Friday, May 12, 2006

மரண தண்டனை - நீதியை நிலைநிறுத்தும் கொலை

மரணம் மதிப்புடையதாக இருக்க வேண்டும். தீர்மானிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் மரணமே கொலை. நீதியை நிலைநாட்ட, அரசும் நீதி அமைப்புகளும் செய்யும் கொலையை, ‘மரண தண்டனை' என்கிறது இந்திய அரசியல் சாசனம். எந்த உயிரையும் பறிக்கும் அதிகாரம், அரசுக்கும் நீதி அமைப்புகளுக்கும் கூடாது என்பதே மனித உரிமையின் அடிப்படை. காட்டுமிராண்டிக் காலத்தில் நிலவிய ‘பழிக்குப் பழி' தற்பொழுதும் பின்பற்றப்படுவது மனித நேயத்தைக் குழிதோண்டிப் புதைக்கிறது.சமூகச் சூழ்நிலையில் நிகழ்த்தப்பட்ட ஒரு குற்றத்திற்காக, சிறைக் கொட்டடியில் சட்டப்பூர்வமாக இன்னொரு குற்றம் நிகழ்வதை ஏற்க முடியாது. மரணத்தை எதிர்கொண்டே வாழும் சமூகத்திற்கு, மரணத்தை தண்டனையாக வழங்குவது ஒழிக்கப்பட வேண்டும்.


"மரண தண்டனைக் கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதைவிட, அவர்களுக்கு மிகுந்த அன்பான ஈடுபாட்டுடன் ஆன்மீக வழிகாட்டுதலின்படி நல்வழிப்படுத்தலாம். மரண தண்டனைக் கைதிகளில் ஒருவருக்கு 75 வயதாகிறது. இனி அவர் விடுதலையானால், எவ்விதக் குற்றச் செயல்களிலும் அவர் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே, இதுபோன்ற கைதிகளை சுமையாகக் கருதாமல், மனிதச் சொத்தாகக் கருதி நல்வழிப்படுத்த அரசு முயல வேண்டும்.இதுபோன்ற கைதிகள், இனி இந்த உலகில் வாழும் எஞ்சிய நாட்களைத் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும். முடிந்தவரை, பெரும்பாலானோர் விஷயத்தில் இதைக் கடைப்பிடித்து சீர்திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும்".குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இவ்வாறு கூறியிருப்பது, நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் மரண தண்டனை ஒழிப்புப் போராட்டத்திற்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. உலக அளவில் மரண தண்டனை ஒழிப்புக்கு ஆதரவு பெருகிவரும் இவ்வேளையில், ‘அகிம்சை'யை இடையறாது வலியுறுத்தும் இந்தியா போன்ற நாடுகள் இத்தண்டனையை நீக்காமல் வைத்திருப்பது நேர்முரணானது.

அண்மையில்கூட, தென்ஆப்பிரிக்க அரசியல் சாசன நீதிமன்றம் மரண தண்டனையை சட்ட விரோதம் என அறிவித்துள்ளது. பதினோரு நீதிபதிகள் ஒருமித்து வழங்கிய இத்தீர்ப்பினால், இருபது ஆண்டு காலமாகச் சிறையில் வாடும் 453 பேர் உயிர் தப்பியுள்ளனர். மரண தண்டனை வழங்குவது, மனித நாகரீகத்திற்கு எதிரானது; இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமைக்கு முரணானது. மரண தண்டனை வழங்குவதன் மூலம் குற்றங்கள் குறையும் என்பதும், இது குற்றம் செய்பவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதும் நிரூபிக்கப்படவில்லை. உலக அளவில் நடைபெற்ற பல்வேறு ஆய்வுகள் இதனை உறுதி செய்துள்ளன. "எங்களைப் பொறுத்தவரையில், மரண தண்டனை வழங்குவதன் மூலம் குற்றங்கள் குறைவதில்லை. இதுபற்றி விரிவாக, ஆழமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என இந்திய சட்ட ஆணையத்தின் 35 ஆவது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மரண தண்டனைக்கு எதிரான உணர்வு, கற்றுத் தேர்ந்த நீதிபதிகளிடம் இருந்தது என்பதற்கு 1950இல் நடந்த இந்நிகழ்வே சான்று. மும்பையில் மாவட்ட நீதிபதியாக இருந்த காரேகாட்டுக்கு உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அப்போதெல்லாம் உயர் நீதிமன்ற நீதிபதிகள்தான் மரண தண்டனை வழங்க முடியும்.

உயர் நீதிமன்ற நீதிபதி பதவியை ஏற்றுக் கொண்டால், தான் மரண தண்டனை வழங்க நேரிடும் என அப்பதவியை உதறித் தள்ளினார் காரேகாட். ஆனால், இன்றைய நீதிபதிகளின் நிலையோ வெட்கக் கேடானது."எப்போதும் ஏழைதான், ஏமாளிதான், நீக்ரோதான், கறுப்பு மனிதன்தான் தூக்கிலிடப்படுகிறான். பணம் படைத்தவன், வெள்ளைக்காரன் தப்பித்துக் கொள்கிறான். இந்தப் பாகுபாட்டை நம்மால் சகித்துக் கொள்ள முடியாது'' என அமெரிக்க கருப்பின நீதிபதி மார்ஷல் கூறியுள்ளது, மரண தண்டனை வழங்கப்படுவதன் சமூக பொருளாதாரப் பின்னணியை விளக்குகிறது.1981இல் ஒரே வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், தனித்தனியே மேல்முறையீடு செய்ததில் அளிக்கப்பட்ட தண்டனைகள், மரண தண்டனை வழங்குவதை கேள்விக்குள்ளாக்குகின்றன. ஒரு குடும்பத்தினரை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்ற ஜீட்டா சிங், கஷ்மீரா சிங், அர்பன் சிங் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியே மேல்முறையீடு செய்துள்ளனர். ஜீட்டா சிங்கின் வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தனர். அவர் தூக்கிலிடப்பட்டார். கஷ்மீரா சிங்கின் வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை வழங்கினர். அர்பன் சிங்கின் வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேற்சொன்ன தீர்ப்புகளை அறிந்த பின்னர் அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை குறைக்கப்பட வேண்டுமென்பதற்காக, குடியரசுத் தலைவருக்கு அவரது கருணை மனுவை அனுப்பி வைத்தனர்.

"மரண தண்டனை வழங்கப்படுவதற்கான சிறப்புக் காரணங்கள் என்பது ஒவ்வொரு நீதிபதியைப் பொறுத்தும், அவர் கொண்டிருக்கும் மதிப்பீடுகளைப் பொறுத்தும், சமூக நீதி குறித்து அவர் வைத்திருக்கும் கருத்தைப் பொறுத்தும் மாறுபட்டே தீரும்'' என பச்சன் சிங் வழக்கில், மரண தண்டனை குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மாறுபட்டு கருத்துரைத்த நீதிபதிகள் கூறியுள்ளது, இங்கு மிகவும் பொறுத்தப்பாடுடையது. இதுபோன்ற தீர்ப்புகள் வழங்கப்படுவது, "சமூக அரசியல் அதிகாரம் அற்றவர்கள் மட்டுந்தான் மரண தண்டனை பெறுகின்றனர்'' என மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பாலகோபால் போன்றவர்கள் கூறுவதற்கு அணி சேர்க்கிறது.அக்டோபர் 10: உலக மரண தண்டனை எதிர்ப்பு நாளையொட்டி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள், இந்தியாவில் பல்வேறு சிறைகளில் தூக்குக் கயிறை எதிர்நோக்கி நாள்தோறும் செத்துக் கொண்டிருக்கும் 50 பேருக்கு மரண தண்டனையை ரத்து செய்து, மன்னிப்பு வழங்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய அரசியல் சாசனப் பிரிவு 72 இன்படி, மரண தண்டனை அளிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களைப் பரிசீலனை செய்து முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் அமைச்சரவை விவாதித்து எடுக்கும் முடிவின் பரிந்துரையின் பேரிலேயே குடியரசுத் தலைவர் முடிவெடுக்க முடியும். இந்தியா முழுவதும் இருந்து மரண தண்டனை பெற்றவர்கள் 50 பேரின் கருணை மனுக்களைப் பரிசீலித்து, அவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கலாம் என குடியரசுத் தலைவர் முடிவெடுத்து, உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார். ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத உள்துறை அமைச்சகம், இந்த 50 பேரில் 20 பேர் கொடிய குற்றம் புரிந்தவர்கள் என்று கூறி, அவர்கள் தண்டனையைக் குறைக்கக் கூடாது எனக் கூறியுள்ளது. "இந்தியா மரண தண்டனையை ஒழிக்க வேண்டுமென' உலக நாடுகள் வலியுறுத்தி வரும் இச்சூழலில், மத்திய அரசு இப்படியொரு முடிவை எடுத்திருப்பது, மனித உரிமைக்கு எதிராக இந்திய அரசு செயல்படுவதையே வெளிப்படுத்துகிறது. இந்திய அரசின் இப்போக்கு, கடும் கண்டனத்திற்குரியது.இதில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன்; வீரப்பன் தொடர்புடைய வழக்கில் சைமன், பிலவேந்திரன், ஞானபிரகாஷ், மாதய்யன்; இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த பிட்டாவைக் கொல்ல முயன்ற வழக்கில் தவீந்தர் சிங் புல்லர் உட்பட 20 பேர் அடங்குவதாக உள்துறை அமைச்சகம் கூறுகிறது. பச்சின் சிங் வழக்கில் "அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்க வேண்டும்'' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த மூன்று வழக்குகளுமே ‘அரிதிலும் அரிதான வழக்குகள்' எனக் கருத முடியாது என சட்ட வல்லுநர்கள் கூறியிருப்பது நினைவுகூரத்தக்கது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் காலாவதியான ‘தடா' சட்டத்தின்படி, காவல் துறை அதிகாரிகளால் கட்டாயமாகப் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் அப்படியே சாட்சியமாக எடுத்துக் கொள்ளப்பட்டதன் அடிப்படையிலேயே பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை வழங்கி ‘சாதனை' புரிந்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் 19 பேரை விடுதலை செய்ததோடு, நான்கு பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

தமிழகத்தில் மரண தண்டனைக்கு எதிராகத் தொடர் பிரச்சாரங்கள், போராட்டங்கள் நடைபெற்றன. ராஜிவ் காந்தி வழக்கில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென பல தரப்பினரும் கோரியதன் விளைவாக, சோனியா காந்தி நளினிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையைக் குறைக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அப்போதைய தி.மு.க. அமைச்சரவை, நளினிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. அப்போது சோனியா காந்தி, ‘என் கணவர் மரணத்திற்காக எந்த ஒரு உயிரும் பலியாவதை நானோ, என் குடும்பத்தினரோ விரும்பவில்லை' எனக் குறிப்பிட்டார்.தற்போது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமெனக் கூறியிருப்பதைத் தொடர்ந்து, “ராஜிவ் காந்தி வழக்கில் உடனடியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்'' என அவ்வழக்கின் விசாரணை அதிகாரியான கார்த்திகேயன் கூறியுள்ளார். ராஜிவ் காந்தி வழக்கில் வழங்கப்பட்ட மரண தண்டனை குறித்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளபோது, ஓய்வுபெற்ற அதிகாரியான கார்த்திகேயன், இதுபோன்று கூறுவது கண்டனத்திற்குரியது.1999 முதல் கடந்த ஆறு ஆண்டுகளாக முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மரண தண்டனையைச் சுமந்து கொண்டு சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றனர். "ஒருவர் மரண தண்டனையை எதிர்நோக்கி மூன்று ஆண்டுகளுக்கு மேல், அந்த அச்சத்திலேயே இருக்க நேரிட்டால் அவரைத் தூக்கிலிட முடியாது; தண்டனையைக் குறைத்தாக வேண்டும்'' என உச்ச நீதிமன்ற நீதிபதி சின்னப்ப (ரெட்டி) கூறியிருப்பது, இங்கு கடைப்பிடிக்கப் படவில்லை.வீரப்பன் தொடர்புடைய வழக்கில், மைசூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையைக் குறைக்க வேண்டுமென மேல்முறையீடு செய்தபோது, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து சைமன், பிலவேந்திரன், ஞானபிரகாஷ், மாதையன் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேல்முறையீடு மனுவின் மீது மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பது, சட்டப்படி தவறானது என்பதை உச்ச நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானபிரகாஷ் வீரப்பனை நேரில் பார்த்ததுகூட கிடையாது என்பதும், அவர் தான் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு வீரப்பனை ஒரு முறையாவது பார்க்க வேண்டுமெனக் கூறியுள்ளதும், மரண தண்டனை வழங்குவதன் நியாயத்தை உடைத்தெறிகிறது.

நாகர்கோயில் நீதிமன்றத்திற்குள் அய்யாவு என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் ஷேக் மீரான், செல்வம், ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்ததால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றமும் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இவ்வழக்கு விசாரணைக்காக நீதிபதிகள் செலவழித்த நேரம் எவ்வளவு தெரியுமா? மூன்று பேரின் உயிரைப் பறிக்கும் இந்தத் தீர்ப்பை வழங்க, நீதிபதிகள் செலவிட்டது சில நிமிடங்கள் மட்டுமே."ஒருவருக்கு மரண தண்டனை வழங்கும்போது, அவர் தொடர்பான வழக்கின் அனைத்து அம்சங்களும் மிகவும் ஆழமாக ஆராயப்படுகிறது. அதன்பிறகே, மரண தண்டனை வழங்கப்படுகிறது' என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சி. லகோத்தி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற நாளன்று (31.10.2005) பேசியுள்ளார். மரண தண்டனையை நீக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். லகோத்தியின் கருத்து மிகவும் அபத்தமானது என்பதற்கு, மேற்சொன்ன வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தனித்தனியே வழங்கிய தீர்ப்புகளே சான்று.எந்த நீதிமன்றம் தாமாகவே உண்மைகளைக் கண்டறிந்து அதன் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்க முடியாது.

குற்றத்தைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, காவல் துறை நீதிமன்றத்தின் முன் வைக்கும் ஆவணங்கள், சாட்சியங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே நீதிபதிகள் தீர்ப்பளிக்க முடியும். காவல் துறை பதிவு செய்யும் வழக்குகளில் 75 சதவிகிதம் பொய்யானவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீதிபதிகள் தீர விசாரித்து தண்டனை வழங்கினால்கூட, தவறு நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்பதற்கு பாண்டியம்மாள் வழக்கே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.மதுரை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள் கொல்லப்பட்ட வழக்கில், அவரது கணவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது காவல் துறை. அவர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் நடைபெற்றது. விசாரணை முடிந்து, தீர்ப்புச் சொல்லப்பட இருந்த நேரத்தில், கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்ட பாண்டியம்மாள் திடீரென நீதிபதி முன்பு ஆஜரானார். ஒட்டுமொத்த நீதித் துறையே வெட்கித் தலைகுனிந்தது. ஒருவேளை பாண்டியம்மாள் கணவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு அதுவும் நிறைவேற்றப்பட்டிருந்தால், இக்குற்றத்திற்கு யார் பொறுப்பேற்பது?

"நீதிபதிகள் பொதுவாகப் பிற்போக்கு எண்ணம் உடையவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்'' என உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் கூறியுள்ளது உண்மைதான் என்பதை, இத்தீர்ப்பு வழங்கிய முறை தெளிவாக்குகிறது. இந்நிலையில் அப்துல் கலாம், எட்டு ஆண்டுக் காலமாக குடியரசுத் தலைவர் மாளிகையில் உறங்கிக் கிடந்த கருணை மனுக்களைத் தூசி தட்டி எடுத்து பரிசீலனை செய்து முடிவெடுத்திருப்பது, மனித உரிமைகளுக்குக் கிடைத்த வெற்றியே. ‘மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமெனக் கூறப்பட்ட 50 பேரில் 20 பேர் கொடிய குற்றம் புரிந்தவர்கள் எனக் கூறி அவர்களுக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது' என உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதன் பிறகும் உள்துறை அமைச்சகத்திற்கு அனைவருடைய மரண தண்டனையையும் குறைக்க வேண்டுமென குறிப்பு எழுதியுள்ளது, அப்துல் கலாமின் மனித நேயத்தையே காட்டுகிறது.மரண தண்டனை கூடாது என்பதே மனிதநேயமுள்ளவர்களின் கோரிக்கை. இதன் பொருள் தண்டனையே கூடாது என்பதல்ல. ஏற்றத்தாழ்வு நிறைந்த, சாதியப் பாகுபாடுகள் நிலவும் இச்சமூகத்தில், விளிம்பு நிலையில் வாழும் மக்கள் தங்களின் வாழ்க்கைக்காக கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. போதிய அளவில் கல்வியறிவு அளிக்கப்படாமல், வேலைவாய்ப்பு எட்டாக்கனியாகி, வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் நிலை இருக்கிறது. குற்றவாளிகள் உருவாவதை இப்படியான சமூகப் பின்னணியிலிருந்து பார்க்க வேண்டும்.

குற்றம் புரிபவர்கள் திருத்தப்பட வேண்டுமென்பதே நோக்கம் என அரசாங்கம் ஒருபுறம் கூறிக்கொண்டே மறுபுறம் மரண தண்டனையை வலியுறுத்துவது மிகப் பெரிய முரண்பாடாகும்.இந்தியாவில் 1950 முதல் மரண தண்டனை வழங்கப்பட்ட 75 வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அமெரிக்காவில் 1973 முதல் 119 பேர் மீது விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. 1990 முதல் இன்று வரை 40 நாடுகள் மரண தண்டனையைக் கைவிட்டுள்ளன. ஆனால், இந்திய அரசு மரண தண்டனை குறித்து இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது. பாகிஸ்தானில் இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜித் சிங்கிற்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய, இந்திய அரசு கடும் முயற்சி எடுத்தது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங், மனித நேய அடிப்படையில் இப்பிரச்சினையை அணுகுவதாகக் கூறினார். அதே நேரத்தில், குடியரசுத் தலைவர் இந்தியாவிலுள்ள 50 பேருக்கு மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்று கூறியிருப்பதை மட்டும் இந்திய அரசு எதிர்ப்பது ஏன்?மரண தண்டனையை ரத்து செய்து மன்னிப்பு வழங்க வேண்டுமென அப்துல் கலாம் கூறியுள்ளதை பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஒரு சிலர் எதிர்த்துள்ளனர். நாடாளுமன்றத்தில் விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் கூறியுள்ளார். ‘மரண தண்டனையைக் குறைப்பது குறித்து நாடாளுமன்றம் கூடி விவாதித்து நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறேன்' என அப்துல் கலாம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ளார். தமிழகத்திலுள்ள தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., சி.பி.அய்., சி.பி.எம். போன்ற மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள், மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய சரியான தருணமிது.

மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள 50 பேரின் உயிரைக் காப்பதோடு, இந்திய அரசியல் சாசனப் புத்தகத்திலிருந்தே மரண தண்டனை நீக்கப்பட வேண்டும். மனித உரிமை அமைப்புகள், மனித நேயமுள்ளவர்கள், நீண்ட காலமாகக் கோரிவருவதை நிறைவேற்ற அனைவரும் பாடுபட வேண்டும். குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மரண தண்டனை ஒழிப்புக்கு ஆதரவுக் கரம் நீட்டியிருப்பதைப் பற்றிக் கொண்டு, மனித உரிமைக்கானப் போராட்டத்தைத் தொடர வேண்டும்.

மரண தண்டனையிலும் வர்ணாசிரமம்!மரண தண்டனை, எந்த விதத்திலும் குற்றத்தைத் தடுப்பதில்லை. இந்தியாவில் நிலவும் சமூக அமைப்பைக் கருத்தில் கொண்டு சட்ட ரீதியான மரண தண்டனை ழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். தீட்டு என்பதன் அடிப்படையில் இயங்கும் இந்திய சமூக அமைப்பின் உளவியல் ‘சதுர்வர்ணம்' என்ற கோட்பாட்டில், ஆழமாக வேரூன்றி இருக்கிறது. பசுவதையும், பார்ப்பன வதையும் செய்யக் கூடாது என்று இந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்திய நீதிமன்றங்களில் செயல்பட்டுவரும் பெரும்பாலானவர்கள், இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். இதன் விளைவாக, காலனிய கால இந்தியாவிலும், சுதந்திர இந்தியாவிலும் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களே (பழங்குடியினர், தலித்துகள், இஸ்லாம், சீக்கிய மதச் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள்).மறுபுறத்தில், அதே குற்றத்தைச் செய்த ஆதிக்கச் சாதியினருக்கு குறிப்பாகப் பார்ப்பனர்களுக்கு மரண தண்டனை வழங்குவது என்பது, அரிதான ஒன்றாகவே இருந்திருக்கிறது.

அமெரிக்காவில் ஒரே விதமான குற்றத்திற்கு வெள்ளையர்களைவிட, கருப்பர்களுக்குதான் அதிகளவில் மரண தண்டனை தரப்படுகிறது. அதுபோல, இந்தியாவில் சாதிய சமூக அமைப்பின் கீழ் மிக அதிகமான அளவுக்கு மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களே!
- குந்தன் சி. மேனன், பொதுச் செயலாளர், மனித உரிமை அமைப்புகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு, கேரளா

மரண தண்டனை நிறை வேற்றப்படும் முறைகள்சவுதி அரேபியா, ஈராக் : தலையை வெட்டுதல்அமெரிக்கா: மின்சாரத்தின் மூலம், கொடூரமான ஊசி மூலம்ஆப்கானிஸ்தான், ஈரான்: கல்லால் அடித்துக் கொல்வதுஎகிப்து, ஜப்பான், ஜோர்டான், பாகிஸ்தான், இந்தியா, சிங்கப்பூர்: தூக்குத் தண்டனைசீனா, கவுதமலா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து: கொடூரமான ஊசிமூலம், துப்பாக்கியால் சுடுவதுபெலாரஸ், சோமாலியா, தாய்வான், உஸ்பெகிஸ்தான், வியட்நாம்: துப்பாக்கியால் சுடுவது

மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாடுகள்‘அம்னஸ்டி இன்டர்நேஷனல்' தகவல்களின்படி, 1990 இல் இருந்து 40 நாடுகள் மரண தண்டனையை ஒழித்து விட்டன. மொத்தத்தில் 120 நாடுகளில் மரண தண்டனை சட்டத்திலிருந்தும், நடைமுறையிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. 85 நாடுகள் எல்லா வகை ‘கிரிமினல்' குற்றங்களுக்கும் மரண தண்டனையை ரத்து செய்திருக்கின்றன. 24 நாடுகள் நடைமுறையில் மரண தண்டனையை ரத்து செய்துள்ளன. சட்ட ரீதியாக இன்னும் ஒழிக்கவில்லை. இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளாக அவை மரண தண்டனையை யாருக்கும் அளிக்கவில்லை.11 நாடுகள் போர்க்கால குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை அளிக்கின்றன.

"மரண தண்டனை வேண்டாம்''உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் "இன்று இந்திய குற்றவியல் சட்டம், அரிதிலும் அரிதான வழக்குகளில் மரண தண்டனை அளிக்கலாம் என்று கூறுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இது நிலைப் பெற்றிருக்கும்வரை, நமக்கு சொந்தக் கருத்துகள் இருப்பினும் அதை ஒதுக்கி வைத்துவிட வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். இந்தத் தன்மையின் கீழ் வழக்குகள் இருக்கும் தருணத்தில், மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனில் அது விதிக்கப்பட்டாக வேண்டும். மரண தண்டனை குறித்த எனது சொந்தக் கருத்துகளை முன்னிறுத்தி சட்டத்திற்குப் புறம்பாக, அது வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்.உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இல்லாமல், இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் என் கருத்தைக் கேட்டால், நான் மரண தண்டனை வேண்டாம் என்றுதான் வலியுறுத்துவேன். அதற்குப் பதில் வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை அளிக்கலாம். அய்ரோப்பா முழுவதும் மரண தண்டனை இல்லை. அமெரிக்காவின் பல மாநிலங்களில் மரண தண்டனை இல்லை. வேறு பல நாடுகளிலும் அது இல்லை. இது, ஒட்டுமொத்தமாக சமூக - அரசியல் கேள்வி சார்ந்ததாகும். இது தொடர வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து இந்திய நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும்.''‘தி இந்து' 21.10.2005



"மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்''
-டாக்டர் அம்பேத்கர்

"...நமது அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியாக ‘உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யும் உரிமை' நிர்ணயம் செய்யப்பட வேண்டுமா? அல்லது எத்தகைய கிரிமினல் மேல் முறையீடுகளை உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொள்ளலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை, நாம் நமது நாடாளுமன்றத்திடமே அளித்து விடலாமா? இந்தக் கேள்விகளை, தவிர்க்க இயலாத ஒரு நியதியாக உருவாக்க நான் விரும்பவில்லை. மேலும், கேள்விகளுக்கான எனது தீர்மானமான பதில் என்று எதையும் இந்தச் சூழலில் நான் கூற விரும்பவில்லை.எனக்கென்று தனிப்பட்ட கருத்துகள் உள்ளன. பிரச்சனைகள் எழும்போது, எனது கருத்துகளை நான் அதன் மீது திணிப்பதில்லை. குறை நிறைகளை சீர்தூக்கி, திறந்த மனதுடன்தான் பிரச்சனைக்கான தீர்வினைத் தருகிறேன். கிரிமினல் மேல் முறையீடுகளை விசாரிக்கப் போதுமான அதிகாரத்தை, உச்ச நீதிமன்றத்திற்கு நமது நாடாளுமன்றமே வழங்கிவிடலாம். உச்ச நீதிமன்றத்திற்கானப் பணியின் அளவையும், உச்ச நீதி மன்றத்தால் எவ்வளவு வேலை செய்ய முடியும் என்பதையும், அங்கு பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையையும், அதற்கானப் பொருளாதார செலவுகளையும், நமது நாடு சந்திக்க முடியுமா என்பதற்கானப் புள்ளிவிவரம் திரட்டப்பட்டு, அதை நமது நாடாளுமன்றம் ஆய்வு செய்ய வேண்டும்.மரண தண்டனை மேல் முறையீட்டு வழக்குகளை உச்ச நீதிமன்றமே விசாரிக்கலாம் என்பதற்கு மாறாக, மரண தண்டனையை முழுவதுமாக ஒழித்து விடுவதை நான் ஆதரிக்கிறேன் (கேளுங்கள், கேளுங்கள்). இந்த முடிவைப் பின்பற்றுவதே சரியானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதனால் பல முரண்பாடுகள் முடிவிற்குக் கொண்டு வரப்படும்.

நமது நாடு அகிம்சையில் நம்பிக்கை கொண்ட நாடு. அகிம்சை நமது நாட்டின் பண்டைய கலாச்சாரம். மக்கள் தற்போது தங்களின் வாழ்வியல் நெறியாக இதனைப் பின்பற்றாமல் இருந்தால்கூட, அகிம்சையை ஒரு நியாயத் தீர்ப்பாக மக்கள் முடிந்தவரை பின்பற்ற வேண்டும் என விரும்புகின்றனர். இந்த உண்மைக்கு மதிப்பளிக்கும் வகையில், நாம் இந்த மக்களுக்கு ஆற்ற வேண்டிய சரியான பணி மரண தண்டனையை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதுதான்.''‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 13, பக்கம் 639

நன்றி: தலித் முரசு
முழுமையான செய்தியை தலித் முரசில் பார்க்கவும் முழுமையான கட்டுரைக்கு இங்கே சொடுக்கவும்

6 comments:

Anonymous said...

மிகச்சிறந்ததொரு ஆக்கம்.
நல்லதொரு சிந்தனை.

தப்பு செய்தவனுக்கே மரணத்தை தண்டனையாய் கொடுக்க மனிதாபிமானம் இடம் கொடாத இக்காலத்தில், தப்பென்றாலே என்னவென்று தெரியாத பச்சிளம் பிஞ்சுகளுக்கு மரணத்தை பரிசாக கொடுக்கும் கைங்கரியத்தையும் தயவு செய்து பாருங்களேன்.http://eelavali.blogspot.com/ மற்றவர்களுக்கும் காட்டுங்களேன்.http://eelavali.blogspot.com/

Anonymous said...

someone will kill(planned murder)/rape children/amputate cruelly for personal enmity or rage but still we have to let them live forever? this is ridiculous.

circumstancial or defencive murder/crime also to be analysed very carefully.

if NoT, then individuals can take the liberty killing. simply one can kill someone for personal hatred if there is NO death sentence.

i'll telling you, SOME PEOPLE ARE CRUEL FROM EVERY OUNCE OF THEIR BRAIN.THEY ARE DESERVED TO BE KILLED.

வவ்வால் said...

நீங்கள் சொல்வது சரி தான் தவறுக்கு மரணம் தண்டனை அல்ல அடுத்தவர் உயிரைப்பறிக்க கூடாது தான்.

ஆனால் தொடர் கொலையாக 20 - 30 பேரை கொல்கிறான் ஒருவன் அவனை வெளியில் விட்டால் இன்னும் கொல்வான் ,அவனை தொடர்ந்து கண்கானிப்பதும் சாத்தியம் இல்லை, எத்தனை ஆண்டுகள் தான் சிறையிலும் வைத்து இருப்பது.அல்லது அவனால் பறிக்கப்பட்ட உயிர்களுக்கு நீங்கள் என்ன தான் நிவாரணம் தருவீர்கள்.

//குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இவ்வாறு கூறியிருப்பது, நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் மரண தண்டனை ஒழிப்புப் போராட்டத்திற்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது//

கொல்கட்டாவை சேர்ந்த ஒரு அடுக்குமாடி வீடுகளின் காவலாளி அங்கே வசிக்கும் ஒருவரது மகள் ,பள்ளி மாணவியை பலத்காரம் செய்து கொன்று விட்டான் அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது ,அவனது கருணை மனு திரு.அப்துல் கலாமிடம் சென்றது அவரே இது கொடும்செயல் எனவே கருணைக்காட்டப்பட மாட்டாது என நிராகரித்தரே.இது நினைவில்லையா.

பசுவின் கன்றை கொன்றதற்காக தனது மகனை தேர்க்காலில் இட்ட மனு நீதி சோழன் இங்கே தானே தோன்றினான்.

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

அனாநி, குரு, வவ்வால் ஆகியோருக்கு நன்றி!

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

வவ்வால் அவர்களுக்கு,

//தொடர் கொலையாக 20 - 30 பேரை கொல்கிறான் ஒருவன் அவனை வெளியில் விட்டால் இன்னும் கொல்வான் ,அவனை தொடர்ந்து கண்கானிப்பதும் சாத்தியம் இல்லை, எத்தனை ஆண்டுகள் தான் சிறையிலும் வைத்து இருப்பது.அல்லது அவனால் பறிக்கப்பட்ட உயிர்களுக்கு நீங்கள் என்ன தான் நிவாரணம் தருவீர்கள்.//

வலைப்பதிவில் கூறியது போல,

குற்றத்தைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, காவல் துறை நீதிமன்றத்தின் முன் வைக்கும் ஆவணங்கள், சாட்சியங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே நீதிபதிகள் தீர்ப்பளிக்க முடியும். காவல் துறை பதிவு செய்யும் வழக்குகளில் 75 சதவிகிதம் பொய்யானவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீதிபதிகள் தீர விசாரித்து தண்டனை வழங்கினால்கூட, தவறு நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்பதற்கு பாண்டியம்மாள் வழக்கே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.மதுரை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள் கொல்லப்பட்ட வழக்கில், அவரது கணவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது காவல் துறை. அவர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் நடைபெற்றது. விசாரணை முடிந்து, தீர்ப்புச் சொல்லப்பட இருந்த நேரத்தில், கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்ட பாண்டியம்மாள் திடீரென நீதிபதி முன்பு ஆஜரானார். ஒட்டுமொத்த நீதித் துறையே வெட்கித் தலைகுனிந்தது. ஒருவேளை பாண்டியம்மாள் கணவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு அதுவும் நிறைவேற்றப்பட்டிருந்தால், இக்குற்றத்திற்கு யார் பொறுப்பேற்பது?

காவல் துறை உண்மையான வழக்குகளை மட்டும் பதிவு செய்யும் என்பதில்லை. பல வழக்குகள் பணம் தான் அடிப்படையாக காவல் வழக்குகள் உள்ளன. எனவே, அதிகமாக அப்பாவி மக்கள் ஏழைகள் மட்டுமே பாதிக்கிறார்கள்.

பல குற்றவாளிகள் தப்பிக்கிறார்கள் என்பது தான் உண்மை.

மேலே சொன்ன வழக்கில் நிரபராதி எப்படி பாதிக்கிறார் என்று பார்த்தால் தெரியும்.

சமீபத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு 3 ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள் மூவர். 3 ஆண்டுகளுக்கு பின் கொலை செய்யப்பட்டவராக கருதப்பட்டவர் பெண்ணாக மாறி மீண்டும் வந்தார்.

ஆக குற்றச்சாட்டுக்கள் எல்லாம் உண்மையா?. பல நேரங்களில் அப்பாவிகளை நேர்மையற்ற முறையில் தண்டிக்கிறது இந்த சட்டம்.

எனவே, இந்த சட்டத்தின் அடிப்படையில் இத்தகைய தீர்ப்பு ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

சட்டம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்கிறது.

ஆனால், நிலைமை அப்படி இல்லை. பணம் உள்ளவன் தப்பிக்கிறான் ஏழை தவறு செய்யாமலே தண்டிக்கப் படுகிறான் என்பது உண்மை.

எனவே, இந்த நிச்சயமற்ற நிலையில் மரணதண்டனை மனிதாபிமான அடிப்படையிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

நாடோடி said...

காமடிங்க.
ஒரு தொழில்முறை கொலைகாரன் இருக்கிறான் என்று கொள்ளுங்கள். அவனுக்கும் இதேதான.

மரண தண்டனை கொடுராமானதுதான்.
இந்தியா போன்ற ஜனத்தொகை அதிகாமாக உள்ள நாட்டில் குற்றங்களை தடுக்க இவை தேவைப்படுகிறதே.