புதுச்சேரி வில்லியனூர் கனுவாப்பேட்டையைச் சேர்ந்த முரளிதரன் (எ) கணபதி தொடர்ந்த வழக்கில் ரெட்டியார்பாளையம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் பால் வியாபாரம் செய்து வருகிறேன். சமூக பணிகளிலும் ஈடுபாடு உடையவன். கடந்த 3-2-2007 அன்று சண்முகாபுரத்தை சேர்ந்த நந்தகுமார் என்பவரிடம் PY OI x 5767 என்ற எண்ணுடைய டாடா சுமோ கார் ஒன்றை வாங்கினேன். இது தொடர்பாக இருவரும் பத்திரம் தயார் செய்து, அதில் 2 சாட்சிகள் முன்னிலையில் கையெழுத்திட்டோம். ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் விலை பேசி ரூ. 50 ஆயிரம் முன் பணம் கொடுத்தேன். முழுப் பணமும் செலுத்தும் வரை டாடா சுமோவை முன்னாள் அமைச்சர் தேனி ஜெயக்குமார் வசம் இருக்கட்டும் என இருவரும் முடிவு செய்து, வண்டியை அவரது வீட்டில் நிறுத்தினேன்.
இதனிடையே, ரெட்டியார்பாளையம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் அன்றைய தினமே தேனி ஜெயகுமாரை தொடர்பு கொண்டு வண்டியை விற்ற நந்தகுமாருக்கும், டாடா நிதியகத்திற்கும் ஏதோ பிரச்சனை இருக்கிறது, உடனடியாக டாடா சுமோவை காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென கூறியுள்ளார். இதனை அறிந்த நான் உடனடியாக காவல் ஆய்வாளர் ரவிக்குமாரை தொடர்பு கொண்டேன். அப்போது அவர் 'பைனான்ஸ்' பிரச்சனை உள்ள வண்டியை வாங்கியுள்ளதாகவும், உடனடியாக வண்டியை காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும், இல்லையென்றால் வழக்குப் போட்டு சிறைக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டினார். அதற்கு பயந்து நான் உடனடியாக டாடா சுமோவை ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்திற்கு முன் நிறுத்திவிட்டு, அதன் சாவியை அவரிடம் ஒப்படைத்தேன்.
இந்நிலையில், அடுத்த நாள் பல்வேறு பத்திரிகைகளில் நான் வாங்கிய டாடா சுமோ கார் திருடு போனதாக ஒரு செய்தி வெளிவந்தது. இதைப் பார்த்த நான் என் மீது டாடா சுமோ திருடியதாக பொய் வழக்குப் போட்டு விடுவார் என பயந்து காவல் ஆய்வாளர் ரவிக்குமாரை தொடர்பு கொண்டேன். அப்போது அவர் இது தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை என்றும், பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொண்டு, ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆவணங்களை பெயர் மாற்றம் செய்து கொண்டு பிறகு வண்டியை காவல்நிலையத்தில் இருந்து எடுத்துச் செல்லவும் என்று கூறினார்.
நான் உடனடியாக என்னுடைய உறவினர்களிடம் பணம் கடனாக பெற்று நந்தகுமாருக்கு பைசல் செய்தேன். மேலும், பணம் கட்டி வண்டி மேல் டாடா பைனான்சிடம் இருந்த அடமானத்தையும் ரத்து செய்தேன். பிறகு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆவணங்களை பெயர் மாற்றம் செய்து கொண்டேன்.
பிறகு, காவல் ஆய்வாளர் ரவிக்குமார் வழக்குப் போடுவேன் என்று என்னை மிரட்டியதால், என் மீது வழக்கு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள தகவல் அறியும் சட்டத்தில் தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளருக்கு மனு அனுப்பினேன். அதற்கு அவர் வழக்கு எதுவும் இல்லை என்று கடந்த 6-6-2007 அன்று பதிலளித்தார்.
அதன் பின்னர் ரெட்டியார்பாளையம் காவல்நிலையத்திற்கு சென்று காவல் ஆய்வாளர் ரவிக்குமாரை சந்தித்து என்னுடைய டாடா சுமோ வண்டியை கேட்டேன். அதற்கு அவர் மிரட்டும் வகையில் வண்டி பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், இனிமேல் இது சம்பந்தமாக வர வேண்டாம் என்று கூறி காவல்நிலையத்தை விட்டு அனுப்பிவிட்டார்.
எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பலமுறை அவரை தொடர்பு கொண்டு வண்டி பற்றி கேட்டேன். அதற்கு அவர் பதில் சொல்லாமல், என் மீது அரசு ஊழியரை வேலை செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப் போடுவேன் என்று மிரட்டினார்.
நான் நடந்த சம்பவங்களை விரிவாக எழுதி டாடா சுமோ வண்டியை மீட்டுத் தருமாறு தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளருக்கு கடந்த 4-8-2007 அன்று பதிவு தபாலில் புகார் அனுப்பினேன். ஆனால், அவர் என்னுடைய புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, காவல் ஆய்வாளர் ரவிக்குமார் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி திருட்டு (Theft), அசையும் பொருளை திருட்டு எண்ணத்தோடு தனதாக்கிக் கொள்ளுதல் (Misappropriation), அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் (Misuse of power), அச்சுறுத்தி பறித்தல் (Extortion) மற்றும் பல பிரிவுகளில் வழக்குப் பதிய தெற்குப் பகுதி எஸ்.பி.க்கு உத்தரவிட வேண்டும். என்னுடைய டாடா சுமோ வண்டியை திருப்பித் தர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.மோகன் ராம் கடந்த 16-11-2007 அன்று உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
மனுதாரர் இந்த நீதிமன்ற உத்தரவோடு 4-8-2007 நாளிட்ட புகார் மனுவின் நகலை இணைத்து, நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த ஒரு வார காலத்திற்குள் தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதனை பெற்றுக் கொண்டு அவர் புகாரை பரிசீலித்து அதன்மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154-ன்படி உடனடியாக வழக்குப் பதிய வேண்டும். மேலும், வழக்குப் புலன் விசாரணையை விரைவாக முடித்து, 6 மாத காலத்திற்குள் எவ்வளவு விரைவாக முடியுமோ அதற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வி.சுரேஷ், நாகசைலா, அரசுத் தரப்பில் அரசு வழக்கறிஞர் எம்.ஆர்.தங்கவேல் ஆகியோர் ஆஜரானார்கள்.
No comments:
Post a Comment