தமிழ்நாடு அரசின் +2 தேர்வு ரத்து என்ற அறிவிப்பு ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு ஆபத்தானது. தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு (NEET, JEE) மூலம் உயர்கல்விச் சேர்க்கை நடத்தாமல் இருக்கவும் முடியாது. மத்திய பாஜக அரசு இதில் உறுதியாக இருக்கிறது. கல்வி மத்திய பட்டியலில் இருப்பதால் மாநில அரசு தன்னிச்சையாக எதையும் செய்ய இயலாது.
நீட் நுழைவுத் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீண்ட காலம் ஆகும். அதன் பின் தமிழ்நாடு அரசு அந்த அறிக்கையின் மீது கொள்கை முடிவெடுத்து செயல்படுத்த இன்னும் காலதாமதம் ஏற்படும். இதுவொரு வகையில் நீட்டை தடுக்க சட்ட ரீதியாக எடுக்கும் முயற்சியாக கருதினாலும், அது உடனே நடக்கக்கூடிய சாத்தியக்கூறு இல்லை.
நுழைவுத் தேர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்து அறிவித்தார் பிரதமர் மோடி என்ற கல்வியாளர்களின் கருத்தும் கவனிக்கத்தக்கது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு +2 தேர்வை ரத்து செய்திருப்பது ஏற்புடையதல்ல. நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே சேர்க்கை நடக்குமானால் கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் நிலைக் கவலைக்குரியதாகும். மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு ஓரளவுக்குப் பயனளித்தாலும் அது போதுமானதல்ல.
மதிப்பெண் போடுவதில் நிறைய குளறுபடிகள், முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. அரசிடம் மதிப்பெண் போடுவது பற்றி ஒரு தெளிவான கொள்கை இதுவரையில் இல்லை. இதில் அரசுக்குப் பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தங்கள் வரும். பள்ளிகளிடம் மதிப்பெண் போடும் பணியை ஒப்படைத்தால், அதில் சமநிலை இருக்க வாய்ப்பில்லை. இது மேலும் மாணவர்களின் கல்வியையும் மனநிலையையும் பாதிக்கக்கூடும்.
கல்வியாளர்கள் கூறுவது போல தேர்வு வைத்து, அதன் அடிப்படையில் உயர்கல்விச் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். குறைந்த பாடத் திட்டத்துடனும், நேரம் குறைத்தும் தேர்வு நடத்தி இருக்கலாம். அதிக தேர்வு மையங்களை உருவாக்கி, குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டு கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தி இருக்கலாம். விடைத்தாள் திருத்தம்கூட சற்று தாராளமாக திருத்தி இருக்கலாம்.
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை தேர்வு நடத்துவது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டதற்கு 60% பேர் தேர்வு நடத்த வேண்டுமென கூறியுள்ளனர். அதேபோல், அகரம் அமைப்பு சார்பில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 600 மாணவர்களிடம் கருத்துக் கேட்டதற்குத் தேர்வு நடத்த வேண்டுமென 67% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த 600 மாணவர்களும் அகரம் அமைப்பிடம் கல்வி நிதியுதவிக் கேட்டு விண்ணப்பித்த ஏழை, எளிய மாணவர்கள். அதோடு, இதுகுறித்து தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் தேர்வு நடத்த வேண்டுமென பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.
தற்போதைய முடிவு மத்திய அரசைப் பகைத்துக் கொள்ள கூடாது என்று தமிழ்நாடு அரசு எடுத்த முடிவாகவே தெரிகிறது. மேலும், இம்முடிவு தனியார் பள்ளிகள் போன்ற மேல்தட்டினர் பயிலும் பள்ளிகளுக்கு உவப்பாகவும் வாய்ப்பாகவும் அமையும். நுழைவுத் தேர்வு என்ற ஒற்றை இலக்கில் மாணவர்களைத் தயார்படுத்தி உயர்கல்வியைக் கைப்பற்றும் சி.பி.எஸ்.இ. தனியார் பள்ளிகளின் நோக்கத்திற்கு வலுசேர்ப்பதாகும்.
ஏற்கனவே கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விநிலை மிகவும் பின்தங்கிய நிலையியே உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் இம்முடிவு கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பெரும் பாதகமாகவே அமையும்.
இந்தச் சூழ்நிலையில், கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வியில் குறைந்தது 25% இடஒதுக்கீடு கோருவது சரியானதாக இருக்கும் எனப் பேராசிரியர் பிரபா.கல்விமணி கூறினார். இந்த இடஒதுக்கீடு நிதியுதவி பெரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றார். இத்தேர்வு ரத்து அறிவிப்பு எப்படி கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதற்குத் தடையாக இருக்கும் என்பதை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கவலையுடன் விளக்கினார்.
கிராமப்புற ஏழை, எளிய, அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் காக்க நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய காலம் இது. இதுகுறித்து அனைத்து கட்சிகளும் ஆய்வு மேற்கொண்டு தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
No comments:
Post a Comment