Friday, November 28, 2008

சமூக நீதிப் போராளி வி.பி.சிங் காலமானார் - இரங்கல்!



மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் காலஞ்சென்ற வி.பி.சிங் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து 28-11-2008 அன்று விடுத்துள்ள குறிப்பு:

அடித்தட்டு மக்களின் உரிமைக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட சமூக நீதிப் போராளி முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பதோடு, இத்தருணத்தில் அவரது பாதையில் சமூக நீதிக்குப் போராட உறுதியேற்போம்.

மன்னர் குடும்பத்தில் உயர்வகுப்பில் பிறந்தவராக இருந்தாலும் மண்டல் குழு பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி, இந்திய வரலாற்றில் சமூக நீதிக்குப் புதிய பாதையை அமைத்தவர்.

ஈழத் தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக இலங்கை சென்ற இந்தியப் படையைத் திரும்பப் பெற்றதன் மூலம் ஈழத் தமிழர் நலன் காத்தவர். பொற்கோவிலுக்குள் இராணுவ நடவடிக்கை மேற்கொண்டதற்காக சீக்கிய மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு அம்மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர்.

பாபர் மசூதியை இடிக்கச் சென்ற மதவாத சக்திகளூக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்து மதசார்பின்மைக் கொள்கையைக் கடைபிடித்தவர். சமூக நீதிக்காகவும், மதவாதத்திற்கு எதிராகவும் போராடியதன் விளைவாக நாட்டின் உயர் பதவியான பிரதமர் பதவியையும் ஆட்சியையும் இழந்தவர்.

இந்திய வரலாற்றில் ஒற்றை ஆட்சிமுறை என்பதை மாற்றி மத்தியில் தேசிய முன்னணி ஆட்சி அமைத்து கூட்டாட்சித் தத்துவத்திற்கு செயல் வடிவம் கொடுத்தவர். வழக்கறிஞர், கவிஞர், ஓவியர், புகைப்படக் கலைஞர் என்பவற்றை எல்லாம் தாண்டி நேர்மையான மிகச் சிறந்த அரசியல் தலைவர்.

பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், கட்சித் தொண்டர்கள் மற்றும் சமூக நீதியில் அக்கறை கொண்டவர்கள் அனைவருக்கும் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அவர் இரங்கல் குறிப்பில் கூறியுள்ளார்.

2 comments:

சிக்கிமுக்கி said...

அடுத்தபிறவி யென்றொன்றிருந்தால், தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன் என்று கூறியவர்!

வட இந்திய அரசியல் தலைவர்களில், தமிழர்களின் பால் நல்லெண்ணமும் மதிப்பும் கொண்டிருந்தவர்.

தமிழர்களால் மிகமிகுதியாக அன்பும் மதிப்பும் செலுத்தப் பெற்ற நேர்மையான பெருந்தன்மையான கண்ணியம் மிக்க வடநாட்டுத் தலைவர்.

அவருக்கு நம் வீரவணக்கத்தைச் செலுத்துவோம்.

Anonymous said...

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் மறைவு அதிர்ச்சி அளிப்பதாகவும், கவலை நிறைந்ததாகவும் உள்ளது.

அவருக்கு என் வீரவணக்கம்!

கதிர், பிரான்ஸ்.