Thursday, August 29, 2024

முன்தேதியிட்டு அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.08.2024) விடுத்துள்ள அறிக்கை:

மின்துறை முன்தேதியிட்டு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

கடந்த ஜூன் 12 அன்று மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையம் வீடு, வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனால், மின்கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

மேலும், புதுச்சேரி அரசு மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியது. இதனால், உயர்த்தப்பட்ட மின் கட்டணம் செயல்பாட்டிற்கு வரவில்லை.

மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையம் அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இதனால் தற்போது மின்துறை ஜூன் 12 அன்று உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை முன்தேதியிட்டு அறிவித்துள்ளது. இது பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

25 ஆயிரம் கோடி சொத்துள்ள அரசு துறையான மின்துறையை தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு பொதுமக்கள், மின்துறை ஊழியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களும், வணிகர்களும் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில் இந்த மின்கட்டண உயர்வு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும். அரசு உரிய முயற்சி செய்து மின் கட்டண உயர்வைத் தடுக்கத் தவறியது கண்டனத்திற்குரியது.

எனவே, முன்தேதியிட்டு அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டுமென புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

No comments: