Wednesday, November 12, 2008
தில்லியில் தமிழ் மாணவர்கள் ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் பேரணி - மாநாடு!
மேடையில் தலைவர்கள்...
டி.இராஜா...
கோ.சுகுமாரன்...
இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது நடைபெற்று வரும் தாக்குதலை மத்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), தில்லி பல்கலைக்கழகம் (DU), ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் (JMIU), பூசா வேளாண்மை நிறுவனம் ஆகியவற்றை சேர்ந்த தமிழ் மாணவர்கள் பேரணி - மாநாடு நடத்தினர்.
தில்லி தமிழ் மாணவர் பேரவை சார்பில் நடைபெற்ற பேரணி - மாநாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 1000 தமிழ் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பேரணி, தில்லியில் உள்ள மண்டியா இல்லம் பகுதியில் இருந்து தொடங்கி சுமார் 2 கி.மீ. தூரம் சென்று ஜந்தர் மந்தரில் முடிவடைந்தது.
இப்பேரணியில் கலந்துக் கொண்ட மாணவர்கள் இலங்கை அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். ஈழத் தமிழர் ஆதரவு முழக்கங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி வந்தனர்.
பின்னர் ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற மாநாட்டிற்கு இராஜீவ் ரூபஸ் தலைமை தாங்கினார். ஆ.கலையரசன் (ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்) தொடக்கவுரை ஆற்றினார். மாநாட்டில் மாணவ மாணவியர் சார்பில் பல்லவி (ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை - JNUSU, பொதுச்செயலாளர்), பிரியதர்சினி (ஜனநாயக மாணவர் சங்கம் - DSU, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்), கார்மேகம் (அகில இந்திய மாணவர் கழகம் - ASA, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்), ஆதிகேசவன் (சட்டக் கல்லூரி, தில்லி பல்கலைகழகம்) ஆகியோர் உரையாற்றினர்.
மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கை தமிழர் தேசிய கூட்டமைப்பின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜி லிங்கம், ஸ்ரீகாந்தன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.இராஜா, புதிய தமிழகம் கட்சி நிறுவநர் டாக்டர் கிருஷ்ணசாமி, தில்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியை இரா.விஜயலட்சுமி, பேராசிரியை சரசுவதி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
தில்லிப் ப்ல்கலைக் கழக மாணவர் குணசேகரன் தீர்மானங்களை முன்மொழிந்தார். அனைவரும் கையொலி எழுப்பி ஆதரித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.இராஜா பேசியதாவது:
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு நன்றி. இலங்கைப் பிரச்சினை அரை நூற்றாண்டு காலப் பிரச்சினை. இலங்கையில் தமிழர்களுக்குப் பிரச்சினை ஆரம்பித்ததற்கு காரணம்.
1956-ஆம் ஆண்டு இலங்கை அரசு "சிங்கள ஆட்சி மொழிச் சட்டம்" இயற்றியது. இதன்படி தமிழ் மொழி இரண்டாந்தர மொழியானது. அதேபோல், 1961-இல் "சிங்கள நீதிமன்ற மொழிச் சட்டம்" கொண்டுவரப்பட்டது. இதனால், தமிழ் நீதிமன்ற மொழியிலிருந்து நீக்கப்பட்டது.
பின்னர், 1972-இல் இலங்கை அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. தமிழர்களுக்கு இருந்த அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டன. இதனை எதிர்த்துதான் தமிழர்கள் அங்குப் போராட தொடங்கினார்கள்.
ஈழத்தின் தந்தை எனக் கருதப்படும் செல்வநாயகம் தலைமையில் மிகப்பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம்தான் இன்று தேசிய இனப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தை தேசிய இனப் போராட்டமாக மட்டும் பார்க்கக் கூடாது. அதையும் தாண்டி ஜனநாயகத்திற்கான போராட்டமாக பார்க்க வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு ஜனநாயகம் மறுக்கப்படுகிறது.
இலங்கையில் நடக்கும் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களைக் கூறி நான் இங்கு ஒப்பாரி வைக்க விரும்பவில்லை. ஈழத் தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க அங்கு பூர்ணப் போர் நடந்துக் கொண்டிருக்கிறது. இலங்கையில் நடப்பது 'இன அழிப்புப் போர்' (Genocide) என்பதை பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் பேசியுள்ளேன், பேசி வருகிறேன்.
இந்தப் போரை நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று சொல்கிறோம். இந்தியா ஒரு சுதந்திர நாடு, இலங்கை ஒரு சுதந்திர நாடு. எனவே, இந்தியா அந்நாட்டுப் பிரச்சினையில் தலையிட கூடாது என்பது தவறு. அங்கு நடக்கும் பிரச்சைனையில் இந்தியாவும் ஈடுபடுத்தப்படுகிறது. ஏனெனில், அங்கு போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் 70 ஆயிரம் பேர் அகதிகளாக இங்கு வந்துள்ளனர். அவர்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்றால் இந்தியா தலையிட்டாக வேண்டும்.
இந்தியா இராணுவ உதவி வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்திய அரசோ ஆயுத உதவி வழங்கவில்லை ராடார் கருவி போன்றவற்றை வழங்கியுள்ளதாக கூறுகிறது. எந்த உதவி வழங்கினாலும் அது தமிழருக்கு எதிரான போருக்குத்தான் பயன்படுத்தப்படும். இந்தியா எந்த உதவியும் வழங்கக்கூடாது.
இலங்கைப் பிரச்சினையை இராணுவ ரீதியாக தீர்க்க முடியாது என்பதை பல முறை பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் பேசியுள்ளேன். பிரதமரிடமும் வலியுறுத்தியுள்ளேன். அங்கு அமைதி ஏற்படுத்தப்பட்டு பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும். உடனடியாக போர் நிறுத்தம் (Ceasefire) செய்யப்பட வேண்டும். இதனை இந்தியா வலியுறுத்த வேண்டும்.
வரும் 14-ந் தேதியன்று அகில இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி தில்லியில் போராட்டம் நடக்க உள்ளது. அதில் ஈழப் பிரச்சினையையும் ஒன்றாக எழுப்ப உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில் யுத்தம் நடைபெறும் வன்னிப் பகுதியில் தமிழர்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழகத்தின் அனைத்து கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றிய பின், இலங்கை இராணுவத்தினர் தமிழர்கள் மீது நடத்தி வந்த தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தினர். ஆனால், தற்போது போரை நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்தாததால், தமிழீழ மக்கள் மீண்டும் தாக்கப்பட்டு வருகின்றனர்.
ஆகவே, போர் நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவிக்க இந்தியா உடனடியாக வலியுறுத்த வேண்டும். இலங்கை விவகாரம் உள்நாட்டு பிரச்சினை இல்லை என்பதால், இந்தியா உடனடியாக தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும். போரை நிறுத்தாமல் நிவாரண பொருட்களை வழங்குவது எந்தவித பயனும் அளிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
Labels:
இந்திய கம்யூனிஸ்ட்,
ஈழம்,
டி.ராஜா,
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
டில்லி தமிழ் மாணவர்கள் ஈழத் தமிழருக்கு ஆதராவாக நடத்திய போராட்டத்தை சன் டீவியில் பார்த்தேன். வாழ்த்துக்கள்.
இவர்களின் குரல் செங்கோட்டையை எட்டுமா?
I heared about the Delhi Rally and Conference. Thanks for publishing the photos and news.
Congratulations for the Delhi Tamil Students.
Sivaa, Hyderabad.
Post a Comment