Saturday, October 27, 2007

தேங்காய்த்திட்டு இளைஞர் கொலைச் சம்பவம்: துணை ஆட்சியர் விசாரணை


கொலை செய்யப்பட்டவரின் தாயார்
சூடாமணி, தம்பி செல்வமணி.


புதுச்சேரி தேங்காய்த்திட்டு இளைஞர் கொலைச் சம்பவம் குறித்து துணை ஆட்சியர் விஜய்குமார் பிதிரி 26-10-2007 அன்று விசாரணை நடத்தினார்.

தேங்காய்த்திட்டில் கொலை செய்யப்பட்ட பாலா (எ) தெய்வசிகாமணியின் வழக்கை சந்தேக மரணம் என்ற பிரிவில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து இதே பகுதியைச் சேர்ந்த ஜான்பால் (23), சுரேஷ் (21), முருகேசன் (23) ஆகியோர் பாலாவைக் கொலை செய்ததாக புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இதன்பின்னர், இவ் வழக்கை கொலை வழக்காக முதலியார்பேட்டை போலீசார் மாற்றினர். கொலையை மூடிமறைத்து, கொலையாளிகளைக் காப்பாற்றிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி தலைமைச் செயலர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன் புகார் மனு கொடுத்தார்.

இதுபோல் ஆட்சியர் க.தேவநீதிதாசிடமும் கடந்த 15-ஆம் நாளன்று புகார் மனு அளித்தார். கடந்த 18-ஆம் நாளன்று கொலை செய்யப்பட்ட பாலாவின் தாய் சூடாமணி ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

இப் புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தும்படி துணை ஆட்சியர் விஜய்குமார் பிதிரிக்கு ஆட்சியர் க.தேவநீதிதாஸ் உத்தரவிட்டார்.

இதனை அடுத்து விஜய்குமார் பிதிரி மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன், சூடாமணி மற்றும் பாலாவின் சகோதரர் செல்வமணி ஆகியோரிடம் ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடத்தினார். அவர்களிடம் வாக்கு மூலங்கள் பெறப்பட்டன.

இறந்தது பாலா தானா என்பதை உறுதி செய்ய சடலத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும், கொலையை மூடிமறைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாக்குமூலம் அளித்தனர்.

விசாரணையின்போது வட்டாட்சியர் அசோகன் உடன் இருந்தார்.

முதலியார்பேட்டை ஆய்வாளர் ரவிக்குமார், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் உட்பட மேலும் பலரிடம் விசாரணை மேற்கொண்டு, அதன்பின்னர் ஆட்சியரிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யப்படும் தெரிகிறது.

தேங்காய்திட்டு கவுன்சிலர் பாஸ்கரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், செயலாளர் சு.விசயசங்கர், சமூக நீதிப் போராட்டக் குழு பாகூர் மஞ்சினி உட்பட ஏராளமானவர்கள் வந்திருந்தனர்.

No comments: