Wednesday, October 25, 2006

இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தின் அத்துமீறல்கள்

இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகள் சமூக நீதியில் அக்கறை கொண்டவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய நிர்வாகவியல் கழகம் (ஐ.ஐ.எம்.), இந்திய தொழில் நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.), மத்திய பல்கலைக் கழகங்கள், மருத்துவ கல்லூரிகள் போன்ற மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின்போது, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவே காலம் கடந்த முயற்சி என்றும், இந்த கல்வியாண்டு முதலே இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டுமெனப் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன.

இதனிடையே, பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில், இடைக்கால உத்தரவு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதாவது, “நாடாளுமன்ற நிலைக்குழு அளிக்கும் அறிக்கையின் நகலை, மூடி முத்திரையிட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்“ என்று கூறியது.

இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சிகள் பலவும் கண்டித்தன. இடஒதுக்கீட்டுச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதித்து, ஏற்றுக் கொள்ளப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப் பின் நடைமுறைக்கு வரும். இதற்கு முன்பாகவே உச்சநீதிமன்றம் தலையிடுவது, சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். “நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பில் உச்சநீதிமன்றம் அத்துமீறி தலையிடுவதாக“ சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி வெளிப்படையாகவே கண்டித்தார்.

இதன் பின்னர், “நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் போதும்“ என உச்சநீதிமன்றம் தனது உத்தரவை மாற்றியது.

இடஒதுக்கீடு குறித்த அரசியல் சட்ட 77,81,82,85-ஆவது சட்ட திருத்தங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டு அளவு 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது. வசதி வாய்ப்புடன் வாழும் எஸ்.சி.,எஸ்.டி. உயர் வருவாய்ப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது“ என அரசியல் சட்ட பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.

“உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணை மிகவும் பிற்போக்கானது. ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் இது. இதை மாற்றவில்லை என்றால், அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு என்ற நோக்கத்தையே இது தகர்த்துவிடும். இடஒதுக்கீட்டுக் கொள்கையையும் அதன் செயலாக்கத்தையும் மறுவரையறை செய்திருப்பதன் மூலம், நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் அத்துமீறி நுழைந்துள்ளது.

இடஒதுக்கீடு எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என்பதை, வேறுபாடற்ற மதிப்பீட்டின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டியது கொள்கை வகுப்பாளர்களே தவிர, உச்சநீதிமன்றம் அல்ல“ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு கடுமையாக சாடியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு “இத்தகைய முக்கிய பிரச்சனையில் உச்சநீதிமன்றம் கருத்தைக் கூறுவதற்கு முன் சமூக எதார்த்தத்தைக் கவனத்தில் கொள்ளாதது துரதிருஷ்டவசமானது“ என்று கூறியுள்ளது.

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு (நாயுடு) “எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு இப்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும்“ என்று கூறியுள்ளார்.

“ஒன்பதாவது அட்டவணையில் கடந்த 12 ஆண்டுகளாக இடம்பெற்றுள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து போடப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதே அரசியல் சட்ட விரோதம்“ என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டித்துள்ளார்.

இடஒதுக்கீடு குறித்து நீதிமன்றங்களின் நிலை எப்போதும் பிற்போக்கானதாகவே இருந்து வருகிறது. மண்டல் குழு தொடர்பான இந்திரா சகானி வழக்கில், உச்சநீதிமன்ற 11 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச், 1993-இல் வழங்கிய தீர்ப்பிலேயே சமூக நீதிக்கு வேட்டு வைக்கப்பட்டது. மொத்த இடஒதுக்கீடு 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது, “கிரிமி லேயர்“ எனும் பொருளாதார அளவுகோல் பின்பற்றப்பட வேண்டும், பதவி உயர்வில் இடஒதுக்கீடு கிடையாது என தீர்ப்பின் பல்வேறு அம்சங்கள் சமூக நீதிக்கு எதிராகவே உள்ளன. இதனால், பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.

தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள ஆணைகள் சமூக நீதிக் கோட்பாட்டையே சிதைத்துவிடும். கற்றுத் தேர்ந்த நீதிபதிகள் மத்தியில் சமூக நீதிக்கு எதிரான கருத்து வலுவாக உள்ளது. இதற்குக் காரணம், நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் “உயர் வகுப்பைச்“ சேர்ந்தவர்களாக இருப்பதே.

அடித்தள மக்களிலிருந்து சமூக நீதியில் அக்கறைக் கொண்ட நீதிபதிகள், கீழ்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை நியமிக்கப்பட வேண்டும். நீதித்துறையில் இடஒதுக்கீடு கோரிய போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்.

இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் உருவாக்கியுள்ள பின்னடைவை சீர்செய்ய நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டித் தீர்வு காணப்பட வேண்டும். இடஒதுக்கீட்டிற்கு வழிகாட்டியாகத் திகழும் தமிழகம் விழித்தெழ வேண்டும். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். காலம் காலமாக ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்த அநீதியை எதிர்த்துப் போராட வேண்டியது உடனடி அவசியம். தந்தைப் பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றவர்கள் ஏற்றிய சமூக நீதித் தீயை அணையாமல் காத்திடும் பொறுப்பு நமக்குள்ளது. இல்லையேல், வரலாறு நம்மை மன்னிக்காது.

11 comments:

ARUL said...

நீதித்துறையில் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்காதவரை இந்த அவலம் தொடரவே செய்யும்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்று நீதித்துறைக்கும் தனி தேர்வு முறை வேண்டும்.

அருள்
from பிலிப்பைன்ஸ்

Anonymous said...

உச்சநீதிமன்றம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கூடாது எனச் சொல்லவில்லை. அதனால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை வேறு வகுப்பினர் எடுத்துக் கொள்ளமுடியாது.அந்த இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்குத்தான்.

தாழ்த்தப்பட்டவர்களில் க்ரீமீ லேயரில் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு அவசியமில்லை என்றுதான் அது கருதுகிறது. உச்சமன்றத் தீர்ப்பினால் தாழ்தப்பட்டவர்களில் குறைந்த வருமானம் கொண்டவர்கள் அதிக எண்ணிக்கையில் பலன் பெற முடியும்.

அந்த வகுப்பினரில் அதிக அளவில் படித்து வந்தால் அவர்களது சமூக நிலை மேம்பாடுதானே அடையும்? அதை ஏன் அரசியல் கட்சிகளும் உங்களைப் போன்றவர்களும் எதிர்க்க வேண்டும்? கொஞ்சம் விளக்குவீர்களா?

உயர்கல்வி தனியார்மயமாக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், கல்விக் கட்டணங்கள் லட்சக்கணக்கில் வசூலிக்கப்படும் காலகட்டத்தில்,அந்தக் கட்டணம் செலுத்த வசதியுள்ள க்ரீமீ லேயரை ஒதுக்கி, அந்தப் பிரிவினரிலேயே ஏழைகளாக உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது நியாயமானதுதானே?

Anonymous said...

கற்றுத் தேர்ந்த நீதிபதிகள் மத்தியில் சமூக நீதிக்கு எதிரான கருத்து வலுவாக உள்ளது. இதற்குக் காரணம், நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் “உயர் வகுப்பைச்“ சேர்ந்தவர்களாக இருப்பதே.

அடித்தள மக்களிலிருந்து சமூக நீதியில் அக்கறைக் கொண்ட நீதிபதிகள், கீழ்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை நியமிக்கப்பட வேண்டும். நீதித்துறையில் இடஒதுக்கீடு கோரிய போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்

What are you asking for? A vanniyar
should sit as a judge in cases involving vanniyar(s), a Tamilian
should sit as a judge in cases
involving Tamil Nadu and Tamilians.
Dont you realise the absurdity of
your proposal.

bala said...

//ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்று நீதித்துறைக்கும் தனி தேர்வு முறை வேண்டும்.//

மிகவும் சரி. அதில் 100% இட ஒதுக்கீடு க்ரீமி லேயர் OBCக்களுக்கு செய்ய வேண்டும். அது தான் நியாயம்;அது தான் சமூக நீதி.

பாலா

Anonymous said...

இட ஒதுக்கீடு என்ற பெயரில் செய்யப்படும் அட்டுழியங்களையும்,அத்துமீறல்களையும் உச்சநீதி மன்றம் தட்டிக் கேட்டால் உங்களுக்கு கோபம்தானே வரும்.50% த்திற்கு மேல் இட ஒதுக்கீடு இருக்க்க கூடாது என்பது சரிதான்.அது போல் பல் லட்சம் சம்பாதிப்பவர்கள்,கோடிஸ்வரர்களுக்கும்
இட ஒதுக்கீடு கூடாது என்பது சரிதான். கருணாநிதி,மாறன்,ராமதாஸ் குடும்பங்கள் எந்த விதத்தில்
பிற்பட்டவை.வீரமணியின் பேரன்களும், பேத்திகளும் பொருளாதாரத்தில்,கல்வியில்,சமூக ரீதியில்
பின் தங்கியா உள்ளனர்.

ARUL said...

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கேட்கும் பர்ப்பனர்கள் - பார்ப்பனர்களே ஏகபோக உரிமை கொண்டாடும் பொதுப்பட்டியலில் கிரீமி லேயர் கேட்க மறந்தது ஏனோ ?!

அருள்
from பிலிப்பைன்ஸ்

www.socialjustice.in

Anonymous said...

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கேட்கும் பர்ப்பனர்கள் - பார்ப்பனர்களே ஏகபோக உரிமை கொண்டாடும் பொதுப்பட்டியலில் கிரீமி லேயர் கேட்க மறந்தது ஏனோ.

பார்ப்பனர்களே ஏகபோக உரிமை கொண்டாடும் பொதுப்பட்டியலில் -
OBCs corner a majority of the
posts and seats in that.

ravi srinivas said...

கேள்வி: இட ஒதுக்கீடு கொள்கை முடிவல்லவா, இதில் நீதிமன்றங்கள் தலையிடலாமா, அது சரியா.?பதில் : கொள்கை முடிவு எப்படி நிறைவேற்றப்படுகிறது, இந்த கொள்கை முடிவினை எடுக்க அதிகாரம் எங்கிருந்து பெறப்படுகிறது, எந்த அரசியல் சட்டப் பிரிவுகள் இட ஒதுக்கீட்டிற்கு வகை செய்கின்றன. இதைப் புரிந்து கொண்டால் நீதி மன்றங்கள் தலையிடலாமா என்ற கேள்வியே அபத்தம் என்பது புரியும். கொள்கை முடிவு தனி நபர் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் போது பாதிக்கப்படுவர் நீதிமன்றத்தினை நாட முடியும். மேலும் இட ஒதுக்கீட்டிற்கு வகை செய்யும் அரசியல் சாசனப் பிரிவுகள் அடிப்படை உரிமைகள் குறித்த பிரிவுகளில் துணைப் பிரிவுகளாக இடம் பெற்றுள்ளன. எனவே இட ஒதுக்கீடு கொள்கை அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடைய ஒன்று. ஆகையால் இதில் நீதிமன்றங்கள் தலையிடுவதை தவறு என்று சொல்ல முடியாது. அரசியல் சட்டத்தின் முதல் திருத்தம் இட ஒதுக்கீடு தொடர்பானது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் விளைவுகளை கட்டுப்படுத்த செய்யப்பட்டது.
4, கேள்வி: அப்படியானால் இத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு செய்யலாம், பிற்பட்டோரில் முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு போன்றவைகளைக் கூட நீதிமன்றங்கள் தீர்மானிப்பது சரியாகுமா?பதில்: ஆம், அடிப்படை உரிமைகள், வழிகாட்டு நெறிகள் இவற்றை கருத்தில் கொண்டு நீதிமன்றம் இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்புகளை வழங்குகிறது. ஒருபுறம் தனி நபர் அடிப்படை உரிமைகள், இன்னொருபுறம் பிற்பட்டோருக்கு போதிய வாய்ப்புகள் - இந்த இரண்டிற்குமிடையே ஒரு சமச்சீரான நிலையை கொண்டுவர உச்ச நீதிமன்றம் விழைகிறது. இதில் ஒன்று இன்னொன்றினை புறந்தள்ளவோ,மறைக்கவோ கூடாது என்று அது கருதுகிறது. அந்த அடிப்படையில் அது இட ஒதுக்கீடு குறித்த சட்டங்கள், விதிகள், கொள்கைகளை பரிசீலிக்கிறது.
5,கேள்வி:பிற்பட்டோரில் முற்பட்டோர் என்ற கருத்து அரசியல் சட்டத்தில் இல்லாத போது அதை நீதிமன்றம் எப்படி வலியுறுத்த முடியும்பதில்: நீதிமன்றங்கள் சட்டப்பிரிவுகளை, குறிப்பாக அரசியல் சட்டப் பிரிவுகளை விளக்கும் போது அவற்றை எப்படி அர்த்தப்படுத்துகின்றன என்பது முக்கியம்.அடிப்படை உரிமைகளைப் பொருத்த வரை உச்ச நீதிமன்றம் அடிப்படை உரிமைகளின் எல்லைகளை தன் தீர்ப்புகள் மூலம் விரிவுபடுத்தியுள்ளது. மிக முக்கியமான உதாரணம் மேனகா காந்தி வழக்கு.அரசியல் சட்டப் பிரிவுகளுக்கு விளக்கம் தரும் போது அல்லது அவற்றை அர்த்தப்படுத்தும் போது உச்ச நீதிமன்றம் பல புதிய கருத்துக்களை முன் வைத்துள்ளது. உதாரணமாக தகவல் அறியும் உரிமை வெளிப்படையாக அரசியல் சட்டப் பிரிவுகளில் இல்லை.உச்ச நீதிமன்றம் அதை ஒரு உரிமையாக தன் தீர்ப்புகள் மூலம் அர்த்தப்படுத்தி, நடைமுறைப்படுத்தியுள்ளது. அதே போல் பெண்கள் உரிமைகளை பொருத்தவரை பாலியல் ரீதியான தொந்தரவு குறித்து விரிவான ஒரு சட்டம் இல்லாத போது விசாகா வழக்கின் மூலம் உச்சநீதி மன்றம் சில விதிகளை, கோட்பாடுகளை முன்வைத்து அவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்து விரிவாக விளக்கியது. இது போல் பல உதாரணங்கள் தரலாம்.எனவே அரசியல் சட்டப் பிரிவுகளை அர்த்தப்படுத்தி, நடைமுறைப்படுத்தும் போது தேவையான கருத்துக்களை முன்வைத்து உத்தரவிட உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. அரசியல் சட்டப்பிரிவுகளை அர்த்தப்படுத்துவது அதன் பணிகளில் ஒன்று.அரசியல் சட்டத்தினை வகுத்தவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு அதற்கான அதிகாரங்களைத் தந்துள்ளனர்.

http://ravisrinivas.blogspot.com/

bala said...

//பார்ப்பனர்களே ஏகபோக உரிமை கொண்டாடும் //

பொது என்பது அனைவருக்கும் பொது..இது கூட தெரியாத ஒரு ஜன்மம் ..

பாலா

ARUL said...

Non-sense BALA!

Read the following news. Majority of the PARPANS think that General Quota is PARPANS’ Quota!

ARUL
from Doha, Qatar - ‘International Conference on New or Restored Democracies’
www.icnrd6.com

"மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து கொண்டிருக்கும் ஒரு வழக்கு ---திருச்சி பெல் நிறுவனத்தில் தச்சர், பெயிண்டர், வெல்டர், டர்னர் போன்ற திறமை தேவைப்படும் வேலையிடங்களில் ஆள் நிரப்புவது சம்பந்தமாக, அதுவும் கைக்கொள்ளப்பட்ட இட ஓதுக்கீடு குறித்து. காலியிடமான 250 பதவிகளில் 48 இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் 68 இடங்கள் பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கும் ஒதுக்கப்பட்டது சரிதான். ஆனால் பிறழ்சினை ‘தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடங்களில்தான் போட்டியிட முடியும்’ என்று பெல் நிறுவனம் கூறுவதில் ஆரம்பித்தது. காரணம் தாழ்த்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் மற்றவர்களை விட தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுவிட்டனராம். எனவே, ஒதுக்கீடு செய்யப்பட்ட 116 இடங்கள் தவிர பிற இடங்களில் தாழ்த்தப்பட்டவர் அல்லது பிற்ப்படுத்தப்பட்டவர் அல்லாத மற்றவர்கள் மட்டுமே தேர்வுக்காக அழைக்கப்பட்டனர். இன்னும் என்னன்னவோ விளங்காத தேர்வு முறைகளை பெல் நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

வழக்கு நடைபெறுகையில், பெல் நிறுவனத்தின் வாதமாக அவர்களது சீனியர் வழக்குரைஞர் கூறிய வாதங்களும், பெல் நிறுவன கூடுதல் பொது மேலாளரின் பிரமாண பத்திரத்தில் (affidavit) இருந்து வாசிக்கப்பட்ட சில வரிகளும் அவர்களது நோக்கம் என்ன என்பதை ஓரளவுக்கு தெளிவாக்கியது.

“வழக்கத்திற்கு மாறாக இந்த முறை தாழ்த்தப்பட்டவர்களின் கட் ஆஃப் மதிப்பெண்கள் பொது ஒதுக்கீட்டின் கட் ஆஃப் மதிப்பெண்களை விட அதிகமாக இருந்தது” கூடுதல் பொது மேலாளரின் பிரமாண பத்திரத்தில்.

“விட்டால், மொத்த இடத்தின் 73% இடங்களை தாழ்த்தப்பட்டவர்களே பிடித்து விடுவார்கள்” பெல் நிறுவன சீனியர் வழக்குரைஞர்.

“தாழ்த்தப்பட்டவர்கள் தேர்வுக் கட்டண விலக்கு, வயது தளர்த்துதல் போன்ற பிற சலுகைகளைப் பெறுகின்றனர். இந்த சலுகைகளைப் பெறும் வண்ணம் விண்ணப்பித்து விட்டு அவர்கள் பொது ஒதுக்கீட்டில் வர முடியாது” பிரமாண பத்திரத்தில்.

“பிற மாநிலங்களில் இவ்வாறுதான் நடக்கிறது. அலகாபத்தில் இது போன்றதொரு வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால தடைக்கு எதிரான மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம், இடைக்கால தடைக்கு தடை வழங்கி உள்ளது” பெல் நிறுவன சீனியர் வழக்குரைஞர்.

முதலில் தேர்வுக்கு இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம். பின்னர் பெல் தனது சீனியர் வழக்குரைஞரை அழைத்து வந்து காலியிடங்களை உடனடியாக நிரப்பாவிட்டால் உற்பத்தி பாதிக்கும் என்று வாதிட்டது. எனவே தேர்வு செய்யப்பட்டவர்களை ‘வழக்கின் முடிவிற்கேற்ப’ பணியில் சேர அனுமதிக்குமாறு தடை உத்தரவினை தளர்த்தியது. நேற்று வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்றது."

http://marchoflaw.blogspot.com/2006/10/blog-post_20.html

K.R.அதியமான். 13230870032840655763 said...

Subject : creamy layer misusing reservation policy

From : K.R.Athiyaman, Chennai - 96

To : Thiru.Ki.Veeramani Ayya Avargal, Chennai

Anbulla Ayya,

The creamy layer (that is, those who are
upper middle class and above) among
BC/SC/ST communities continue to enjoy
the benifits of reservation unashamedly.
(i hail from such a family).

We propose that economic criteria should
also be included as an additional qualification
for being eligible for reservation benefits.
Families whose annual income is above say,
Rs.1,80,000/- and where the parents are well
educated may be deemed as FCs. And many schools,
where annual fees are above Rs.60,000 may be
classified as FC schools.

Reservation was meant to be a short term
issue and never a permenent institution as
it has become now. And there should be a
standing committe consisting of eminent
jurists, educationalists and honest people
to perodically evaluate the effects/abuse
of reservation benefits. The whole process
should a dynamic one, not a static one, which
is now a vote bank issue and nutured by
vested interests. And there should be a
maximum limit for resrvation (and not the
present >70%), which should be gradually
brought down to zero.

And in promotion among govt staff only
seniority, merit and efficency should be
the criteria. Only one generation of any
family must be eligible for the benefits.
Subsequent generation must be deemed FCs.

Unfair reservation benefits to numerous
well off students has created resentment
and heart burn among FCs and many fair
minded people. The caste divisions has become
more rigid and divisive (esp in govt offices).

I am sure Thandai Periyar and Ambedhkar would
endorse my above views if they are alive today.
They were basicaly honest in all issues.

DK should have functioned as a bridge between
BCs and SCs (esp in rural areas) and established
peace committes for stopping caste clashes.
The aliented SCs have formed many organisations
of their own to fight for their rights, instead
of joinning DK. Blaming brahmins alone for all
the ills of the society will not solve any thing.

Thanks & Regards

K.R.Athiyaman
Chennai