Monday, June 11, 2007

சட்ட விரோத காவலில் இருளர்கள்: காவல் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை



சட்ட விரோதமாக பழங்குடி இருளர்களைக் காவலில் வைத்த வழக்கில் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் ஆகியோருக்கு வழங்கிய 3 ஆண்டு சிறை தண்டனையை திண்டிவனம் விரைவு நீதிமன்றம் உறுதி செய்தது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுக்கா அத்தியூரில் கடந்த 1994ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் அத்தியூர் விஜயாவின் அக்காள் கணவர் பச்சையப்பன் மற்றும் தைலாபுரம் ஈச்சங்காட்டில் வசிக்கும் விஜயாவின் உறவினர் பலராமன் ஆகிய இருவரையும் ஒரு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறி செஞ்சி உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் 4 போலீசார் அழைத்துச் சென்றனர்.

இது தொடர்பாக பலராமன் மனைவி சந்திராவும், பச்சையப்பன் மனைவி கன்னியம்மாளும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் மூலம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கும், காவல் கஙாணிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் புகார் மனு அனுப்பினர்.

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், கடந்த 1994ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாள் சென்னையிலுள்ள இலவச சட்ட உதவிக் கழக உதவியோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர்.

அதே ஆண்டில் மார்ச் 14ஆம் நாள் பச்சையப்பன் செஞ்சி நீதிமன்றத்திலும், பலராமன் நெய்வேலி நீதிமன்றத்தில் பொய்யாக புனையப்பட்ட ஒரு திருட்டு வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மேற்படி நீதிமன்றங்களில் பரிகாரம் தேடிக் கொள்ளலாம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்யது.

இதனை எதிர்த்து பலராமனின் மனைவி சந்திரா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 1994ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்ட பலராமனுக்கு உரிய பரிகாரம் காண வேண்டும் எனக் கூறி, உயர்நீதிமன்றத்திற்கு சந்திராவின் மனுவை திருப்பி அனுப்பியது. இவ்வாறு மனுவை திருப்பி அனுப்புவது என்பது சம்பந்தப்பட்ட நீதிமன்றம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என சுட்டிக் காட்டுவதாகும்.

இதையடுத்து பலராமன் சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? என்று விசாரணை செய்து அறிக்கை அனுப்ப மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்ட அமர்வு நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்தியது. பலராமன் சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்டார் என்று உறுதி செய்து, அப்போதைய நீதிபதி சிவக்குமரன் உயர்நீதிமன்றத்திற்கு 40 பக்க அறிக்கை தாக்கல் செய்தார்.

இதை தொடர்ந்து 1995ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அருணாசலம், ஜெயராமசௌதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பலராமன், அவரது மனைவி சந்திராவுக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்;அந்த தொகையை தவறு செய்த போலீசாரிடமிருந்து வசூலிக்க வேண்டும்; சட்டவிரோத காவலில் வைக்க காரணமான போலீசார் மீது வழக்குப் பதிவு செய்து, புலன் விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீஸ் மேற்கொள்ள வேண்டும் எனத் தீர்ப்பளித்தது.

உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, சி.பி.சி.ஐ.டி காவல் துணைக் கண்காணிப்பாளர் மீர் சௌகத் அலி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி, செஞ்சி உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமைக் காவலர்கள் பெருமாள், முருகேசன், ராமலிங்கம், பாலு, ராமகிருஷ்ணன், சத்தியமங்கலம் உதவி ஆய்வாளர் பக்கிரிசாமி, பண்ருட்டி உதவி ஆய்வாளர் கண்ணையன் ஆகிய 8 பேர் மீது குற்றம் சுமத்தி, வானூர் நடுவர் நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை வானூர் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

சட்ட விரோதமாக காவலில் வைத்த செஞ்சி உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி், செஞ்சி தலைமைக் காவலர்கள் பெருமாள், பாலு, ராமலிங்கம், ராமக்கிருஷ்ணன், முதுநிலைக் காவலர் முருகேசன், சத்தியமங்கலம் உதவி ஆய்வாளர் பக்கிரிசாமி, பண்ருட்டி உதவி ஆய்வாளர் கண்ணையன் ஆகிய 8 பேருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது சத்தியமங்கலம் உதவி ஆய்வாளர் பக்கிரிசாமி இறந்து விட்டார்.

இந்த தண்டனையை எதிர்த்து போலீசார் திண்டிவனம் விரைவு நீதிமன்றம்(1)-இல் மேல் முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி தயாளன், 09-06-2007 அன்று மாலை தீர்ப்பளித்தார்.

வானூர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை செஞ்சி உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமைக் காவலர் பெருமாள் ஆகியோருக்கு உறுதி செய்தும், நான்கு பிரிவுகளுக்கு தலா ரூ.ஆயிரம் என்று ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

பண்ருட்டி உதவி ஆய்வாளர் கண்ணையன், செஞ்சி தலைமைக் காவலர்கள் பாலு, ராமலிங்கம், ராமகிருஷ்ணன், முதுநிலைக் காவலர் முருகேசன் ஆகிய 5 பேரை விடுதலை செய்து தீர்ப்பு கூறினார்.

காவல்துறை அத்துமீறல்களால் பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர்களுக்கு நீதி கிடைக்க பாடுபட்ட பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பா.கல்யாணி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பொ.இரத்தினம், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.வெங்கட்ரமணி ஆகியோரின் பணி குறிப்பிடத்தக்கது.

No comments: