அந்த இளைஞனைப் பக்கத்து அறையில் அடைத்துவிட்டு, என்னிடம் வந்த காவலர்கள், ‘‘சார், வழக்கம் போல கொசுவத்தி எதுவும் அவனுக்குக் கொடுத்தனுப்பாதீங்க. கொசுவத்தியைச் சாப்பிட்டு செத்துக்கித்துப் போயிட்டான்னா, அப்புறம் நாங்க, நீங்க எல்லாருமே மாட்டிக்குவோம்’’ என்று சிறிதாக அச்சுறுத்திவிட்டுப் போனார்கள்.
புதிதாகச் சிறைக்கு வருபவர்களுக்குப் பழைய சிறையாளி என்ற முறையில் கொசுவத்தி கொடுத்து அனுப்பி ‘விருந்தோம்புவது’ என் வழக்கமாக இருந்தது. அந்த இளைஞனுக்கு அதுவும் கூடாது என்று கூறிவிட்டனர். ஏனெனில் அது ‘பயங்கரமான கேஸாம்’. அந்த இளைஞனின் பெயர் ராஜாராம்.
கொலை வழக்கு, வெடிகுண்டு வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் தேடப்பட்டுத் ‘தமிழ்த் தீவிரவாதி’ என்று காவல் துறையினரால் பெயர் சூட்டப்பட்டவன். குடியரசு நாள், விடுதலை நாள், காந்தியார் பிறந்த நாள் ஆகியவை வந்துவிட்டால் எங்காவது ஒரு குண்டு வெடிக்கும். குண்டு வைத்தவன் ராஜாராம்தான் என்று காவல் துறை அறிவிக்கும். ஆண்டுகள் பலவாகத் தேடுதல் வேட்டை நடைபெற்றது. நாளேடுகளில் ராஜாராம் படம் (சின்ன வயதில் எடுத்தது) அடிக்கடி வரும்.
ராஜாராமுக்கும் எனக்கும் ஒரு வேடிக்கையான தொடர்பு உண்டு. தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக என்னையும் காவல் துறை இரண்டு முறை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளது. ஒரு முறை, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில்; இன்னொரு முறை, சைதாப்பேட்டையில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தில்.
சைதாப்பேட்டையில் சற்று மிரட்டலாகவே விசாரணை நடைபெற்றது. ‘‘அவன் இருக்குமிடம் உங்களுக்குத் தெரியும் என்று நாங்கள் நினைக்கிறோம். மறைக்காமல் உண்மையைச் சொல்லிவிடுங்கள்’’ என்றனர்.
எனக்கு உள்ளூரச் சிரிப்பாக இருந்தது. எனக்கும் ராஜாராமுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் அந்த மனிதனைப் பார்த்ததுகூட இல்லை. எனக்குத் தொடர்பே இல்லாத வழக்கில், என்னை ஏன் இப்படித் துன்புறுத்துகிறீர்கள்?’’ என்று நான் கேட்டதற்கு, அவர்கள் சொன்ன விடை, மீண்டும் எனக்குச் சிரிப்பையே வரவழைத்தது.
ராஜாராம் எழுதிய நாட்குறிப்பு ஒன்று, காவல் துறையிடம் சிக்கியுள்ளதாகவும், அதில் என்னையும் என் மேடைச் சொற்பொழிவையும் பாராட்டி எழுதியுள்ளதோடு, என்னைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலையும் பதிவு செய்துள்ளதாகக் கூறினர். அவர்கள் சொல்வது உண்மை-யாக இருக்குமா என்பதிலேயே எனக்கு ஐயம் இருந்தது. அப்படியே இருந்தாலும் அதற்கு நான் எப்படிப் பொறுப்பாவேன் என்று கேட்டேன். இறுதியில் என்னை விடுவித்துவிட்டனர்.
2003 ஜனவரி 2 அன்றுதான், முதன்முதலாக ராஜாராமை நான் சிறையில் நேரில் பார்த்தேன். மறு நாள் அறிமுகமானோம். பகல் முழுவதும் ராஜாராம் என்னுடன் பேசிக்கொண்டே இருந்ததைக் காவலர்கள் கவனித்துக்கொண்டு இருந்தனர். நான்காம் தேதி காலை எட்டு மணிக்கெல்லாம், அந்த இளைஞனை வேறு தொகுதிக்கு மாற்றிவிட்டனர்.
அதன் பின்பு மனுப் பார்க்கவும், வழக்குரைஞர்களைப் பார்க்கவும் போய் வரும்போது, எதிரெதிராகச் சந்தித்துக்கொள்வோம். இரண்டொரு சொற்கள் பரிமாறப்படும். ஒரு முறை, கூடுதல் கண்காணிப்பாளர் என்னைத் தன் அறைக்கு அழைத்திருந்தார். அங்கு ராஜாராமைப் பார்த்தேன். ‘‘வாங்க, இந்தப் பையன், சிறையில இருந்தபடியே, தமிழ்ல மேல் படிப்பு படிக்கணும்னு ஆசைப்படுறாரு. ஜெயில்ல அதுக்கு அனுமதி உண்டு. தொல்காப்பியம்னு ஒரு பாடத்துல ஒங்ககிட்ட சந்தேகம் கேட்டுக்கிறேன்னு சொல்றார். ஒங்களுக்குச் சம்மதம்னா சொல்லிக்-குடுங்க’’ என்றார் அதிகாரி.
‘‘அதுக்கென்ன, சிறையில் சும்மாதானே இருக்கேன். நல்லா சொல்லிக் குடுக்கலாம்’’ என்றேன்.
‘‘யாராவது ஒரு ஏட்டு கூட்டிக்கிட்டு வருவாங்க. அவுங்க முன்னாடி, வாரத்துக்கு ஒரு நாள் ஹெல்ப் பண்ணுங்க’’ என்றார்.
என் புன்முறுவலைக் கண்ட அவர், ‘‘ஏட்டு முன்னால’’ என்பது ஒரு நடைமுறை என்றார். ‘‘தாராளமா! அவருக்கும் கொஞ்சம் தொல்காப்பியம் போகட்டுமே’’ என்றேன். இருவரும் சிரித்தனர்.
ஆனால், என்ன காரணத்தினாலோ, அப்படி ஒரு வகுப்பு நடைபெறவே இல்லை. எப்போதேனும் சந்திப்பதோடு சரி.
அப்படித்தான் 25.03.2003 அன்று மாலையும் ராஜாராமைச் சந்தித்தேன். அப்போது என் நண்பர் தமிழ் முழக்கம் சாகுல் அமீதும் பொடாவில் கைதாகி உள்ளே வந்துவிட்டார்.
நான், பரந்தாமன், சாகுல் அமீது மூவரும், வழக்குரைஞர்களைப் பார்த்துவிட்டுத் தொகுதிகளுக்குத் திரும்பியபோது எதிரில் ராஜாராமைப் பார்த்தோம்.
சாகுலும், ராஜாராமும் மூன்றாவது தொகுதியில் இருந்தனர். நானும், பரந்தாமனும் முதல் தொகுதி.
‘‘கோர்ட்டுக்குப் போறேன்’’ என்றார் ராஜாராம்.
‘‘சாயந்திரம் ஆயிடுச்சு. இப்ப என்ன கோர்ட்டு?’’ என்றார் பரந்தாமன்.
‘‘காலையில இருந்து காத்திருந்தேன். இப்பதான் வழிக்காவல் வந்திருக்கு.’’
கையில் பழமும், ரொட்டியும் வைத்திருந்தார். ‘‘திரும்பி வர நேரமாச்சுன்னா, இதை வெச்சுக்க. சாப்பிடு’’ என்று சொல்லி சாகுல் கொடுத்தாராம்.
என்னைப் பார்த்து, ‘‘நாளயில இருந்து, நீங்க படிச்சு முடிச்சதும் தினமணி பத்திரிகையை அனுப்பிவைங்க’’ என்றார்.
‘‘அதிகாரிகிட்ட சொல்லிடு. காலையிலயே அனுப்பிவைக்கிறேன்’’ என்றேன்.
‘‘நேத்தே சொல்லிட்டேன். மறக்காம நாளைக்கி அனுப்பிடுங்க.’’
ராஜாராம் வெளியேற, நாங்கள் உள்நோக்கி நடந்தோம்.
அந்த நிமிடத்தில் அது எங்களுக்கு ஒரு சாதாரண சந்திப்பாகவும், மிகச் சாதாரண நிகழ்வாகவுமே இருந்தது. அவரவர் தொகுதியில், அவரவர் அறையில் வழக்கம் போல் மாலை ஆறு மணிக்கு பூட்டப்பட்டோம்.
அறை பூட்டப்படும் நேரத்தில், உயரே இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை எடுத்து, தன் அறைக்கு அருகில் மோகன் வைத்துக்கொள்வார். நள்ளிரவு வரை, ஒலியைக் குறைத்து, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டு இருப்பார். பல ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் அவருக்கு அந்தப் பெட்டிதான் தோன்றாத் துணை என்று சொல்ல வேண்டும்.
அந்தப் பெட்டியில் பொதிகை மற்றும் அரசுத் தொலைக்காட்சிகள் மட்டும்தான் தெரியும். அவற்றை அவர் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பார். ஏதேனும் முக்கியமான செய்தி என்றால் எங்களையும் அழைத்துச் சொல்வார்.
அப்படித்தான் அன்று இரவு 8.30 மணிக்கு, மேலே இருந்து அவர் ‘சார்... சார்’ என்று அழைக்கும் குரல் கேட்டது. ‘‘என்ன மோகன்?’’ என்றேன்.
‘‘மூணாம் பிளாக்குல இருந்த ராஜாராமை போலீஸ் சுட்டுடுச்சு சார். செத்துப்போயிட்டான். தப்பி ஓட முயன்றபோது சுடப்பட்டான்னு சொல்றாங்க’’ என்றார்.
எனக்குப் பகீரென்றது!
(தொடரும்)
நன்றி:
ஆனந்த விகடன்.
www.subavee.blogspot.com
1 comment:
சுகுமாரன்,
இதன் மற்ற பகுதிகளுக்கான சுட்டிகள் கிடைக்குமா?
நன்றி
Post a Comment