Thursday, January 24, 2013
சற்றே நிழல் சுகம் பெற ஒரு மரம்!
புதுச்சேரி நகரத்தின் மையப் பகுதியில் உள்ள நேரு வீதியில் வடக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது. அதனுள்ளேயே அனைத்து மகளிர் காவல் நிலையமும், அருகில் போக்குவரத்துக் காவல் நிலையமும் உள்ளன. எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி இது.
காவல் கண்காணிப்பாளர் அலுவலக வாயிற்படி அருகே படர்ந்து நிழல் தரும் 'சக்கரை மரம்' ஒன்று நீண்ட காலமாக இருந்தது. துயரங்கள் பல சுமந்து, விடிவு தேடி வரும் மக்களுக்கு இம்மர நிழல் சற்று இளைப்பாற உதவும். எங்களைப் போன்ற இயக்கவாதிகளைச் சொல்லத் தேவையில்லை. கூட்டம் போடவும், போராட்டம் நடத்தவும், பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்கவும் பலமுறை இங்குக் கூடுவோம். அப்போது இம்மரத்தின் நிழலையும், காய்த்துக் கிடக்கும் சக்கரைப் பழத்தையும் நாங்கள் சுவைக்கத் தவறுவதில்லை. சென்ற 'தானே' புயலில் இம்மரமும் மரணத்தைத் தழுவியது. பலமுறை அங்கு நின்ற போது மரமற்ற வெறுமையும், வெயிலின் தாக்கத்தையும் உணர முடிந்தது.
அங்கு ஒரு மரம் வைக்க வேண்டுமென நண்பர்கள் அஷ்ரப், பாரதி ஆகியோர் என்னிடம் கூறினர். பாரதி தன்னிடம் மரக்கன்றை பாதுகாக்கும் வலைக் கூண்டு உள்ளதெனவும், மரக்கன்று வாங்கி வந்தால் வைத்து விடலாம் என்றும் கூறினார். சென்ற ஜனவரி 1 அன்று மரக்கன்று வைக்க முடிவு செய்தோம். விடுமுறை என்பதால் எங்கும் மரக்கன்று கிடைக்கவில்லை. ஒரு வழியாக அலைந்து தேடிக் கண்டுபிடித்து அதே சக்கரை மரக்கன்று ஒன்றை வாங்கி வந்தோம்.
மதிய வேளையில் மரம் வைக்க பள்ளத்தைத் தோண்ட துவங்கியவுடன் அங்கு வந்த காவல் கண்காணிப்பாளர் ராமராஜ் அவர்கள் எங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். எப்போதும் பிரச்சனைக்காகவே வருபவர்கள் இன்று திடீரென பள்ளம் தோண்டிக் கொண்டிருகிறார்களே என்று. அங்கு மரம் ஒன்று வைக்கப் போகிறோம் என்றவுடன் எங்களைப் பாராட்டினார். அருகிலிருந்த போக்குவரத்து காவல்நிலைய ஆய்வாளர் ரவிக்குமார், உதவி ஆய்வாளர் ஏழுமலை மற்றும் அதிகாரிகளும் அங்கு குழுமினர். காவல் கண்காணிப்பாளர் கையாலேயே மரக்கன்றை நட்டோம். வந்திருந்த அனைவரும் தண்ணீர் ஊற்றினோம். இனிப்பு பொட்டலம் ஒன்றைப் பிரிந்து எல்லோருக்கும் இனிப்பு வழங்கி புத்தாண்டு வாழ்த்துச் சொன்னார் காவல் கண்காணிப்பாளர். எளிதாக முடிய வேண்டிய வேலை, ஒரு சிறப்பான விழா போன்று நடந்தேறியது. அனைவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி. இவ்வளவு நாள் நாம் இதை யோசிக்கவில்லையே எனப் பேசியபடியே அனைவரும் கலைந்தார்கள்.
இப்போது அந்த மரம் நன்றாக துளிர் விட்டு தழைத்தோங்க துவங்கியுள்ளது. வாக்களித்தபடி தினமும் காலை, மாலை என கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர்களும், மகளிர் காவல்நிலையத்தினரும் தண்ணீர் ஊற்றி வருகின்றனர். ஒரு சின்ன விஷயம்தான் இது. ஆனால், மனத்திற்கு எத்தனை மகிழ்ச்சியைத் தருகிறது பாருங்கள். தன் நிழலே தனக்குப் பயன்படாத போது, வெயிலில் காய்ந்து மற்றவர்களுக்கு நிழலும் தரும் மரமென்ற உயிரும் நம் சொந்த பந்தம் தான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment