Sunday, December 30, 2007

இலங்கைச் சுதந்திர நாள் விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துக் கொள்வதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் – கி.வீரமணி

திராவிடர் கழகம் சார்பில் வரும் 31.12.2007 திங்களன்று, காலை 11 மணிக்கு, சென்னை - மெமோரியல் அரங்கம் அருகில், இலங்கையின் சுதந்திர நாள் விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துக் கொள்ளக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.க. தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திர நாள் (4.2.2008) விழாவில் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொள்ளவிருக்கும் நிலையில், அவ்விழாவில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்து இந்த அறப்போராட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து கி.வீரமணி 28-12-2007 அன்று விடுத்துள்ள அறிக்கை:

ஏதோ தமிழர்கள் அத்தீவில் கொன்று குவிக்கப்படுகிறார்கள் என்பதற்காக மட்டுமல்ல; தமிழர்களே படுகொலை செய்யப்படாமல் வேறு மக்கள் அப்படிப் படுகொலை செய்யப்பட்டாலும்கூட மனிதாபிமான அடிப்படையில் நமது எதிர்ப்பை, வெறுப்பைக் காட்டும் வகையில்தான் இத்தகைய ஆர்ப்பாட்டம் நடக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈராக்கிலும், வியட்நாமிலும் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது இந்தியாவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதே - அதே கண்ணோட்டம் இதற்கும் பொருந்தும்தானே?

சொந்த நாட்டு மக்கள்மீது விமானத் தாக்குதல் என்பது உலகில் எங்கும் கேள்விப்பட்டிராத ஒன்று! சொந்த நாட்டிலேயே இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இருக்கின்றனர் என்பது எவ்வளவு பெரிய கொடுமை!

படுகொலை செய்யப்பட்ட போராளிகளை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்துவது என்பது அய்.நா.வின் மனித உரிமை சாசனத்துக்கு எதிரானது அல்லவா? படுகொலை செய்யப்பட்ட பெண்களையே கூட இதற்குமுன் இவ்வாறு இலங்கை இராணுவம் நடத்தியதுண்டு.

ஒரு நாட்டின் எல்லைக்குள் அந்த நாட்டு குடிமக்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்பது உலகெங்கும் உள்ள நடை முறை. இலங்கையிலோ தமிழர்கள் அந்த நாட்டில் சுதந்திரமாக எங்கும் செல்ல முடியாது. அதுவும் தலைநகருக்குச் செல்லவே முடியாது. கொழும்பு நகரில் தங்கி இருந்த 376 தமிழர்களை இரவோடு இரவாகக் குண்டுகட்டாகத் தூக்கித் தமிழர்கள் வாழும் பகுதிக்கு விரட்டப்பட்டனர். இந்தியாவும் கண்டித்ததே! இந்த நிலையில் அந்த நாட்டுச் சுதந்திர தினவிழாவில் சிறப்பு விருந்தினராக இந்தியப் பிரதமர் எப்படி செல்லலாம்?

தமிழர்களை மட்டுமல்ல; பன்னாட்டு உதவிக் குழுவினர் 17 பேர்களை இலங்கை இராணுவம் சுட்டுப் பொசுக்கியதே! பிரேதப் பரிசோதனையில் அந்தக் குண்டுகள் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவைதான் என்று நிரூபிக்கப்பட்டதே!

இலங்கை அரசு இராணுவத்துக்காக மட்டும் 2008 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கிய தொகை 16,600 கோடி ரூபாயாகும். இது கடந்த ஆண்டைவிட ரூ.2,700 கோடி அதிகமாகும்.

இராணுவத்தை வலுப்படுத்தவேண்டிய அவசியம் என்ன? இலங்கையைச் சுற்றியுள்ள நாடுகளால் அந்நாட்டுக்குத் தொல் லையா? பிற நாட்டுப் படையெடுப்பா? இல்லையே! இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களைப் பூண்டோடு அழித்து முடிக்கத்தானே இந்த வன்மம்?

அப்படிப் படுகொலை செய்யப்படும் மக்கள் யார்? தமிழர்கள் தானே! அந்தத் தமிழர்களுக்கும், இந்தியாவில் வாழும் தமிழர்களுக்கும் உள்ளது தொப்புள்கொடி உறவு அல்லவா!

இந்தக் கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினையை அணுகினால் இந்திய அரசின் முடிவு வேறு மாதிரியாகத்தானே இருக்க முடியும்!

உலகில் எந்த நாட்டிலும் உள்ள சீனக்காரரை அந்த நாடு தாக்க முடியுமா? அப்படி தாக்கினால் சீன அரசு சும்மா இருக்குமா? இலண்டனில் சீக்கியர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், இந்தியா அப்பொழுது மட்டும் குரல் கொடுக்கிறதே - தமிழர்களுக்கு இடர்ப்பாடு என்கிறபோது மட்டும் ஏன் மாற்றாந்தாய் மனப்பான்மை? இதுதான் இப்பொழுது எழுந்துள்ள கேள்வி.

தமிழ்நாட்டு மக்களின் இந்த உணர்வை பிரதமர் மன் மோகன்சிங் மதிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

எந்த நிலையிலும் இந்தியப் பிரதமர் இலங்கையில் சுதந்திர நாள் விழாவில் பங்கேற்கக் கூடாது என்ற வேண்டுகோளை முன்னிறுத்தி திராவிடர் கழகம் நடத்த இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் கட்சிகளை மறந்து தமிழர்கள், மனிதாபிமானிகள் கலந்துகொள்ள அழைக்கிறோம் - அழைக்கிறோம்!

நன்றி: விடுதலை.

1 comment:

மாசிலா said...

இது தேவையில்லாத ஒன்று. ஒரு சிறு கண்டன அறிக்கையோடு மட்டும் இவைகளை நிறுத்திக்கொண்டு இருக்கலாம்.

உணர்ச்சி வசப்பட்டு சத்தம் போடும் தமிழனுக்கு நிகர் தமிழனே.

இலங்கையின் தற்போதைய அதிபரின் திறங்கெட்ட அரசியலால், அவரது தீவுப் பிரச்சினையை நல்லபடியாக தீர்க்க இயலாமல், இந்திய துணை கண்டத்திற்கே ஆபத்து ஏற்படுத்தி இருக்கிறார். இந்திய எதிரிகளான பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளிடம் நட்புறவு வைத்துக்கொண்டு இந்தியாவை மறைமுகமாக மிரட்டி வருகிறார். இதுபோன்ற நபர்கள் எதற்கும் தயங்காதவர்கள். இவர்கள் போன்றவர்களிடம் ஆடியோ பாடியோ இந்திய துணைக்கண்டத்தில் முக்கியமாக, இந்தியாவிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத அளவிற்கு காய்களை நகர்த்திக் கொண்டு போகவேண்டியது ஒரு கட்டாயமாகிறது. ஆபத்தில் இருக்கும் இலங்கைக்கு, இதன் பக்கத்திலேயே இருக்கும் அண்ணன் தகுதி இந்தியாவானது இலங்கையை ஒருகாலும் கைவிடவே கூடாது. விட்டால், காலி இடத்தை பிடிப்பதற்கு பாகிஸ்தானும் சீனாவும் கண்ணில் விலக்கெண்ணை விட்டுக்கொண்டு நேரம் பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றன. சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையில் அதிகாரம் பதித்து விட்டால், இந்தியாவுக்கு அதோ கதிதான்!!!

இந்த கண்ணோட்டத்தில்தான் இலங்கை பிரச்சினையை மத்திய அரசு கையால வேண்டும். கையாலுகிறது. மேலும் இது அவசியம்.

தற்போது இருக்கும் நிலவரத்தில், இந்திய அரசு தனது நாட்டு பாதுகாப்பிற்குத்தான் முதலில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இந்திய நலனில் அக்கறை உள்ள எவரும் இப்படித்தான் நடப்பார்.

கடந்த முப்பது ஆண்டுகளாக நடக்கும் உள்நாட்டு பிரச்சினைகளால் இந்திய துணைகண்டத்திற்கு மாலாத தலைவலி, அமையின்மை, அச்சுறுத்தல்கள், அந்நிய இந்திய எதிரிநாடுகளுடன் கூட்டு, வேவு, உளவு, இந்தியாவிற்கு பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தியும், குழப்பிக்கொண்டிருக்கும் திறமையற்ற இலங்கையின் உள்நாட்டு பிரச்சனைக்கு இந்தியா அதிரடியாகவது பிரச்சினைகளுக்கு முடிவு கட்டவேண்டும்.

ஒரு வேளை, இலங்கையை இந்தியா ஆக்கிரமிப்பு செய்தால்கூட தப்பாக இருக்காது. நமக்கு வேண்டியது நம்நாடு, நம்மக்களின் பாதுகாப்பும் அமைதியும்.

எனவே கி.வீரமணி அவர்களின் இந்த போராட்டம் தேவையில்லாதது. தமிழன் தன் தொப்புளை சுற்றி மட்டும் அரசியல் செய்வதை விட்டுவிட்டு அகில இந்திய, இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்காசிய அளவிற்கு தனது சிறகுகளை விரித்து செயல்படவேண்டும்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் செயல் வரவேற்கத் தக்கதே!

நன்றி.