Monday, May 28, 2007

“புதுச்சேரியில் மீண்டும் ஒரு விடுதலைப் போர்’’ - மேதா பட்கர்
புதுச்சேரியை அழிக்க கொண்டு வரப்படும் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், `சுற்றுச்சூழல் போராளி' மேதா பட்கர் 17-05-2007 அன்று ஒருநாள் பயணமாக புதுச்சேரிக்கு வந்தார்.

முன்னதாக காலை 10 மணியளவில், சென்னை விமான நிலையத்தில் அவரை மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், மனித உரிமை இயக்கம் - பெண்கள் இயக்கப் பொறுப்பாளர் வழக்கறிஞர் லூசி, புதுச்சேரி குடிமக்கள் செயல்பாட்டு இயக்கப் பொறுப்பாளர் புரோபீர் பானர்ஜி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

நர்மதா அணைத் திட்டத்தை எதிர்த்து கடுமையாகப் போராடி வருவது குறித்து அவர் கூறினார். மேலும், கடந்த 24 மணிநேரமும் இடைவிடாமல் பயணம் செய்தது குறித்துக் கூறினார். நர்மதா அருகேயுள்ள குக்கிராமம் ஒன்றிலிருந்து முதலில் படகு மூலமும் பிறகு ஒரு பேருந்து, மூன்று கார்கள், கடைசியாக ரயிலைப் பிடித்து மும்பை வந்த அனுபவத்தைக் கூறினார். இவர் வருகைக்காக ரயில் 15 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டதைக் கூறினார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்ததாகக் கூறினார். தான் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமென்பதற்காக அவர்பட்ட சிரமங்கள் ஆச்சரியப்பட வைத்தன.

மதியம் 12-30 மணியளவில், துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடப் பல்வேறு அடக்குமுறைகளையும் தாண்டி போராடி வரும் தேங்காய்த்திட்டு கிராமத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தேங்காய்த்திட்டு கவுன்சிலரும் போராட்டக்குழு முன்னோடியுமான எஸ்.பாஸ்கரன், தந்தை பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன் உட்பட பலர் மலர்க்கொத்து அளித்து வரவேற்றனர்.

கிராமப் பெண்கள் ஏராளமானவர்கள் ஒன்று திரண்டு மலர்மாலை அணிவித்து வரவேற்றனர். அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளை திரும்பவும் கிராமப் பெண்களுக்கே அணிவித்து மகிழ்ந்தார். வரவேற்பு அளித்த பெண்களிடம் அவர்களின் பெயர்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அவர்களைப் பெயர் சொல்லி அழைத்துப் பேசினார்.

பிறகு, பிள்ளையார் கோயில் அருகில் திரண்டிருந்த ஊர் பொது மக்களிடையே பேசினார். பெண்கள் துறைமுக விரிவாக்கத் திட்டத்தினால் தங்கள் ஊர் முழுவதும் கையகப்படுத்தப்பட இருப்பதைக் கூறினார். துறைமுகப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வல்சராஜ் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தின்போது போலீசு நடத்திய வன்முறை வெறியாட்டம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினர்.

அப்போது அவர் பேசியதாவது :

`நாட்டில் நமது உரிமைக்காகப் போராடி வருகிறீர்கள். செம்மையான வழியில் அமைதியாக இயற்கையைப் பாதுகாக்க சுற்றுலா உள்ளிட்ட அரசின் இயற்கைக்கு எதிரான திட்டங்களை எதிர்த்த உங்களது போராட்டம் வரவேற்கத்தக்கது. இப்போராட்டத்திற்கு பெண்கள் முன்னிலையில் இருந்து போராடி வருகிறீர்கள். வீட்டில் பதுங்கிக்கிடந்த பெண்கள் உரிமைகளுக்காகப் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளது பாராட்டத்தக்கது.

2700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுச்சேரி அரசு கொண்டுவரவுள்ள இத்திட்டத்தை பாரம்பரிய அழிவிலிருந்து காப்பாற்ற நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள இந்த சவால் பாராட்டத்தக்கது. அரசு கையகப்படுத்த இருந்த தரிசு நிலத்தில் விவசாயம் செய்து அமைதியான வழியில் உங்கள் போராட்டத்தை நிலை நிறுத்தியிருப்பது இந்த எதிர்ப்புக் குரலுக்கு அமைதியான அடித்தளம்.

உங்களுடைய இந்த ஒற்றுமை நாட்டின் மிகப்பெரிய வலிமை. இயற்கைக்கு ஆதரவாக திரண்டுள்ள இந்த ஒற்றுமை கண்டிப்பாக விலைபோகாது. இந்தப் போராட்டம் நாம் எல்லோரும் இணைந்துப் போராட வேண்டிய முக்கியப் போராட்டம். 2007-ஆம் ஆண்டில் நாட்டில் தலைதூக்கியுள்ள முக்கியப் பிரச்சினையாக இது கருதப்படுகிறது.

துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட கோரி நாம் தொடர்ந்துள்ள நமது அறவழிப் போராட்டம் இத்திட்டம் கைவிடப்படும் வரை தொடர வேண்டும். இதற்காக நாம் ஓரணியில் திரள வேண்டும்' என்றார்.

பின்னர் மக்களிடையே கலந்துரையாடினார். அப்போது 62 வயதான ராஜலட்சுமி என்ற பெண்மணி தான் புதுச்சேரியின் விடுதலைக்குப் போராடிய தியாகி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரை அரவணைத்துக் கொண்டு `இதுவும், மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம் தான்' என்று கூறி மக்களுக்கு உற்சாகமூட்டினார்.

மேலும், `காப்போம்! காப்போம்! புதுச்சேரியைக் காப்போம்! கட்டுவோம்! கட்டுவோம்! புதுச்சேரியைக் கட்டுவோம்' என்று தமிழில் முழக்கமிட்டார். அனைவரும் அவருடன் சேர்ந்து முழக்கமிட்து எழுச்சியாக இருந்தது.

பின்னர் தேங்காய்த்திட்டில் உள்ள ஜெயராம் நாய்க்கர் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். மேதா பட்கர் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணல்.

மதிய உணவிற்குப் பிறகு துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களைப் பார்வையிட்டார். மேலும், தேங்காய்த்திட்டு மக்களிடம் விவசாயம் குறித்துக் கேட்டறிந்தார். அதோடு பச்சைப் பசேலேன இருந்த வயல்களைப் பார்த்து அங்கு விவசாயம் செய்து கொண்டிருந்த பெண்களிடம் விவசாயம் குறித்து விசாரித்தார்.

பிறகு தரிசாக கிடக்கும் நிலத்தில் விவசாயம் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் அந்த இடங்களையும் பார்வையிட்டார். அப்போது `கூட்டு விவசாயப் பண்ணை அமைத்து விவசாயம் நடத்துங்கள் போராட்டக் குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகள், இயக்கங்கள் ஒவ்வொரு நாளுக்கு ஒரு கட்சி, இயக்கம் என பொறுப்பேற்று விவசாயத்தை உயிரோட்டமானதாக்க ``சிரமதானம்'' மேற்கொள்ளுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்தார்.

போராடும் மக்களிடையே மேதா பட்கர் அதிக நேரம் செலவிட்டு ஆதரவளித்தது அம்மக்களுக்கு உற்சாகமாகவும் ஊக்கமாகவும் இருந்தது மேலும், நர்மதை அணைப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் அவரை `மேதா தாய்' என்று அழைப்பதைப் போல், தேங்காய்த்திட்டு மக்களும் மேதா பட்கரை `மேதா தாய்' என்று அழைக்க வைத்துள்ளது.

No comments: