Wednesday, May 30, 2007

`கடற்கரையைக் காப்பாற்ற மீனவர்கள் போராட வேண்டும்' - மேதா பட்கர்


துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் 17-05-2007 அன்று ஒருநாள் பயணமாக புதுச்சேரிக்கு வருகை தந்த `சுற்றுச் சூழல் போராளி' மேதா பட்கர் மீனவ கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்தார்.

புதுச்சேரி அருகேயுள்ள வீராம்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கிறோம் என்ற பெயரில் கடலை மறித்து 100 மீட்டர் அளவுக்கு பாறாங்கற்களைக் கொட்டியுள்ளனர். வங்காள விரிகுடா தெற்கிலிருந்து மேற்கு நோக்கி மணல் நகர்வு ஏற்படும் கடற்பகுதியாகும். இந்த மணல் நகர்வை செயற்கையாக தடுத்து நிறுத்தினால் கடற்கரை மீனவக் கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துபோகும்.

பிரெஞ்சுக் காலத்தில் புதுச்சேரியில் கட்டப்பட்ட பழைய துறைமுகமும் தற்போது இருக்கும் புதிய துறைமுகமும் கடலை மறித்துக் கட்டாமல், தூண்கள் அமைத்து கட்டப்பட்டுள்ளன. இதனால், மணல் நகர்வுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாததோடு கடற்கரையும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சூழல் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் மேற்சொன்னவாறு வீராம்பட்டினத்தில் துறைமுகத்திற்காக கடல் மறிக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தந்திராயன்குப்பம் என்ற மீனவக் கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கடல் உட்புகுந்து கடற்கரை மணல் பரப்பே இல்லாமல் போனதோடு மீனவர்களின் வீடுகள் கடல் அரிப்பால் அழிந்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசு தடுப்பு அரண் அமைக்கிறோம் என்ற பெயரில் மேலும் கடலுக்குள் பாறாங்கற்களைக் கொட்டி வருகிறது.

`இது நிரந்தர தீர்வு அல்ல. கடலை மறிப்பதனால் மேலும் மேலும் கடல் அரிப்பு ஏற்பட்டு கடலோர மீனவக் கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துபோகும்' என கடல்சார் வல்லுநர்கள் எச்சரித்தும் புதுச்சேரி - தமிழக அரசுகள் கவலைப்படாமல் இருந்து வருகின்றன.

பாதிக்கப்பட்ட தந்திராயன்குப்பம் மீனவ கிராமத்திற்கு மேதா பட்கர் சென்றார். மீனவர்களின் வீடுகள் கடல் அரிப்பால் சிதைந்துப் போனதைப் பார்வையிட்டார். அங்கிருந்த மீனவ மக்களிடம் பேசினார். கடல் அரிப்பால் தொடர்ந்து பாதிக்கப்படுவது பற்றி அவர்கள் கூறினர். கடல் அரிப்பு எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து மீனவ மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாதது ஏன்? என்று மேதா பட்கர் கேள்வி எழுப்பினார்.

அப்போது அம்மக்களிடையே பேசிய மேதா பட்கர் `இதுபோன்ற இயற்கைக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க மீனவ மக்கள் ஒற்றுமையாக இருந்து போராட வேண்டும். கடல் அரிப்பு மட்டுமல்ல உலகமயமாதல், தாராளமயமாதல் போன்ற கொள்கையால் மீனவர்களை கடலை விட்டு அப்புறப்படுத்தும் சதி அரங்கேறி வருகிறது. சுனாமி போன்ற இயற்கைச் சீற்றம் ஒருபுறம், சுற்றுச்சூழல் அழிப்பு என்ற மனிதன் ஏற்படுத்தும் சுனாமி மறுபுறம் என மீனவ மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடல் சார்ந்த மீன்பிடி தொழிலை மேம்படுத்துவதோடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சமூக செயல்பாட்டு இயக்கங்கள் முன்கை எடுக்க வேண்டும். அரசு இதற்கு சிறப்புக் கவனம் செலுத்தி திட்டங்களைத் தீட்டவேண்டும்’ என்றார்.

புதுச்சேரி குடிமக்கள் செயல்பாட்டு இயக்கப் பொறுப்பாளர் புரோபீர் பானர்ஜி பாதிப்புகள் குறித்து மேதா பட்கரிடம் விளக்கினார். அப்போது அருகிலிருந்த மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், மனித உரிமை இயக்கம் - பெண்கள் இயக்கப் பொறுப்பாளர் வழக்கறிஞர் லூசி ஆகியோரிடம் `துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் இந்த மீனவ மக்களையும் அணிதிரட்டி பங்கேற்க செய்யுங்கள்' என்றார்.

மேலும், அங்கு கூடியிருந்த மீனவ மக்களிடையே `புதுச்சேரியில் சிறிய அளவில் கடலை மறித்து கட்டப்பட்ட துறைமுகத்தால் ஏற்பட்ட பாதிப்பே இவ்வளவு என்றால், தற்போது கட்டப்படவுள்ள புதிய துறைமுக விரிவாக்கத்தால் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும். அத்திட்டத்தை எதிர்த்து மீனவ மக்களை ஒன்றுதிரட்டி தமிழகத்தில் போராடுங்கள். அப்போதுதான் கடலோரக் கிராமங்களைப் பாதுகாக்க முடியும்' என்றார் மேதா பட்கர்.

பிறகு வீராம்பட்டினம் மீனவ கிராமத்திற்குச் சென்றார். வழியில் அரியாங்குப்பம், இராதாகிருஷ்ணன் நகரிலுள்ள தந்தை பெரியார் சிலையருகில், பெரியாரி தி.க. தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் கறுப்புச் சட்டை அணிந்த செயல்வீரர்கள் வரவேற்பு அளித்தனர். தந்தை பெரியார் சிலையருகில் மேதா பட்கர் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

வீராம்பட்டினத்தில் மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கத் தலைவர் கவுன்சிலர் பா. சக்திவேல் தலைமையில் ஏராளமான பெண்கள் உட்பட ஊர்மக்கள் கூடியிருந்து வரவேற்றனர். கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் ஆ. காங்கேயன், நெய்தல் நில உரிமை மீட்பு இயக்கப் பொதுச் செயலாளர் பா. இராமஜெயம், பொருளாளர் சு. இளந்திரையன் உட்பட பலர் உடனிருந்தனர். மீனவக் கிராமப் பெண்கள் மேதா பட்கருக்கு மலர் மாலை அணிவித்து தங்கள் வரவேற்பையும் அன்பையும் வெளிப்படுத்தினர்.

அப்போது அம்மக்களிடையே கலந்துரையாடிய மேதா பட்கர் `துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராட வேண்டும். அதோடு நின்றுவிடாமல் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மீன்பிடி தொழிலோடு தொடர்புடைய லாபம் தரக்கூடிய தொழில்கள் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும். அரசின் பல்வேறு திட்டங்களின் நிதிகள் பெற்று தொழில் தொடங்க முயல வேண்டும்' என்றார்.

மேதா பட்கரின் வருகை மீனவ மக்களிடையே பெரும் உற்சாகத்தைத் தந்தது. மீனவ மக்களை அமைப்பாகத் திரட்டப் போதிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என அழுத்தமாக வலியுறுத்தினார் மேதா பட்கர்.

No comments: