Tuesday, November 06, 2012

இடிந்தகரை லூர்துசாமி மீது குண்டர் சட்டம்: சில கேள்விகள்..


கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு அங்கமாக நடந்த கடல் வழி அணுவுலை முற்றுகைப் போராட்டம் சென்ற செப்டம்பர் 10 அன்று நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அரசு ஆவணப்படியே 5000 பேர் கலந்துக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்ட இடிந்தகரையை சேர்ந்த சிலுவை கித்தேரியான் மகன் லூர்துசாமி (வயது 68) என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடல் பாசிகளை சேகரித்து விற்று, அதன் மூலம் வாழ்ந்து வருபவர். சென்ற 02.11.2012 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர் மீது குண்டர் சட்டம் பதிந்து உத்தரவுப் பிறப்பித்துள்ளார் (T.P.D.A. No. 6122 dated 2.11.2012). அந்த உத்தரவினைக் காண நேர்ந்தது.

இந்த உத்தரவு சட்டப்படி செல்லுமா, அந்த உத்தரவிலுள்ள நுணுக்கமான ஓட்டைகள் குறித்து எதையும் நான் எழுத விரும்பவில்லை. ஏனென்றால், அவர் மீது போடப்பட்டுள்ள இந்த குண்டர் சட்டம் ‘போர்டில்’ வைத்து உறுதி செய்யப்பட வேண்டும். நாம் அதை எழுதினால் போலீசார் அவற்றை சரிசெய்ய குறுக்கு வழியில் வேறு ஏதாவது செய்வார்கள்.

அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ள சில பகுதிகளைத் தங்களின் பார்வைக்கு அப்படியே தருகிறேன்:

பாரா 3-ல் ஒரு பகுதி: திரு. லூர்துசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் பயங்கர ஆயுதங்களான கம்பு, கல் மற்றும் அருவாள் ஆகியவற்றால் காவலர்களை தாக்கி காயம் ஏற்படுத்தினார்கள். வாதி மற்றும் காவல் ஆளிநர்கள் மற்றும் சிறப்பு நிர்வாகத்துறை நடுவர் ஆகியோரை அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்தார்கள். இதனால் காவல் அதிகாரிகளுக்கும், ஆளிநர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டது. பயங்கரமான ஆயுதங்களால் திரு. லூர்துசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மீதும் “இந்த போலீஸ்கார புண்டமகன்களா கொல்லுங்கடா” என்று சொல்லி தொடர்ந்து தாக்கி திட்டமிட்டபடி கொலை செய்ய முயற்சித்தார்கள். இந்த கொலைவெறி தாக்குதல் காரணமாக காவல்துறையை சேர்ந்த பலருக்கு காயங்கள் மற்றும் கொடுங்காயங்கள் ஏற்பட்டன.

பாரா 4-ல் ஒரு பகுதி: திரு. லூர்துசாமி என்பவரின் செய்கை அந்த பகுதி வாழ் மக்களிடையே பெரும் அச்சத்தையும், பெரும் அமைதியின்மையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பொதுமக்களின் பொது அமைதி மற்றும் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்துவிட்டது.

பாரா 6-ல் ஒரு பகுதி: ஆவணங்களை பரீசிலனை செய்ததிலிருந்து திரு. லூர்துசாமி என்பவர் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வருகிற காரணத்தால் அவர் தமிழ்நாடு சட்டம் 14/1982 பிரிவு 2 (எப்)ல் குறிப்பிட்டுள்ளபடி ஒரு குண்டர் ஆவார் என்பதை நான் மனதார அறிகிறேன்.

இதைக் கவனமாக படித்தால் ஒன்று மட்டும் நமக்குத் தெளிவாகிறது. தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் ‘ரைட்டர்களை’ நாம் பாராட்டியே ஆக வேண்டும். இந்த ஆவணமே பொய்கள் கலந்த ஒரு நல்ல புனைக் கதைப் போல் விரிகிறது.

68 வயதான ஒருவருக்கு மன பலம் கூட இருக்கலாம். ஆனால், இவர்கள் சொல்வது போல் தாக்குதலில் ஈடுபடும் அளவுக்கு உடல் பலம் இருக்காது. இன்னொன்று இவர்கள் குறிப்பிட்டுள்ள பயங்கர ஆயுதங்கள் எவை தெரியுமா? கம்பு, கல் மற்றும் அருவாள்.

பொதுமக்களின் பொது அமைதி மற்றும் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்துவிட்டதாக கூறுகிறது இந்த ஆவணம். ஆனால், இவர் மீது எந்த பொதுமக்களும் புகார் அளிக்கவில்லை. அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி புகார் அளித்துதான் வழக்குப் போடப்பட்டுள்ளது.

இவர்கள் லூர்துசாமி மற்றும் மேலும் ஒருவர் மீது போட்டுள்ள குண்டர் சட்டம் எதற்கு கொண்டு வரப்பட்டது என்பதை அதன் பெயரை அறிந்துக் கொண்டாலே தெளிவாக தெரியும்.

அந்த சட்டத்தின் முழுப் பெயர்: 1982 ஆண்டு கள்ள சாராயக்காரர்கள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சார தொழில் குற்றவாளிகள், மணல் குற்றவாளிகள், குடிசைப் பகுதி நில ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் காணொளி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 14/1982.

இதைப் படிக்கும் போது இன்று அதிகாரத்தில் இருக்கும் பலரும் இந்தச் சட்டப்படி உள்ளே தள்ள வேண்டியவர்கள் என்று நீங்கள் எண்ணினால் அதற்கு நான் பொறுப்பல்ல.

இந்த சட்டப் பெயரில் உள்ள எந்தக் குற்றத்தை செய்துவிட்டு, 68 வயதில் லூர்துசாமி வேலூர் சிறையில் உள்ளார் என்பதை உங்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.

குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம், பொது பாதுகாப்புச் சட்டம் என அனைத்து அடக்குமுறை சட்டங்களும் போராட்டம் நடத்தும் மக்கள் மீது ஏவுவதை அரசாங்கங்கள் வாடிக்கையாக கொண்டுள்ளன. இந்தச் சட்டங்களை நீக்க வலியுறுத்தி தொடர்ந்துப் போராடுவதே இதுபோன்ற கடும் அடக்குமுறையை முறியடிப்பதாகும்.

No comments: