Monday, August 19, 2024

பாப்பாநாடு இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்திரவிட வேண்டும்!


மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தல்!!

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள பாப்பாநாடு கிராமத்தில் கடந்த 12.08.2024 அன்று மதியம் 3.00 மணி அளவில் 23 வயதுடைய இளம்பெண் ஒருவரை 4 பேர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். 2 பேர் உடந்தையாக இருந்துள்ளனர். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

12.08.2024 அன்று வங்கிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய 23 வயதுடைய இளம் பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, மக்கள் வசிக்கக் கூடிய குடியிருப்புப் பகுதியில் உள்ள கொட்டகைக்குள் இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு அப்பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கத்திய அப்பெண்ணை பீர் பாட்டலால் தலை, கழுத்தில் தாக்கியுள்ளனர். அடித்து உதைத்துள்ளனர். பாலியல் வன்புணர்வில் 4 பேர் அடுத்தடுத்து ஈடுபட்டுள்ளனர். இதற்கு உடந்தையாக 2 பேர் காவல் இருந்துள்ளனர்.

அன்றைய தினம் சுமார் மாலை 4.20 மணியளவில் பாதிக்கப்பட்ட பெண் அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் பாப்பாநாடு காவல்நிலையம் சென்று, அங்குப் பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் சூர்யா என்பவரிடம் நடந்த சம்பவத்தைக் கூறி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர். ஆனால், காவல் உதவி ஆய்வாளர் புகாரை எழுதி முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்வதற்குப் பதிலாக, வழக்கறிஞர் மூலம் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல்நிலையம் சென்று புகார் அளியுங்கள் என்று கூறி திருப்பி அனுப்பி வைத்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் எனக்கு உடல்நிலை சரியில்லை, புகார் எழுத முடியவில்லை என்று கூறிய பின்னரும் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவில்லை. மேலும், நடந்த சம்பவம் குறித்து மேற்சொன்ன காவல் அதிகாரி ஆண் காவலர்கள் இருவர் முன்னிலையியே விசாரித்துள்ளார்.

பின்னர், பாதிக்கப்பட்ட பெண் அவரது தந்தை மற்றும் உறவினர்களோடு பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று அங்குப் பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் நடந்த சம்பவத்தைக் கூறி சிகிச்சை அளிக்கும்படி கேட்டுள்ளார். ஆனால், சிகிச்சை அளிக்க மறுத்ததோடு காவல்நிலையம் சென்று புகார் அளித்துவிட்டு வருமாறு கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.

அதன்பின்னர், அன்றைய தினமே இரவு சுமார் 1.00 மணியளவில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல்நிலையம் சென்று நடந்த சம்பவத்தைப் புகார் கூறியுள்ளனர். அங்குப் பணியில் இருந்த பெண் காவல் அதிகாரி தஞ்சாவூர் இராஜா மிராசுதார் அரசு மகப்பேறு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெறும்படி கூறியுள்ளார்.

பின்னர், பாதிக்கப்பட்ட பெண், அவரது தந்தை மற்றும் உறவினர்கள் 12.08.2024 – 13.08.2024 இரவு சுமார் 3.00 மணியளவில் தஞ்சாவூர் இராஜா மிராசுதார் அரசு மகப்பேறு மருத்துவனைக்குச் சென்று அங்குப் பணியில் இருந்த மருத்துவரிடம் நடந்த சம்பவத்தைக் கூறி சிகிச்சை அளிக்கக் கோரியுள்ளனர். மருத்துவர்கள் உடனே உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.

இதன்பின்னர்தான், ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று, 13.08.2024 காலை 7.00 மணிக்கு முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துள்ளனர். (Cr.No.13/2024 u/s 127(2), 118(1), 70(1), 351(3), 308(5), 61(2) Bharatiya Nyaya Sanhita (BNS), 2023). இதன்பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஒரத்தநாடு நீதித்துறை நடுவர் வாக்குமூலம் பெற்றுப் பதிவு செய்துள்ளார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் 1) கவி (எ) கவிதாசன், 2) திவாகர், 3) பிரவீன், 4) ஒரு சிறுவன் ஆகிய 4 பேர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் புகார் வாக்குமூலத்திலும், ஒரத்தநாடு நீதித்துறை நடுவரிடம் அளித்த வாக்குமூலத்திலும் கூறிய 1) வேல்முருகன், 2) ஒரு சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. இவர்கள் இருவரும் பாலியல் வன்புணர்வு சம்பவம் நடக்கும்போது யாராவது வருகிறார்களா எனப் பார்த்துக் கொண்டு காவல் இருந்தவர்கள். குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள்.

தற்போது பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை முடிந்து தனது வீட்டில் பாதுகாப்பு இல்லாததால், வேறு பாதுகாப்பான இடத்தில் தங்கி இருந்து வருகிறார். அவர் தலை, முதுகு போன்ற பகுதிகளில் குற்றவாளிகள் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களுக்கு உயர் சிகிச்சை தேவைப்படுகிறது. மேலும், உளவியல் ரீதியான சிகிச்சையும் தேவைப்படுகிறது.

குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண் அணிந்திருந்த 1/2 பவுன் தோடு, 1 கிராம் பவுன் வளையம், செல்போன், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பேன் அட்டை ஆகியவற்றையும் பறித்துள்ளனர். இதில் தங்க நகைகளை பட்டுக்கோட்டையில் விற்றுள்ளனர். இவற்றைக் காவல்துறையினர் கைப்பற்றியதாக தெரியவில்லை. மேலும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து ஆதாரங்களைத் திரட்டியதாகவும் தெரியவில்லை.

சம்பவம் நடந்தது முதல் பாப்பாநாடு காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளர் சூர்யா சட்டப்படி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் குற்றமிழைத்தவர்களுக்கு ஆதரவாகவும், அவர்களைச் சட்ட நடவடிக்கையில் இருந்து காப்பாற்றும் நோக்கிலேயே செயல்பட்டுள்ளார். தற்போது அவர் ஒரத்தநாடு காவல்நிலையத்தில் இருந்து ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஒரத்தநாடு நீதித்துறை நடுவர் அவர்கள் பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை நிர்வாகத்திற்குக் கடமையில் இருந்து தவறியதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சம்பவம் நடந்த கொட்டகைதான் கஞ்சா வியாபாரம் நடத்தும் இடமாகவும் இருந்துள்ளது. பாப்பாநாடு பகுதிகளில் காவல்துறை ஆதரவோடு கஞ்சா விற்பனைப் பல காலமாக நடந்து வருகிறது.

இன்று (19.08.2024) பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி வேண்டியும், குற்றமிழைத்த இருவரையும் கைது செய்யவும் வலியுறுத்தி பாப்பாநாடு பொதுமக்கள், வணிகர்கள் கடையடைப்பு மற்றும் உண்ணாநோன்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முன்வைக்கப்படும் கோரிக்கைகள்:

1) இளம் பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கை ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் விசாரித்தால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்காது என்பதால், இவ்வழக்கை உடனடியாக சிபிசிஐடி புலன்விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

2) குற்றமிழைத்த வேல்முருகன் மற்றும் ஒரு சிறுவன் இருவரையும் இவ்வழக்கில் சேர்த்து உடனே கைது செய்ய வேண்டும்.

3) பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பதிவு செய்து வழக்குப் பதிவு செய்யாததோடு, மருத்துவமனைக்கு அனுப்பி உரிய சிகிச்சையும், மருத்துவப் பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கத் தவறிய பாப்பாநாடு காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளர் சூர்யா மீதும், சிகிச்சை அளிக்க மறுத்ததோடு, மருத்துவப் பரிசோதனையை உரிய நேரத்தில் செய்யாமல் வழக்கின் முக்கிய ஆதாரங்கள் திட்டமிட்டே அழிய காரணமான பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீதும் உரிய குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) பாப்பாநாடு காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளர் சூர்யா, பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

5) பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு செலவில் உயர் மருத்துவச் சிகிச்சையும், உளவியல் ரீதியான சிகிச்சையும் உடனே அளிக்க வேண்டும்.

6) பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இடைக்கால இழப்பீடாக 5 இலட்சம் ரூபாயும், அவரின் கல்வித் தகுதிக்கேற்ப அரசுப் பணியும் உடனே வழங்க வேண்டும்.

7) பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

8) பாப்பாநாடு பகுதிகளில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் கஞ்சா போன்ற போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாள்: 19.08.2024

இடம்: பாப்பாநாடு

இவண்,

கோ. சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழ்நாடு – புதுச்சேரி.

சே. கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம், காரைக்குடி.

அரச முருகுபாண்டியன், மக்கள் சிவில் உரிமைக் கழகம், காரைக்குடி.

அ.சிம்சன், நீதிக்கான மக்கள் இயக்கம், காரைக்குடி.

ஆ. ரேவதி, மாநிலத் தலைவர், அனைத்திந்திய முற்போக்குப் பெண்கள் கழகம்.

பழ. ஆசைத்தம்பி, மாநிலச் செயலர் , இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (லிபரேஷன்).

படம்: சம்பவம் நடந்த கொட்டகை.

No comments: