Thursday, May 31, 2007

துறைமுகத் திட்டத்தை எதிர்த்து இந்திய அளவில் போராட்டம் - மேதா பட்கர்


துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 17-05-2007 அன்று ஒருநாள் பயணமாக புதுச்சேரிக்கு வந்த `சுற்றுச்சூழல் போராளி' மேதா பட்கர், தேங்காய்த்திட்டு ஜெயராம் நாயக்கர் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

புதுச்சேரியைப் பிரெஞ்சுக்காரர்கள் ஆண்டுள்ளனர். வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் அவர்கள் செய்யாத கெடுதல்களை இப்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்து வருகின்றனர். புதுச்சேரியின் இயற்கை வளங்கள் கொள்ளைப் போகின்றன.

புதுச்சேரி துறைமுக விரிவாக்கத் திட்டம் ரூ.2700 கோடியில் தனியார் பங்கேற்புடன் செயல்படுத்த அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. மக்களின் கருத்துக்களைக் கேட்காமல் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைத் தொடங்கியது தவறு. இத்திட்டம் மக்களைப் பாதிக்கும் திட்டமாக உள்ளது.

இதுபோன்ற பெரிய திட்டத்திற்கு உடனடியாகவும், விதிமுறைகளை மீறியும் அரசு அனுமதி அளித்தது எப்படி? மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் அனுமதி அளிக்கப்பட்டது எப்படி?

சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் பணி, துறைமுக விரிவாக்கத் திட்டம் இரண்டையும் ஒரே நிறுவனத்திற்கு தந்துள்ளனர். சிறப்பு பொருளாதார மண்டலம் என்பது சிறப்பு சுரண்டல் மண்டலமாக மாறிவிடும்.

அரசுக்கு சொந்தமான 153 ஏக்கர் நிலத்தை வளர்ச்சி என்ற பெயரில் தனியார் நிறுவனத்திற்கு அரசு தந்துள்ளது. அரசின் சொத்தை இதுபோன்ற தனியாரிடம் ஒப்படைப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மாநில - யூனியன் பிரதேச அரசுகள் பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டியது கடமை.

இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்காதபோது, உள்துறை அனுமதி அளிக்காதபோது, அரசு 153 ஏக்கர் பொதுச் சொத்தை தனியாருக்கு ஒப்படைத்துள்ளது எப்படி?

இத்திட்டத்தை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கு துறைமுக திட்டங்களை நிறைவேற்றிய முன் அனுபவம் எதுவும் கிடையாது. இப்பிரச்சினையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன்.

வளர்ச்சித் திட்டம் என்றால் மக்களுக்கு உண்மையில் பயன்படும் வகையில் இருக்க வேண்டும். அந்த வகையில் சுற்றுலா மற்றும் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அந்த வகையில் துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும். அந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலை மேம்படுத்தலாம். மீன்பிடி படகுகள் தங்குவதற்கு வசதியாக கடலில் அணைக்கரை கட்டலாம். மீன்களைப் பாதுகாக்க குளிர்சாதன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அளிக்கலாம். இதனால் மீனுக்குக் கூடுதல் மதிப்பு கிடைக்கும். மேலும் வேலைவாய்ப்பு பெருகும்.

வல்லுநர் குழு அமைத்து கருத்துக்களைக் கேட்டு முடிவு எடுப்போம் என அரசு கூறுவது கண்துடைப்பு. எந்த வளர்ச்சித் திட்டத்தை நிறைவேற்றுவதாக இருந்தாலும் மக்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டும். திட்டங்களின் தேவை குறித்து முடிவு எடுப்பதற்கு மக்கள்தான் வல்லுநர்கள்.

துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். இதன் அங்கமாக தேங்காய்த்திட்டில் தரிசாக கிடக்கும் 107 ஏக்கர் நிலத்தில் மக்கள் விவசாயப் பணியைத் தொடங்கி உள்ளனர். இது வரவேற்கத்தக்கது.

எளிய மக்களின் வருவாயைப் பெருக்க மாற்றுத் திட்டங்கள் தேவை. ஆனால், அழிவு ஏற்படுத்தும் திட்டம் தேவையில்லை. இயற்கைக்கு மாறான இந்த மனித சுனாமி மிகவும் ஆபத்தானது. இதுபோன்ற திட்டங்கள் வந்தால் தேங்காய்த்திட்டு மட்டுமல்ல புதுச்சேரியின் ராஜ்நிவாஸ் தப்புமா என்பதே சந்தேகம்.

அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக மக்கள் போராட்டம் நடத்தவில்லை. பேரழிவு ஏற்படுத்தக் கூடிய திட்டத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளவே போராடி வருகின்றனர்.
பேரழிவு ஏற்படுத்தும் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோளாகவும் சவாலாகவும் கேட்டுக் கொள்கிறேன்.

நாம் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், மக்களுக்கு எதிரான வளர்ச்சியை எதிர்க்கிறோம். தொன்மையான தேங்காய்த்திட்டு பகுதி பாதுகாக்கப்பட வேண்டும். புதுச்சேரி பாதுகாக்கப்பட வேண்டும்.

வரும் ஜுன் மாதம் 6,7 ஆகிய நாட்களில் பூனா அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நடைபெற உள்ள தேசிய இயக்கங்கள் மக்கள் கூட்டமைப்பின் இந்திய அளவிலான கூட்டத்தில் இத்திட்டம் குறித்து விவாதிப்போம். இத்திட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தை இந்திய அளவில் விரிவுபடுத்துவோம் என்றார்.

இப்போட்டியின் போது, சட்டமன்ற உறுப்பினர் க.லட்சுமிநாராயணன், தேங்காய்த்திட்டு கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன், மனித உரிமை இயக்கம், பெண்கள் இயக்கப் பொறுப்பாளர் வழக்கறிஞர் லூசி, புதுச்சேரி குடிமக்கள் செயல்பாட்டு அமைப்புப் பொறுப்பாளர் புரோபீர் பானர்ஜி, கவிஞர் மாலதி மைத்ரி உட்பட பலர் உடனிருந்தனர். தேங்காய்த்திட்டு கிராம மக்கள் திரளாக திரண்டிருந்தனர்.

No comments: