தமிழ்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கி இன்று (15-01-2008) உத்தரவிட்டது.
மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்டு இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழகக் கிராமங்களில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி காளைகளை விரட்டுப் பிடிக்கும் ஜல்லிக்கட்டு பல காலமாக நடைபெற்று வருகிறது.
மிருக வதை எதிர்ப்புச் சங்கம் சார்பில் தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டிற்குத் தடை விதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் 'விலங்குகளைத் துன்புறுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது' எனக் கூறி கடந்த 11-01-2008 அன்று ஜல்லிக்கட்டிற்குத் தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து மதுரை மாவாட்டம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு, பதட்டம் ஏற்பட்டது. அலங்காநல்லூர், பாலமேடு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினர். ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நடக்கும் என அறிவித்தனர். தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் மக்கள் ஜல்லிக்கட்டை நடத்தும் விதமாக தங்கள் காளைகளை அவிழ்த்து விட்டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இத்தடையை நீக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசு உடனடியாக சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.
இந்நிலையில், முதல்வர் கருணாநிதி தடையை நீக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, பொதுத்துறைச் செயலாளர் ஜோதிஜெகராஜன், உளவுத்துறை ஐ.ஜி. ஜாபர்சேட், மதுரை ஆட்சியர் ஜவகர், சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் தில்லிக்குச் சென்றனர்.
நேற்று (14-01-2008) விடுமுறை நாள் என்பதால், உச்சநீதிமன்ற பதிவாளர் நிராஜ் பரத்வாஜை அவரது இல்லத்தில் சந்தித்தனர். 'தமிழகம் முழுவதும் 15-ஆம் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. மறுநாள் ஜல்லிக்கட்டு நடத்த பாலமேட்டிலும், அடுத்த நாளில் நடத்த அலங்காநல்லூரிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன. விழாவுக்கு ஓரிரு நாளே இருப்பதால் மறுஆய்வு மனுவை உடனே விசாரணைக்கு ஏற்க வேண்டும்' என்று பதிவாளரிடம் குழுவினர் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, மறு ஆய்வு மனுவை ஏற்றுக் கொண்ட பதிவாளர் அதனை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார். இம்மனு மீதான விசாரணை 15-01-2008 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இம்மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இன்று நண்பகலில் தொடங்கிய இந்த விசாரணையில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் கோபாலசுப்பிரமணியம் வாதிட்டார். அப்போது ஜல்லிக்கட்டு நடப்பதை தமிழக அரசு கண்காணிக்கும் என்று அவர் உத்தரவாதம் அளித்தார்.
இதனை ஏற்று ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
மேலும், ஜல்லிக்கட்டு போட்டியைத் தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை தொடர்பாக கடந்த சில நாட்களாக நிலவிய பதற்றம் தணிந்தது. அலங்காநல்லூர், பாலமேடு கிராமம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
2 comments:
தடை பல மாதங்களுக்கு முன்ன்ர் விதிக்கப்பட்டது. கடந்த வாரம் அதை நீக்க மறுத்தார்கள்...
போன வாரமே, பாதுகாப்புக்கு பொறுப்பேற்று அரசு உத்திரவாதம் அளிக்குமா என்று கேட்டனர். மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் மட்டுமே அங்கிருந்தனர்...எனவே ஏதும் உத்திரவாதம் அளிக்க இயலவில்லை.
பிரச்சினை முதல்வரின் கவனத்திற்கு பின்புதான் சென்றது!
நல்ல செய்தியைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. இந்த மிருகவதை எதிர்ப்புக் காரங்களுக்கு வேற வேலை இல்லையா?? தினமும் வெட்டப்படும் ஆடு, மாடு மற்றும் கோழிகளைக் காப்பாற்றட்டும். வீதிகளில் திரியும் விலங்கினங்களை அவர்கள் வீட்டுக்கு முதலில் ஓட்டிச் சென்றுக் காப்பாற்றட்டும். ஜல்லிக்கட்டை முறைப்படுத்துதல் அவசியம். தடை செய்வது, முட்டாள்தனம்!
Post a Comment