Friday, December 24, 2010

தந்தை பெரியார் 37-வது நினைவு தினம்: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அஞ்சலி


தந்தை பெரியார் 37-வது நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி பிள்ளைத்தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமையில் அமைப்புக் குழு உறுப்பினர்கள் பா.மார்கண்டன், சீ.சு.சாமிநாதன், சு.காளிதாஸ், ஏ.கலைவாணன், பா.காளிதாஸ், கி.சரவணன் ஆகியோர் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு சார்பில் அதன் நிறுவனர் சதீஷ் (எ) சாமிநாதன் தலைமையில் விக்னேஷ் குமார், முருகன், மதிவாணன், ராஜா, பரணி, விக்னேஷ் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Wednesday, December 15, 2010

தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி, முதல் தகவல் அறிக்கைகளை இணையத்தில் வெளியிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 15.12.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

தில்லி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைப் பின்பற்றி காவல் நிலையங்களில் பதியப்படும் அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் 24 மணி நேரத்திற்குள் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுகொள்கிறோம்.

இதுகுறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 15.12.2010 அன்று தலைமைச் செயலர், சட்டத்துறை செயலர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

கடந்த 06.12.2010 அன்று தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, நீதிபதி மன்மோகன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ள செயல்படுத்தப்பட வேண்டிய பகுதிகளைக் குறிப்பிடுகிறோம்.

1) குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 207-ல் கூறப்பட்டுள்ள காலவரம்பிற்கு முன்னரே முதல் தகவல் அறிக்கைப் பெறலாம்.

2) குற்றம்சாட்டப்பட்டவர் தான் ஒரு வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறாரா அல்லது அவர் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இருக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்ள அவரோ,அவருடைய பிரதிநிதியோ சான்றிடப்பட்ட முதல் தகவல் அறிக்கை நகலைக் கேட்டு, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியிடமோ அல்லது காவல் கண்காணிப்பாளரிடமோ விண்ணப்பிக்கலாம். அவ்வாறு அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை ஏற்று நீதிமன்றத்தில் செலுத்தக் கூடிய கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு 24 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை நகல் அளிக்க வேண்டும்.

3) பதியப்படும் முதல் தகவல் அறிக்கைகளை அது பிரச்சனையை ஏற்படுத்தக்கூடிய வழக்கினுடையது அல்லாமல் இருந்தால், அவற்றை பதிவுச் செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் டில்லி காவல்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும். அதனை குற்றம்சாட்டப்பட்டவரோ அல்லது தொடர்புடைய எவரும் நகல் எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுக் காணலாம்.

4) முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் வெளியிட வேண்டுமென்ற நீதிமன்றத்தின் உத்தரவை தில்லி காவல்துறை பிப்ரவரி 1, 2011 முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவற்றை புதுச்சேரியிலும் நடைமுறைப்படுத்த அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தீர்ப்பு நகலை அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், காவல்நிலையங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Thursday, December 09, 2010

டிசம்பர் 10 - மனித உரிமை நாள்: ஊழலுக்கு எதிராகப் போராட உறுதியேற்போம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழுக் கூட்டம் 08.12.2010 புதனன்று மாலை 6.30 மணியளவில் புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் அமைப்புக் குழு உறுப்பினர்கள் இரா.ராஜராஜன், பா.மார்கண்டன், சீ.சு.சாமிநாதன், க.சின்னப்பா, ஏ.கலைவாணன், கி.சரவணன், பா.காளிதாஸ், கி.கண்ணன், கே.பாலாஜி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1) டிசம்பர் 10, உலக மனித உரிமை நாளில் ஊழலை ஒழித்து நல்லாட்சிக்கு வழி வகுத்திடவும், ஊழலுக்கு எதிராகப் போராடவும் அனைத்து தரப்பு மக்களும் உறுதியேற்க வேண்டுகோள் விடுக்கிறோம்.

2) மழை நிவாரணமாக ரூ. 1000 ஏழை, பணக்காரன் என அனைவருக்கும் வழங்குவது தவறான முன்னுதாரணம். மழையால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்க வேண்டும்.

3) மழை நிவாரண விண்ணப்பத்தில் மத்திய அமைச்சர், முதலமைச்சர், அமைச்சர்கள் படங்களை அச்சிட்டு மலிவான அரசியல் செய்யும் ஆட்சியாளர்களின் போக்கை வன்மையாக கண்டிகிறோம். இதனைக் கைவிட்டு அரசு அலுவலர்கள் மூலம் உடனடியாக மழை நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) அண்மையில் நடந்த துணைத் தாசில்தார் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்து அரசு சி.பி.ஐ. விசாரணக்கு உத்தரவிட வேண்டும். நடந்து முடிந்த தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும்.

5) தீபாவளிக்கு வழங்க இருந்த வேட்டி, சேலை வாங்குவதில் பல கோடி ரூபாய் ஊழல் நடக்க இருந்ததைக் கண்டறிந்து தலைமைச் செயலர் தடுத்துள்ளார். இதுகுறித்து அரசு சி.பி.ஐ. விசாரணக்கு உத்தரவிட வேண்டும். மக்களுக்கு காலதாமதமின்றி வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6) காவல்துறையில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் தேர்வுக்கான அறிவிப்பில் தற்போது நடைமுறையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம், மீனவர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, அரசு இதில் தலையிட்டு முறையான இடஒதுக்கீட்டை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7) அரசியல் கட்சியினர், அமைப்பினர், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் என பலரின் மீது அரசு தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவியுள்ளது. மனித உரிமைக்கு எதிரான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். தேவைப்பட்டால் இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் போன்ற சாதாரண சட்டங்களிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8) விவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும், சுற்றுச் சூழலுக்கு எதிரான மூர்த்திக்குப்பம் துறைமுகத் திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே கட்டப்பட்ட தேங்காய்த்திட்டு துறைமுகத்தால் புதுச்சேரி, தமிழக கடலோர கிராமங்கள் கடல் அரிப்பல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடல் அரிப்பைத் தடுக்க அரசு அறிவியல்பூர்வமான, மக்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9) சென்டாக் கலந்தாய்வுக் கூட்டம் காலதாமதமாக நடந்து முடிந்ததால் புதுச்சேரியில் உள்ள அனைத்துக் கலைக் கல்லூரிகளிலும் ஏராளமான இடங்கள் மாணவர் சேர்கை நடைபெறாமல் காலியாக உள்ளன. தகுதியுள்ள பலர் விண்ணப்பித்தும் இடம் கிடைக்காததால் மாணவர்களின் ஓராண்டு கல்வி வீணாகியுள்ளது. எனவே, அரசு காலியாக உள்ள இடங்களில் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு இடம் அளிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10) பாரா மெடிக்கல் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் கல்வி உதவித் தொகை வழங்க அரசாணை வெளியிட்டும் இதுவரையில் வழங்கப்படவில்லை. எனவே, அரசு உடனடியாக அரசாணைப்படி பாரா மெடிக்கல் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tuesday, December 07, 2010

சமூகப் புரட்சியாளர் அம்பேத்கர் 54-ஆவது நினைவு தினம்: மாலை அணிவித்து மரியாதை!

சமூகப் புரட்சியாளர் அம்பேத்கர் 54-ஆவது நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி சட்டப்பேரவை எதிரேயுள்ள அவரது சிலைக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமையில் கூட்டமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழு உறுப்பினர்கள் சீ.சு.சாமிநாதன், ப.மார்கண்டன், கலைவாணன், காளிதாஸ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் நிறுவுநர் சதீஷ் (எ) சாமிநாதன் தலைமையில் தாகூர் அரசுக் கலைக் கல்லூரி, மோதிலால் நேரு அரசு தொழில் நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் சார்பில் மாணவர்கள் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு ஆர்ப்பாட்டம் - வீடியோ!



Monday, December 06, 2010

டிசம்பர் 6 - பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்!

பாபர் மசூதி இடிக்கப்ப்பட்ட டிசம்பர் 6 அன்று, புதுச்சேரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் காலை 10 மணியளவில், சுதேசி பஞ்சாலை அருகில் கண்டன தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக தலைமைக் கழகப் பேச்சாளர் புதுமடம் அணிஸ் தலைமைத் தாங்கினர். மாவட்ட துணைத் தலைவர் ஹாபீஸ் முஹம்மது புஹாரி தொடக்கவுரை ஆற்றினார். மாவட்ட தலைவர் எம்.ஏ.அஷ்ரப் (எ) ரஹமத்துல்லா, மாவட்ட செயலாளர் ஒய்.பலுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முஹம்மது சலீம், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பளார் கோ.அ.ஜெகன்நாதன், சிங்காரவேலர் முன்னேற்ற கழகத்
தலைவர் கோ.செ.சந்திரன், புதுவை கிருஸ்துவர் கூட்டமைப்பு தலைவர் சாமி ஆரோக்கியசாமி ஆகியோர் கலந்துக் கொண்டு கருத்துரை உரையாற்றினர்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் கண்டன உரையாற்றினார்.

முடிவில் தமுமுக மாவட்ட பொருளாளர் ஜெ.காஜா கமால் நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கீழ்காணும் கோரிகைகள் முன்வைக்கப்பட்டன:

1. பாபர் மசூதி நிலம் தொடர்பான அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும்.

2. ரெபரேலி நீதிமன்றத்தில் நடக்கும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணையை விரைவுப்படுத்த வேண்டும்.

3. பாபர் மசூதி இடிக்கப்பது குறித்த லிபரான் ஆணையம் விசாரித்து குற்றம்சாட்டிய அத்வானி உள்ளிட்ட 68 பேர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tuesday, November 23, 2010

சென்னையில் ‘அயோத்தி தீர்ப்பும் மதசார்பின்மையும்’ – கருத்தரங்கம்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் வரும் நவம்பர் 25 அன்று சென்னையில் “அயோத்தி தீர்ப்பும் மதசார்பின்மையும் – கருத்தரங்கம்” நடைபெற உள்ளது.

இக்கருத்தரங்கம் சென்னை தியாகராயர் நகரில் உள்ள பி.டி.தியாகராயர் அரங்கில் (கண்ணதாசன் சிலை அருகில்) 25.11.2010 வியாழனன்று, மாலை 6.00 மணியளவில் நடைபெறுகிறது.

தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் தலைமைத் தாங்குகிறார். தமுமுக தென் சென்னை மாவட்டத் தலைவர் ஜனாப் ஜெ.சீனி முகமது வரவேற்புரை ஆற்றுகிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கோ.முத்துக்கிருஷ்ணன், கிறிஸ்துவர் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் அருட்திரு ஜேவியர் அருள்ராஜ், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

தமுமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜனாப் முகமது அபுபக்கர் (எ) கோரி நன்றியுரை கூறுகிறார்.

இக்கருத்தரங்கத்தை தென் சென்னை மாவட்ட தமுமுக ஏற்பாடு செய்துள்ளது.

தொடர்புக்கு: 9710391138, 9841632184.

Wednesday, November 17, 2010

தமிழ்ப் பாடத்தை நீக்கியதைக் கண்டித்து மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநோன்பு போராட்டம்!

தலைவர்களுடன் பேச்சுவார்த்தை...
புதுச்சேரி, தாகூர் கலைக் கல்லூரியில் இளங்கலைப் பொருளாதாரப் பாடப் பிரிவில் தமிழ் பாடத்தைக் கட்டாயப் பாடமாக அறிவிக்க கோரி புதுச்சேரி தாகூர் கல்லூரி மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் 11.11.2010 வியாழக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாநோன்புப் போராட்டத்தை நடத்தினர். இறுதியில், புதுச்சேரி பல்கலைகழகப் பதிவாளர் உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை 12.11.2010 மதியம் முடித்துக் கொண்டனர். 

புதுச்சேரி தாகூர் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலைப் பொருளாதாரப் பாடப் பிரிவில் தமிழ்ப் பாடம் நீக்கப்பட்டதாக புதுச்சேரி பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்தது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியதால், தமிழ் பாடம் விருப்பப் பாடமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்ப் பாடத்தை கட்டாயப் பாடமாக அறிவிக்க கோரி தாகூர் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநோன்பில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் நடந்த இந்தப் போராட்டத்தைப் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புத் தலைவர்கள் ஆதரித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை வாழ்த்தினர்.

பின்னர், இதுகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர் பாபு ராவ் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகப் பதிவாளர் லோகநாதன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் கட்சி, அமைப்புத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நாரா கலைநாதன், பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆனந்தராமன், ம.தி.மு.க. மாநில அமைப்பாளர், முன்னாள் அமைச்சர் நா.மணிமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்புச் செயலாளர் பாவாணன், செயலாளர் ப.அமுதவன், மீனவர் விடுதலை வேங்கைகள் மாநில அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழறிஞர் மா.லெ.தங்கப்பா,  தனித்தமிழ் இயக்கத் தலைவர் தமிழ்மல்லன், கலை இலக்கியப் பெருமன்ற தலைவர் எல்லை.சிவக்குமார், செயலாளர் பொறியாளர் தேவதாஸ், மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கச் செயலாளர் சரவணன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நாராயணசாமி,  புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு நிறுவநர் சதீஷ் (எ) சாமிநாதன், முற்போக்கு மாணவர் கழகத் தலைவர் கெளதம பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில், பல்கலைக்கழகப் பதிவாளர் லோகநாதன் கடந்த காலத்தில் இருந்தது போலவே தமிழ் ஒரு பாடமாக முதலாண்டு, இரண்டாமாண்டு பொருளதாரப் பிரிவில் தொடரும் என உறுதியளித்தார். அதனை எழுத்து மூலம் கல்லூரி முதல்வருக்கு அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் உண்ணாநோன்பை முடித்துக் கொண்டனர்.

இப்போராட்டத்தை புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு நிறுவநர் சதீஷ் (எ) சாமிநாதன் ஒழுங்கமைத்தும், இரவுப் பகல் பாராமல் மாணவர்களோடு இருந்தும் வெற்றிக்குப் பாடுபட்டது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு பேரணி!

பழங்குடியின மக்கள் பேரணி...
புதுச்சேரியில் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பினர், வேலைவாய்ப்பில் முறையான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10.11.2010  புதன்கிழமையன்று பேரணி நடத்தினர்.

பேரணி சுதேசி பஞ்சாலை அருகிலிருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சட்டப் பேரவையை அடைந்தது. பின்னர் கோரிக்கை மனுவை, சட்டப் பேரவையில் உள்ள சமூக நலத்துறை அமைச்சர் அலுவலகத்தில், அமைச்சர் மு.கந்தசாமி அவர்களிடம் அளித்தனர்.

மனு விவரம்: புதுச்சேரியிலுள்ள பழங்குடியினரை அட்டவணை பழங்குடி என அங்கீரிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் என வரையறை செய்துள்ள நிலையில், வேலைவாய்ப்பில் முறையான இடஒதுக்கீடு வழங்க வேண்டும். வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் அவர்களுக்கான தனி நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியினருக்கு இலவச மனைப்பட்டாவுடன் கூடிய தொகுப்பு வீடுகளை கட்டித்தர வேண்டும். அவர்கள் வாழும் பகுதியில் குடிநீர், மின்வசதி மற்றும் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் கந்தசாமி மனுவை பெற்றுக்கொண்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். புதுச்சேரி மாநில பழங்குடியின கூட்டமைப்பு தலைவர் கே.ராம்குமார் தலைமைத் தாங்கினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் சுந்தர், ஏ.மனோகரன், எஸ்.புருஷோத்தமன், எம்.ஏகாம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன், பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு தலைவர் பொன்னுரங்கம், அகில இந்திய பார்வட் பிளாக் கட்சியின் பொதுச்செயலர் உ.முத்து, புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவநர் சதீஷ் (எ) சாமிநாதன், கிறிஸ்துவர் கூட்டமைப்பு தலைவர் சாமி ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

பேரணியில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

Wednesday, November 10, 2010

மூர்த்திக்குப்பம் துறைமுகத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஆளுநரிடம் நேரில் வலியுறுத்தல்!

மணல் திட்டு...

அழகிய கடற்கரை..மணல் திட்டு...

கடற்கரையில் மீனவர்களின் படகுகள்...

1970-ஆம் ஆண்டின் சர்வே வரைபடத்தில் மணல் திட்டு...

சுனாமிக்கு 5 நாட்களுக்குப் பின்னுள்ள செயற்கைக்கோள் வரைபடம்..

செயற்கைக்கோள் வரைபடத்தில் மணல் திட்டு...

நல்லாட்சிக்கான கூட்டமைப்பு சார்பில் இன்று (10.11.2010) மதியம் 1.00 மணியளவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மேதகு இக்பால் சிங் அவர்களை புரபீர் பேனர்ஜி, (பாண்டிகேன்), சி.எச்.பாலமோகனன், (புதுச்சேரி மக்கள் பாதுகாப்புக் குழு), கோ.சுகுமாரன், (செயலர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), மோகனசுந்தரம், (இந்திய சமூக செயல்பாட்டுப் பேரவை), எஸ். இராமச்சந்திரன் (புதுச்சேரி அறிவியல் கழகம்), கோ.சத்தியமூர்த்தி,  (கவுன்சிலர், மதிகிருஷ்ணாபுரம்) ஆகியோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனு விவரம்:

புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறையினர் பாகூர் கொம்யூன், மூர்த்திக்குப்பத்தில் உள்ள முள்ளோடை வாய்க்காலில் மீன்பிடி துறைமுகம் ஒன்றை கட்டி வருகின்றனர். சுனாமி நிதியில் இருந்து இந்த துறைமுகம் கட்டப்படுகிறது. இந்த மீன்பிடி துறைமுகம் முள்ளோடை வாய்க்காலையும் கடலையும் இணைத்து, அதன் வழியே படகுகள் வந்து போகும்படி கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நீண்ட காலமாக அங்கு கடலையும், வாய்க்காலையும் பிரிக்கும் மணல் திட்டு ஒன்றை இடித்திட பொதுப்பணித் துறையினர் முடிவு செய்து, தற்போது பாதி மணல் திட்டை அப்புறப்படுத்தி உள்ளனர்.

இந்த மணல் திட்டை அப்புறபடுத்துவது மிகப் பெரிய அழிவைத் தரும். இதனால், முள்ளோடை வாய்க்காலோடு இணைந்துள்ள பல்வேறு நீர்நிலைகள் உப்பு நீராகும் ஆபத்துள்ளது. இதனால், புதுச்சேரி – தமிழகப் பகுதி மக்களின் வாழ்வதராங்கள் முற்றிலும் அழிந்துப் போகும். குறிப்பாக அங்குள்ள நீராதாரத்தை நம்பியிருக்கும் 400 ஏக்கர் நிலத்தில் நடந்து வரும் விவசாயம், 15 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதோடு, சோழர் காலம் தொட்டு இருந்து வரும் ஏரி, குளங்கள் அழிந்துப் போகும் நிலை ஏற்படும். சுனாமியின் போது இந்த வாய்க்கலுக்கு 3 கி.மீ. தொலைவிலுள்ள கடலூர் கடுமையாக பாதிக்கப்பட்ட போது, இந்த மணல் திட்டு இருந்த காரணத்தால் இப்பகுதியில் எந்த பதிப்பும் ஏற்படவில்லை. மேலும், இத்துறைமுகத்தினால், கடலூர் பெண்ணையாற்றின் முகத்துவாரம் அடைந்து போய் வெள்ளம் உண்டாகும் அபாயம் உள்ளது.

பொதுப்பணித் துறையினர் அங்கு மணல் திட்டே இல்லை எனவும், மீனவர்கள் தங்கள் படகுகளை முள்ளோடை வாய்க்கால் கரையில் நிறுத்தி வைத்து மீன்பிடித்தனர் என்றும், கடந்த 2004-ல் சுனாமியின் போது மணல் திட்டு உருவானது எனவும் பொய்யான தகவல்களை கூறி, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதிப் பெற்றுள்ளனர். ஆனால், அந்தப் பகுதி மக்கள் அங்கு மணல் திட்டு நீண்ட காலமாக இருந்து வந்ததை உறுதியாக கூறுகின்றனர். மீனவர்கள் அங்கு படகுகளை நிறுத்தி வைத்ததாக பொதுப்பணித் துறையினர் கூறுவது பொய் என்றும் கூறுகின்றனர். அதோடு இது தொடர்பான பல வரைபடங்கள் அங்கு மணல் திட்டு நீண்ட காலமாக இருந்து வருவதை உறுதி செய்கிறது. மணல் திட்டு இல்லை எனக் கூறி, சட்ட விதிப்படி நடத்த வேண்டிய சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு குறித்த பொதுமக்கள் கருத்தறியும் கூட்டத்தைக்கூட பொதுப்பணித் துறையினர் நடத்தவில்லை.

ஏற்கனவே, கடலை மறித்து தேங்காய்த்திட்டு துறைமுகம் கொண்டு வந்ததால், அதற்கு வடக்கே உள்ள கடலோர கிராமங்கள் கடல் அரிப்பில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கடல் அரிப்பை சீர் செய்யவே அரசிடம் உருப்படியான திட்டமும், போதிய நிதியும் இல்லை. தற்போது அதே போன்றதொரு துறைமுகத்தைக் கொண்டு வருவது மேலும் கடலோர கிராமங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த துறைமுக திட்டத்திற்காக போதிய ஆய்வினை அரசு செய்யாததோடு, சுற்றுச் சூழல் பெரிதும் பாதிக்கும் வகையில் திட்டமிட்டுள்ளது. மத்திய சுற்றுச் சூழல் துறை அனுமதி அளிக்கும் போதே எந்தவித மணல் திட்டையும் சேதப்படுத்த கூடாது, நல்ல நீர் உப்பு நீராகும் வகையில் எதையும் செய்யக் கூடாது எனக் கூறியுள்ளது. மேலும், கடல் அரிப்பை தடுக்க கல் கொட்டுவதோ, கடலில் சுவர் கட்டுவதோ கூடாது எனவும் மத்திய சுற்றுச் சூழல் துறை பல முறை அறிவுறுத்தி உள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரியில் கடல் அரிப்பு பற்றியும், கடற்கரையை பாதுகாப்பது குறித்தும் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு செய்துக் கொண்டிருப்பதையும் இங்கு சுட்டிக் காட்டுகிறோம். கடலில் இயந்திரம் மூலம் மணலை அள்ளுவது குறித்து கடல்சார் கண்காணிப்பு எதுவும்கூட மேற்கொள்ளப்படுவது இல்லை.

இந்நிலையில், கடந்த 08.11.2010 அன்று, கிராம விவசாயிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் கூட்டாக தலைமைச் செயலர் சந்திரமோகன், சுற்றுச் சூழல் துறை சிறப்புச் செயலர் தேவநீதிதாஸ் ஆகியோரை சந்தித்து இதுகுறித்து முறையிட்டோம். அப்போது தேவநீதிதாஸ் அவர்கள் இத்திட்டத்தை மறுஆய்வு செய்யும் வரையில் வேலையை நிறுத்தி வைக்குமாறு அருகிலிருந்த பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரிடம் கூறினார். ஆனால், தற்போது முள்ளோடை வாய்க்காலில் தொடர்ந்து இயந்திரம் மூலம் மணல் அள்ளும் வேலை நடந்து வருகிறது. இதனால், மேற்சொன்ன மணல் திட்டு முற்றிலும் அழியும் ஆபத்துள்ளது.

ஏற்கனவே கடல் அரிப்பால் கடலோர கிராமங்கள் பாதிக்கப்பட்டது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத பொதுப்பணித்துறையினர், தற்போது மீண்டும் ஒரு துறைமுக திட்டத்தைக் கொண்டு வந்து மேலும் அழிவைத் தருவது நல்லதல்ல. பொதுப்பணித்துறையினர் நீர் நிலைகளைப் பாதுகாக்க நிறைய நிதி ஒதுக்கீடு செய்து, ஏரி பாதுகாப்புச் சங்கங்களை உருவாக்கி ஏரி, குளங்களை புனரமைந்துள்ளனர். தற்போது அவற்றை கெடுக்கும் வகையில் செயல்படுவது தவறானது.

இத்திட்டத்தினால் தமிழகப் பகுதியும் பாதிக்கப்படுவதால் கடலூர் மாவட்ட ஆட்சியரையும் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம்.

எனவே, தாங்கள் உடனடியாக இதில் தலையிட்டு, பெரும் அழிவைத் தரும் இந்த துறைமுகத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும், சுனாமி நிதியில் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கும் வகையில் இத்திட்டத்தைக் கொண்டு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடவும் வேண்டும் எனக் கோருகிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட துணைநிலை ஆளுநர் அவர்கள் உடனடியாக இதுகுறித்து புதுச்சேரி அரசிடம் அறிக்கை அளிக்குமாறுகோருவதாக கூறினார். மேலும் அரசு அதிகாரிகளிடம் பேசி உடனடியாக துறைமுகப் பணியை நிறுத்த நடவடிக்கை எடுக்க உறுதியளித்தார்.

மனுவில் கையெழுத்திட்டுள்ள நல்லாட்சிக்கான கூட்டமைப்பிலுள்ள அமைப்பினர்: 

1. இன்டேக், 2. பீப்பில்ஸ் பல்ஸ், 3. புதுச்சேரி அறிவியல் கழகம், 4. புடண்கோ, 5. பூவுலகின் நண்பர்கள், 6. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, 7. பாண்டிகேன், 8. செம்படுகை நனீரகம், 9. புதுச்சேரி மக்கள் பாதுகாப்புக் குழு.

Sunday, November 07, 2010

பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை கள ஆய்வறிக்கை வெளியீடு - வீடியோ!



அயோத்தி பயணம் மேற்கொண்டு விட்டு தமிழகம் திரும்பிய பேராசிரியர் அ.மார்க்ஸ் (தலைவர், மனித உரிமைக்கான மக்கள் கழகம், தமிழ்நாடு), கோ.சுகுமாரன் (செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி) ஆகியோர் 02.11.2010, மாலை 4.00 மணியளவில், சென்னையிலுள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை குறித்த நேரடி கள ஆய்வு - இடைக்கால அறிக்கையை வெளியிட்டனர். இதுகுறித்து த.மு.மு.க. வெளியிட்டுள்ள வீடியோ காட்சி.

Thursday, November 04, 2010

கறைபடிந்த நீதித்துறையும், போராட்டமும்.. பகுதி (4)

நீதித்துறையில் பெருகிவரும் ஊழலைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள நீதித்துறை தரம் மற்றும் பொறுப்பாகுதல் மசோதா பல்வேறு வரவேற்கத்தக்க அம்சங்களைக் கொண்டிருந்தாலும், அந்த மசோதா இன்னும் நடைமுறை சாத்தியம் உள்ளதாகவும், நீதிபதிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் இடர்பாடுகள் இல்லாமலும் இருக்க வேண்டுமென சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நீதித்துறையின் மீது மக்கள் வைத்துள்ள அபரிதமான நம்பிக்கை குறையாமல் இருக்க இந்த மசோதாவில் சட்ட வல்லுநர்கள் கூறும் அம்சங்களை உள்ளடக்கி நிறைவேற்ற மத்திய அரசு திறந்த மனதோடு செயலாற்ற வேண்டும்.

‘நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968’ போதிய அளவில் பயன் அளிக்கவில்லை என்ற காரணத்தால் தான் தற்போது மத்திய அரசு ‘நீதித்துறை தரம் மற்றும் பொறுப்பாகுதல் மசோதா 2010’ என்ற புதிய சட்ட முன்வரைவை அமைச்சரவையில் வைத்து ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த சட்டப்படி நீதிபதிகள் தங்களின் சொத்துக் கணக்கினைப் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். மேலும் ஆண்டு தோறும் தங்கள் சொத்துக் கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும். இவை அனைத்தும் நீதித்துறையின் அதிகாரபூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும். மேலும், நீதிபதிகள் எந்தவொரு வழக்கறிஞரோடும் நெருக்கமான உறவு வைத்துக் கொள்ள கூடாது. குறிப்பாக தான் பணியாற்றும் நீதிமன்றங்களில் வழக்காடும் வழக்கறிஞரோடு உறவு வைத்துக் கொள்ள கூடாது.

நீதிபதிகளின் ஊழல் பற்றி விசாரிக்க ஓய்வுப் பெற்ற இந்திய தலைமை நீதிபதி ஒருவர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும். இக்குழுவில், அட்டர்னி ஜெனரல், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, குடியரசுத் தலைவர் நியமிக்கும் ஒரு முக்கிய பிரமுகர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். நீதிபதிகள் மீது இந்த குழுவிடம் நேரடியாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். குறிப்பாக இந்திய தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மீதும் புகார் கூறலாம்.

இவ்வாறு அளிக்கப்படும் புகாரை விசாரிப்பதற்காக நீதிபதிகள் அடங்கிய தனிக் குழு ஒன்று அமைக்கப்படும். உச்சநீதிமன்ற நீதிபதி மீது புகார் என்றால் ஓய்வுப் பெற்ற இந்திய தலைமை நீதிபதி மற்றும் பணியிலிருக்கும் இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரிக்கும். உயர்நீதிமன்ற நீதிபதி மீதான புகாரை ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பணியிலிருக்கும் இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரிக்கும். இந்த விசாரணை குழு உறுப்பினர்களை அதாவது உச்சநீதிமன்ற நீதிபதிகளை இந்திய தலைமை நீதிபதியும், உயர்நீதிமன்ற நீதிபதிகளை சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் நியமிப்பார்கள். தமைமை நீதிபதிகள் மீதான புகாரை உயர்மட்ட குழுவே விசாரிக்கும்.

இந்த குழுக்களுக்கு ஒரு சிவில் நீதிமன்ற அதிகாரம் இருக்கும். இக்குழு எந்தவொரு ஆவணத்தையும், சான்றுகளையும் சம்மன் அனுப்பி பெற முடியும். மேலும், புகாரின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்படும் நீதிபதி மீது குறிப்பான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய முடியும். குற்றச்சாட்டு மென்மையானதாக இருந்தால் சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு அறிவுரையோ அல்லது எச்சரிக்கையோ விடுக்கலாம். குற்றச்சாட்டு கடுமையானதாக இருந்தால் அவரை பணியிலிருந்து விலக அறிவுறுத்தலாம். இதற்கு நீதிபதி ஒப்புக் கொள்ளவில்லை என்றால் குடியரசுத் தலைவர் மூலம் பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு (Impeachment) பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம்.

முந்தைய சட்டத்தில் மாற்றங்கள் செய்தும், சட்ட ஆணையம் கூறிய பல கருத்துக்களை உள்ளடக்கியும் கொண்டு வரப்பட்ட இந்த புதிய சட்டத்தின்படி ஊழல் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் பல தடைகள் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். பாராளுமன்றத்தின் மூலம் குற்றசாட்டுகள் (Impeachment) பதிவு செய்து நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுப்பது என்ற பழைய முறையே இச்சட்டத்தில் இறுதி நடவடிகையாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பது கடந்த காலங்களில் தோல்வி அடைந்துள்ளதையும், இதுவரையில் ஒரு நீதிபதிகூட இவ்வாறு பணிநிக்கம் செய்யப் படவில்லை என்பதையும் முன்னர் பார்த்தோம்.

பணியிலிருக்கும் நீதிபதிகளை இதுபோன்ற விசாரணைக் குழுவில் நியமிப்பது நடைமுறையில் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஏற்கனவே அதிகப்படியான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில் மேலும் கூடுதலாக அவர்களுக்குப் பணிச் சுமை அளிப்பது நீதிபதிகளின் வேலைத் திரனைக் குறைக்கும். விசாரணகளில் போதிய கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகும். மார்ச் 31, 2010 கணக்குப்படி உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 55 ஆயிரத்து 717 வழக்குகள், இந்தியாவிலுள்ள 21 உயர்நீதிமன்றங்களில் மொத்தம் 4 கோடிக்கு மேல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏதாவது ஒரு மனித உரிமை மீறல் நடக்குமானால் உடனடியாக பணியில் இருக்கும் நீதிபதி தலைமையில் நீதிவிசாரணை கோருவது வழக்கம். ஆனால், அதுபோன்ற சந்தர்ப்பங்களில் மேற்கூறிய காரணங்களைக் காட்டி அரசுகள் தட்டிக் கழிப்பது உண்டு. ஒரு சம்பவம் குறித்து விசாரிக்கவே இந்த நிலை என்றால், நீதிபதிகள் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை நுட்பமாகவும், ஆழமாகவும், பல்வேறு கோணங்களில் ஆராயவும் கவனம் செலுத்த முடியாத நிலையே உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

இதில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால், தன்னோடு பணியாற்றும் ஒரு நீதிபதி மீது புகார் கூறப்படுமானால் அதனை விசாரிப்பதில் உடன் பணியாற்றும் நீதிபதிக்கு நெருடல் இருக்கும். மேலும், பல சந்தர்ப்பங்களில் உடன் பணியாற்றும் நீதிபதியை விசாரணை நீதிபதிகள் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. நீதிபதி பி.டி.தினகரன் ஊழல் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவில் அவரோடு பணியாற்றிய நீதிபதி சிர்புர்கர் இடம்பெற்றதற்கு எதிர்ப்புப் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் அக்குழுவில் இருந்து விலகியதும் இதற்கு வலுசேர்க்கிறது.

‘ஒரு நீதிபதி செய்யும் குற்றத்தை ஒரு நீதிபதி கொண்டே விசாரிக்கலாம் என்றால் ஏன் ஒரு டக்டர் செய்யும் குற்றத்தை ஒரு டாக்டரைக் கொண்டே, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் செய்யும் குற்றத்தை ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்டே, ஒரு திருடன் செய்யும் குற்றத்தை ஒரு திருடனைக் கொண்டே விசாரிக்க கூடாது’ என்று மிகக் கோபமாக கேள்வி எழுப்பியதோடு, ‘இந்த புதிய சட்டம் மக்களிடத்தில் ஒரு பாதுகாப்பு வழிமுறை உள்ளது என்ற பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சி’ என்கிறார் சாந்தி பூஷன்.

புலன் விசாரணை அதிகாரம் கொண்ட சுயேட்சையான அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டுமென நீதித்துறையில் ஊழலுக்கு எதிராகப் போராடி வருபவர்கள் கோருவதில் நியாயம் உள்ளது. நீதித்துறைக்கு அப்பாற்பட்டவர்கள் நீதிபதிகளின் ஊழல்களை விசாரிக்க ஒப்புக் கொண்டால் அது நீதித்துறையின் சுயேட்சைத் தன்மையையும், சுதந்தரத்தையும் கேள்விக்குள்ளாக்கிவிடும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நீதித்துறையில் மட்டுமல்ல இன்று அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. எளிதாக வேலையை முடிக்க லஞ்சம் கொடுப்பதுதான் வழிமுறை என்பதை மக்கள் பெரிதும் நம்புகின்றனர். லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்று நாம் யாராவது கூறினால் இன்றைய சூழலில் அது மிகப் பெரிய நகைச்சுவை ஆகிவிடும். சட்டத்தின் ஆட்சியை விரும்புகிறவர்கள் ஊழலை ஒருபோதும் ஆதரிக்க முடியாது. ஊழல்களினால் பாதிக்கப்படுவது அடித்தட்டில் இருக்கும் ஏழை எளிய மக்கள்தான். அதுவும் கடைசிப் புகலிடமாக உள்ள நீதித்துறையில் ஊழல் அளவிட முடியாத பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

அண்மையில் வருமான வரித் துறை அதிகாரி ஒருவரின் ஊழல் வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்சு, டி.எஸ்.தாக்கூர் ஆகியோர் ‘அரசு ஏன் ஊழலை சட்டபூர்மானதாக ஆக்கக் கூடாது’ என்று கிண்டலாக கேள்வி எழுபியுள்ளனர். அரசுத் துறைகளில் நிலவும் ஊழலை ஒழிக்க நீதிபதிகள் அக்கறை காட்டும் அதே வேளையில், நீதித்துறையில் நிலவும் ஊழலையும் களைய உரிய கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் இதுபோன்ற ஒரு கேள்வியை நீதித்துறையினர் மீது மக்கள் எழுப்பும் காலம் விரைவில் வரக்கூடும்.

(நிறைவுப் பெற்றது) 

நன்றி: மக்கள் உரிமை.    

Wednesday, November 03, 2010

பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு - இடைக்கால அறிக்கை!

கோ.சுகுமாரன் - பேரா. அ. மார்க்ஸ்
அயோத்தி பயணம் மேற்கொண்டு விட்டு தமிழகம் திரும்பிய பேராசிரியர் அ.மார்க்ஸ் (தலைவர், மனித உரிமைக்கான மக்கள் கழகம், தமிழ்நாடு), கோ.சுகுமாரன் (செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி) ஆகியோர் இன்று (02.11.2010), மாலை 4.00 மணியளவில், சென்னையிலுள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை குறித்த நேரடி கள ஆய்வு - இடைக்கால அறிக்கையை வெளியிட்டனர்.

படங்கள்: கோ. சுகுமாரன்.

இடைக்கால அறிக்கை:

யுகல் கிஷோர் சரண் சாஸ்திரி
சென்ற அக்டோபர் 27, 28, 29, 30, 31 ஆகிய நாட்களில் லக்னோ, பைசாபாத், அயோத்தி ஆகிய இடங்களுக்கு நேரடியாக சென்ற நாங்கள் பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினையில் முக்கிய வழக்காடிகளான (Litigants) அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்ஃபரியாப் ஜிலானி (சுன்னி வக்ப் வாரியம்), உயிருடன் உள்ள மூத்த மனுதாரான முகமது அஷிம் அன்சாரி, ராம ஜென்ம பூமி நியாசின் தலைவர்களில் ஒருவரும், அயோத்தி முன்னாள் பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினருமான ராம் விலாஸ் வேதாந்தி, நிர்மோகி அகாராவின் மகந்த் பாஸ்கரதாஸ், விசுவ இந்துப் பரிசத் அயோத்தி தலைமையகத்தில் உள்ள கரசேவபுரம் அலுவலகத்தின் பொறுப்பாளர் மகேந்திர உபாத்யாய, பிரச்சினைக்குரிய பகுதியில் இருக்கும் நிலையை (Status Quo) மேற்பார்வை இடுவதற்கென உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் காலிக் அகமது, அயோத்தியில் உள்ள சரயுகுன்ஜ் ராம் ஜானகி மந்திரின் மகந்த்தும், ‘அயோத்தியில் பன்மைக் கலாச்சாராத்திற்கான அமைப்பு’ பொறுப்பாளருமான யுகல் கிஷோர் சரண் சாஸ்திரி, பைசாபாத் நகர பத்திரிகையாளர்களான கே.கே.பாண்டே (ஈ டிவி), பன்பீர் சிங் (ஆஜ்தக் டிவி), சுமன் குப்தா, பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்ததா எனக் கண்டறிய அகழ்வாய்வு செய்யவதற்காக உயர்நீதிமன்றம் ஆணையிட்ட போது அதை மேற்பார்வை இடுவதற்காக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவரான பேராசிரியர் முனைவர் அசோக் கே. மிஸ்ரா (வரலாற்றுத் துறைத் தலைவர், ராம் மனோகர் லோகியா பல்கலைக்கழகம், பைசாபாத்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ, லிபரேஷன்) உ.பி. மாநில தலைமையகச் செயலர் அருண் குமார், அகில இந்திய முற்போக்கு மகளிர் கழகத் தேசிய துணைத் தலைவரும், ‘டெகிரி-ஏ-மிஸ்வான்’ என்கிற அமைப்பின் பொறுப்பாளருமான தாஹிரா ஹாசன் மற்றும் பல இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோரையும் சந்தித்து விரிவாகப் பேசி பதிவு செய்துக் கொண்டோம்.

சரயுகுன்ஜ் ராம் ஜானகி மந்திர்
 
முள்வேளியிட்டு, பாதுகாப்புடன் பாபர் மசூதி இருந்த இடம்

முள்வேளியிட்டு, பாதுகாப்புடன் பாபர் மசூதி இருந்த இடம்

அயோத்தி நகரம், கரசேவபுரம், ராமர் கோயிலுக்கான தூண்கள் முதலிய கட்டுமானங்களை உருவாக்கி வைத்திருக்கும் வி.இ.ப. அலுவலகம், பெரும் பாதுகாப்புடன் அரசு கையகப்படுத்தி, இரட்டை முள்வேளியிட்டு மத்திய போலீஸ் பாதுகாப்பில் வைத்துள்ள 71.3 ஏக்கர் நிலம், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இன்று உருவாக்கி வழிபாடு நடத்தப்படும் ராம் லல்லாவின் தற்காலிக கோயில் முதலிய பிரச்சினைக்குரிய பகுதிகளை நேரடியாகச் சென்றுப் பார்த்தோம்.

சட்டத்தின் ஆட்சி, அரசியல் சட்டத்தின் அடிப்படையிலான ஆளுகை, சமூக ஒற்றுமை, பன்மைத்துவம் காப்பாற்றப்படுதல் ஆகிய அடிப்படையான நோக்கங்களுடன் இந்த ஆய்வை நாங்கள் மேற்கொண்டோம். இப்பிரச்சினையில் சுமூகமான தீர்வு ஏற்படுதல், நீதி நிலை நாட்டப்படுதல் ஆகிய நோக்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட எமது ஆய்வின் சுருக்கமான (Interim Report) முடிவுகள் பின் வருமாறு. விரிவான அறிக்கை பின்னர் வெளியிடப்படும்.

சட்ட அடிப்படைகளைப் புறந்தள்ளி இந்து மத நம்பிக்கை ஒன்றின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பென்ச் தீர்ப்பு சட்ட வல்லுநர்கள், அறிவுஜீவிகள் மத்தியில் கடும் சர்சையை ஏற்படுத்தி உள்ளது. முரண்பாடுகள் மிகுந்த ஒரு அகழ்வாய்வை நீதிமன்றம் பெரிய அளவில் சார்ந்திருந்ததும் வரலாற்று அறிஞர்களின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. பாபர் மசூதி இருந்த இடம் பிரித்துக் கொடுக்கப்பட ஆணையிடப்பட்டுள்ள மூன்று மனுதாரர்களும் (ராம் லல்லாவின் நெருங்கிய நண்பர், சுன்னி வக்ப் வாரியம், நிர்மோகி அகாரா) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்து அதற்கான பணிகள் நடந்துக் கொண்டிருப்பதை மூன்று தரப்பினருமே எம்மிடம் தெரிவித்தனர்.

அஷிம் அன்சாரி
இன்னொரு பக்கம் முஸ்லிம் தரப்பு மூத்த மனுதாரரான அஷிம் அன்சாரிக்கும், நிர்மோகி அகாராவின் பாஸ்கர தாசுக்கும் இடையில் நீதிமன்றத்திற்கு அப்பால் சுமூகமான தீர்வு ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. ஜோதிர் மட சங்கராச்சாரியான ஸ்வருபானந்த சரசுவதிக்கும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திற்கும் இடையில் இதே நோக்கில் பேச்சுவார்த்தை நடந்துக் கோண்டிருப்பதாக இரு நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இன்னொரு பக்கம் இந்தியாவிற்குள்ளேயே பாபரின் பெயரில் இன்னொரு மசூதியை அனுமதிக்க மாட்டோம் என்கிறது ராம் ஜென்ம பூமி நியாஸ். அஷிம் அன்சாரி பாபர் மசூதி இருந்த இடத்தை விட்டுக் கொடுத்தாலும் கூட அப்படி விட்டுக் கொடுக்கும் அதிகாரம் வக்ப் வாரியம் உட்பட யாருக்குமே கிடையாது என முஸ்லிம் சட்ட வாரியத்தினர் கூறுகின்றனர்.

முகமது அஷிம் அனசரியுடன் நாங்கள்...
தீர்ப்பு முஸ்லிம்களுக்கு நீதியை மறுத்துள்ள போதிலும் அவர்கள் தரப்பில் காட்டப்படுகிற பொறுமையை அனைவரும் பாராட்டி உள்ளனர். அதே நேரத்தில் இந்த இறுக்கமான அமைதி சட்டத்தின் ஆட்சி, அரசியல் சட்ட ஆளுகை ஆகியவற்றில் முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்ததன் அறிகுறிதான் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தப் பின்னணியிலேயே எங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முஸ்லிம் தரப்பினரின் கருத்துக்கள்:

ஸ்ஃபரியாப் ஜிலானி
பொதுவாக முஸ்லிம்களில் எல்லா தரப்பிலும் பெருத்த ஏமாற்றம் நிலவுவதை நாங்கள் கண்டோம். சட்டத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் வழக்கைப் பரிசீலிக்கும் எனவும், அந்த அடிப்படையில் தங்களுக்கு நீதி கிடைக்கும் எனவும் ஸ்ஃபரியாப் ஜிலானி மற்றும் காலிக் அகமது ஆகியோர் கூறினர். இடையில் அஷிம் அன்சாரியின் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவுகள் வருமாயின் அதை ஏற்க தமக்கு தடையில்லை எனவும் காலிக் அகமது கூறினார்.



காலிக் அகமது
பேச்சுவார்த்தையில் முனோக்கி நகர்ச்சி இல்லையாயினும் அது நடந்து கொண்டிருப்பதாகவும், 30 நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டிய நிபந்தனையின் காரணமாக அதற்கான வேலைகளுக்குத் தான் ஒப்புதல் அளித்து மனுவில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அஷிம் அன்சரி கூறினார். முஸ்லிம்களுக்குள் இரு கருத்து கிடையாது எனவும், எப்படியும் பாபர் மசூதி இருந்த இடத்தில் மசூதி கட்டித் தர வேண்டும் என்ற ஒரே கருத்துதான் உள்ளது எனவும், இரு கருத்துக்கள் உள்ளன என்பது ஊடகங்கள் கட்டுகிற கதை என்றும் ஜிலானி கூறினார். சுன்னி வக்ப் வாரியத்தின் முடிவுக்கு கட்டுப்படுவதாக அஷிம் அன்சாரி கையெழுத்திட்டுள்ளதாகவும் காலிக் அகமது கூறினார்.

வழக்கறிஞர் ஸ்ஃபரியாப் ஜிலானியுடன் நாங்கள்...
வழக்கறிஞர் காலிக் அகமதுவுடன் நாங்கள்...


தாஹிரா ஹாசன்
இப்பிரச்சினை எப்படியாவது முடிந்தால் நல்லது என ஏற்கனவே பாதிக்கப்பட்ட அயோத்தி முஸ்லிம்களிடம் கருத்துள்ளதையும் காண முடிந்தது. லக்னோவிலிருந்து முஸ்லிம் பெண்கள் மத்தியில் பணிபுரியும் தாஹிரா ஹாசன் உ.பி. முஸ்லிம்கள் பெரும்பாலோர் கடும் வறுமையிலும், சுரண்டலிலும் உழல்வதைச் சுட்டிக்காட்டினார். பீடி சுற்றுவது, எம்பிராய்டரி செய்வது ஆகிய தொழில்களில் நாளொன்றுக்கு இருபது ரூபாய் வருமானம் கூட இல்லையெனவும், இவர்களுக்கு பாபர் மசூதி எல்லாம் பிரச்சினை இல்லை எனவும் குறிப்பிட்டார். எனினும், பாபர் மசூதி இருந்த இடத்தை விட்டுக் கொடுத்தால், அது தவறான முன்னுதாரணமாகி விடாதா, தொடர்ந்து காசி, மதுரா இன்னும் பல இடங்களில் இந்துத்துவவாதிகள் இதுபோன்ற பிரச்சினை உருவாக்க மட்டார்களா என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. உண்மைதான், உயிர் வாழும் உரிமையும், சட்டத்தின் ஆட்சி என்பதில் நம்பிக்கையும் இல்லாது போனால், பின் வாழ்வதில் அர்த்தம் என்ன என்றார் தாஹிரா. பொதுவாக முஸ்லிம்களிடம் சமூக ஒற்றுமை, அமைதி ஆகியவற்றில் கருத்தொருமிப்பு இருந்தது.

இன்றளவும் அயோத்தியில் உள்ள நூற்றுக்கணக்கான ராமர் கோயில்களில் வழிபாடு செய்வதற்குரிய பூ முதலிய பொருட்களை முஸ்லிம்களே கொடுத்து வருவதையும் நாங்கள் கண்டோம். தீர்ப்பு நாளன்று அச்சத்தின் காரணமாக அயோத்தி முஸ்லிம்கள் வீட்டை விட்டு வெளியேறி இரண்டு, மூன்று நாட்கள் கழித்துதான் ஊர் திரும்பியுள்ளனர். வக்ப் சொத்தை வாரியமே விரும்பினாலும்கூட மாற்றி அமைக்கவோ, யாருக்கும் கையளிக்கவோ முடியாது என்பதை முஸ்லிம் தலைவர்கள் சிலர் சுட்டிக்காட்டிய போதும், பொதுவான முஸ்லிம் மனநிலை தங்களது சட்டபூர்வமான உரிமையை நிலைநாட்டுவதும், மசூதி இருந்த இடத்தில் மீண்டும் மசூதியையே நிர்மாணிப்பதும் என்கிற அளவிலேயே உள்ளது. தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வருமானால் மசூதிக்கு அருகாமையில் ராமர் கோயில் கட்டுவதற்கு இடம் அளிக்கும் மனநிலை அவர்களிடம் உள்ளதைக் கண்டோம்.

இந்து தரப்பினரின் கருத்து:

மகந்த் பாஸ்கரதாஸ்
இந்து தரப்பினர் என்பது பொதுவான இந்து மக்களைக் குறிப்பதல்ல என்பதை முதலில் குறிப்பிட விரும்புகிறோம். பொதுவான இந்துக்கள் மத்தியில் சமூக ஒற்றுமை, மசூதி, கோயில் இரண்டையும் கட்டிக் கொள்வது என்பதில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால், இதை அரசியலாக்கி முன்னெடுக்க கூடியவர்கள் மிகவும் தீவிரமான கருத்துகள் உள்ளவர்களாக உள்ளது எங்களுக்கு கவலை அளித்தது. டிசம்பர் 6, 1992-ல் மசூதியுடன் கூடவே உடைக்கப்பட்ட ராம் சபுத்ராவில் அனுபவ பாத்தியதை (Possession) உள்ள நிர்மோகி அகராவின் மகந்த் பாஸ்கரதாஸ் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் மட்டுமே கட்டியாக வேண்டுமெனவும், அரசு கையகப்படுத்தியுள்ள 71.3 ஏக்கருக்கு அப்பால் வேண்டுமானால் முஸ்லிம்கள் மசூதியைக் கட்டிக் கொள்ளலாம் எனவும், அதற்கு தாமே நிலம் தருவதாகவும் கூறினார். 400 ஆண்டுக் காலம் தொழுகை நடந்த இடத்தை எந்த அடிப்படையில் அவர்களுக்கு மறுப்பது என நாங்கள் கேட்ட போது 1939 முதல் அங்கு தொழுகையே நடக்கவில்லை என்றார் பாஸ்கரதாஸ். ஆனால், 1949 டிசம்பர் 22 வரை அங்கே தொழுகை நடந்துள்ளதை உ.பி. மாநில அரசு ஏற்று உயர்நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், பாஸ்கரதாஸ் அயோத்திக்குள் முஸ்லிம்கள் மசூதி கட்டிக் கொள்ளலாம் என்பதை ஏற்றுக் கொள்ளும் வகையில் விசுவ இந்து பரிசத், ராம ஜென்ம பூமி நியாஸ் ஆகியவற்றில் இருந்து வேறுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விசுவ இந்து பரிசத், ராம ஜென்ம பூமி நியாஸ் ஆகியன நிர்மோகி அகாரவிற்கு மூன்றில் ஒரு பங்கு நிலம் கொடுக்க ஆணையிடப்படுள்ளது தவறு எனச் சொல்கிறார்களே என நாங்கள் கேட்ட போது, “மொத்த நிலமும் எங்களுக்குச் சொந்தம், வி.இ.ப. உள்ளிட்டவர்களுக்கு இதில் எந்தவித சட்ட உரிமையும் கிடையாது. இந்துக்களின் பெயரால் அரசியல் செய்யும் உரிமையை இவர்களுக்கு யார் அளித்தது. விசுவ இந்துப் பரிசத் முதலியன வெளியில் இருந்து வந்து இங்குப் பிரச்சினை செய்கிறார்கள். அவர்கள் மட்டும் தலையிடாவிட்டால், எப்போதோ பிரச்சினை தீர்ந்திருக்கும். தீர்ப்பைப் பொறுத்தவரையில் நிலத்தை மூன்றாக பிரித்தது தவறு, எல்லாவற்றையும் எங்களுக்கே தந்திருக்க வேண்டும்” என்றார்.

நிர்மோகி அகாரா மகந்த் பாஸ்கரதசுடன் நாங்கள்...

பைசாபாத் நிர்மோகி அகாரா தலைமையகம்


மகேந்திர உபாத்யாய
திகம்பர அகாராவில் மகந்த் சுரேஷ் தாஸ் ஊரில் இல்லை எனவும் வேறு யாருடனும் நாங்கள் பேச இயலாது என்றும் கூறிவிட்டனர். வி.இ.ப. காரியாலயத்தின் பொறுப்பாளர் மகேந்திர உபாத்யாயா யார் பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. உச்சநீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வந்தாலும் கவலை இல்லை. மிகப் பெரிய ராமர் கோயிலை மட்டுமே அங்கே கட்ட வேண்டும். வேறு எதையும் கட்ட அனுமதிக்க மட்டோம் என்றார்.

மகேந்திர உபாத்யாயாவுடன் நாங்கள்...

ராமர் கோயில் கட்டுவதற்கான கட்டுமாணங்கள்...

ராமர் கோயில் கட்டுவதற்கான கட்டுமாணங்கள்...

ராமர் கோயில் கட்டுவதற்கான கட்டுமாணங்கள்...

வேதாந்தி
ராம ஜென்ம பூமி நியாசின் முக்கிய பொறுப்பாளரான ராம் விலாஸ் வேதாந்தி வாரணாசியில் இருந்ததினால் அவருடன் தொலைபேசியில் மட்டுமே உரையாட முடிந்தது. ராம் விலாஸ் வேதாந்தி கூறியதிலிருந்து: “அயோத்தியில் மட்டுமல்ல, இந்தியாவில் பாபரின் பெயரால் எந்த மசூதியும் கட்டவிட மட்டோம். அயோத்திக்குள் மசூதி கட்ட வேண்டுமானால், அயோத்தியின் கலாச்சார எல்லையைத் தாண்டித்தான் இருக்க வேண்டும். அதாவது 12 யோஜனை நீளம், 3 யோஜனை அகலத்திற்குள் எந்த மசூதி கட்டவும் அனுமதிக்கமாட்டோம்.(1 யோஜனை = 9 கி.மீ.). வேண்டுமானால், அவர்கள் மீர்பாகியின் கல்லறைக்குப் பக்கத்தில் மசூதியைக் கட்டிக் கொள்ளட்டும். (கல்லறை அயோத்தியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் சாஹின்வா கிராமத்தில் உள்ளது). அதுவும் கூட பாபரின் பெயரல் இருக்கக் கூடாது. மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்தது உண்மையென்றால், தாங்கள் விட்டுக் கொடுத்துவிடுவதாக முஸ்லிம்கள் எழுதிக் கொடுத்துள்ளனர். இப்போது நீதிமன்றம் கோயில் இருந்ததை உறுதி செய்துள்ளது. அவர்கள் விட்டுவிட்டுப் போக வேண்டியதுதான்.”

நிர்மோகி அகாரா உங்களுக்கு இதில் உரிமை இல்லை எனக் கூறுகிறதே என நாங்கள் கேட்ட போது, 1 கோடியே 81 லட்சத்து 66 ஆயிரத்து 65 ஆண்டுகளுக்கு முன்னர் ராமர் பிறந்தார். இந்த நிர்மோகி அகாரா 400 ஆண்டுகளுக்கு முன் உருவானது. இவர்கள் யார் ராம ஜென்ம பூமிக்கு உரிமைக் கொண்டாடுவது என்று ஆவேசமாகப் பதிலளித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பின்படி ராம ஜென்ம பூமி எனச் சொல்லப்படுகிற இடம் ராம் ல்ல்லாவிற்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தாலும் நீங்கள் அங்கு கோயில் கட்ட முடியாதே எனக் கேட்டதற்கு, “நிர்மோகி அகாரா, அஷிம் அன்சாரி இருவருக்கும் ஜென்ம பூமிக்கு வெளியே தான் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் கூட எந்த இடம் எனத் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. ராம் லல்லாவிற்கு மட்டும் தான் தெளிவாக வரையறுக்கப்பட்டு 130 x 90 அடி கொடுக்கப்பட்டுள்ளது. திருலோகி நாத் தான் ராம் லல்லாவிற்காக வழக்குத் தொடுத்தவர். அவர் இப்போது உயிரோடு இல்லை. ராம் லல்லாவின் கார்டியனாக இப்போது நியமிக்கப்பட்டுள்ள தேவகி நந்தன் அகர்வால் எங்களுக்காக வழக்காடுகிறார். நியாசும், பரிசத்தும் இதில் ஒரு வாதியாக இல்லையாயினும் திருலோகி நாத்திற்கோ அல்லது தேவகி நந்தனுக்கோ கொடுப்பது எங்களுக்குக் கொடுப்பதுதான். இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றார்.

ஒரு வேளை உச்சநீதிமன்றத் தீர்ப்பு நம்பிக்கை அடிப்படையில் இல்லாமல் சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என நாங்கள் கேட்ட போது, “உச்சநீதிமன்றத்திற்கு வேறு எந்தத் தேர்வுமே கிடையாது. எங்களுக்குத்தான் கொடுத்தாக வேண்டும். ஒரு வேளை தீர்ப்பு எதிராகப் போனால், இந்த நாடு வகுப்பு வன்முறையால் அழிவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த நாட்டில் சமூக ஒற்றுமை நிலவ வேண்டும் என உச்சநீதிமன்றம் விரும்புமானால், இந்துக்களுக்கு சார்பாகவே அது தீர்ப்பளிக்க வேண்டும். மொத்த நிலத்தையும் இந்துக்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்” எனக் கூறி முடித்துக் கொண்டார்.

ராமரை வழிபட பூசைப் பொருட்கள் விற்கப்படும் கடைகள்...


சர்ச்சைகுரிய இடத்தில் ராமரை வழிபட செல்லும் பஜனைக் கோஷ்டி


இதர தரப்பினர் கருத்து:

அருண்குமார்
அரசியல் கட்சி ஒன்றின் ஊழியரான அருண் குமார் பேசும்போது அயோதிக்குள்ளேயே மசூதியை அனுமதிக்க இயலாது எனப் பேசுபவர்களுக்கு எதிராக மக்களைத் திரட்ட அரசியல் கட்சிகள் முன்வர வேண்டுமென்றார். உள்ளூர் பத்திரிகையாளர் சிலரிடம் பேசிய போது, மசூதியை அரசு கையகப்படுத்தி உள்ள 71.3 ஏக்கருக்கு அப்பால் மசூதி கட்டிக் கொள்ள அஷிம் அன்சாரி பாஸ்கரதாசிடம் ஒத்துக் கொண்டுள்ளார் எனவும், அப்படி செய்வதுதான் சரியென்றும் கூறினர். ஆனால், இது அடிப்படை நீதியை மறுப்பதாகாதா, தொடர்ந்து இதேபோல் பிரச்சினைகள் பிற இடங்களில் எழுந்தால் என்ன செய்வது. 71.3 ஏக்கர் நிலத்திற்கு அப்பாலும் கூட மசூதி கட்ட கூடாது என பரிசத்தும், நியாசும் கூறுகிறதே என்று கேட்ட போது, அவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தனர்.

பத்திரிகையாளர்கள் பன்பீர் சிங், கே.கே.பாண்டே...

பேராசிரியர் ஏ.கே.மிஸ்ரா...

எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்த வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ஏ.கே.மிஸ்ரா, மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்தது என ஆணித்தரமாக கூறினார். எனினும், அகழ்வாய்வுகளின் அடிப்படை நியதிகள் மீறப்பட்டுள்ளதாக சூரஜ்பன், டி.என்.ஜா முதலிய வரலாற்று அறிஞர்கள் கூறியது பற்றிக் கேட்டபோது அவர் சற்றுக் கோபமானார். “அகழ்வாய்வுத் துறையே முன்னின்று இதைச் செய்திருந்தால் நியதிகள் பின்பற்றப்பட்டிருக்கும். நீதிமன்ற உத்தரவுப்படி நாங்கள் செய்யும் போது நியதிகள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை” என்றார். தோண்டிய இடத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக சுண்ணாம்பால் கட்டப்பட்ட கட்டுமானங்கள், மிருக எலும்புகள் ஆகியன கிடைத்துள்ளதை நீங்கள் ஏன் கணக்கில் கொள்ளவில்லை என்றும், இந்த தரவுகளை நீங்கள் ஏன் பாதுகாத்து வைக்கவில்லை எனவும் நாங்கள் கேட்ட போது, “எலும்புகளைக் பாதுகாத்து வைக்க சில முறைகள் உண்டு. ஆனால், இந்த துலுக்கப் பசங்க (Muslim Fellows) எலும்புகளை அப்படி வைக்கக் கூடாது, வெறும் பாலித்தின் உறையில் வைத்தால் போதும் என முட்டாள்தனமாக சொன்னார்கள். அதனால், அவைகள் எல்லாம் பொடித்து அழிந்துவிட்டன” என அலட்சியமாகக் கூறினார். இப்படியான மனநிலையுடன் கூடிய வரலாற்று அறிஞர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் எப்படி இருக்கும் என்பதையும், இந்த ஆய்வை நீதிமன்றம் முழுமையாக சார்ந்திருந்தது என்பதையும் நினைத்த போது எங்களுக்கு கவலையாக இருந்தது.

எமது பார்வைகளும், முடிவுகளும்:

சுமூகமான தீர்வும், சூழலும் ஏற்படும் சாத்தியம் மிகக் குறைவாகவே உள்ளது. பொதுமக்கள் மத்தியில் இத்தகைய கருத்து இருந்த போதும், விசுவ இந்துப் பரிசத்தும், ராம் ஜென்ம பூமி நியாசும் இதற்கு முற்றிலும் எதிராகவே உள்ளன. தீர்ப்பு எங்களுக்கு சாதமாக வராவிட்டால் இந்த நாட்டையே மத வன்முறையால் அழித்துவிடுவோம் என வேதாந்தி போன்றவர்கள் பகிரங்கமாக உச்சநீதிமன்றத்தை மிரட்டுவது இந்த நாட்டின் எதிர்காலத்தையும், ஜனநாயகத்தையும், அரசியல் சட்ட ஆளுகையையும் மிகப் பெரிய கேள்விக்குள்ளாக்குகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதிராக வந்தால் ஏற்க முடியாது, இந்த நாட்டையே அழிப்போம் என ஒரு சாரார் கூறும் போது, நீதிமன்றத்திடம் பொறுப்பை கைக்கழுவி விட்டு ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் நினைக்கும் போது வேதனை மட்டுமல்ல, கோபமும் ஏற்படுகிறது. லக்னோ, பைசாபாத், அயோத்தி உள்ளிட்ட அவாத் பகுதி முழுமையிலும் கடும் ஏழ்மையும், உழைப்புச் சுரண்டலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இந்துக்கள், முஸ்லிம்கள் இரு தரப்பிலும் எளிய மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆயிரம் பீடி சுற்றினால் வெறும் 10 ரூபாய் மட்டுமே கூலி. எல்லா நகரங்களிலும் சைக்கிள் ரிக்க்ஷாக்களே அதிகமாக உள்ளன. சென்னையில் ஒரு ஆட்டோ 50 ரூபாய் கூலி கேட்கும் தொலைவை லக்னோவிலும், பைசாபாத்திலும் வெறும் 15 ரூபாய் கொடுத்து ஒரு சைக்கிள் ரிக்க்ஷாவில் கடக்க முடியும். இத்தகைய கடும் சுரண்டல் மத அடிப்படையிலான கருத்தியல்களால் மூடி மறைக்கப்படுகிறது. நாங்கள் சந்தித்த இடதுசாரித் தோழர் ஒருவர் பெரியார் ஈ.வே.ரா. என்றொருவர் வடநாட்டில் பிறக்காமல் போனதின் விளைவு இது எனக் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமூக ஒற்றுமையையும் அதே சமயத்தில் சட்டத்தின் அடிப்படையிலான நீதியையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, கீழ்க்கண்ட வழிமுறைகளே உடனடித் தேவை என நாங்கள் கருதுகிறோம்.

1) நீதிமன்றத் தீர்ப்பு தமக்கு எதிராக வந்தால் இந்த நாட்டையே மத வன்முறையால் அழித்துவிடுவோம் என வெளிப்படையாகப் பேசுகிற சக்திகள் யாராக இருந்தாலும் அவர்களைத் தனிமைப்படுத்த ஜனநாயகத்திலும், மதசார்பின்மையிலும் நம்பிக்கை உள்ள அரசியல் கட்சிகளும், அறிவுஜீவிகளும், சமூக ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.

2) இந்திய அளவில் முக்கியமான அறிவுஜீவிகள், மனித உரிமை ஆர்வலர்கள், வரலாற்று அறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் முதலான  பேச்சுவார்த்தைக் குழு (Interlocutors) ஒன்றை அரசு உருவாக்கி சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்கை எடுக்க வேண்டும். பேச வர மறுப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

3) சட்டப்படியும், நிலவும் மரபுகளின்படியும் 400 ஆண்டுக் காலமாக தொழுகை நடத்தப்பட்ட மசூதியின் உள் மற்றும் வெளிப் பிரகாரங்கள் உள்ளிட்ட எல்லா நிலத்தையும் முஸ்லிம்களுக்கே அளிப்பதுதான் சரியானது. எனினும், நிலவுகிற சூழல்கள் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது, மசூதி இருந்த இடத்தில் மீண்டும் மசூதியையே நிறுவுவது. ஏற்கனவே ராம் சபுத்ரா உள்ளிட்ட பகுதியில் ராமர் கோயில் ஒன்றை நிறுவுவது, அரசுக் கையகப்படுத்தியுள்ள மிகுதியான இடங்களில் சமூக பன்மைத்துவத்தை ஏற்கும் அருங்காட்சியகம், நூலகம், மருத்துவனை, சிறுவர் பூங்கா உள்ளிட்டவற்றை உருவாக்குவது என்பதே சரியாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். . இப்படியான ஒரு முடிவு ஏற்கனவே சுன்னி வக்ப் வாரிய தரப்பிலேயே கூறப்பட்டுள்ளது இங்கு நினைவு கூறத்தக்கது.

4) பச்சை ஏமாற்றாலும், வன்முறையாலும் மசூதியை இடித்து வைக்கப்பட்ட ராமர் சிலைகளையும், தற்காலிக கோயிலையும் ஒரு புனிதத் தலமாக இன்று மாற்றப்பட்டுள்ளதும் இதற்கு அரசே துணைபோகியுள்ளதும் வருத்தமளிக்கிறது. மகாத்மா காந்தி போன்ற உண்மையான ராம பக்தர்கள் இன்று இருந்திருந்தால் இந்த நிலையைக் கண்டித்திருப்பார்கள். முன்னாள் மத்திய உள்துறைச் செயலர் மாதவ் கோட்போல் மேற்கூறிய இதே காரணங்களைச் சொல்லி ராம் லல்லாவை வணங்க மறுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. இதை அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்து மதத் தலைவர்கள் தலைவர்கள் கண்டிக்க வேண்டும்.

5) நீதிமன்றத்திடம் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு அரசியல் கட்சிகள் ஒதுங்கிக் கொள்ளாமல், வகுப்பு வெறியர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டுகிற பணியில் அவை ஈடுபட வேண்டுமென குறிப்பாக மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி மற்றும் அடித்தள சமூகங்களைப் பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு இப் பொது வேண்டுகோளை நாங்கள் விடுக்கிறோம்.

தொடர்புக்கு:

People’s Union for Human Rights (PUHR), Tamilnadu.
Federation for People’s Rights (FPR), Puducherry.

Contact: 3/5, First Cross Street, Sasthri Nagar, Adayar, Chennai – 600 020.

Cell: 9444120582, 9894054640.

E-Mail: professormarx@gmail.com, ko.sugumaran@gmail.com

Friday, October 29, 2010

ரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ரீட்டா மேரி
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படவே வீட்டை விட்டு வெளியேறினார். ஈரோடு பேருந்து நிலையத்தில் அழுது கொண்டு நின்றிருந்த அவரை ஆத்தூரைச் சேர்ந்த விபச்சாரம் நடத்தி வரும் கவிதா, ஆனந்தன் என்பவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். பிறகு அவர்கள் ரீட்டா மேரியிடம், உன்னை பாதுகாப்பான மகளிர் விடுதியில் சேர்த்து விடுகிறோம் என்று கூறினார்கள். இதை உண்மை என்று நம்பி அவர்களுடன் ரீட்டா மேரி புறப்பட்டுச் சென்றார். ஈரோட்டில் இருந்து பேருந்தில் ரீட்டா மேரியை அவர்கள் திண்டிவனத்துக்கு கடத்திச் சென்றனர்.

திண்டிவனத்தில் சாந்தி, ஈஸ்வரி என்ற இரண்டு பெண்கள் விபசார விடுதி நடத்தி வந்தனர். அவர்களிடம் ரீட்டா மேரியை 12 ஆயிரம் ரூபாய்க்கு கவிதாவும் ஆனந்தனும் விற்று விட்டனர். சாந்தி, ஈஸ்வரிக்கு துணையாக ஆனந்தராஜ் என்பவர் இருந்தார். அவர்கள் அனைவரும் சேர்ந்து ரீட்டா மேரியை ஒரு லாட்ஜில் அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தினார்கள்.

அங்கு ரீட்டா மேரியை சந்தித்த செஞ்சியைச் சேர்ந்த நான்கு இளைஞர்களுக்கு அவரது உண்மை நிலை அறிந்து இரக்கம் ஏற்பட்டது. அவர்கள் ரீட்டா மேரியை விபசார கும்பலிடம் இருந்து பிரித்து தப்ப வைத்தனர். இதை அறிந்ததும் அந்த நான்கு இளைஞர்கள் மீது சாந்திக்கும் ஈஸ்வரிக்கும் கடும் கோபம் ஏற்பட்டது. திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் அந்த நான்கு இளைஞர்கள் மீது சாந்தி, ஈஸ்வரி இருவரும் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் அந்த நான்கு இளைஞர்களையும் கைது செய்து அவர்கள் மீது சாராயம் காய்ச்சியதாக வழக்குப் பதிவு செய்தனர். அதுபோல ரீட்டா மேரி மீது சட்ட விரோதமாக லாட்ஜில் தங்கி இருந்து விபசாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி ரீட்டா மேரியை திண்டிவனம் போலீசார் கைது செய்தனர். பிறகு செஞ்சியில் உள்ள கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அப்போது அவரை சிறைக் காவலர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். பலர் மாறி, மாறி பாலியல் வன்கொடுமை செய்ததால், ரீட்டா மேரியின் மனநலம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் திண்டிவனம் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார். அவரது நிலையைக் கண்ட பெண் நீதிபதி சந்தேகப்பட்டு, ரீட்டா மேரிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.

மருத்துவ பரிசோதனையில் ரீட்டா மேரி ஒன்றுக்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து ரீட்டா மேரியை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்கள் மீதும், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனித உரிமை அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.  

இதனைத் தொடர்ந்து செஞ்சி கிளை சிறைக் காவலர்கள் லாசர், ஜெயபால், அன்பழகன், ராமசாமி, சேகர், முருகேசன் ஆகியோர் மீது திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ரீட்டா மேரியை விபசாரத்தில் தள்ளிய கவிதா, ஈஸ்வரி, சாந்தி, ஆனந்தன், ஆனந்தராஜ் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ரீட்டா மேரியின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இச்சம்பவம் பற்றி அப்போது ஐ.ஜி.யாக இருந்த திலகவதி விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்ய  இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இதன்பேரில் ஐ.ஜி. திலகவதி விசாரணை மேற்கொண்டு, ரீட்டா மேரி மீது பாலியல் கொடுமை நடந்ததை உறுதி செய்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதன் பேரில் உயர்நீதிமன்றம் ரீட்டா மேரி வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து திண்டிவனம் விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

2006-ம் ஆண்டு ஜூன் மாதம் திண்டிவனம் விரைவு நீதிமன்ற நீதிபதி தயாளன் ரீட்டா மேரி வழக்கில் தீர்ப்பு வழங்கினார். சிறை காவலர்கள் 6 பேரில் லாசர், ஜெயபால், அன்பழகன், ராமசாமி ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். அவர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற இரு சிறைக் காவலர்களான சேகர், முருகேசன் விடுவிக்கப்பட்டனர்.

விபச்சார கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரில் சாந்தி, ஈஸ்வரி இருவரும் ரீட்டா மேரியை கடும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளக்கியது உறுதிப் படுத்தப்பட்டது. அவர்கள் இருவருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அவர்களுக்கு துணைப் புரிந்த ஆனந்தராஜ், ஆனந்தன், கவிதா மூவருக்கும் தலா 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு அளிக்கப்பட்ட போது அவர்கள் மூன்று பேரும் ஏற்கனவே சிறையில் 4 ஆண்டுகளை கழித்திருந்தனர். இதனால் அவர்கள் மூவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர்.

இதற்கிடையே 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு சிறைக் காவலர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுவில் நாங்கள் எந்த தவறும் செய்யாத அப்பாவிகள். எனவே எங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி இருந்தனர்.

 அந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுதந்திரம் முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் சரவணன் ‘ரீட்டா மேரியை 4 சிறைக் காவலர்களும் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு ரீட்டா மேரி அடைக்கப்பட்டிருந்த பக்கத்து அறை கைதி சாட்சியாக உள்ளார். ரீட்டா மேரியிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் பற்றி அவர் தெளிவாக கூறி உள்ளார். எனவே, நான்கு சிறைக் காவலர்களுக்கும் திண்டிவனம் விரைவு நீதிமன்றம் அளித்த 10 ஆண்டு சிறை தண்டனை சரியானது தான். அதை உறுதி செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

இந்த வழக்கில் நீதிபதி சுதந்திரம் இன்று (29.10.2010) தீர்ப்பளித்தார். அப்போது 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு சிறைக் காவலர்களில் லாசர் மீது மட்டும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. எனவே அவரை விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

சிறைக் காவலர்கள் ஜெயபால், அன்பழகன், ராமசாமி ஆகிய மூவருக்கும் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்ற நீதிபதி சுதந்திரம் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பு ரீட்டா மேரிக்கு நீதிக் கிடைக்கப் போராடிய அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும்.

Tuesday, October 26, 2010

பேராசிரியர் அ. மார்க்ஸ், கோ.சுகுமாரன் அயோத்தி பயணம்!

அ.மார்க்ஸ்
கோ.சுகுமாரன்
அயோத்தி நிலம் தொடர்பான தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் மனித உரிமைக்கான மக்கள் கழகத் தலைவர் பேராசிரியர் அ. மார்க்ஸ்,மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன், ஆகியோர் அயோத்தி பயணம் செல்கின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதியன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 60 ஆண்டுக் காலத்திற்குப் பிறகு வழங்கப்பட்ட இத்தீர்ப்பில் பிரச்சனைக்குரிய இடத்தை மூன்று பிரிவுகளாக பிரித்துக் கொள்ள வேண்டும், பாபர் மசூதி இருந்த இடம்தான் ராமர் பிறந்த இடம் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் கூறப்பட்டிருந்தது.

இத்தீர்ப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. மேலும், கடந்த 16-ம் தேதியன்று லக்னோவில் கூடிய இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் அயோத்தி நிலப் பிரச்சனைக் குறித்து நீதிமன்றத்திற்கு செல்லாமல் வெளியே பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என இந்து, முஸ்லிம் தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்பிரச்சனை குறித்து நேரில் சென்று ஆய்வுச் செய்ய மனித உரிமைக்கான மக்கள் கழகத் (Peoples Union for Human Rights - PUHR) தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் இன்று (26.10.2010) அயோத்தி பயணம் செல்கின்றனர். வரும் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் அயோத்தியில் தங்கியிருந்து, இந்து, முஸ்லிம் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள், அரசியல் நோக்கர்கள், அறிவுஜீவிகள், பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் சந்தித்து கருத்துக் கேட்க உள்ளனர். மேலும், பிரச்சனைக்குரிய இடங்களைப் நேரில் பார்வையிடுகின்றனர்.

பின்னர் தமிழகம் திரும்பியவுடன் கண்டறிந்த உண்மைகளை அறிக்கையாக தயாரித்து சென்னையில் பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிட உள்ளனர். அயோத்தி தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் மனித உரிமை ஆர்வலர்கள் மேற்கொள்ளும் இப்பயணம் முக்கியத்துவம் உடையது.

Sunday, October 24, 2010

கறைபடிந்த நீதித்துறையும், போராட்டமும்.. (3)

இந்திய தலைமை நீதிபதியின் ஊழல் பற்றிப் பார்த்தோம். ஊழல் செய்யும் நீதிபதிகளை எதிர்த்துப் போராட முடியாது என்ற கருத்து பரவலாக மக்களிடம் இருந்து வருகிறது. அதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று நீதித்துறை மீது மக்களுக்கு இருக்கும் இயல்பான அச்சம். இரண்டு நீதிபதிகளை விமர்சித்தால் அது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாக கருதப்பட்டு, தண்டனைக் கிடைக்கும் என்ற பயம். ஆனால், நீதிபதிகளின் ஊழல்களை ஆதாரத்தோடு விமர்சித்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஊழல் நீதிபதியான பி.டி.தினகரன் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வைகை தலைமையில் நடந்த போராட்டம் பற்றி அறிந்திருப்பீர்கள். சில மாதங்களுக்கு முன்னர் அந்த நீதிபதியின் சட்டவிரோதமான நடவடிக்கைகள் பற்றி பத்திரிகைகளும், ஊடகங்களும் வெளிப்படுத்தாத நாளே இல்லை என்று சொல்லலாம். அதேபோல் தலித் மக்களின் உரிமைகளுக்காக அயராது போராடி வரும் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் 90-களில் இருந்து ஊழல் மற்றும் சாதியத்தோடு பணியாற்றிய, பணியாற்றும் நீதிபதிகள் குறித்து மிக வெளிப்படையாக துண்டறிக்கைப் போட்டு விநியோகித்தும், சுவரொட்டி அச்சிட்டு ஒட்டியும், கூட்டங்கள் நடத்தியும் செய்த பிரச்சார நடவடிக்கைகள் போதிய பயன் அளித்தன என்றே சொல்ல வேண்டும். சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும், ஊழல் செய்யும் கீழ்நீதிமன்ற நீதிபதிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அக்கறை காட்டுகின்றனர். ஆனால், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அது அவ்வளவு எளிதானதல்ல என்பதை கடந்த கால அனுபவங்கள் உணர்த்துகின்றன.

ஊழல் செய்வது என்பது ஊழல் தடுப்புச் சட்டப்படி கைது செய்யப்படக் கூடிய (Cognizable Offence) குற்றமாகும். குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி (Criminal Procedure Code) கைது செய்யப்படக் கூடிய குற்றம் அனைத்திற்கும் முதல் தகவல் அறிக்கை (F.I.R.) பதிவுச் செய்யப்பட வேண்டும். ஆனால், நீதிபதிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.வீராசாமி 1974-ல் லஞ்சம் வாங்கும் போது சி.பி.ஐ. போலீசாரிடம் கையும் களவுமாகப் பிடிபட்டார். அவர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், குற்றவியல் சட்டத்திற்குப் புறம்பாக 1991-ல் உச்சநீதிமன்றம் ‘எந்த நீதிபதி மீதும் இந்திய தலைமை நீதிபதியின் அனுமதியின்றி முதல் தகவல் அறிக்கை பதியக் கூடாது’ என்று தீர்ப்பு வழங்கி ஊழல் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழலை உருவாக்கியது. இந்த தீர்ப்புக்குப் பின்னர் இதுநாள்வரையில் எந்தவொரு நீதிபதி மீதும் வழக்குப் பதிய எந்த தலைமை நீதிபதியும் அனுமதி அளிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஊழல் செய்த உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 124 (4) படியும், நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968-ன் படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியரசுத் தலைவர் மூலம் அதுவும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். நீதிபதியின் ஊழல் குறித்த ஆதாரங்களைப் பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்கள் 100 பேர் அல்லது மாநிலங்களவை உறுப்பினர்கள் 50 பேர் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க மூவர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். அக்குழுவில் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஒரு சட்ட வல்லுநர் ஆகியோர் உறுப்பினராக இருப்பார்கள். இக்குழு விசாரணை மேற்கொண்டு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவோடு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் ஊழல் செய்த ஒரு நீதிபதி மீதும் சின்ன நடவடிக்கைகூட எடுக்க முடியவில்லை.

1993-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த, உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி மீது பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு (Impeachment) சுமத்தப்பட்டது. அவர் சண்டிகரில் தலைமை நீதிபதியாக இருந்த போது அவரது அதிகாரபூர்வ இல்லத்திற்கு அளவுக்கு அதிகமாக செலவு செய்தது பற்றி குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க பாராளுமன்றத்தால் அமைக்கப்பட்ட மூவர் குழு முன் அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. காங்கிரஸ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்காததால் அவர் நடவடிக்கையிலிருந்து தப்பித்துக் கொண்டார். அவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்ற காரணத்தைக் காட்டி தி.மு.க. அன்று அந்த ஊழல் நீதிபதியைக் காப்பாற்றியது. வெறும் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆதரவுத் தெரிவித்தனர்.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சென் 1993-ல் ஒரு வழக்கில் 34 லட்ச ரூபாய் பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டும் அவரை மேற்குவங்க ‘லாபி’ காப்பாற்றி வருவதாக செய்திகள் வருகின்றன. அவரை பணியிலிருந்து ராஜினாமா செய்யவும் அல்லது விருப்ப ஓய்வில் செல்லவும் அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியும் அவர் அதனை மதிக்கக்கூட தயாராக இல்லை. அவர் மீது பாராளுமன்றத்தில் 58 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அளித்த குற்றச்சாட்டின் மீது விசாரணை நிலுவையில் உள்ளது. பாராளுமன்றத்தில் நடவடிக்கையை எதிர்கொள்ளும் இரண்டாவது நீதிபதி சவுமித்ரா சென்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவருமான நீதிபதி பி.டி.தினகரன் 540 ஏக்கர் அளவுள்ள புறம்போக்கு நிலங்களையும், தலித் மக்களின் நிலங்களையும் அபகரித்த குற்றச்சாட்டு குறித்தும், அனுமதியின்றி அடுக்குமாடி வணிக வளாகம் கட்டியது உள்ளிட்ட ஏராளமான சட்டவிரோத நடவடிகைகள் பற்றியும் 75 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அளித்த 12 குற்றச்சாட்டுகள் பற்றி பாராளுமன்ற குழு விசாரித்து வருகிறது. அவர் மீது ஆதாரங்கள் பல இருந்தும் அவரை பணிநீக்கம் செய்ய முடியவில்லை. அவருக்கு நீதித்துறை வழங்கியிருக்கும் மிகப் பெரிய தண்டனை, அவரை சிக்கிம் மாநிலத்திற்கு மாற்றல் செய்துள்ளதுதான். இன்றைக்கு தலித் நீதிபதி என்று கூறி பி.டி.தினகரன் செய்த ஊழல்களையும், நில அபகரிப்புகளையும் நியாயப்படுத்தி வரும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.

இந்திய அரசியல் சட்ட மறுஆய்வுக் குழு, 2003 மார்ச் 31-ல் அரசுக்கு அளித்த அறிகையில் நீதிபதிகள் பணிநீக்கம் செய்வது பற்றிய 7-வது அத்தியாயத்தில் தேசிய நீதித்துறை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது. மேலும், நீதிபதிகள் தவறு செய்வதைக் கட்டுப்படுத்த சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது. அதாவது இந்திய தலைமை நீதிபதி மற்றும் இரண்டு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணை மேற்கொண்டு அதன் அறிகையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். குடியரசுத் தலைவர் அந்த அறிகையின் மீது விரிவான விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கைக்காக எழு நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்சுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் மீது உரிய விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் ஊழல் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளது. மேலும், ஊழல் நீதிபதிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தவுடன் அவர்களை வேறு நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்வதை கடுமையாக ஆட்சேபித்துள்ளது.

இந்திய அரசியல் சட்ட அவையில் ஊழல் நீதிபதிகள் மீதான நடவடிக்கை குறித்து அதிகம் விவாதம் நடந்ததாக தெரியவில்லை. ஏன்னென்றால் நீதிபதிகள் இந்தளவு ஊழல் செய்வார்கள் என்று அரசியல் சட்ட அவை உறுப்பினர்கள் கருதவில்லை போலும். அதனால்தான் பாராளுமன்ற குற்றச்சாட்டு மூலம் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் போன்ற சிக்கலான, சாத்தியமற்ற நடைமுறையை கொண்டு வந்தனர் அரசியல் சட்ட அவையினர்.

நீதிபதிகள் மீது பாராளுமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கும் முறையில் பல மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்து. பாராளுமன்றத்தில் 100 உறுப்பினர்கள் கையெழுத்திட்டால்தான் ஊழல் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்ற நிலையை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்படுகிறது. மேலும், ஒரு சில ஊழல் நீதிபதிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதற்காக பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்கும் முறையை எளிதாக்கினால், அது நீதித்துறை மீது அரசியல்வாதிகள் அதிகாரம் செலுத்தும் நிலையை ஏற்படுத்திவிடும் என சில நேர்மையான நீதிபதிகள் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

நீண்ட போராட்டத்திற்குப் பின் ‘நீதிபதிகள் தரம் மற்றும் பொறுப்பாதல் மோசோதா’ பரிசீலிக்கப்பட்டு சென்ற அக்டோபர் 5-ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்ட மசோதாவில் ஒரு சில அம்சங்கள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அதிலுள்ள பெரும்பாலான பிரிவுகள் நீதிபதிகளின் ஊழல்களைத் தடுக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கவில்லை என சட்டவல்லுநர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதனைப் பிறகுப் பார்ப்போம்.

அடுத்த இதழில் முடியும்...


நன்றி: மக்கள் உரிமை.

Friday, October 22, 2010

கல்வி உதவித் தொகை கேட்டுப் போராடிய பாராமெடிக்கல் மாணவர்கள் 415 பேர் கைது!

போராட்டத்தில் பாராமெடிக்கல் மாணவர்கள்..
புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற பாராமெடிக்கல் தொழில்நுட்ப பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் 415 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் பாராமெடிக்கல் தொழில்நுட்ப பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் கல்வி திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்காத புதுச்சேரி அரசை கண்டித்து, கடந்த 18.10.2010 அன்று காலை 11 மணியளவில், மாணவர்கள் சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றனர். அப்போது பெரியக்கடை போலீசார் முற்றுகையிட முயன்ற 115 மாணவிகள் உள்பட 415 மாணவர்களை கைது செய்தனர்.

முன்னதாக காமராஜர் சிலை அருகில் இருந்து மாணவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஜென்மராக்கினி மாதா ஆலயம் அருகில் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சீ.சு.சாமிநாதன் தலைமைத் தாங்கினார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன் முன்னிலை வகித்தார். விடுதலை வேங்கைகள் அமைப்பின் பொருளாளர் மோகன், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் உ.முத்து, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் அஷ்ரப், மாணவர் மற்றும் பெற்றோர் நலச் சங்கத் தலைவர் வை.பாலா,பெற்றோர் ஆசிரியர் நலச் சங்கத் தலைவர் நாராயணசாமி, மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கத்தின் செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.