தேங்காய்த்திட்டு புதுச்சேரி விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும் பங்களிப்பு செய்த ஊர். பொதுவுடமைத் தலைவரும், நாடறிந்த தொழிற்சங்கத் தலைவருமான டி.கே.இராமானுஜம், திமுக தலைவர் சீத்தா வேதநாயகம், தமிழக்கனல் இராமகிருட்டினன் எனப் பல போராளிகள், சான்றோர்கள் வாழ்ந்த ஊர்.
செழிப்புமிக்க இவ்வூரைக் கையகப்படுத்தி துறைமுகம் கொண்டு வரவும், கேளிக்கைகளை அரங்கேற்றிட ஐந்து நட்சத்திர விடுதிகள் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது. பழைய துறைமுகம் உள்ள 153 ஏக்கர் நிலத்தைக் குறைந்த வாடகைக்குத் தனியார் நிறுவனத்திற்குக் குத்தகைக்குக் கொடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இத்திட்டத்தைச் செயல்படுத்த அப்போதைய முதலமைச்சர் ரங்கசாமி, துறைமுகத் துறை அமைச்சர் வல்சராஜ் உள்ளிட்டோர் முழுவீச்சில் களமிறங்கினர்.
சமூக இயக்கங்களை ஒருங்கிணைத்து தோழர் சி.எச்.பாலமோகனன் ஒருங்கிணைப்பில் ‘புதுச்சேரி மக்கள் பாதுகாப்புக் குழு’ உருவாக்கப்பட்டது. இதற்கு அப்போது ஆண்ட காங்கிரஸ் கட்சி தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஆதரவளித்தன. தேங்காய்த்திட்டு மக்களைத் துடிப்புமிகு இளைஞராக இருந்த பாஸ்கரன் ஒருங்கிணைத்தார். உடன் பெருந்துணையாக லோகு.அய்யப்பன் இருந்தார். அதற்கு அனைத்து வகையிலும் பக்க பலமாக இருந்தவர் ஐயா காளியப்பன்.
துறைமுக விரிவாக்கத்தத் திட்டத்தைப் பெற்ற தனியார் நிறுவனம் பழைய துறைமுக முகப்பில் வைத்த பெயர்ப் பலகை அடித்து நொறுக்கப்பட்டது. அரசின் கூட்டுறவு ஒன்றிய கருத்தரங்க அரங்கில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த விடாமல் தடுக்கப்பட்டது. புதுச்சேரியே குலுங்கும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
தேங்காய்த்திட்டு மக்கள் நடத்திய அமைச்சர் வல்சராஜ் உருவ பொம்மை எரிப்புப் போராட்டம் காவல்துறையின் தவறான அணுகுமுறையால் பெரும் வன்முறையில் முடிந்தது. காவல்துறையின் தடியடியால் ஏராளமான மக்களும், முன்னின்ற போராட்டக்காரர்களும் படுகாயமடைந்தனர். தேங்காய்த்திட்டு மக்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் மீது இரண்டு வழக்குகள் போடப்பட்டன. இப்போராட்டத்தின் போது காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஐயா காளியப்பன், சு.பாஸ்கரன், லோகு.அய்யப்பன், கோ.சுகுமாரன் என 18 பேர் மீது இ.த.ச. 307 பிரிவின்கீழ் கொலை முயற்சி வழக்குப் பதியப்பட்டது.
இப்போராட்டத்தின் உச்சகட்டமாக சுற்றுச்சூழல் போராளி மேதா பட்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. மேதா பட்கர் தேங்காய்த்திட்டு ஊரில் தங்கி போராடிய மக்களை வீடு வீடாக சென்று பாராட்டினார். போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு கண்டு மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தார்.
இப்போராட்டத்தின் விளைவாக துறைமுக விரிவாக்கத் திட்டம் முற்றிலும் கைவிடப்பட்டது. முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு அடிபணிந்தது. இப்போராட்டத்தில் தேங்காய்த்திட்டு மக்கள் குறிப்பாக பெண்களின் பங்கு முகாமையானது. வீரஞ்செறிந்த இப்போராட்டத்தில் துணிவுடன் பெண்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
ஐயா காளியப்பன் எங்கள் மூவரைக் கலக்காமல் எந்த முடிவும் எடுக்கமாட்டார். எங்களைப் பார்த்து ‘செல்வத்திற்கு பாஸ்கரன், வீரத்திற்கு அய்யப்பன், அறிவுக்கு சுகுமாரன்’ என்றுகூறிப் பாராட்டுவார். விருந்தோம்பல் என்றால் ஐயா காளியப்பன் குடும்பத்தைத்தான் எடுத்துக்காட்டாக கூற முடியும். அவரது துணைவியார் அஞ்சலை (எ) அஞ்சுகம் அன்பும் அரவணைப்புடனும் எங்களைக் கவனிப்பார்.
இப்போராட்டம் எத்தனையோ மகத்தான ஆளுமைகள், கட்சியினர், இயக்கத்தினர் கலந்துகொண்டனர். அவர்களின் பெயர்களை எல்லாம் இங்குக் குறிப்பிடவில்லை. தனியே ஒரு நூல் எழுத வேண்டும். அதில் விரிவாகக் குறிப்பிடுகிறேன்.
இரண்டாண்டுகளுக்கு முன்னர் தோழர் லோகு.அய்யப்பன் போராடிய மக்கள் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். உயர்நீதிமன்றம் அனைவர் மீதான வழக்குகளை ரத்து செய்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
இப்போராட்டத்தின் போதுதான் ஐயா காளியப்பன் உடன் நெருங்கிப் பழகினேன். போராட்டத்தைத் திட்டமிடுவதும், அதைச் செயல்படுத்துவதும் கண்டுப் பூரிப்படைவார். இப்படியான ஒரு பெரிய மனிதரை கொரோனா விட்டு வைக்கவில்லை. ஈடு செய்ய முடியாத இழப்பு.
இறப்பிற்குச் சென்று அழுது மனதை ஆற்றுப்படுத்த முடியாத சூழல் துயரத்தைக் கூட்டுகிறது.
ஐயா காளியப்பன் இழப்பால் துயருறும் அவரது துணைவியார், பிள்ளைகள், உறவினர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment