புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமென அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயம் ஆக்குவதை எதிர்த்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் குரல் கொடுத்ததாலும், ஊழியர்களின் தொடர் போராட்டத்தினாலும் தனியார்மயம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் 1 முதல் 100 யூனிட் வரை ரூ.1.55-ல் இருந்து ரூ.1.90 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை ரூ.2.60-ல் இருந்து ரூ.2.90 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை ரூ.4.65-ல் ரூ.5.00 ஆகவும், 300 யூனிட்டிற்கு மேல் ஒரு யூனிட் ரூ.5.05-ல் இருந்து ரூ.5.45 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் அதிலிருந்து மீளவில்லை. இந்நிலையில், இந்த மின் கட்டண உயர்வு மக்களுக்கு மேலும் சுமையாக அமையும். அதுவும் மின்சாரம் அதிகம் பயன்படுத்தப்படும் கோடைக் காலத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது வெயிலின் கொடுமையில் வாடும் மக்களை மேலும் வாட்டுவதாகும்.
புதுச்சேரியில் கோடிக்கணக்கான ரூபாய் மின் கட்டண பாக்கி வைத்துள்ள அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்க முயற்சிக்காமல் மின் கட்டண உயர்வு மூலம் மக்களை வஞ்சிப்பது சரியல்ல.
எனவே, மக்கள் நலன் கருதி மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். இல்லையேல், கட்சி, சமூக அமைப்புகளைத் திரட்டிப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கிறோம்.
No comments:
Post a Comment