Wednesday, October 31, 2012

டிவிட்டரில் விமர்சித்தவர் மீதான புகாரை கார்த்திக் சிதம்பரம் திரும்பப் பெற வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 30.10.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை:

டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் விமர்சித்தற்காக கைது செய்யப்பட்ட தொழிலதிபர் மீதான புகாரை கார்த்திக் சிதம்பரம் திரும்பப் பெற வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

டிவிட்டர் வலைத்தளத்தில் வதேராவைவிட கார்த்திக் சிதம்பரம் அதிக சொத்து குவித்துள்ளதாக பதிவிடப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் அளித்த புகாரின் பேரில் சி.ஐ.டி. போலீசார் குறிஞ்சி நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ரவி என்பவரை நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். மேலும், அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2008 பிரிவு 66 ஏ-இன் படி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 
கார்த்திக் சிதம்பரத்தின் இந்த செயல் கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கை என்பதை சுட்டிக் காட்டுகிறோம். பொது வாழ்விலுள்ள அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு அவர் உரிய பதிலளிப்பதன் மூலம் எதிர்க்கொண்டு இருந்தால் அதுவே முதிர்ச்சியான நடவடிக்கை ஆகும். அதைவிடுத்து, அவர் போலீசை நாடியிருப்பது கண்டனத்திற்குரியது.
   
இதுபோன்ற சூழ்நிலையில் போலீசாரும் புகார் கொடுத்தவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால் உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மெற்கொண்டது தேவையற்ற (Unwanted), அளவுக்கு அதிகமான (Disproportionate) நடவடிக்கை ஆகும். புதுச்சேரி போலீசாரின் இந்த நடவடிக்கை கருத்துச் சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவாலாகும்.
   
இதுபோன்று வழக்குப் போடுவது சுதந்திரமாக கருத்து கூற வாய்ப்புள்ள டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றை கட்டுப்படுத்தும் முயற்சி என்பதோடு, இணையத் தளங்களில் எழுதி வருபவர்களை அச்சுறுத்தும் போக்காகும்.
   
கருத்துச் சுதந்திரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ‘கருத்து’ என்ற அமைப்பை நடத்தி வந்த கார்த்திக் சிதம்பரம் தொழிலதிபர் மீதான புகாரை திருப்பப் பெற்று கருத்துரிமைக்கு வலுசேர்க்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

1 comment:

Saravanakumar said...

இதே மாதிரி ஒரு கருத்தை ஒரு அரசியல்வாதி சொன்னால் அதற்கு அவரை கைது செய்வார்களா?

கார்த்தி அரசியலில் இருப்பவர், அதனை எதிர்த்து குரல் கொடுக்கலாம் , ஆனால் கைது முற்றிலும் தவறு.

உங்க பதிவ பார்த்தா அவர்கிட்ட விண்ணப்பம் வைப்பது போல் உள்ளது. இந்த கைது நடவடிக்கை மற்றும் புகார் கடும்
கண்டனத்துக்கு உரியது.