1948 பிப்ரவரி 4 அன்று இலங்கை விடுதலை அடைந்தது. வரும் பிப்ரவரி 4-ஆம் நாளன்று இலங்கையின் 60-ஆவது விடுதலை நாள் விழா கொழும்பில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமை விருந்தினராக கலந்துக் கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், பிரதமர் இலங்கைச் செல்வதற்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது.
பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைச் செல்வதைக் கைவிட வேண்டுமென தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சியில், இயக்கங்கள் கோரிக்கை விடுத்தன. கடந்த 31-12-2007 அன்று சென்னையில் தி.க. சார்பில் அவ்வமைப்பின் தலைவர் கி.வீரமணி தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், திராவிடத் தமிழர் கழகத் தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரும் இதனை வலியுறுத்தினர்.
இதனிடையே, பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இன்று (06-01-2008) செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அன்றைய தினம் முக்கிய பணி இருப்பதால் இலங்கை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளமாட்டார் என்று தில்லியிலுள்ள பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவு, தமிழகக் கட்சிகள் எதிர்ப்பு ஆகிய காரணங்களால் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், இந்த ஆண்டு இறுதியில் இலங்கையில் நடைபெற உள்ள 'சார்க்' மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துக் கொள்வார் என்று தெரிய வருகிறது.
1 comment:
அமெரிக்கா போன்ற நாடுகளே தங்களது உதவிகளை நிறுத்த முன்வந்திருக்கும் நிலையில் இந்தியா இலங்கைக்கு உதவுவதை நிறுத்துவதுடன் இலங்கைக்கான தங்களது நிலையை மீண்டும் பரிசீலனை செய்யவேண்டும். தமிழர்களுக்கு அங்கு நடக்கும் கொடுமைகள் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவை. அனைத்துலக தமிழர்களும் இணைந்து குரல்கொடுக்கவேண்டும். அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும் இந்த விசயத்தில் ஒன்று சேர்ந்து நம் இன மக்களுக்கு உதவவேண்டும்.
Post a Comment