விடியல் சிவா வீட்டில் மணிவண்ணன் அவர்களை முதன் முதலாக நேரில் சந்தித்தேன். விடியல் பதிப்பகம் மட்டுமல்ல வேறெந்த பதிப்பகம் வெளியிடும் நல்ல தமிழ்ப் புத்தகங்களைத் தேடிப் படிக்கும் பழக்கம் அவருக்கு உண்டு. அதோடு மட்டுமல்லாமல் அதுபற்றி நீண்ட நேரம் விவாதிப்பார். தீவிரமாக செயல்பட்ட மார்க்சிய-லெனினிய இயக்கம் ஒன்றில் கோவை மாவட்டப் பொறுப்பாளராக இருந்துள்ளார் என்பது முக்கியமான ஒன்று. திரைத்துறையில் அவர் சாதித்தவை என்பது ஒருபுறம் என்றாலும், ஈழத்தமிழர் சிக்கலில் அவர் காட்டிய ஆர்வம், அதற்காக அவர் உழைத்தவை என்றும் மறக்கக்கூடியவை அல்ல.
சீமான் புதுச்சேரி சிறையில் இருந்த போது அவரை சந்திக்க பாரதிராஜா, மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் வந்த போது நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த வாய்ப்புக் கிடைத்தது. அதுவும் சிறை நிர்வாகம் சீமானை சந்திக்க வருபவர்பவர்களுக்கு கட்டுப்பாடு விதித்த போது என்னுடைய உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டது. நான் உள்ளிட்ட புதுச்சேரி இயக்க நண்பர்கள் சிறைத்துறை ஐ.ஜி.யை சந்தித்து இப்பிரச்சனைக்குத் தீர்வுக் கண்டோம். அப்போது ராம் இன்டர்நேஷனல் தங்கும் விடுதியில் சந்தித்து மூன்று மணிநேரம் உரையாடினோம்.
பாரதிராஜாவுடன் அரசியல் குறித்து பேசிக் கொண்டிருந்ததை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். இடையில் விடுபட்ட சில விஷயங்களை எடுத்துக் கூறினார். அப்போது 'காஷ்மீர் எல்லாம் சென்று வந்தீர்கள், ஏன் ஈழத்திற்குச் செல்லவில்லை' என்று கேள்வி எழுப்பினார். அவர் நாங்கள் ஈழப் பிரச்சனைக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற அர்த்தத்தில் அப்படி பேசினார். நான் அமைதியாக அவருக்கு விளக்கம் அளித்தேன்.
'இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீருக்கு சென்ற போது 3 நாட்கள் வீட்டு காவலில் இராணுவ பாதுகாப்பில் வைக்கப்பட்டோம். பின்னர் விடுவிக்கப்பட்டு காஷ்மீர் பகுதிகளுக்குச் சென்று வந்து அறிக்கை வெளியிட்டோம். ஆனால் ஈழத்தின் நிலைமை அப்படியில்லை. அங்கு சென்று வர முடியாத சூழல் உள்ளது. அங்கு சென்று வருவதில் உயிருக்கு ஆபத்துள்ளது' என்று கூறினேன். அவர் புரிந்துக் கொண்டார். பின்னர் அவர்களுடன் மதிய உணவு உண்டேன். அவரின் திரைத்துறை பிரபலத்தைத் தாண்டி அவர் ஒரு இயக்கவாதி போன்று நடத்துக் கொண்டது என்னை மிகவும் கவர்ந்தது.
திரைத்துறையில் எடுத்துக் கொண்டால் 80களில் வெளிவந்த பாரதிராஜாவின் ''அலைகள் ஓய்வதில்லை” போன்ற படங்கள் அப்போது விடலைப் பையன்களை உலுக்கிய படங்கள். நானும் அதிலிருந்து தப்பவில்லை. இளம் பெண்கள் தாவணி போட்டுக் கொண்டிருந்த காலத்தில் குட்டைப் பாவாடை, மேல் சட்டை போட்டுக் கொண்டு ராதா காட்சி அளித்ததையும், 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே...' பாடல் காட்சியில் தாமரைக் குளத்தில் அந்த இளசுகளின் காமம் நிறைந்த காதலையும் அப்பருவத்தில் ரசிக்காமல் இருந்திருக்க முடியாது. அந்த படத்திற்கு மணிவண்ணன் வசனம் எழுதினார் என்பது இப்போதுதான் தெரிந்துக் கொண்டேன்.
அவர் திரைத்துறையில் சாதித்தவை ஏராளம். வசனகர்த்தா எனத் தொடங்கி கதையாசிரியர், இயக்குநர், குணச்சித்திர நடிகர், வில்லன், காமெடியன் என வலம் வந்தவர். இயக்குநர்கள் காமெடியன்களாக வந்ததற்கு இவர் முன்னுதாரணம் எனலாம். இந்த வரிசையில் ஆர்.சுந்தரராஜன், மனோ பாலா என பலரையும் கூற முடியும். 'அமைதிப்படை' அவரது அரசியல் நையாண்டியின் உச்சகட்டம். பலமுறை எண்ணி ரசித்த படமது. திரைத்துறையில் அரசியல் ரீதியாக செயல்பட்டவர்களுக்கு பக்கபலமாக இருந்தவர்.
58 வயதான அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டியவர். உடலைப் பேணாதது அவரைக் கொண்டு சென்றுவிட்டது. திரைத்துறையில் வேறெவருக்கும் கிடைக்காத பெருமை இவருக்குக் கிடைத்தது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழ் அமைப்பினர் இவருக்கு அஞ்சலி செலுத்தினர். அது அவர் பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதற்குக் கிடைத்த அங்கீகாரம்.
No comments:
Post a Comment