Thursday, May 31, 2007

துறைமுகத் திட்டத்தை எதிர்த்து இந்திய அளவில் போராட்டம் - மேதா பட்கர்


துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 17-05-2007 அன்று ஒருநாள் பயணமாக புதுச்சேரிக்கு வந்த `சுற்றுச்சூழல் போராளி' மேதா பட்கர், தேங்காய்த்திட்டு ஜெயராம் நாயக்கர் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

புதுச்சேரியைப் பிரெஞ்சுக்காரர்கள் ஆண்டுள்ளனர். வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் அவர்கள் செய்யாத கெடுதல்களை இப்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்து வருகின்றனர். புதுச்சேரியின் இயற்கை வளங்கள் கொள்ளைப் போகின்றன.

புதுச்சேரி துறைமுக விரிவாக்கத் திட்டம் ரூ.2700 கோடியில் தனியார் பங்கேற்புடன் செயல்படுத்த அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. மக்களின் கருத்துக்களைக் கேட்காமல் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைத் தொடங்கியது தவறு. இத்திட்டம் மக்களைப் பாதிக்கும் திட்டமாக உள்ளது.

இதுபோன்ற பெரிய திட்டத்திற்கு உடனடியாகவும், விதிமுறைகளை மீறியும் அரசு அனுமதி அளித்தது எப்படி? மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் அனுமதி அளிக்கப்பட்டது எப்படி?

சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் பணி, துறைமுக விரிவாக்கத் திட்டம் இரண்டையும் ஒரே நிறுவனத்திற்கு தந்துள்ளனர். சிறப்பு பொருளாதார மண்டலம் என்பது சிறப்பு சுரண்டல் மண்டலமாக மாறிவிடும்.

அரசுக்கு சொந்தமான 153 ஏக்கர் நிலத்தை வளர்ச்சி என்ற பெயரில் தனியார் நிறுவனத்திற்கு அரசு தந்துள்ளது. அரசின் சொத்தை இதுபோன்ற தனியாரிடம் ஒப்படைப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மாநில - யூனியன் பிரதேச அரசுகள் பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டியது கடமை.

இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்காதபோது, உள்துறை அனுமதி அளிக்காதபோது, அரசு 153 ஏக்கர் பொதுச் சொத்தை தனியாருக்கு ஒப்படைத்துள்ளது எப்படி?

இத்திட்டத்தை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கு துறைமுக திட்டங்களை நிறைவேற்றிய முன் அனுபவம் எதுவும் கிடையாது. இப்பிரச்சினையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன்.

வளர்ச்சித் திட்டம் என்றால் மக்களுக்கு உண்மையில் பயன்படும் வகையில் இருக்க வேண்டும். அந்த வகையில் சுற்றுலா மற்றும் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அந்த வகையில் துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும். அந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலை மேம்படுத்தலாம். மீன்பிடி படகுகள் தங்குவதற்கு வசதியாக கடலில் அணைக்கரை கட்டலாம். மீன்களைப் பாதுகாக்க குளிர்சாதன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அளிக்கலாம். இதனால் மீனுக்குக் கூடுதல் மதிப்பு கிடைக்கும். மேலும் வேலைவாய்ப்பு பெருகும்.

வல்லுநர் குழு அமைத்து கருத்துக்களைக் கேட்டு முடிவு எடுப்போம் என அரசு கூறுவது கண்துடைப்பு. எந்த வளர்ச்சித் திட்டத்தை நிறைவேற்றுவதாக இருந்தாலும் மக்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டும். திட்டங்களின் தேவை குறித்து முடிவு எடுப்பதற்கு மக்கள்தான் வல்லுநர்கள்.

துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். இதன் அங்கமாக தேங்காய்த்திட்டில் தரிசாக கிடக்கும் 107 ஏக்கர் நிலத்தில் மக்கள் விவசாயப் பணியைத் தொடங்கி உள்ளனர். இது வரவேற்கத்தக்கது.

எளிய மக்களின் வருவாயைப் பெருக்க மாற்றுத் திட்டங்கள் தேவை. ஆனால், அழிவு ஏற்படுத்தும் திட்டம் தேவையில்லை. இயற்கைக்கு மாறான இந்த மனித சுனாமி மிகவும் ஆபத்தானது. இதுபோன்ற திட்டங்கள் வந்தால் தேங்காய்த்திட்டு மட்டுமல்ல புதுச்சேரியின் ராஜ்நிவாஸ் தப்புமா என்பதே சந்தேகம்.

அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக மக்கள் போராட்டம் நடத்தவில்லை. பேரழிவு ஏற்படுத்தக் கூடிய திட்டத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளவே போராடி வருகின்றனர்.
பேரழிவு ஏற்படுத்தும் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோளாகவும் சவாலாகவும் கேட்டுக் கொள்கிறேன்.

நாம் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், மக்களுக்கு எதிரான வளர்ச்சியை எதிர்க்கிறோம். தொன்மையான தேங்காய்த்திட்டு பகுதி பாதுகாக்கப்பட வேண்டும். புதுச்சேரி பாதுகாக்கப்பட வேண்டும்.

வரும் ஜுன் மாதம் 6,7 ஆகிய நாட்களில் பூனா அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நடைபெற உள்ள தேசிய இயக்கங்கள் மக்கள் கூட்டமைப்பின் இந்திய அளவிலான கூட்டத்தில் இத்திட்டம் குறித்து விவாதிப்போம். இத்திட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தை இந்திய அளவில் விரிவுபடுத்துவோம் என்றார்.

இப்போட்டியின் போது, சட்டமன்ற உறுப்பினர் க.லட்சுமிநாராயணன், தேங்காய்த்திட்டு கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன், மனித உரிமை இயக்கம், பெண்கள் இயக்கப் பொறுப்பாளர் வழக்கறிஞர் லூசி, புதுச்சேரி குடிமக்கள் செயல்பாட்டு அமைப்புப் பொறுப்பாளர் புரோபீர் பானர்ஜி, கவிஞர் மாலதி மைத்ரி உட்பட பலர் உடனிருந்தனர். தேங்காய்த்திட்டு கிராம மக்கள் திரளாக திரண்டிருந்தனர்.

Wednesday, May 30, 2007

`கடற்கரையைக் காப்பாற்ற மீனவர்கள் போராட வேண்டும்' - மேதா பட்கர்


துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் 17-05-2007 அன்று ஒருநாள் பயணமாக புதுச்சேரிக்கு வருகை தந்த `சுற்றுச் சூழல் போராளி' மேதா பட்கர் மீனவ கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்தார்.

புதுச்சேரி அருகேயுள்ள வீராம்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கிறோம் என்ற பெயரில் கடலை மறித்து 100 மீட்டர் அளவுக்கு பாறாங்கற்களைக் கொட்டியுள்ளனர். வங்காள விரிகுடா தெற்கிலிருந்து மேற்கு நோக்கி மணல் நகர்வு ஏற்படும் கடற்பகுதியாகும். இந்த மணல் நகர்வை செயற்கையாக தடுத்து நிறுத்தினால் கடற்கரை மீனவக் கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துபோகும்.

பிரெஞ்சுக் காலத்தில் புதுச்சேரியில் கட்டப்பட்ட பழைய துறைமுகமும் தற்போது இருக்கும் புதிய துறைமுகமும் கடலை மறித்துக் கட்டாமல், தூண்கள் அமைத்து கட்டப்பட்டுள்ளன. இதனால், மணல் நகர்வுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாததோடு கடற்கரையும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சூழல் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் மேற்சொன்னவாறு வீராம்பட்டினத்தில் துறைமுகத்திற்காக கடல் மறிக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தந்திராயன்குப்பம் என்ற மீனவக் கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கடல் உட்புகுந்து கடற்கரை மணல் பரப்பே இல்லாமல் போனதோடு மீனவர்களின் வீடுகள் கடல் அரிப்பால் அழிந்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசு தடுப்பு அரண் அமைக்கிறோம் என்ற பெயரில் மேலும் கடலுக்குள் பாறாங்கற்களைக் கொட்டி வருகிறது.

`இது நிரந்தர தீர்வு அல்ல. கடலை மறிப்பதனால் மேலும் மேலும் கடல் அரிப்பு ஏற்பட்டு கடலோர மீனவக் கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துபோகும்' என கடல்சார் வல்லுநர்கள் எச்சரித்தும் புதுச்சேரி - தமிழக அரசுகள் கவலைப்படாமல் இருந்து வருகின்றன.

பாதிக்கப்பட்ட தந்திராயன்குப்பம் மீனவ கிராமத்திற்கு மேதா பட்கர் சென்றார். மீனவர்களின் வீடுகள் கடல் அரிப்பால் சிதைந்துப் போனதைப் பார்வையிட்டார். அங்கிருந்த மீனவ மக்களிடம் பேசினார். கடல் அரிப்பால் தொடர்ந்து பாதிக்கப்படுவது பற்றி அவர்கள் கூறினர். கடல் அரிப்பு எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து மீனவ மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாதது ஏன்? என்று மேதா பட்கர் கேள்வி எழுப்பினார்.

அப்போது அம்மக்களிடையே பேசிய மேதா பட்கர் `இதுபோன்ற இயற்கைக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க மீனவ மக்கள் ஒற்றுமையாக இருந்து போராட வேண்டும். கடல் அரிப்பு மட்டுமல்ல உலகமயமாதல், தாராளமயமாதல் போன்ற கொள்கையால் மீனவர்களை கடலை விட்டு அப்புறப்படுத்தும் சதி அரங்கேறி வருகிறது. சுனாமி போன்ற இயற்கைச் சீற்றம் ஒருபுறம், சுற்றுச்சூழல் அழிப்பு என்ற மனிதன் ஏற்படுத்தும் சுனாமி மறுபுறம் என மீனவ மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடல் சார்ந்த மீன்பிடி தொழிலை மேம்படுத்துவதோடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சமூக செயல்பாட்டு இயக்கங்கள் முன்கை எடுக்க வேண்டும். அரசு இதற்கு சிறப்புக் கவனம் செலுத்தி திட்டங்களைத் தீட்டவேண்டும்’ என்றார்.

புதுச்சேரி குடிமக்கள் செயல்பாட்டு இயக்கப் பொறுப்பாளர் புரோபீர் பானர்ஜி பாதிப்புகள் குறித்து மேதா பட்கரிடம் விளக்கினார். அப்போது அருகிலிருந்த மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், மனித உரிமை இயக்கம் - பெண்கள் இயக்கப் பொறுப்பாளர் வழக்கறிஞர் லூசி ஆகியோரிடம் `துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் இந்த மீனவ மக்களையும் அணிதிரட்டி பங்கேற்க செய்யுங்கள்' என்றார்.

மேலும், அங்கு கூடியிருந்த மீனவ மக்களிடையே `புதுச்சேரியில் சிறிய அளவில் கடலை மறித்து கட்டப்பட்ட துறைமுகத்தால் ஏற்பட்ட பாதிப்பே இவ்வளவு என்றால், தற்போது கட்டப்படவுள்ள புதிய துறைமுக விரிவாக்கத்தால் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும். அத்திட்டத்தை எதிர்த்து மீனவ மக்களை ஒன்றுதிரட்டி தமிழகத்தில் போராடுங்கள். அப்போதுதான் கடலோரக் கிராமங்களைப் பாதுகாக்க முடியும்' என்றார் மேதா பட்கர்.

பிறகு வீராம்பட்டினம் மீனவ கிராமத்திற்குச் சென்றார். வழியில் அரியாங்குப்பம், இராதாகிருஷ்ணன் நகரிலுள்ள தந்தை பெரியார் சிலையருகில், பெரியாரி தி.க. தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் கறுப்புச் சட்டை அணிந்த செயல்வீரர்கள் வரவேற்பு அளித்தனர். தந்தை பெரியார் சிலையருகில் மேதா பட்கர் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

வீராம்பட்டினத்தில் மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கத் தலைவர் கவுன்சிலர் பா. சக்திவேல் தலைமையில் ஏராளமான பெண்கள் உட்பட ஊர்மக்கள் கூடியிருந்து வரவேற்றனர். கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் ஆ. காங்கேயன், நெய்தல் நில உரிமை மீட்பு இயக்கப் பொதுச் செயலாளர் பா. இராமஜெயம், பொருளாளர் சு. இளந்திரையன் உட்பட பலர் உடனிருந்தனர். மீனவக் கிராமப் பெண்கள் மேதா பட்கருக்கு மலர் மாலை அணிவித்து தங்கள் வரவேற்பையும் அன்பையும் வெளிப்படுத்தினர்.

அப்போது அம்மக்களிடையே கலந்துரையாடிய மேதா பட்கர் `துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராட வேண்டும். அதோடு நின்றுவிடாமல் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மீன்பிடி தொழிலோடு தொடர்புடைய லாபம் தரக்கூடிய தொழில்கள் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும். அரசின் பல்வேறு திட்டங்களின் நிதிகள் பெற்று தொழில் தொடங்க முயல வேண்டும்' என்றார்.

மேதா பட்கரின் வருகை மீனவ மக்களிடையே பெரும் உற்சாகத்தைத் தந்தது. மீனவ மக்களை அமைப்பாகத் திரட்டப் போதிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என அழுத்தமாக வலியுறுத்தினார் மேதா பட்கர்.

Monday, May 28, 2007

“புதுச்சேரியில் மீண்டும் ஒரு விடுதலைப் போர்’’ - மேதா பட்கர்








புதுச்சேரியை அழிக்க கொண்டு வரப்படும் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், `சுற்றுச்சூழல் போராளி' மேதா பட்கர் 17-05-2007 அன்று ஒருநாள் பயணமாக புதுச்சேரிக்கு வந்தார்.

முன்னதாக காலை 10 மணியளவில், சென்னை விமான நிலையத்தில் அவரை மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், மனித உரிமை இயக்கம் - பெண்கள் இயக்கப் பொறுப்பாளர் வழக்கறிஞர் லூசி, புதுச்சேரி குடிமக்கள் செயல்பாட்டு இயக்கப் பொறுப்பாளர் புரோபீர் பானர்ஜி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

நர்மதா அணைத் திட்டத்தை எதிர்த்து கடுமையாகப் போராடி வருவது குறித்து அவர் கூறினார். மேலும், கடந்த 24 மணிநேரமும் இடைவிடாமல் பயணம் செய்தது குறித்துக் கூறினார். நர்மதா அருகேயுள்ள குக்கிராமம் ஒன்றிலிருந்து முதலில் படகு மூலமும் பிறகு ஒரு பேருந்து, மூன்று கார்கள், கடைசியாக ரயிலைப் பிடித்து மும்பை வந்த அனுபவத்தைக் கூறினார். இவர் வருகைக்காக ரயில் 15 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டதைக் கூறினார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்ததாகக் கூறினார். தான் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமென்பதற்காக அவர்பட்ட சிரமங்கள் ஆச்சரியப்பட வைத்தன.

மதியம் 12-30 மணியளவில், துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடப் பல்வேறு அடக்குமுறைகளையும் தாண்டி போராடி வரும் தேங்காய்த்திட்டு கிராமத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தேங்காய்த்திட்டு கவுன்சிலரும் போராட்டக்குழு முன்னோடியுமான எஸ்.பாஸ்கரன், தந்தை பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன் உட்பட பலர் மலர்க்கொத்து அளித்து வரவேற்றனர்.

கிராமப் பெண்கள் ஏராளமானவர்கள் ஒன்று திரண்டு மலர்மாலை அணிவித்து வரவேற்றனர். அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளை திரும்பவும் கிராமப் பெண்களுக்கே அணிவித்து மகிழ்ந்தார். வரவேற்பு அளித்த பெண்களிடம் அவர்களின் பெயர்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அவர்களைப் பெயர் சொல்லி அழைத்துப் பேசினார்.

பிறகு, பிள்ளையார் கோயில் அருகில் திரண்டிருந்த ஊர் பொது மக்களிடையே பேசினார். பெண்கள் துறைமுக விரிவாக்கத் திட்டத்தினால் தங்கள் ஊர் முழுவதும் கையகப்படுத்தப்பட இருப்பதைக் கூறினார். துறைமுகப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வல்சராஜ் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தின்போது போலீசு நடத்திய வன்முறை வெறியாட்டம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினர்.

அப்போது அவர் பேசியதாவது :

`நாட்டில் நமது உரிமைக்காகப் போராடி வருகிறீர்கள். செம்மையான வழியில் அமைதியாக இயற்கையைப் பாதுகாக்க சுற்றுலா உள்ளிட்ட அரசின் இயற்கைக்கு எதிரான திட்டங்களை எதிர்த்த உங்களது போராட்டம் வரவேற்கத்தக்கது. இப்போராட்டத்திற்கு பெண்கள் முன்னிலையில் இருந்து போராடி வருகிறீர்கள். வீட்டில் பதுங்கிக்கிடந்த பெண்கள் உரிமைகளுக்காகப் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளது பாராட்டத்தக்கது.

2700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுச்சேரி அரசு கொண்டுவரவுள்ள இத்திட்டத்தை பாரம்பரிய அழிவிலிருந்து காப்பாற்ற நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள இந்த சவால் பாராட்டத்தக்கது. அரசு கையகப்படுத்த இருந்த தரிசு நிலத்தில் விவசாயம் செய்து அமைதியான வழியில் உங்கள் போராட்டத்தை நிலை நிறுத்தியிருப்பது இந்த எதிர்ப்புக் குரலுக்கு அமைதியான அடித்தளம்.

உங்களுடைய இந்த ஒற்றுமை நாட்டின் மிகப்பெரிய வலிமை. இயற்கைக்கு ஆதரவாக திரண்டுள்ள இந்த ஒற்றுமை கண்டிப்பாக விலைபோகாது. இந்தப் போராட்டம் நாம் எல்லோரும் இணைந்துப் போராட வேண்டிய முக்கியப் போராட்டம். 2007-ஆம் ஆண்டில் நாட்டில் தலைதூக்கியுள்ள முக்கியப் பிரச்சினையாக இது கருதப்படுகிறது.

துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட கோரி நாம் தொடர்ந்துள்ள நமது அறவழிப் போராட்டம் இத்திட்டம் கைவிடப்படும் வரை தொடர வேண்டும். இதற்காக நாம் ஓரணியில் திரள வேண்டும்' என்றார்.

பின்னர் மக்களிடையே கலந்துரையாடினார். அப்போது 62 வயதான ராஜலட்சுமி என்ற பெண்மணி தான் புதுச்சேரியின் விடுதலைக்குப் போராடிய தியாகி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரை அரவணைத்துக் கொண்டு `இதுவும், மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம் தான்' என்று கூறி மக்களுக்கு உற்சாகமூட்டினார்.

மேலும், `காப்போம்! காப்போம்! புதுச்சேரியைக் காப்போம்! கட்டுவோம்! கட்டுவோம்! புதுச்சேரியைக் கட்டுவோம்' என்று தமிழில் முழக்கமிட்டார். அனைவரும் அவருடன் சேர்ந்து முழக்கமிட்து எழுச்சியாக இருந்தது.

பின்னர் தேங்காய்த்திட்டில் உள்ள ஜெயராம் நாய்க்கர் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். மேதா பட்கர் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணல்.

மதிய உணவிற்குப் பிறகு துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களைப் பார்வையிட்டார். மேலும், தேங்காய்த்திட்டு மக்களிடம் விவசாயம் குறித்துக் கேட்டறிந்தார். அதோடு பச்சைப் பசேலேன இருந்த வயல்களைப் பார்த்து அங்கு விவசாயம் செய்து கொண்டிருந்த பெண்களிடம் விவசாயம் குறித்து விசாரித்தார்.

பிறகு தரிசாக கிடக்கும் நிலத்தில் விவசாயம் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் அந்த இடங்களையும் பார்வையிட்டார். அப்போது `கூட்டு விவசாயப் பண்ணை அமைத்து விவசாயம் நடத்துங்கள் போராட்டக் குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகள், இயக்கங்கள் ஒவ்வொரு நாளுக்கு ஒரு கட்சி, இயக்கம் என பொறுப்பேற்று விவசாயத்தை உயிரோட்டமானதாக்க ``சிரமதானம்'' மேற்கொள்ளுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்தார்.

போராடும் மக்களிடையே மேதா பட்கர் அதிக நேரம் செலவிட்டு ஆதரவளித்தது அம்மக்களுக்கு உற்சாகமாகவும் ஊக்கமாகவும் இருந்தது மேலும், நர்மதை அணைப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் அவரை `மேதா தாய்' என்று அழைப்பதைப் போல், தேங்காய்த்திட்டு மக்களும் மேதா பட்கரை `மேதா தாய்' என்று அழைக்க வைத்துள்ளது.

“சுற்றுச் சூழல் போராளி’’ மேதா பட்கர் - சில குறிப்புகள்


திசம்பர் 1, 1954இல் மும்பையில் பிறந்தவர். இவரது தந்தை சுதந்திர போராட்ட வீரர், தொழிற்சங்கவாதி, தாயார் `சுவதார்' எனும் மகளிர் அமைப்பில் செயல்பட்டு வருகிறார். சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், 5 ஆண்டுகள் மும்பையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து குடிசைப் பகுதி மக்களுக்காக செயல்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தில், வடகிழக்கு பகுதியில், மலைவாழ் மக்கள் மத்தியில் 2 ஆண்டுகள் செயல்பட்டார்.

மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் மலைவாழ் மக்கள் மற்றும் விவசாய மக்களிடையே மிகுந்த ஈடுபாட்டுடன் சேவை செய்து கொண்டிருந்ததின் காரணமாக, நர்மதை அணை எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கினார்.

தொடக்கத்தில், சர்தார் சரோவர் அணை மற்றும் நர்மதை ஆற்றை ஒட்டி அமைக்கப்பட்ட நீர்த் தேக்கங்களின் காரணமாக, வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்படவுள்ள இலட்சக்கணக்கான மக்களின் நியாயமான புனர்வாழ்வு மற்றும் நர்மதை பள்ளத்தாக்கு வளர்ச்சித் திட்டங்களின் உண்மை தகவல் அறிவதற்கான போராட்டமாகவும் இந்த இயக்கம் விளங்கியது. இறுதியில், இத்தகைய திட்டங்களின் பரிமாணம், அதனால் ஏற்படும் பெரும் இழப்புகள், பாதிப்புகள் குறித்து துல்லியமாக அறிய முடியாதவாறு உள்ளது என கண்டறிந்தார்.

மக்களின் புனர்வாழ்வுத் திட்டங்களும் சாத்தியமில்லை என்று புலப்பட்டது. எனவே, இத்தகைய மிகப்பெரிய திட்டங்களின் அடிப்படை, வளர்ச்சி எனும் சொல்லாடல்கள் மற்றும் சாதனைகள் குறித்து மக்கள் மத்தியில் வலுவான பல சவால்களை எழுப்பியது.

இந்தியாவின் துடிப்பான சமூகப் போராளியாக விளங்கும் இவர், பள்ளிக் குழந்தைகள் மத்தியில், காவல் துறையினர் மத்தியில், `மேதா தாய்' என அழைக்கப்படுகிறார்.

ஆர்த்தெழும் நர்மதை ஆற்றங்கரையில் பல உண்ணாவிரதப் போராட்டங்கள், சத்தியாகிரகப் போராட்டங்கள் மக்களின் பிரச்சனைகளுக்காக மக்களுடன் ஒருவராக நடத்தி உள்ளார்.
வாழும் உரிமை, வாழ்வாதார உரிமை குறித்த இவரின் சமரசமற்ற போராட்டங்கள், விடுதலைக்குப்பின் இந்திய நாட்டிலும், உலக நாடுகள் மத்தியிலும், இயற்கை வளங்கள், மனித உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த அடிப்படைக் கேள்விகளை மீண்டும் எழுப்பி உள்ளது.

இவரது இயக்கப் பயணத்தில் இவர் சந்தித்த காவல்துறை தாக்குதல்கள் அடைந்த சிறைத் தண்டனைகள் ஏராளம். எனினும், இவற்றையெல்லாம் கடந்து இந்திய மக்கள் மீதும், இந்திய சனநாயக அமைப்பின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார்.

நியாயத்தின்பால் உள்ள நம்பிக்கை, உள்ள நிலைகளை முழுமையாக பகுத்துக் காணும் ஆய்வாற்றல், எளிய தோற்றம் போன்ற பண்புகளால், காவல்துறையினர் மற்றும் அரசாங்க அதிகாரிகளையும் வென்றவராக விளங்குகிறார். அண்மையில் நர்மதை அணை எதிர்ப்பு இயக்கத்தினருடன் தலைநகர் தில்லியில், நீர்வளத்துறை அமைச்சகத்தை வசப்படுத்திக் கொண்ட போராட்டத்தில், `இது ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை அல்ல' என காவல்துறை அதிகாரி ஒருவர் தமது செல்போனில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நர்மதை அணை எதிர்ப்பு இயக்கத்தை, நூற்றுக்கணக்கான விவசாயிகள், மலைவாழ் மக்கள், தலித் மக்கள், மகளிர் மற்றும் தொழிலாளர்கள் இயக்கங்களுடன் இணைத்து `மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு' அமைத்த வரலாறு மிகவும் சிறப்பானதாகும்.
தேர்தலில் போட்டியிடாத, மதச்சார்பற்ற அரசியல் கூட்டணியாக அமைத்து அதன் அமைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகிய பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான அமைப்பாகவும், வளர்ச்சித் திட்டங்கள் குறித்த மாற்று மற்றும் முன்னுதாரணத்தை உருவாக்கும் அமைப்பாகவும் இது விளங்குகிறது.

உலக நாடுகளின் நீர் ஆதாரம், ஆற்றல் மற்றும் அணைகள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து, விசாரணை செய்யும், சுயேச்சையான உலக ஆணையத்தின் ஆணையராகவும் செயல்பட்டுள்ளார். போராடுவது மற்றும் மாற்றுகளை உருவாக்குவது ஆகிய இரண்டு வகையான அணுகுமுறைகளில் மேதா பட்கர் அவர்கள் கிராம மக்களிடையே, சமூக குழுக்களிடையே தொடர்ந்து சமூகப் பணியாற்றி வருகிறார்.

மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் உள்ள மலைவாழ் கிராம மக்களின் குழந்தைகளுக்கு, மாநில மற்றும் உள்ளூர் பாடத்திட்டங்களை பயன்படுத்தி, உள்ளூர் ஆசிரியர்களைக் கொண்டு, உள்ளூர் மொழியில் `ரெவா ஜீவனசாலா' எனும் 9 உறைவிடப் பள்ளிகள் மற்றும் 4 பகல் நேரப் பள்ளிகள் அமைத்து பணியாற்றி வருகிறார்.

`தீன நாத் மங்கேசுவரர் விருது', `மகாத்மா பூலே விருது', `வாழ்வாதார உரிமை விருது', `கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது', பி.பி.சி.யின் `கிரீன் ரிப்பன் விருது', சர்வதேச பொது மன்னிப்புக் கழகத்தின் `மனித உரிமைகள் பாதுகாவலர் விருது' ஆகிய பல்வேறு விருதுகளும், மேதா பட்கர் அவர்கள் பெற்றுள்ளார்.

Monday, May 14, 2007

சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர் புதுச்சேரி வருகை


சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர் ஒரு நாள் பயணமாக வரும் மே 17 வியாழனன்று புதுச்சேரி வருகிறார்.

இந்திய அளவில் புகழ் பெற்ற சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர், நர்மதா அணைக் கட்டுவதால் பழங்குடியினர் வாழும் பல கிராமங்கள் முற்றிலுமாக அழிவதை எதிர்த்து தொடர்ந்துப் போராடி வருபவர். அதோடு மட்டுமல்லாமல் சுற்றுச் சூழல் எங்கு பாதிக்கப்பட்டாலும் அதை எதிர்த்துப் போராடுவதில் முன்னணியில் நிற்கும் களப்பணியாளர்.

தமிழகத்தில் கடந்த 15-02-2007 அன்று கூடங்குளம் பகுதியில் அணுமின் நிலையம் கட்டப்படுவதால் ஏற்படும் ஆபத்தை மக்களுக்கு விளக்கும் வகையில் நடைபெற்ற போராட்டத்திலும் கலந்துகொண்டு, அதை எதிர்த்து கடுமையாக குரல் கொடுத்தார். போராடும் மக்களுக்கு ஆதரவளித்தார்.

இது போன்று மக்கள் உரிமைகளுக்காகப் பாடுபட்டு வரும், சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர் புதுச்சேரிக்கு வருகிறார்.

புதுச்சேரியில் தனியார் பங்கேற்புடன் துறைமுக விரிவாக்கத் திட்டம் ஒன்றை அரசு கொண்டு வருகிறது. சுற்றுச் சூழலுக்கும், நிலத்தடி நீருக்கு பெரும் கேடு விளைவிக்கும், மீனவ கிராமங்களை அழிக்கும், ஒட்டுமொத்த புதுச்சேரிக்கே எதிரான இத்திட்டத்தை எதிர்த்து தேங்காய்த்திட்டு மக்களும்,ஒட்டுமொத்த புதுச்சேரி மக்களும் போராடி வருகின்றனர். துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டுமென்று பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

ஆனால், புதுச்சேரி அரசு இத்திட்டத்தைக் கைவிட மறுத்து வருகிறது. முதல்வர் ந.ரங்கசாமியை பலமுறை சந்தித்து முறையிட்டும் எந்த பயனும் இல்லை. துறைமுகம் வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி ஒரு உயர்மட்ட வல்லுநர் குழு அமைத்து அதன் பரிந்துரைகள்படி முடிவு எடுப்போம் என முதல்வர் திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். ஆனால், இதுநாள் வரை வல்லுநர் குழு கூட அமைக்கப்படவில்லை. இதனால், போராடும் மக்கள் அரசு மீது நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

எனவே, போராட்டத்தைத் தீவிரப்படுத்தவும், புதுச்சேரி அளவில் நடைபெறும் இப்போராட்டத்தை அகில இந்திய அளவில் விரிபடுத்தவும், போராட்டத்திற்கு ஆதரவு திரட்டவும், சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கரை புதுச்சேரிக்கு அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது. போராடும் மக்களின் அழைப்பை ஏற்று, அவர் மக்கள் போராட்டத்தில் பங்கேற்க புதுச்சேரி வருகிறார்.

வரும் மே 17 வியாழனன்று காலையில் மும்பையிலிருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர், மதியம் புதுச்சேரி வந்து சேருகிறார். போராட்டம் நடத்தி வரும் தேங்காய்த்திட்டு மக்களைச் சந்திக்கிறார். கடந்த 13-04-2007 அன்று சவப்பாடை ஊர்வலம் நடத்தி துறைமுகத் துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வல்சராஜ் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தி்ன் போது போலீஸ் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.

புதிதாக துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படவுள்ள இடங்களைப் பார்வையிடுகிறார். ஏற்கனவே கட்டப்பட்ட அரியாங்குப்பம் துறைமுகத்தையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் நேரிடையாக பார்க்கிறார். மேலும், இத்துறைமுக விரிவாக்கத் திட்டத்தினால் பாதிக்கப்படும் மீனவர் கிராமங்களை பார்வையிடுவதோடு, மீனவ மக்களையும் சந்திக்கிறார். பிறகு நடக்கும் செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மாலையில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இக்கூட்டத்தில், புதுச்சேரியின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய இயக்கத் தலைவர்கள், மனித உரிமை அமைப்பினர் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.

சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர் வருகை துறைமுக விரிவாக்கத் திட்டப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.



Saturday, May 12, 2007

அது ஒரு பொடா காலம்! (5) சுப.வீரபாண்டியன்

என்னைப் பார்த்ததும், துப்பாக்கி ஏந்திய இருபது காவலர்கள், தடதடவென்று ஓடிவந்து என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். ஒருவர் என் கைகளைப் பிடித்து விலங்குகளை மாட்டத் தொடங்கினார். சட்டென்று நான் கைகளைப் பின்னிழுத்துக் கொண்டேன். ‘‘என்ன இதெல்லாம்’’ என்று கேட்டேன். ‘‘விலங்கு மாட்டி அழைத்துச் செல்வதுதான் சட்டம்’’ என்றார்கள். ‘‘அந்தச் சட்டம் எங்கே இருக்கிறது?’’ என்றேன். எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. ‘‘நீங்க ஒத்துழைக்கலைன்னா, அப்புறம் நாங்க ஃபோர்ஸ் யூஸ் பண்ண வேண்டி வரும்’’ என்று மிரட்டலாகச் சொன்னார் காவல் அதிகாரி. ‘‘பண்ணுங்க’’ என்றேன். பிறகு சற்றுத் தணிந்த குரலில், ‘‘ஏன் இப்படி வம்பு பண்றீங்க?’’ என்றார்.

நான் விளக்கமாக விடை சொன்னேன். ‘‘நான் பேசுவது வம்பு இல்லை; சட்டம். பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு, விலங்கு மாட்டிக்கொள்வதற்கு எல்லாம் வெட்கப்பட முடியாது. எங்கள் பாட்டன் செக்கே இழுத்திருக்கிறார். ஆனால், நீங்கள் சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொள்கிறீர்கள் என்பதால்தான் நான் ஒத்துழைக்க மறுக்கிறேன்’’ என்று கூறிவிட்டு, சிறப்பு அனுமதி பெற்ற வழக்குகளைத் தவிர பிறவற்றில் எந்த ஒரு கைதிக்கும் கைவிலங்கு போடக் கூடாது என்று அறிவித்த உச்சநீதிமன்ற ஆணையை, அதன் எண், வருடம், மாதம், தேதியோடு சொன்னேன். ‘‘நான் இவ்வளவு ஆதாரத்தோடு சொன்ன பிறகும், எனக்கு நீங்கள் விலங்கிட்டு அழைத்துச் சென்றால், நீதிமன்றத்தில் இது குறித்துக் கண்டிப்பாக முறையிடுவேன்’’ என்றேன்.

இப்போது அவர்களின் வேகம் குறைந்திருந்தது. அதிகாரிகள் தனியாகப் போய் பேசிவிட்டுத் திரும்பி வந்தனர். ‘‘சரி, வாங்க போகலாம்’’ என்றார்கள். விலங்குகள் மாட்டப்படவில்லை.

ஆனால், இதற்கான எதிர்வினையை அவர்கள் நீதிமன்றத்தில் காட்டினார்கள். அங்கே உறவினர்களும் இயக்கத் தோழர்களும் நண்பர்களும் ஏராளமாகக் காத்திருக்க, யாரையும் என்னோடு பேசவிடாமல் கெடுபிடி செய்தனர்.

என் மகன் இலெனின் மட்டும், பேத்தி ஓவியாவைத் தூக்கிக்கொண்டு உள்ளே வர முயற்சித்தான். காவலர்கள் விடவில்லை. துப்பாக்கிகளைத் தாண்டி, பத்து மாதக் குழந்தையான என் பேத்தியின் முகம் தெரிந்தது. அந்தச் சூழலில் குழந்தையின் முகம் மிரண்டு போய்க்கிடந்தது. காவல் துறை வட்டத்தைக் விலக்கிக்கொண்டு, குழந்தையை நோக்கி நடந்தேன். வழி மறித்து, ‘‘அங்கே போகக் கூடாது!’’ என்றனர். ‘‘ஏன்?’’ என்றேன். ‘‘சட்டத்தில் அதற்கெல்லாம் இடமில்லை!’’

கோபம் கொள்ளுதல் என் இயல்பன்று. ஆனாலும், சில வேளைகளில் சினம், மனிதனின் அடையாளம். இப்போது எனக்குள்ளிருந்து அந்த அடையாளம் வெளிப்பட்டது. உரத்துப் பேசினேன். ‘‘உங்கள் மிரட்டலுக்குப் பயப்பட முடியாது’’ என்று சத்தம் போட்டேன். ‘‘வராந்தாவில் என்ன சத்தம்?’’ என்று கேட்ட நீதிபதி, செய்தியை அறிந்து என்னை உள்ளே அழைத்து வரச் சொன்னார்.

நீதிபதி முன் நிறுத்தப்பட்ட நான், விலங்கிட முயற்சித்த நிகழ்விலிருந்து எல்லாவற்றையும் கூறிவிட்டு, ‘‘குழந்தையைக் கொஞ்சுவதற்குக்கூடவா பொடா சட்டம் தடை விதிக்கிறது?’’ என்று கேட்டேன். நீதிபதி என்ன சொல்லப் போகிறார் என்பதை எல்லோரும் ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்திருந்தனர்.

வழிக்காவலர்களுக்குத் தலைமை ஏற்று வந்த உதவி ஆணையரை (ஏ.சி) நீதிபதி அழைத்தார். ‘‘ஏன் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறீர்கள்?’’ என்று சற்று கடுமையாக அவர் கேட்ட கேள்விக்கு, விடையேதும் சொல்லாமல் நின்றிருந்தார் காவல் அதிகாரி. ‘‘இனிமேல் இங்கு அழைத்துவரப்படும் கைதிகள் யாருக்கும் என் அனுமதி இல்லாமல், விலங்கு பூட்ட முயற்சிக்க வேண்டாம்’’ என்ற நீதிபதி, குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவதற்கு என்னை அனுமதிக்குமாறு அந்த அதிகாரிக்கு அறிவுறுத்தினார்.

வீட்டில், தெருவில், பூங்காவில் குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த அனுபவம் எனக்கு உண்டு; உங்களுக்கும் இருக்கும். பரபரப்பான நீதிமன்ற நடை பாதையில், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நெருங்கி நிற்க, பல்வேறு வகையான மனிதர்கள் அந்தக் காட்சியை வேடிக்கை பார்க்க, போராடிப் பெற்ற அனுமதியின் பேரில் பேத்தியைக் கொஞ்சி மகிழும் ‘பெரும் பாக்கியம்’ எல்லோருக்கும் வாய்த்து விடாது.

ஆனாலும், மிரண்டு போயிருந்த குழந்தையின் முகம் பார்த்தபின், முதலில் அந்த இடத்திலிருந்து குழந்தையை மட்டுமாவது ‘விடுதலை’ செய்துவிட வேண்டும் என்று தோன்றியது. இலெனினிடம், ‘‘தம்பி! ஓவியாவை நாளைக்குச் சிறைக்கே தூக்கிட்டு வா! இங்கே வேணாம். பாவம், பயப்படுது’’ என்று சொல்லி விட்டு, ஊர்தியை நோக்கி நடந்தேன்.

வழக்கத்துக்கு மாறாக, அன்று கைதிகள் பலர், சிறையில் மகிழ்வுடன் காணப்பட்டனர். நான் உள்ளே வந்து ஒரு மாதத்தில் அன்றுதான் அப்படி ஒரு முகமலர்ச்சியைப் பலரிடம் பார்த்தேன்.

காலை ‘படி’யாகச் சப்பாத்தி கொண்டுவந்த ஓர் இளைஞன், ‘ஐயா, நாளையிலேருந்து உங்க ளுக்கு இன்னொருத்தன் சப்பாத்தி கொண்டு வருவான்யா’’ என்றான்.

‘‘ஏம்ப்பா, நீ..?’’

‘‘விடுதலைங்கய்யா..! பத்து வருஷமாச்சு. நாளைக்கு ராத்திரி சாப்பாடு வீட்டுல தானுங்கய்யா. எங்க ஆத்தாகிட்ட மீனு வாங்கி கொழம்பு வைக்கச் சொல்லியிருக்கேன்.’’

‘‘அப்படியா! மகிழ்ச்சி ராஜா, தொடர்ந்து வீட்டுச் சாப்பாடே சாப்பிடு. மறுபடியும் சிறை சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டுடாதே!’’

அவன் சிரித்தான். ‘‘போதுங்கய்யா, இனிமே இங்க வர மாட்டேன்’’ என்றவன், ‘‘அந்தப் பையன்கிட்ட சொல்லியிருக்கேன். இதே மாதிரி நல்ல சப்பாத்தி போட்டுத் தருவான்’’ என்றான்.

விடுதலை ஆகப்போகும் அவன் என்னைப் பற்றியும் அக்கறை காட்டுகிறானே என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், ‘இதே மாதிரி நல்ல சப்பாத்தி’ என்றானே, அங்குதான் ஒரு பேரச்சம் என்னைப் பற்றிக்கொண்டது.

எல்லாக் கைதிகளுக்கும், மூன்று வேளையும் ‘பட்டைச் சோறு’தான்! ஒரு நீளமான தட்டில் வைத்து நான்கு பேர் அதைத் தூக்கிக்கொண்டு வருவார்கள். பார்ப்பதற்குக் கொஞ்சம் வேறு மாதிரி இருக்கும்.

முதல் வகுப்புக் கைதிகளுக்கு மட்டும் சப்பாத்தி. ‘அடடா, அது ஒரு பெரிய வரம்’ போல முதலில் தோன்றும். சிலர் பகலிலும்கூடச் சப்பாத்தி கேட்டு வாங்கிக்கொள்வார்கள். ஒரு மாதத்தில் சலித்துப் போகும். ‘காலையில் சப்பாத்தி, கடும் பகல் சப்பாத்தி, மாலையில் சப்பாத்தி, மறுபடியும் சப்பாத்தி’ என்றால் யாருக்குத்தான் வெறுத்துப் போகாது! அதிலும் இரவுக்கான சப்பாத்தியை மாலை 5 மணிக்கே கொண்டுவந்து தந்து விடுவார்கள். இரவு எட்டு மணிக்கு அதை உண்ணும்போது, அட்டையைப் பிய்த்துத் தின்பது போல அவ்வளவு ‘மென்மை’யாக இருக்கும்.

இந்த இளைஞன் கொண்டுவரும் சப்பாத்தியோ பகலிலேயே கனமாய் இருக்கும். அதே மாதிரி தொடர்ந்து வரும் என்று எனக்கு ‘ஆறுதல்’ கூறிவிட்டு அவன் விடைபெற்றான்.

மதியப் ‘படி’யாகச் சோறு கொண்டுவந்த பெரியவரிடமும் ஒரு சுறுசுறுப்பு மகிழ்ச்சி! ‘என்ன... ஒங்களுக்கும் நாளைக்கு விடுதலையா?’’ என்று வேடிக்கையாகக் கேட்டேன். ‘‘அட! ஆமாங்கய்யா, எப்படிக் கரெக்கிட்டா சொல்லிப் போட்டீங்க?’’ என்றார்.

எனக்கு வியப்பாக இருந்தது. அருகிலிருந்த மோகனிடம், ‘‘என்ன இது, ரொம்பப் பேர் நாளைக்கு விடுதலைங்கிறாங்களே?’’ என்றேன்.

‘‘நாளைக்கு அண்ணா பிறந்த நாள் இல்லீங்களா... பொதுமன்னிப்பில் போயிடுவாங்க’’ என்றார்.

‘‘எல்லாப் பயலும் பொறப்புடுறானுங்க. நமக்குத்தான் இந்தக் கதவு எப்பத் தெறக்கும்னு தெரியலே!’’ - செல்வராஜின் குரல் விரக்தியாக வெளிப்பட்டது.

அன்று மாலை, மனு பார்க்க வந்த தங்கள் உறவினர்களிடம் நூற்றுக் கணக்கான கைதிகள் தம் உடைகள் மற்றும் பொருள்களை எல்லாம் கொடுத்து அனுப்பினர்.

நாளைக்கு வெளியே போகும் போது, அணிந்து செல்ல ஒரு நல்ல உடையை மட்டும் வரவழைத்துக் கொண்டனர். மற்றபடி, கை வீசிச் செல்ல வேண்டும் என்பது அவர்கள் விருப்பம்.

செப்டம்பர் 15 - அண்ணா பிறந்த நாள் வந்தது. ‘காவலர்கள் வருவார்கள்; அழைத்துச் செல்வார்கள்; அடையாளங்களைச் சரிபார்த்து அனுப்பி வைப்பார்கள்... அவ்வளவுதான்! சிறகை விரிக்கலாம், வானில் பறக்கலாம்’ என்று கனவுகளோடு கைதிகள் பலர் காத்திருந்தனர்.

ஆனால், சிறையில் ஓர் அசைவும் தென்படவில்லை. மாலை ஆனவுடன், கைதிகளிடம் அச்சம் பரவத்தொடங்கியது. அதிகாரிகளிடம் ஓரிருவர் நேரடியாகவே கேட்டனர். ‘‘அரசாங் கத்துல இருந்து ஒரு உத்தரவும் வரலியே, நாங்க என்ன பண்றது?’’ என்று அவர்கள் கைவிரித்த பின்புதான், நிலைமை புரிந்தது.

இருள் கவிந்த வானம் போல் இருண்டது சிறை! எல்லோரும் வழக்கம் போல் அவரவர் அறைகளில் வைத்துப் பூட்டப்பட்டனர். அங்கே வீடுகளில் மீன்குழம்போடு காத்திருக்க, இங்கே இவர்கள் பட்டைச் சோறும் வேண்டாமென்று படுத்து உறங்கினார்கள்.

அடுத்த நாள் காலையிலிருந்து, ‘ஏன், ஏன் இப்படி’ என்ற வினாக்கள் அலைமோதின. அண்ணாவின் பிறந்த நாளில், ஆண்டுகள் பலவாய்ச் சிறையில் இருப்போருக்குப் பொது மன்னிப்பு வழங்குவது என்பது நெடுநாளாக இருந்துவரும் மரபு. இந்த ஆண்டில் மட்டும் என்ன நேர்ந்தது என்று வாதங்கள் நிகழ்ந்தன.

‘‘அந்த அம்மா விடாதுடா நம்மளையெல்லாம்..!’’

‘‘ஏன் விடாது? போன வருஷம் விடலையா?’’

‘‘இல்லையில்ல... நான் விசாரிச்சுட்டேன். இனிமே அண்ணாவுக்குப் பதிலா, அந்த அம்மாவின் பொறந்த நாளுக்குதான் விடப் போறாங்களாம்!’’

‘‘அப்படியா, அது பிப்ரவரி மாசம்ல வரும்! அதுவரைக்கும் இங்கேயே கெடக்க வேண்டியதுதானா?’’

இவையெல்லாம் அன்று எங்கள் செவிகளில் விழுந்த உரையாடல்கள். ஆனால், எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துப் போயின. யாருடைய பிறந்த நாளிலும் பொதுமன்னிப்பு வழங்கப் படவே இல்லை.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், 2006-ம் ஆண்டு தான் மீண்டும் அந்த செப்டம்பர் 15 வந்தது.

அன்று காலை குளித்து முடித்த பின், ஒரு கருஞ்சட்டையை எடுத்து அணிந்துகொண்டேன்.

கறுப்புதான் எனக்குப் பிடித்த வண்ணம். வெயிலில் உழைப்பவர்கள், வியர்வையில் நனைபவர்கள், சூரியனை முதுகில் சுமப்பவர்கள் கறுப்பாகத்தான் இருப்பார்கள். எனவே, அது உழைப்பின் நிறம்; உயர்வின் நிறமும்கூட!

ஆனால், கறுப்புச் சட்டை அணிவது என்பது, சிறையில் ஏதோ எதிர்ப்பைக் காட்டுவது என்று பொருளாம். எனக்கு அது தெரியாது. காலையில் என் அறைக்குத் தற்செயலாக வந்த சிறைக் கண்காணிப்பாளர், ‘‘என்ன, இன்னிக்குக் கறுப்புச் சட்டை, எதுவும் பிரச்னையா?’’ என்றார்.

‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லை. இன்று நம் அய்யா பெரியாரோட பிறந்த நாளாச்சே! அதைத் தனிமையில் நானா கொண்டாடுறேன்’’ என்று சொல்லிச் சிரித்தேன்.

ஒவ்வொரு நாளும், மாலை ஆறு மணிக்கு உள்ளே வைத்துப் பூட்டப்படும்போது, இன்னும் 12 மணி நேரத்தை எப்படிக் கழிப்பது என்ற கவலை ஒட்டிக்கொள்ளும். அன்றைக்கும் தொற்றிக்கொண்டது.

அப்போது... வெளிக்கதவு திறக்கும் சத்தம்! கம்பிகளின் வழியே பார்த்தேன். சிறை அதிகாரி யும், அவரைத் தொடர்ந்து வெள்ளை முழுக்கைச் சட்டை, வேட்டி அணிந்த ஒரு நெடிய உருவமும் உள்ளே வந்தனர்.

‘‘துணைக்கு ஆள் வேணும்னு கேட்டீங்களா... ஒங்க கட்சிக்காரர் இன்னொருத்தரையும் அனுப்பி வெச்சிருக்காங்க’’ என்று சிரித்துக்கொண்டே சிறை அதிகாரி சொல்ல, பின்னால் நிற்பவரைக் கவனித்தேன்.

‘‘என்ன சுபவீ, எப்படி இருக்கீங்க?’’ என்று கேட்ட அவர், எங்கள் இயக்கத்தின் இன்னொரு பொதுச்செயலாளர் பரந்தாமன். ‘‘இன்னிக்கு அதிகாலையில மானாமதுரைக்கு வந்து என்னையும் பொடாவில் கைது பண்ணிட்டாங்க’’ என்றார்.

வருத்தம் என்பதைவிட, துணைக்கு ஒரு நண்பர் கிடைத்த மகிழ்ச்சிதான் என்னுள் மேலோங்கி நின்றது.

(தொடரும்) நன்றி:ஆனந்த விகடன்

Thursday, May 10, 2007

வன்முறைக்கு தினகரன் ஊழியர்கள் 3 பேர் பலி : கண்டனம்



மதுரை தினகரன் அலுவலகம் மு.க.அழகிரி ஆட்களால் 09-05-2007 புதனன்று அடித்து நொறுக்கப்பட்டது. கட்டடத்திற்கும் தீவைக்கப்பட்டது. இதில் தினகரன் ஊழியர்கள் 3 பேர் உடல்கருகி இறந்தனர். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 10-05-2007 வியாழனன்று வெளியிட்ட அறிக்கை:

திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்து கருத்துக்கணிப்பு வெளியிட்டதற்காக மதுரை தினகரன் அலுவலகம் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரிந்த அப்பாவி ஊழியர்கள் 3 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும், இத்தாக்குதல் நடந்தபோது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்ததுக் கொண்டு இருந்துள்ளனர். தங்கள் கடமையிலிருந்து தவறிய மதுரை போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தாக்குதல் சம்பவம் குறித்து மத்திய அரசு உடனடியாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

ஜனநாயகத்தின் நன்காவது தூணாக விளங்கும பத்திரிகை துறை மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்திற்கே விடப்பட்ட சவால் என்பதால் அனைவரும் இதைக் கண்டிக்க வேண்டும்.

தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Sunday, May 06, 2007

அது ஒரு பொடா காலம் (பகுதி-4) சுப.வீரபாண்டியன்

‘சிறை மொழி’ என்றே ஓர் அகராதி தயாரிக்கலாம். விதவிதமான சொல்லாடல்கள். உள்ளே போய்ச் சில நாள்களில் நமக்கும் புரிந்துவிடும். மனு, ஆல்டி, டர்க்கி, ரைட்டன், படி என்று பல சொற்கள் அங்கு புழங்கும். நண்பர்களோ, உறவினர்களோ நம்மைப் பார்க்க வந்துள்ளனர் என்பதை ‘மனு வந்திருக்கு’ என்றுதான் சொல்வார்கள். முதல் வகுப்பில் கைதிகளாக உள்ளவர்களுக்கு உதவி செய்ய அனுப்பப்படும் இன்னொரு கைதியின் பெயர் ‘ஆல்டி’. (ஆர்டர்லி என்னும் ஆங்கிலச் சொல்லே அப்படித் திரிந்துவிட்டதாகப் பிறகு அறிந்தேன்.)

எப்போதும் போதையிலேயே இருப்பவன், ‘டர்க்கி’; ஒரு தொகுதியில் எத்தனை கைதிகள் இருக்கின்றனர் என்பதைக் கணக்கெடுப்பதில் காவலர்களுக்கு உதவுகிற கைதியின் பெயர் ‘ரைட்டன்’; உணவின் மறு பெயர் ‘படி’. வேளாவேளைக்குப் படி அளப்பார்கள்.

அன்று காலை, எனக்கு மனு வந்தது. மகிழ்வோடும், கூடவே ஒருவித அச்சத்தோடும் நடந்தேன்.

30.08.02 இரவே பேரன் பிறந்துவிட்ட செய்தியையும், மகள் நலமுடன் உள்ள செய்தியையும் ‘மனு’வில் அறிந்து மகிழ்ந்தேன். ஏற்கெனவே மகன் வழியில் ஒரு பேத்தி ஓவியா; இப்போது மகள் வழியில் ஒரு பேரன்.

‘பிள்ளைகள், பேரன், பேத்தி பெறற்கரும் அரிய பேறும் அள்ளவே குறைந்திடாத அன்பையும் உலகில் பெற்ற’ மகிழ்வோடு மறுபடியும் என் தொகுதிக்குத் திரும்பினேன்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு, ஒரு மாலையில், எங்கள் தொகுதியில் காலியாக உள்ள மற்ற அறைகளையும் சுத்தப்படுத்தினர். யாரோ வருகிறார்கள் என்று பொருள். யாரென்று கேட்டேன். காவலர்களுக்குத் தெரியவில்லை. அதிகாரிகள் சொல்லவில்லை. வழக்கம் போல, மாலை 6 மணிக்கு அறையில் வைத்து எங்களைப் பூட்டிவிட்டார்கள்.

இரவு 8 மணியளவில், வெள்ளைச் சட்டை, கட்சிக் கரை வேட்டியுடன் இருவரைக் காவலர்கள் அழைத்து வந்தனர். அருகில் வந்தவுடன் முகம் தெரிந்தது. எங்களுக்கு முன்பே பொடாவில் கைதாகி, வெவ்வேறு சிறைகளில் உள்ள ம.தி.மு.க. நண்பர்களே அவர்கள்! ஈரோடு கணேசமூர்த்தியும், புலவர் செவந்தியப்பனும், மதுரைச் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். சிறிது நேரத்தில் திருச்சி சிறையிலிருந்து சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.மணியம், வழக்குரைஞர் அழகுசுந்தரம், மதுரை கணேசன், திருமங்கலம் நாகராஜன் ஆகியோர் வந்தனர். இறுதியாக சேலம் சிறையிலிருந்து வீர.இளவரசன், பூமிநாதன் வந்து சேர்ந்தார்கள்.

பதினைந்து நாள்களுக்குப் பிறகு, இரவில் மனித நடமாட்டத்தைப் பார்த்த மகிழ்ச்சி. கம்பிகளுக்கிடையில் கை நீட்டி அவர்களை வரவேற்றேன். சிறை மறந்து எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தோம். ஒருவரையருவர் விசாரித்துக் கொண்டோம். எப்படித் தெரியுமா... ‘‘ஒங்க சிறை எப்பிடியிருக்கு?’’, ‘‘திருச்சியைவிட மதுரை ஜெயில் பரவாயில்லையா?’’ இப்படி!

அடுத்த நாள், அவர்களுக்குப் பூவிருந்தவல்லி பொடா நீதிமன்றத்தில் வழக்கு. அதற்காக முதல் நாள் இரவு இங்கு கொண்டுவந்துள்ளனர். இது வெறும் இரவுத் தங்கல். பொழுது விடிந்தால் வேடந்தாங்கல் கலைந்து விடும் என்று தெரிந்ததும், என் மகிழ்ச்சி வடிந்துவிட்டது. மீண்டும் அவர்களைச் சந்திக்க ஒரு மாதம் ஆகலாம்!

பொதுவாக எந்த ஒரு கைதியையும், 15 நாள்களுக்கு ஒருமுறை நீதிமன்றம் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது விதி. அப்படி அழைத்துச் செல்லப்படும்போது ஊரை, உலகைப் பார்க்கலாம் என்பதோடு, நீதிமன்றத்தில் உறவினர்களையும் பார்க்கலாம்.

வழிக்காவல் (escorts) வருகிறவர் அனுமதியோடு வீட்டு உணவையும் ஒரு வேளை சுவை பார்க்கலாம். வழக்கிலும் சில முன் நகர்வுகள் ஏற்படலாம். இப்படிப் பல நன்மைகள் உள்ளதால், நீதிமன்றம் செல்லும் நாளை விசாரணைக் கைதிகள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.

பொடா கைதிகளுக்கு அதிலும் ஒரு மாற்றம். ஒரு மாதத்துக்கு ஒருமுறை நீதிமன்றம் அழைத்துச் சென்றால் போதும் என்கிறது பொடா சட்டம்.

பொடா (POTA-Prevention of Terrorist Act 2002) போன்ற சட்டங்கள் இந்தியாவுக்குப் புதியவை அல்ல. ஏறத்தாழ 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டபோது, இதுபோன்ற பல அடக்குமுறைச் சட்டங்களை பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்தது. அவற்றுள் குறிப்பிடத்தக்கது, ரௌலட் சட்டம்.

வெள்ளைக்கார நீதிபதி ரௌலட்டும், சென்னையில் நீதிபதியாக இருந்த சி.வி.குப்புசாமி சாஸ்திரியும் சேர்ந்து அந்தக் கொடுமையான சட்ட முன் வடிவை அரசுக்கு அளித்தனர். அதனை அப்போது சென்னை, திலகர் பவனில் (இப்போது ‘சோழா’ ஓட்டல் இருக்குமிடம்) தங்கியிருந்த காந்தியடிகள் கடுமையாக எதிர்த்தார். அன்னி பெசன்ட், வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி, எஸ்.சுப்பிரமணிய அய்யர், ஜி.ஏ.நடேசன் ஆகியோர் ஆதரித்தனர்.

இறுதியில் 1919-ம் ஆண்டு அச்சட்டம் நடைமுறைக்கு வந்து விட்டது. அதனை எதிர்த்து பஞ்சாப், ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் 1919 ஏப்ரல் 13 அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர். அவர்களைக் கலைக்க ஆங்கில அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் (1650 ரவுண்டுகள்) 800-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

விடுதலை பெற்ற இந்தியாவிலும் ரௌலட்-சாஸ்திரி சட்டத்தின் மறுபதிப்புகள் வந்துகொண்டே இருந்தன. ‘டி.ஐ.ஆர்’ (D.I.R- Defence of Indian Rules) சட்டத்தின் கீழ்தான் 1965-ல் கலைஞர் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டைத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

1971-ம் ஆண்டு ‘மிசா’ (Maintenance of Internal security Act-MISA) சட்டமும், 1985-ம் ஆண்டு ‘தடா’ (TADA- The Terrorist and Disruptive Activities prevention Act) சட்டமும் நடைமுறைக்கு வந்தன. அந்தச் சட்டங்களின் மறு பதிப்பும் மலிவுப் பதிப்பும்தான் பொடா!

ஆகவே, மற்ற சட்டங்களின் கீழ் பெறக்கூடிய இயல்பான உரிமைகளைக்கூட, நாங்கள் இழக்க வேண்டியதாயிற்று. அச்சட்டத்தின் பெயரால், எத்தனை விதமான ஒடுக்குமுறைகள் அரங்கேற்றப்படுகின்றன என்பதை 13.09.2002 அன்று நான் நேரடியாகவே உணர்ந்தேன்.

அன்றுதான், நான் கைது செய்யப்பட்ட பிறகு முதன்முறையாகச் சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படவிருக்கிறேன். மற்ற கைதிகளைப் போல, எனக்குள்ளும் ஒரு மகிழ்ச்சி இருந்தது. காலை 10 மணிக்குச் சிறையைத் தாண்டிக் காலடி எடுத்து வைத்த நான் அதிர்ச்சிக்குள்ளானேன்.

(தொடரும்)

நன்றி : ஆனந்த விகடன்.

Friday, May 04, 2007

அத்தியப்பா தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் மே நாள் விழா


உழைக்கும் தொழிலாளர்களின் உரிமையைக் காக்கும் வகையில், மே-1 அன்று புதுச்சேரி, மேட்டுப்பாளையம் அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் மே நாள் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு, அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிலாளர் நலச் சங்கத்தின் செயலாளர் ம.சந்திரகுமார் தலைமை தாங்கினார். சங்கத்தின் கொடியை மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் மு.முத்துக்கண்ணு ஏற்றினார்.

செம்படுகை நன்னீரகம் அமைப்புத் தலைவர் கு.இராம்மூர்த்தி, செயலாளர் பார்த்திபன், தந்தை பெரியார் தி.க. செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ, அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிலாளர் நலச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கோ.சுகுமாரன், தலைவர் சு.சின்னப்பா, துணைத் தலைவர் மு.பொன்னுசாமி, துணைச் செயலாளர் சு.முருகன், இணைச் செயலாளர் லோ.ராஜேந்திரன், பொருளாளர் கி.கண்ணன், துணைப் பொருளாளர் கி.பாலாஜி உட்பட 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துக் கொண்டனர்.

தொழிலாளர் உரிமைகள் குறித்து அனைவரும் பேசினர். அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிலாளர் நலச் சங்கம், மக்கள் உரிமைக் கூட்டமைப்புடன் இணைந்தது.