மேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
மதுரை, மேலூர் அருகேயுள்ள மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர் கடந்த 30.06.1996 அன்று ஆதிக்கச் சாதி வெறியர்களால் பட்டப் பகலில் கொடூரமாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்டனர். தலித் ஒருவர் தங்களுக்குப் பஞ்சாயத்துத் தலைவராக வருவதா என்ற ஆதிக்க எண்ணத்தில் திட்டமிட்டு இந்த படுகொலையை அரங்கேற்றினர் ஆதிக்கச் சாதியினர். தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில் தொடர் போராட்டத்தின் விளைவாக குற்றவாளிகள் 17 பேருக்கு சேலம் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.
இத்தீர்ப்பை எதிர்த்து, குற்றாவாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி. சதாசிவம், என்.பால் வசந்தகுமார் ஆகியோர் கடந்த 19.04.2006 அன்று குற்றவாளிகளுக்கு அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர். மேலும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி தண்டனை வழங்கப்பட்டதையும் உறுதி செய்தனர்.
குற்றவாளிகள் இத்தீர்ப்பையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் வி.எஸ்.சிர்புக்கர் மற்றும் தீபக் வர்மா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இவ்வழக்கில், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கனகராஜ் ஆஜரானார். வழக்கு விசாரணை கடந்த 23.09.2009 அன்று முடிவு பெற்று தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வி.எஸ்.சிர்புக்கர் மற்றும் தீபக் வர்மா ஆகியோர் குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால், சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளிகள் 17 பேருக்கும் வழங்கிய ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மனித உரிமையில் அக்கறையுடைய அனைவர் மத்தியிலும் இந்த தீர்ப்பு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. சாதி வெறிக்கு இந்த தீர்ப்பு சம்மட்டி அடிக் கொடுத்துள்ளது.
தொடக்கம் முதல் இந்த வழக்கில் சட்ட ரீதியாகவும், தொடர் இயக்கம் மூலம் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு நீதிக் கிடைக்க போராடிய வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்களையும், அவரோடு துணை நின்ற அனைவரையும் பாராட்ட வேண்டும். இந்த வழக்கில் அவருக்கு துணையாக இருந்து பங்களித்தமைக்கு நான் பெரிதும் மகிழ்கிறேன்.
இவ்வழக்கை வைத்து அரசியல் செய்த தலித் கட்சி, ஒரு கட்டத்தில் இவ்வழக்கு பற்றி எவ்வித அக்கறையும் செலுத்தாமல் போன நிலையிலும், வழக்கறிஞர் பொ.இரத்தினம் போன்றவர்கள் விடாது போராடி நீதியை நிலை நிறுத்தியதை மனதார பாராட்டுகிறேன்.
4 comments:
மனிதஉரிமைத் தளங்களில் செயல்படும் அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் செய்தி.
ஆதிக்க சாதி வெறியர்களுக்கு நல்ல சாட்டையடித் தீர்ப்பு..
பாராட்டுகள்...
தோழமையுடன்,
க.அருணபாரதி
சாதிக்கொரு சங்கமுன்டு!
வீதிக்கொரு கட்சி உண்டு!
நீதிசொல்ல மட்டும் இங்க நாதியில்ல!
இந்த வரிகளை பொய்யாக்கியது இந்த தீர்ப்பு!...
வாய்மையே வெல்லும், இனிமேலாவது திருந்தட்டும்ட இதுபோல் வெறிபிடித்த மனித மிருகங்கள்
இவ்வழக்கை வைத்து அரசியல் செய்த தலித் கட்சி Thirumalvallan party VC
Post a Comment