Services Act 1992 என்ற சட்டப்படி அரசியல் கைதிகள்
அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் குற்றங்கள் செய்தவர்கள் குறிப்பாக இந்திய
தண்டனைச் சட்டப்படி குற்றம்சாட்டப்பட்டவர்கள் கூட அரசியல் கைதிகள் என
இச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சிறையிலுள்ள மாவோயிஸ்டுகள்
தங்களை அரசியல் கைதிகளாக கருத வேண்டி நீண்ட காலமாக தொடர் போராட்டம் நடத்தி
வருகின்றனர்.
மனித உரிமை ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இது, கொல்கத்தா நீதிமன்ற தீர்ப்பால்
நடைமுறைக்கு வந்துள்ளது.
மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளைத் தீவிரவாதம், பயங்கரவாதம் என முத்திரை குத்தும்
போக்கிற்கு இந்த தீர்ப்பு பெருத்த அடியாக அமைந்துள்ளது எனக் கூறி மாவோயிஸ்டுகள்
தங்களுக்குக் கிடைத்த வெற்றி என இத்தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.
இத்தீர்ப்பைச் சுட்டிக்காட்டி இந்தியாவெங்கும் மாவோயிஸ்டுகள்
சலுகைகளை கேட்பார்கள் என இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக தேசிய
புலனாய்வு அமைப்பு கூறியுள்ளது.
No comments:
Post a Comment