பாரதியார் பல்கலைக்கூடத்திற்குத் தகுதியில்லாதவரை முதல்வராக நியமித்தது குறித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ. (AICTE) விதிகளுக்கு மாறாக எவ்விதத் தகுதியும் இல்லாத இசைத் துறைப் பேராசிரியர் பி.வி.போஸ் முதல்வராக நியமிக்கப்பட்டதில் ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளது. இதுகுறித்து, புதுச்சேரி அரசுக்குப் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கலைப் பண்பாட்டுத்துறைச் செயலர் நெடுஞ்செழியன் தகுதி இல்லாதவரை முதல்வராக நியமித்தது மட்டுமல்லாமல் அவரை நிரந்தர முதல்வராக்கவும் முயற்சித்து வருகிறார்.
கலைப் பண்பாட்டுத்துறைச் செயலர் மீது பல்வேறு புகார்கள் அளித்தும் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மத்திய அரசு இதில் தலையிட்டு ஊழல் அதிகாரியான கலைப் பண்பாட்டுத்துறைச் செயலரைக் காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேண்டும்.
மேலும், பாரதியார் பல்கலைக்கூடத்திற்குத் தகுதி இல்லாதவரை முதல்வராக நியமித்தது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இதுகுறித்து கடந்த 21.10.2021 அன்று பிரதமர், உள்துறை அமைச்சர், உள்துறைச் செயலர், சி.பி.ஐ. இயக்குநர், மத்திய ஊழல் கண்காணிப்புத் தலைமை ஆணையர் உள்ளிட்டோருக்குப் புகார் மனு அனுப்பினோம்.
கடந்த 02.02.2022 அன்று இப்புகார் மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் தலைமைச் செயலருக்கு அனுப்பி வைத்து தேவையான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
எனவே, இப்புகார் மனு மீது தலைமைச் செயலர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாரதியார் பல்கலைக்கூட முதல்வரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம். இல்லையேல், கட்சிகள், சமூக அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment