"சிங்கள அரசின் பிடிவாதம்
அமைதிப் பேச்சு வார்த்தையை சீர்குலைக்கும்"
அமைதிப் பேச்சு வார்த்தையை சீர்குலைக்கும்"
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தைத் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையில் மீண்டும் போர் வெடித்துள்ளது. யாழ்ப்பாணத்தை மற்ற பகுதிகளோடு இணைக்கும் “ஏ-9“ நெடுஞ்சாலையை திறக்க முடியாது என சிங்கள அரசு மறுத்துவிட்ட காரணத்தால் பேச்சுவார்த்தைத் தோல்வி அடைந்தது.
செஞ்சோலை குழந்தைகள் காப்பகத்தின் மீது சிங்கள இராணுவம் குண்டு வீசியதால் 61 இளஞ்சிறார்கள் கொல்லப்பட்டனர். இந்த துயரத்தால் உலகம் வடித்த கண்ணீரின் ஈரம் காய்வதற்குள், கிளிநொச்சியிலுள்ள மருத்துவமனை மீது சிங்கள விமானப் படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
2-11-2006 அன்று நடந்த இந்த தாக்குதலில் மருத்துவமனை கட்டிடம் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இதுவரை வந்துள்ள தகவலின்படி அங்கு சிகிச்சை பெற்ற நோயாளிகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதல் நடந்தபோது 1500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் இருந்துள்ளனர். சிகிச்சைப் பெற்றுவந்த பெண்கள் கைக்குழந்தைகளுடன் உயிரைக் காப்பற்றிக்கொள்ள வெளியே ஓடியுள்ளனர். தள்ளாத வயது முதிர்ந்தவர்கள் ஓட முடியாமல் சிக்கித் தவித்துள்ளனர். இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சியுற்ற நோயாளிகள் பலர் மயக்கி விழுந்துள்ளனர்.
போர்வெறியின் தாகம் அடங்காமல் மேலும் தமிழர்களின் ரத்தத்தைக் குடிக்க, அங்குள்ள பள்ளிக் கூடம், கல்லூரி ஆகியவற்றின் மீதும் சிங்கள விமானப்படை குண்டு வீசி தாக்கியுள்ளது. கொல்லப்பட்டவர்களில் மாணவ மாணவிகளும் அடங்குவர். பதினெட்டு வயதே நிரம்பிய சண்முகரத்தினம், கிருசாந்த் இருவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
எந்தவொரு சூழலிலும் மருத்துவமனைகள், பள்ளிகள் -கல்லூரிகள், நீர்நிலைகள், வழிபாட்டுத் தளங்கள் என மக்கள் புழக்கம் அதிகமுள்ள இடங்களின் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பது போரில் பின்பற்றப்படும் மரபு. ஆனால், இதுபோன்ற எந்த மரபுகளையும் மதிக்காமல் தொடர்ந்து மனித உரிமைகளை மீறுவதையும் தமிழர்களைக் கொன்றுக் குவிப்பதையும் தனது கொள்கையாகக் கொண்டுள்ளன சிங்கள அரசும் அதன் இராணுவமும்.
இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. அய்ரோப்பிய ஒன்றிய நாடுகளான ஜப்பான், நார்வே, அமெரிக்கா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு தங்களின் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். இந்தியா வழக்கம்போல் தனது நடுநிலை கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது.
நிலை இப்படியிருக்க, “வடக்கு-கிழக்கு ஆகிய தமிழர் பகுதிகளில் இன்னமும் இராணுவம் முழு அளவில் போரைத் தொடங்கவில்லை. இனி நீண்ட காலத்திற்குப் பொறுமையாக இருக்க முடியாது. தமிழர் பகுதிகளில் கடல்-வான்-தரை வழியாக பெரிய அளவில் முப்படைத் தாக்குதலை விரைவில் தொடங்குவோம்“ என இலங்கைப் பிரதமர் விக்கிரநாயகே மிரட்டல் விடுத்துள்ளார்.
கொழும்பு நகரில் நடைபெற்ற சிங்கள இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கும் நிகழ்ச்சியில் இவ்வாறு அவர் பேசியுள்ளார். 80-களில் வெளிப்படத் தொடங்கி இன்றுவரையில் “சிங்கள இனவெறி“ போக்கோடு தமிழர்களை வேட்டையாடி வரும் இராணுவத்தினர் மத்தியில் பிரதமர் விக்கிரநாயகே இவ்வாறு பேசியுள்ளது, தமிழர்களுக்கு எதிராக சிங்கள இராணுவத்தினரைத் திட்டமிட்டுத் தூண்டிவிடும் சதியாகும்.
யாழ்ப்பாண நெடுஞ்சாலையை சிங்கள இராணுவம் மூடி வைத்துள்ளதால், அங்குள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தற்போது அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ அரிசி ருபாய் முன்னூறுக்கும், ஓரு கிலோ உருளைக்கிழங்கு ரூபாய் முன்னூறுக்கும், ஒரு கிலோ சர்க்கரை ரூபாய் இருநூற்று ஐம்பதுக்கும் விற்பனை செய்யப் படுகிறது ரூபாய் இரண்டுக்கு விற்பனை செய்யப்பட்ட தீப்பெட்டி ஒன்றின் விலை ரூபாய் இருபதாக ஆக உயர்ந்துள்ளது இதனால் யாழ்ப்பாணத் தமிழர்கள் பசி பட்டினியால் வாடுகின்றனர்.
“நம் கண் முன்னே நடக்கும் இக்கொடுமையை இந்தியா இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது. யாழ்ப்பாண தீபகற்பத்தில் வசிக்கும் 6 லட்சம் ஈழத் தமிழர்களைப் பட்டினிச் சாவிலிருந்துக் காப்பாற்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை கப்பல் வழியாக இந்தியா உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். இராணுவம் மூடி வைத்துள்ள யாழ்ப்பாண நெடுஞ்சாலையைத் திறந்துவிடும்படி சிங்கள அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும்“ என, இந்திய அரசில் பங்கு வகிக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவநர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்.
“பசிப் பட்டினியால் வாடிப் பரிதவிக்கும் ஈழத் தமிழ் மக்களை காப்பாற்ற இந்திய அரசு உணவுப் பொருட்களையும் மருந்துகளையும் உடனடி அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நேரடியாக் தமிழ்மக்களுக்கு அவை கிடைக்க செய்யவேண்டும்“. என ம தி.மு.க பொதுச்செயலர் வை.கோ வலியுறுத்தியுள்ளார்.
ஈழத் தமிழர்கள் மீது அக்கறைக் கொண்ட அனைவரின் கோரிக்கையும் இதுதான். ஈழத் தமிழர்களின் சிக்கலைப் பொறுத்தவரையில், உறங்குவது போல் பாசாங்கு செய்யும் இந்திய அரசு, ஈழத் தமிழர்களைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வெண்டும். தமிழக அரசியல் கட்சிகள் இதனை இந்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை ஈழத் தமிழர்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை நோக்கியதாக இருக்க வேண்டும். சிங்கள அரசின் பிடிவாதம் இலங்கையில் அமைதியை நிலைநாட்ட உலக நாடுகள் மேற்கொள்ளும் முயற்சியை சீர்குலைக்கவே செய்யும்.
4 comments:
Thanks for the post.
ஈழத்தமிழர் மீதான -தொடர்ந்த- கரிசனத்துக்கு நன்றி சுகுமாரன்.
.....
இப்பதிவைத் தவிர்த்து ஒரு கேள்வி, அ.மார்க்ஸ் (மற்றும் நண்பர்கள்) கூடச் சேர்ந்து தயாரித்த 'தலித் அரசியல்' என்ற சிறிய புத்தகத்தை நேற்று வாசித்துக்கொண்டிருந்தபோது, கோ.சுகுமாரன் என்ற பெயரும் வந்திருந்தது, அறிகையை விவாதித்து செப்பனிட்ட தோழர்களின் பட்டியலில். அந்த சுகுமாரனும் நீஙளும் ஒருவரா?
டிசே தமிழன் அவர்களே,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
//இப்பதிவைத் தவிர்த்து ஒரு கேள்வி, அ.மார்க்ஸ் (மற்றும் நண்பர்கள்) கூடச் சேர்ந்து தயாரித்த 'தலித் அரசியல்' என்ற சிறிய புத்தகத்தை நேற்று வாசித்துக்கொண்டிருந்தபோது, கோ.சுகுமாரன் என்ற பெயரும் வந்திருந்தது, அறிகையை விவாதித்து செப்பனிட்ட தோழர்களின் பட்டியலில். அந்த சுகுமாரனும் நீஙளும் ஒருவரா? //
ஆம் அந்த சுகுமாரன் நான் தான்.
நன்றி உங்கள் பதிவுக்கு.
//80-களில் வெளிப்படத் தொடங்கி இன்றுவரையில் “சிங்கள இனவெறி“ போக்கோடு தமிழர்களை வேட்டையாடி வரும் //
1958 லேயே அவங்கள் வேட்டயத்
தொடங்கீட்டாங்கள் சுகுமாரன்.
Post a Comment