Friday, November 09, 2012

புதுச்சேரியின் நீர் ஆதாரத்தைப் பாழாக்கிய செம்மண் கொள்ளை


முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் மற்றும் பலர் கைதாகி வழக்கை எதிர்க்கொண்டது இந்த செம்மண் பூமியால்தான். இது புதுச்சேரியிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள தமிழகப் பகுதி. இந்த வளம் நிறைந்த செம்மண் பூமியை அதிகாரத்தைப் பயன்படுத்தி, சுரண்டி விற்று லாபமடைந்ததுதான் இவர்கள் மீதான குற்றச்சாட்டு. மேலோட்டமாகப் பார்த்தால் வெறுமனே ஒரு ஊழல் என்றே இதை எண்ணத் தோன்றும். ஆனால், இந்த மண் சுரண்டலால் புதுச்சேரியின் ஒட்டு மொத்த நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது என்பது மிகப் பெரும் சோகம். மேலே சொன்ன செம்மண் பூமி விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், நடுமேடு கிராமம் ஆகும்.

புதுச்சேரிக்கு முழுவதுக்கும் குடிநீர் வழங்கிய பகுதி முத்தரையர்பாளையம். இது இந்த செம்மண் பூமிக்கு மிக அருகிலிருக்கும் சிறிய ஊர். நான் சிறுவனாக இருந்த போது இங்கிருந்து தான் நகரத்திற்கு குடிநீர் வரும். அவ்வளவு இனிப்பாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த நீரைப் பருகியவர்கள் வெளியூர் சென்றாலும் கையில் ஒருபுட்டியில் இந்த நீரை எடுத்துச் சென்று அருந்துவர். புதுச்சேரியில் தண்ணீர் நன்றாக இருக்கும் என்றால் அது முத்தரையர்பாளையம் தண்ணீரைத்தான் குறிக்கும்.

மழை பெய்யும் காலங்களில் உபரி நீர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணையில் தேக்கி வைக்கப்படும். இந்த நீர் செஞ்சி ஆற்றில் தேங்கி, சுத்துக்கேணி வாய்க்கால் வழியாக புதுச்சேரியின் நீர் ஆதாரமான உசுட்டேரிக்கு வந்து சேரும். உசுட்டேரி புதுச்சேரியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள 12 சதுர கி.மீ. அளவுள்ள ஏரி. இந்த ஏரியின் வட கிழக்குப் பகுதி தமிழகப் பகுதி. இந்த ஏரியில் தேங்கி நிற்கும் நீர் புதுச்சேரிக்கு மிகப் பெரிய நீர் ஆதாரம். இப்படி தேக்கி வைக்கப்படும் இந்த நீர் நிலத்தடி நீராக வடிந்து இந்த செண்மண் பூமிக்கு அடியில் ஓடி வந்து முத்தரையர்பாளையத்தைச் சேரும். உசுட்டேரி விஜயநகரத்து ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இந்த ஏரியைப் பாதுகாக்க ஒரு ‘உசுட்டேரி பாதுகாப்பு இயக்கம்’ ஒன்றை உருவாக்கி வைத்துள்ளோம். அது தனிக் கதை.

முத்தரையர்பாளையம் புதுச்சேரி நகரத்திற்கே குடி நீர் வழங்கிய மிகப் பழமையான நீர்தேக்க அமைப்பு கொண்ட பகுதி. இப்போதெல்லாம் நீரை உயரமான நீர்தேக்க தொட்டியில் சேமித்து மக்களுக்கு வழங்குகிறார்கள். ஆனால், முத்தரையர்பாளையத்தில் நீரை நிலத்திற்கு கிழே 50 X 50 அடி அளவுள்ள 12 அடி ஆழமுள்ள பெரிய தொட்டிக் கட்டி அதில் சேமித்து வைப்பார்கள். அங்கிருந்து தொடக்கத்தில் நீராவி என்ஜின், பிறகு டீசல் என்ஜின் மூலமும் நீரை இறைத்து குழாய் வழியாக வழங்கி வந்தார்கள். இப்பகுதி கடல் மட்டத்தைவிட 70 அடி உயரமான பகுதி என்பதால் இயற்கையாகவே நீரோட்டம் புதுச்சேரியில் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடையும். இந்த நீர் பகிர்வுத் திட்டம் 1863ல் செயல்பாட்டிற்கு வந்தது. தற்போது முத்தரையர்பாளையம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மட்டும் இங்கிருந்து குடிநீர் வழங்கி வருகிறார்கள். முத்தரையர்பாளையம் நிலத்தடி நீர் மட்டம் தற்போது 250 அடிக்கு கீழே போய்விட்டது. துவக்கத்தில் 30 - 40 அடி ஆழத்தில் நீர் கிடைத்தது என்பது பழங்கதை. இந்த இயற்கை சார்ந்த அறிவியல்பூர்வமான குடிநீர் வழங்கு முறை பிரெஞ்சுக் காலத்தில் உருவாக்கப்பட்டது.

புதுச்சேரியில் 70களில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக் கட்டி குடிநீர் வழங்கும் முறை வந்தது. மக்கள் தொகை பெருக்கம், அண்டை மாநிலத்திலிருந்து குடியேற்றம் என புதுச்சேரியின் மக்கள் தொகை பல்கிப் பெருகிவிட்டது. இதனால், குடிந்நிர் தேவை அதிகமானதால் இந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டும் முறை வந்தது. முதன் முதலின் நீர்தேக்கத் தொட்டி பட்டாணிக் கடை ஜங்ஷனில் கட்டப்பட்டது. பின்னர் ரயில் நிலையம், முத்தியால்பேட்டை என பல இடங்களில் இந்நீர் தேக்கத் தொட்டிகள் உள்ளன. இன்று நிலத்தடி நீரை மட்டுமே நம்பி குடிநீர் விநியோகம் உள்ளது.

இவ்வாறு புதுச்சேரியின் நீர் ஆதாரமான முத்தரையர்பாளையத்திற்கு நீர் வரத்து தடுக்கப்பட்டதற்கும், நீர் மாசுப்பட்டதற்கும் மேலே சொன்ன செம்மண் கொள்ளை மிகப் பெரும் காரணம். முதல் 3 அடியில் இருக்கும் மணல், அதற்குக் கீழே இருக்கும் செம்மண், அதற்கும் கீழே கூழாங்கற்கள் என அனைத்து வகை இயற்கை வளங்களையும் சுரண்டினார்கள். இந்த கூழாங்கற்களுக்கு கீழேதான் சுவையான, தூய்மையான நீர் ஓடும். செழுமையான செம்மண்ணை வாரிச் சென்று காசாக்கிய இந்த அரசியல்வாதிகள் புதுச்சேரியின் நீர் ஆதாரத்தை கெடுத்தார்கள். நீர் ஆதாரம் எப்படி சீர்குலைந்தது என்பதை மட்டுமே இங்கு எழுதியுள்ளேன். அதனால் ஏற்படும் மற்ற அழிவுகள் ஏராளம். இதனால், சுற்றுச்சூழல் சமத்தன்மை முற்றிலும் சீர்குலைந்துவிட்டது என்பது சோகத்திலும் சோகம்.

இந்தப் புகைப்படத்தில் உள்ளதைப் பார்த்தால் இந்த செம்மண் கொள்ளை எத்தகையது என்பது முழுமையாக புரியாது. நேரில் பார்த்தால்தான் அதன் கொடூரம் புரியும். வாருங்கள் ஒருமுறை…

Tuesday, November 06, 2012

இடிந்தகரை லூர்துசாமி மீது குண்டர் சட்டம்: சில கேள்விகள்..


கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு அங்கமாக நடந்த கடல் வழி அணுவுலை முற்றுகைப் போராட்டம் சென்ற செப்டம்பர் 10 அன்று நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அரசு ஆவணப்படியே 5000 பேர் கலந்துக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்ட இடிந்தகரையை சேர்ந்த சிலுவை கித்தேரியான் மகன் லூர்துசாமி (வயது 68) என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடல் பாசிகளை சேகரித்து விற்று, அதன் மூலம் வாழ்ந்து வருபவர். சென்ற 02.11.2012 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர் மீது குண்டர் சட்டம் பதிந்து உத்தரவுப் பிறப்பித்துள்ளார் (T.P.D.A. No. 6122 dated 2.11.2012). அந்த உத்தரவினைக் காண நேர்ந்தது.

இந்த உத்தரவு சட்டப்படி செல்லுமா, அந்த உத்தரவிலுள்ள நுணுக்கமான ஓட்டைகள் குறித்து எதையும் நான் எழுத விரும்பவில்லை. ஏனென்றால், அவர் மீது போடப்பட்டுள்ள இந்த குண்டர் சட்டம் ‘போர்டில்’ வைத்து உறுதி செய்யப்பட வேண்டும். நாம் அதை எழுதினால் போலீசார் அவற்றை சரிசெய்ய குறுக்கு வழியில் வேறு ஏதாவது செய்வார்கள்.

அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ள சில பகுதிகளைத் தங்களின் பார்வைக்கு அப்படியே தருகிறேன்:

பாரா 3-ல் ஒரு பகுதி: திரு. லூர்துசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் பயங்கர ஆயுதங்களான கம்பு, கல் மற்றும் அருவாள் ஆகியவற்றால் காவலர்களை தாக்கி காயம் ஏற்படுத்தினார்கள். வாதி மற்றும் காவல் ஆளிநர்கள் மற்றும் சிறப்பு நிர்வாகத்துறை நடுவர் ஆகியோரை அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்தார்கள். இதனால் காவல் அதிகாரிகளுக்கும், ஆளிநர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டது. பயங்கரமான ஆயுதங்களால் திரு. லூர்துசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மீதும் “இந்த போலீஸ்கார புண்டமகன்களா கொல்லுங்கடா” என்று சொல்லி தொடர்ந்து தாக்கி திட்டமிட்டபடி கொலை செய்ய முயற்சித்தார்கள். இந்த கொலைவெறி தாக்குதல் காரணமாக காவல்துறையை சேர்ந்த பலருக்கு காயங்கள் மற்றும் கொடுங்காயங்கள் ஏற்பட்டன.

பாரா 4-ல் ஒரு பகுதி: திரு. லூர்துசாமி என்பவரின் செய்கை அந்த பகுதி வாழ் மக்களிடையே பெரும் அச்சத்தையும், பெரும் அமைதியின்மையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பொதுமக்களின் பொது அமைதி மற்றும் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்துவிட்டது.

பாரா 6-ல் ஒரு பகுதி: ஆவணங்களை பரீசிலனை செய்ததிலிருந்து திரு. லூர்துசாமி என்பவர் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வருகிற காரணத்தால் அவர் தமிழ்நாடு சட்டம் 14/1982 பிரிவு 2 (எப்)ல் குறிப்பிட்டுள்ளபடி ஒரு குண்டர் ஆவார் என்பதை நான் மனதார அறிகிறேன்.

இதைக் கவனமாக படித்தால் ஒன்று மட்டும் நமக்குத் தெளிவாகிறது. தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் ‘ரைட்டர்களை’ நாம் பாராட்டியே ஆக வேண்டும். இந்த ஆவணமே பொய்கள் கலந்த ஒரு நல்ல புனைக் கதைப் போல் விரிகிறது.

68 வயதான ஒருவருக்கு மன பலம் கூட இருக்கலாம். ஆனால், இவர்கள் சொல்வது போல் தாக்குதலில் ஈடுபடும் அளவுக்கு உடல் பலம் இருக்காது. இன்னொன்று இவர்கள் குறிப்பிட்டுள்ள பயங்கர ஆயுதங்கள் எவை தெரியுமா? கம்பு, கல் மற்றும் அருவாள்.

பொதுமக்களின் பொது அமைதி மற்றும் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்துவிட்டதாக கூறுகிறது இந்த ஆவணம். ஆனால், இவர் மீது எந்த பொதுமக்களும் புகார் அளிக்கவில்லை. அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி புகார் அளித்துதான் வழக்குப் போடப்பட்டுள்ளது.

இவர்கள் லூர்துசாமி மற்றும் மேலும் ஒருவர் மீது போட்டுள்ள குண்டர் சட்டம் எதற்கு கொண்டு வரப்பட்டது என்பதை அதன் பெயரை அறிந்துக் கொண்டாலே தெளிவாக தெரியும்.

அந்த சட்டத்தின் முழுப் பெயர்: 1982 ஆண்டு கள்ள சாராயக்காரர்கள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சார தொழில் குற்றவாளிகள், மணல் குற்றவாளிகள், குடிசைப் பகுதி நில ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் காணொளி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 14/1982.

இதைப் படிக்கும் போது இன்று அதிகாரத்தில் இருக்கும் பலரும் இந்தச் சட்டப்படி உள்ளே தள்ள வேண்டியவர்கள் என்று நீங்கள் எண்ணினால் அதற்கு நான் பொறுப்பல்ல.

இந்த சட்டப் பெயரில் உள்ள எந்தக் குற்றத்தை செய்துவிட்டு, 68 வயதில் லூர்துசாமி வேலூர் சிறையில் உள்ளார் என்பதை உங்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.

குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம், பொது பாதுகாப்புச் சட்டம் என அனைத்து அடக்குமுறை சட்டங்களும் போராட்டம் நடத்தும் மக்கள் மீது ஏவுவதை அரசாங்கங்கள் வாடிக்கையாக கொண்டுள்ளன. இந்தச் சட்டங்களை நீக்க வலியுறுத்தி தொடர்ந்துப் போராடுவதே இதுபோன்ற கடும் அடக்குமுறையை முறியடிப்பதாகும்.