Friday, September 08, 2006

அரச பயங்கரவாதம் தொலைக்கப்பட்ட சீக்கியர்கள்

1984இல் சீக்கியர்களான தனது பாதுகாவலர்களால் இந்திரா காந்தி கொல்லப்பட்டார். இதற்கு ஒட்டுமொத்த சீக்கிய சமூகமே காரணம் என்ற வெறியுடன் காங்கிரஸ்காரர்கள் டில்லியில், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி சீக்கியர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தனர். கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள உடைமைகளைச் சூறையாடினர். இப்படுகொலைகள் குறித்து விசாரிக்க, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.டி. நானாவதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அவ்வாணையம், தனது விசாரணை அறிக்கையை அண்மையில் மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. இதனை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் இணைத்து தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து, சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்த விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.

ஒட்டுமொத்த சீக்கிய சமூகம் நானாவதி ஆணையத்தின் அறிக்கையை நிராகரித்தது. சீக்கிய அமைப்புகள் பல டில்லியிலும் பஞ்சாப் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரின. ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு இப்பிரச்சினையை மூடி மறைக்க அனைத்து வகையிலும் முயல்கின்றது. டில்லியில் நடைபெற்ற படுகொலைகள் குறித்து மட்டுமே நானாவதி அறிக்கை கூறுகிறது. அதைப் பற்றிதான் விவாதம் நடத்து கொண்டிருக்கிறது. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, தமிழ் நாட்டிலும் கோவை, சென்னை போன்ற நகரங்களில் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளும், அவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டதும் நடந்தன.

ஆனால், அவை குறித்து எந்த முறையான விசாரணையும் நடத்தப்படவும் இல்லை; பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித இழப்பீடும் கொடுக்கப்படவும் இல்லை. இப்படி எத்தனையோ கொடுமைகள், பாதிக்கப்பட்டோருக்கு எந்த நீதியும் நிவாரணம் கிடைக்காமலேயே மறைந்து போய்க் கொண்டிருக்கின்றன. 1984 முதல் 1997 வரை பஞ்சாபில் நடைபெற்ற அப்படியானதொரு கொடூரம், இன்னம் வெளியுலகிற்குத் தெரியாமலேயே இருக்கிறது.



பஞ்சாப் தனி நாடாக வேண்டுமென்று மிகப் பெரிய அளவில் ஆயுதப் போராட்டம் நடைபெற்ற காலகட்டமான எண்பதுகளில், சீக்கியர்கள் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர். காலிஸ்தான் கேட்டுப் போராடியவர்களை அடக்குகிறோம் என்ற பெயரில், ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இத்தகைய கொடூர படுகொலைகளை எதிர்த்து குரல் கொடுத்தவர்களும் கூட, கடும் அடக்குமுறையை சந்திக்க வேண்டி இருந்தது. இருந்தாலும், பஞ்சாபில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் முன்முயற்சியால் 18 மனித உரிமை அமைப்புகளை ஒன்றிணைத்து "பஞ்சாபில் காணாமல் போனவர்கள் விசாரணைக் குழு' ஒன்றை ஏற்படுத்தி, பல்வேறு இடர்ப்பாடுகளையும் கடந்து விரிவான விசாரணை மேற்கொண்டு வெளியிட்டுள்ள அறிக்கை, நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

அறிக்கையின் முதல் பகுதி முழுவதும் இவ்விசாரணைக்குழு அமைக்கப்பட்டதன் பின்னணியையும், அதன் செயல்பாடுகளுக்கு ஏற்பட்ட இடையூறுகளையும் விவரிக்கிறது. சனவரி 1995இல் அகாலிதளம் கட்சியின் மனித உரிமைப் பிரிவின் பொதுச் செயலாளர் ஜஸ்வந்த்சிங் கல்ரா, பஞ்சாபில் பாதுகாப்புப் படையினர் ஆயிரக்கணக்கான சீக்கியர்களைக் கொன்று அவர்களது உடல்களை ரகசியமாக எரித்தது குறித்துப் பத்திரிகையாளர்கள் மத்தியில் சில ஆவணங்களை வெளியிட்டார். இது, பஞ்சாபில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஜஸ்வந்த்சிங் கல்ரா திடீரென காணாமல் போனார். அவர் அமிர்தசரசில் உள்ள அவரது வீட்டிலிருந்து பஞ்சாப் காவல் துறையினரால் கடத்திக் கொல்லப்பட்டார்.

இதனிடையே பஞ்சாபின் தார்ன் தரன் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அஜித்சிங் சாந்து, 24.5.1997 அன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறார். இவர், ஜஸ்வந்த் சிங் கல்ரா, பகத்சிங்கின் உறவினரான குல்ஜித்சிங் தாட் உள்ளிட்ட பலரையும் சட்ட விரோதமாகக் கடத்தி, துன்புறுத்தி காவல் துறை காவலில் கொன்றதற்காக சிறை தண்டனை பெற்றவர். இவர், சீக்கியர்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகளுக்கு தலைமை தாங்கிய பஞ்சாப் டி.ஜி.பி. கே.பி.எஸ். கில்லின் தன்மை சீடராகக் கருதப்பட்டவர். இவரால் நடந்த பல மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மைகள் வெளிவரக் கூடும் என்பதால், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்தது. அப்பொழுது பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த கே.பி.எஸ். கில், இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு மனித உரிமைகளுக்கு எதிராக மிகப் பெரும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்த கொடூரச் செயல்கள் குறித்து விசாரணை மேற்கொண்டிருந்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், காவல் துறையினருக்கு எதிராக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. வேலை நிறுத்தம் செய்யப் போவதாக காவல் துறையினர் மிரட்டி வந்தனர். பா.ஜ.க. வெளிப்படையாக காவல் துறைக்கு ஆதரவாக செயல்பட்டது. தாவ்லின் சிங் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களும் கூட, அஜித்சிங் சாந்துவை கொன்றது மனித உரிமைக்காரர்கள்தான் என்று எழுதினர்.

1984 சூனில் பொற்கோயிலுக்குள் ராணுவம் நுழைந்து பெரும் தாக்குதல் நடத்தியது. 1985 இல் அடக்குறைச் சட்டமான "தடா' பஞ்சாபில் நடைமுறைப்படுத்தப்பட்டது. "தடா'வில் 31.7.1994 வரை பஞ்சாபில் மட்டுமே 17,529 வழக்குகள் பதிவுசெய்யப் பட்டுள்ளன. 1988 மார்ச்சில் நாடாளுமன்றம் இந்திய அரசியல் சட்டத்தில், 51 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, பஞ்சாபில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மேலும், பஞ்சாபில் அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் எதுவும் பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டது.

பல வகையிலும் நெருக்கடி நிறைந்த இப்படியான காலகட்டத்தில்தான் மனித உரிமை அமைப்புகள் ஒன்றிணைந்து, பஞ்சாபில் நடந்த சட்ட விரோதக் கடத்தல், கொலை, உடல்களை எரித்தல் போன்றவை குறித்து விசாரணை மேற்கொள்ள முடிவு செய்தனர். இக்குழுவின் சார்பில் முதல் மாநாடு, உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி குல்தீப் சிங் தலைமையில் 10.12.1997 அன்று சண்டிகரில் நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்டோர் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்று, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்துப் புகார் அளித்தனர். இந்தப் புகார்களை விசாரிக்க, பஞ்சாப் அரசு ஓர் உண்மை அறியும் ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டுமென இம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அரசாங்கம் செவி சாய்க்காததால், கொல்கத்தா உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தேவாத்தியா தலைமையில், மும்பை மற்றும் டில்லி உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளான எச். சுரேஷ், ஜஸ்பால் சிங் ஆகியோர் அடங்கிய மக்கள் ஆணையம் ஒன்றை அமைத்தனர்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் மேற்கொண்ட விசாரணை, போதிய பலன் அளிக்கவில்லை. இதனால் மக்கள் ஆணையத்திற்குக் கூடுதல் பொறுப்பு ஏற்பட்டது. இதனிடையே பஞ்சாப் டி.ஜி.பி., மக்கள் ஆணையத்தைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசிடம் கோரினார். இதனைத் தொடர்ந்து மக்கள் ஆணையம் இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிராகவும், நீதித் துறைக்கு இணை அமைப்பாக செயல்படுவதாகவும் கூறி, அதைத் தடை செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. வழக்கு வெகுநாள் இழுத்துக் கொண்டு போனதால், மக்கள் ஆணையம் செயல்பட இயலவில்லை. எனவே, "பஞ்சாபில் காணாமல் போனவர்கள் விசாரணைக் குழு' அவ்விசாரணையை மேற்கொண்டது. ஆனால், பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருந்தும், நடந்த கொடூரங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்க, அச்சத்தின் காரணமாக எவரும் முன்வரவில்லை. இந்நிலையில், இக்குழுவால் வெறும் 838 சம்பவங்களை மட்டுமே ஆதாரத்துடன் தொகுக்க முடிந்தது. ஏற்கனவே மக்கள் ஆணையத்திற்கு வந்த 523 புகார்களும் உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதால், அந்த புகார்களை இக்குழு கணக்கில் எடுத்துக் கொள்ள இயலவில்லை. பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 112 வழக்குகளையும் இக்குழு பரிசீலித்தது.

கொல்லப்பட்ட 838 பேரில் 241 பேர், அவர்கள் வீடுகளில் இருந்து கடத்தப்பட்டுள்ளனர். 222 வழக்குகளில் பாதுகாப்புப் படையினரும், 224 வழக்குகளில் காவல் துறையினரும் கொல்லப்பட்டவர்களின் உடைமைகளை சட்ட விரோதமாக சேதப்படுத்தி அழித்துள்ளனர். 290 வழக்குளில் காணாமல் போனவர்கள் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அவர்களின் உறவினர்கள் கொல்லப்பட்டவர்களை காவல் நிலைய, விசாரணை மய்ய லாக்கப்புகளில் பார்த்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 149 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த போதும், அவற்றில் பெரும்பான்மையான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. 689 பேர் காவல் துறையின் அச்சுறுத்தல், வறுமை போன்ற காரணங்களால் நீதிமன்றத்தை அணுகவில்லை.

காவல் துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் வெளிவந்த பத்திரிகை செய்திகளில், 467 சம்பவங்கள் மோதல் சாவுகளாகவே சித்தரிக்கப்பட்டன. 517 வழக்குகளில் கொல்லப்பட்டவர்கள், சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்டு காவல் துறை காவலில் கொல்லப்பட்டு, மோதலில் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டது. 193 வழக்குகளில் ஒரே குடும்பத்தில் ஒன்றிற்கு மேற்பட்டோர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். 74 வழக்குகளில் மட்டுமே கொல்லப்பட்டவர்களின் உடல்கள், உறவினர்களிடம் இறுதிச் சடங்கிற்காக திருப்பித் தரப்பட்டன. 759 வழக்குகளில் கொல்லப்பட்டவர்கள் மட்டுமல்லாது, அவர்களது உறவினர்களும் காவல் நிலையத்தில் பாலியல் பலாத்காரம் உட்பட கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின் உடல்கள் காவல் துறையினரால் ரகசியமாக பரித்காட், கபூர்தாலா, லூதியானா, மன்சா, மோகா, ஜீரா ஆகிய இடங்களில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான சுடுகாடுகளில் எரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சுடுகாடுகளில் எரிக்கப்பட்டவர்களின் பட்டியல் அடங்கிய பதிவேட்டை இக்குழுவினர் பார்வையிட்டு தகவல்களை சேகரித்துள்ளனர். இதன்படி பஞ்சாப் காவல் துறையினர் மட்டும் 934 உடல்களை எரித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உடல்களை எரிக்கும்போது, நகராட்சி ஊழியர்கள் யாரையும் உடல்களைப் பார்க்க காவல் துறையினர் அனுமதிக்கவில்லை.

பரித்காட்டிலுள்ள சுடுகாட்டில் இருந்த பதிவேடுகளைப் பார்வையிடும்போது, 18 ஏப்ரல் 1989 தல் 7 ஏப்ரல் 1991 வரையான பதிவேட்டில் உள்ள தகவல்களை மட்டும் காட்ட மறுத்துள்ளனர். ஏனெனில், அந்த காலகட்டத்தில்தான் பாதுகாப்புப் படையினராலும் காவல் துறையினராலும் அதிகம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த காலகட்டத்தைத் தவிர்த்து, 1987 முதல் 1992 வரை மொத்தம் 164 பேர் இச்சுடுகாட்டில் எரிக்கப்பட்டுள்ளனர். கபூர்தலாவிலுள்ள சுடுகாட்டில் 1988 முதல் 1994 வரை மொத்தம் 149 உடல்களும், லூதியானாவில் 1987 முதல் 1993 வரை 94 உடல்களும், மன்சாவில் 1992 தல் 1994 வரை 74 உடல்களும், மோகாவில் 1988 முதல் 1994 வரை 165 உடல்களும், ஜீராவில் 1988 முதல் 1994 வரை 288 உடல்களும் காவல் துறையினரால் எரிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

இந்த அறிக்கை, பஞ்சாபில் நடந்த அடக்குமுறைக்குப் பல்வேறு தரப்பு மக்களும் பலியானதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள பட்டியலே இதற்குச் சான்று. எந்த அளவிற்கு கொடூரம் நடந்துள்ளது என்பதையும், எவ்வாறு ஏதுமறியாத அப்பாவிகள் கொல்லப்பட்டனர் என்பதையும் காட்டுவதற்கு இந்த சம்பவங்களே போதுமானவை.

20.12.1991 அன்று, அமர்தசரஸ் மாவட்டத்திலுள்ள ஒதியன் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான குல்விந்தர் சிங், தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, எல்லோராலும் நன்கு அறியப்பட்ட போராளியான பல்வீந்தர்சிங் சோனா என்பவர், அவரை வழிமறித்து வலுக்கட்டாயமாக அவரது ஆய்வாளர் அஜாய்பு சிங், இருவரையும் பிடித்துச் சென்றார். குல்வந்தர்சிங் உண்மை நிலையை விளக்கியும் அவர் விடுவிக்கப்படவில்லை. இதனிடையே பல்வீந்தர்சிங் சோனா மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது. இதனால் குல்வந்தர்சிங் குடும்பத்தினர் பதட்டமடைந்தனர். 55 வயதான அவரது தந்தை அஜாய்பு சிங் மகனை மீட்கத் தீவிர முயற்சியில் ஈடுபட்டார். ஆய்வாளர் அஜாய்பு சிங்கிற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து மகனை விடுவிக்கக் கோரினார். ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் அவரை விடுவிக்கவில்லை. குல்வந்தர்சிங்கின் நிலை தெரியாமல் அவரது குடும்பத்தினர் பெரிதும் கலங்கினர்.

விடா முயற்சியின் காரணமாக மார்ச் 1993இல் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சவாண், பஞ்சாப் டி.ஜி.பி.கே.பி.எஸ். கில்லிடம் பேசியதன் மூலம் குல்வந்தர் சிங் கொல்லப்பட்ட செய்தியை குடும்பத்தினர் அறிந்து கொண்டனர். தனது மகன் எவ்வித காரணமின்றி கொல்லப்பட்டதற்கு நியாயம் வேண்டி அஜாய்பு சிங், உயர் நீதிமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் அணுகியும் பயனில்லை. கடைசி முயற்சியாக, அப்போது ஆட்சிக்கு வந்த அகாலிதள முதலமைச்சர் பிரகாஷ்சிங் பாதலிடம் மனு அளித்தார். இதன் மீது மே 1997இல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சூன் 26 அன்று திடீரென விசாரணை முடிக்கப்பட்டது.

தன் மகன் கொல்லப்பட்டதற்கு நீதி கிடைக்காததால் மிகவும் மனமுடைந்து போன அஜாய்பு சிங், பொற்கோயிலுக்குச் சென்று அங்கு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் அவர் எழுதி வைத்த மிக நீண்ட தற்கொலைக் குறிப்பில் "என் மகனின் சாம்பலைக்கூட, நான் பெற முடியவில்லை... தற்போது என் பேனாவில் உள்ள மையும் இந்த உலகில் எனக்கான நேரம் முடியப் போகிறது' என்று குறிப்பிட்டுள்ளார். அவர் இறந்த பின்பும்கூட காவல் துறையினரின் அச்சுறுத்தல் தொடர்ந்தது. அஜாய்பு சிங் மாரடைப்பால் இறந்து விட்டதாகக் கூற வேண்டுமென அக்குடும்பத்தினரை காவல் துறையினர் வற்புறுத்தினர். அதை ஏற்க மறுத்த அவர்கள் அஜாய்பு சிங் விட்டுச் சென்ற தற்கொலைக் குறிப்பை பத்திரிகைகள் மூலம் உலகறியச் செய்து காவல் துறையின் அடக்குமுறையை அம்பலப்படுத்தினர்.

24.11.1992 அன்று அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள கய்ரோன் கிராமத்தைச் சேர்ந்த பல்தேவ் சிங் தன் மனைவி நரேந்தர் கவுர், மைத்துனர் அமர்ஜித் சிங் ஆகியோருடன் தன் தங்கையின் வீட்டிற்குச் சென்றார். மறுநாள் அதிகாலை அய்ந்து மணியளவில் கய்ரோன் காவல் சாவடியைச் சேர்ந்த காவல் அதிகாரி நவ்ரங்சிங், பல்தேவி சிங், அமர்ஜித் சிங் இருவரையும் கைகளைப் பின் பக்கமாக கட்டி காவல் நிலையத்திற்குத் தூக்கிச் சென்றார். சில தினங்கள் கழித்து அவர்களது உறவினர்கள் காவல் துறை அதிகாரியை சந்தித்து இருவரையும் விடுவிக்கக் கோரினர். காவல் துறையினர் கேட்டதன் அடிப்படையில், ஒரு லட்சத்தி முப்பத்தி அய்ந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தனர். அப்போது இருவரும் கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, காவல் சாவடி லாக்கப்பில் வைக்கப்பட்டிருந்ததை உறவினர்கள் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் 2.12.1992 அன்று, பல்தேவ் சிங், அமர்ஜித் சிங் ஆகியோர் காவல் துறையினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டாதகச் செய்திகள் வெளியாயின. இதனைத் தொடர்ந்து இருவரது உடல்களும் காவல் துறையினரால் பட்டி சுடுகாட்டில் எரிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. சில நாட்கள் கழித்து இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்தபோது அதில் யாரும் கலந்து கொள்ளக் கூடாதென காவல் துறையினர் கடுமையாக எச்சரித்தனர். இந்த சோகத்தினால் பல்தேவ் சிங்கின் தாயார் சரண் கவுர் மனநிலை பாதிக்கப்பட்டார். அவரது தந்தை ஜாகிர் சிங் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.

இப்படியான அடக்குமுறைக்கு பாதுகாப்புப் படை, காவல் துறையைச் சேர்ந்தவர்களும் தப்பவில்லை. அமிர்தசரஸ் மாவட்டத்தில் ரய்ப்பூர் கலான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் குருதேவ் சிங். திருமணமாகாத 22 வயது இளைஞரான அவர், ஜாண்டியாலா குரு காவல் நிலையத்தில் காவலராகப் பணி புரிந்து வந்தார். இவர் பணி புரியும் காவல் நிலையத்தில், பலரை அழைத்து வந்து இவரது மேல் அதிகாரிகள் தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர். இதற்கு இவர் உடன்படாமல் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தார். இந்நிலையில், 25.10.1992 அன்று, அதிகாலையில் குருதேவ் சிங் அவரது வீட்டிலிருந்து பஞ்சாப் கமாண்டோ காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின் அவர் நிலை என்ன என்று தெரியாததால், அவரது குடும்பத்தினர் உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு முறையீடுகள் செய்தனர்.

குருதேவின் சகோதரர் நரேந்தர் சிங் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அவர் குடியரசுத் தலைவர் பாதுகாப்புப் படையில் தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாற்றினார். இதனால் தனது உயர் அதிகாரிகள் மூலம் குருதேவ் சிங் நிலை குறித்து அறிய முயன்றார். ஆனால், அதற்கு எந்தப் பலனும் கிட்டவில்லை. அவரது குடும்பத்தினர் ராணுவத்தில் பணியாற்றும் தங்கள் மகனின் எதிர்காலத்தைக் கருதி, எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. குருதேவ் சிங்கின் தந்தை மிகவும் மனமுடைந்து இறந்து போனார். இதுநாள் வரை குருதேவ் சிங் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

பஞ்சாபில் நடைபெற்ற காலிஸ்தான் தனி நாட்டிற்கானப் போராட்டத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சீக்கியர்களையே "குற்றப்பரம்பரை' போன்று சித்தரித்து சட்டத்திற்குப் புறம்பாகக் கொன்று குவித்ததை மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கை வெளிக் கொண்டு வந்துள்ளது. இந்த அறிக்கையில் வெளிக் கொணரப்பட்டது, உண்மையில் நடந்ததில் 10 சதவிகிதம்கூட இல்லை என்பதுததான் மிகவும் வேதனைக்குரியது. இப்படி வெளிவந்த சம்பவங்களில்கூட அரசாங்கம் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த அறிக்கையில் குறிக்கப்பட்ட 838 வழக்குகளிலும், இது நாள் வரையில் ஒருவர்கூட தண்டிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.

இத்தகையதொரு நிலை, மனித உரிமைக்கு விடப்பட்ட மிகப் பெரிய சவால் என்பதோடு, இந்திய சனநாயகத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் நடைபெற்று வரும் காஷ்மீரம், வடகிழக்கு மாநிலங்கள் உட்பட, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற அடக்குமுறைகள் நடந்துள்ளன; தொடர்ந்து நடந்து வருகின்றன. அரசு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அலறல்கள், நீதி கேட்டு இன்னமும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆக்கம்: கோ. சுகுமாரன்

நன்றி : தலித் முரசு

4 comments:

Boston Bala said...

dalit murasu link could be corrected: Dalithmurasu | Tamil | Sikhs | attack

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

வணக்கம் திரு பாலா,
தலித் முரசு தொடர்பு சரியாக இல்லை என சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!

இப்போது அந்த தொடர்பை சரி செய்துள்ளேன்.

கோ.சுகுமாரன்

வெற்றி said...

கோ.சுகுமாரன்,
வணக்கம்.
நான் அறிந்திராத பல தகவல்கள் இவை. பதிவிலிட்டமைக்கு நன்றி.

இரா.சுகுமாரன் said...

அறிய ப்ல தகவலகளை அளித்திருக்கிறீர்கள்
நன்றி