மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 11.08.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:
பிராந்திய இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அரசு சார்பில் உரிய ஆதாரங்களை முன் வைத்து வாதாடாததால் புதுச்சேரி பகுதிக்கான 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதன் மூலம் புதுச்சேரி அரசு மக்களுக்கு மிகப் பெரும் துரோகம் இழைத்துள்ளதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் சுட்டிக் காட்டுகிறோம்.
புதுச்சேரி அரசு உயர் கல்வியில் காரைக்காலுக்கு 18 சதம், மாகேவிற்கு 4 சதம், யேனாமிற்கு 3 சதம் என மொத்தம் 25 சதவீத இடஒதுக்கீட்டை பிராந்திய அளவில் வழங்கி கடந்த 2006-ல் உத்தரவிட்டது. இதனால், புதுச்சேரி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறி சில சட்டமன்ற உறுப்பினர்கள் மீதமுள்ள 75 சதவீத இடஒதுக்கீட்டை புதுச்சேரி பகுதிக்கு ஒதுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து அரசு புதுச்சேரி பகுதி மாணவர்களுக்கு 75 சதவீத இடங்களை ஒதுக்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், பிராந்திய இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் கடந்த 6.8.2010 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், புதுச்சேரிக்கான பிராந்திய இடஒதுக்கீட்டை நியாயப்படுத்தியும், அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தின் முன் வைக்காததாலும் தான் புதுச்சேரிக்கான பிராந்திய இடஒதுக்கீட்டை ரத்து செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். இதன் மூலம் புதுச்சேரி பகுதிக்கான 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு தீர்ப்பு வருவதற்கு புதுச்சேரி அரசுதான் முழுக் காரணம் என்பது தெளிவாகிறது.
(Judgment Para: 34. Thus, in the absence of any material placed before this court, to justify the reservation of 75% of the seats for the Puducherry region, we are inclined to hold that such reservation is bad in law. Accordingly, the reservation in respect of 75% of seats for the Puducherry region requires to be set aside.)
மேலும், இவ்வழக்கில் புதுச்சேரி அரசு சார்பில் ஆஜராகிய கூடுதல் சோலிட்டர் ஜெனரல், புதுச்சேரி பிராந்திய இடஒதுக்கீட்டை தொடர முடியாது என்றும், வரும் 2011 – 2012 கல்வி ஆண்டில் இந்த இடஒதுக்கீடு ரத்து செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசுக்கு அறிவுரை கூறியுள்ளதாக கூறியதை நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். கூடுதல் சோலிட்டர் ஜெனரல் கூறிய அறிவுரையை அடுத்து அரசு புதுச்சேரி பிராந்திய இடஒதுகீட்டை பாதுகாக்க எநதவித நடவடிக்கையும் எடுக்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும், இவ்வழக்கில்
கூடுதல் சோலிட்டர் ஜெனரலுக்கு அரசு சார்பில் எதாவது அறிவுரை வழங்கப்பட்டுள்ளதா என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.
(Judgment Para: 28. … It is relevant to mention at this juncture that the learned Additional Solicitor General appearing for the Government of Puducherry had submitted that he has advised the Government of Puducherry that such reservation for the Puducherry region cannot be sustained and that steps would be taken to delete such reservation from the next academic session i.e. 2011 – 2012.)
புதுச்சேரி பிராந்திய இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம் 3 ஆண்டுகள் புதுச்சேரியில் தொடர்ந்துப் படித்த மாணவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு என்ற அரசின் உத்தரவும் செல்லாததாகிவிட்டது. இதனால், 3 ஆண்டுகள் தொடர்ந்து புதுச்சேரியில் படிக்காத மாணவர்களும் இடஒதுக்கீடு பெற முடியும் என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.
அரசின் இந்த உத்தரவால் 3 ஆண்டுகள் தொடர்ந்து புதுச்சேரியில் படிக்காத மாணவர்கள் சென்டாக்கிற்கு விண்ணப்பம் செய்யாமல் விட்டுவிட்டனர். தற்போது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் இந்த மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, இந்த மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் மீண்டும் அவர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் தகுதிப் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, பின்னர் சென்டாக் கவுன்சிலிங் தொடங்கப்பட வேண்டும்.
புதுச்சேரி அரசு சார்பில் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து புதுச்சேரி பிராந்திய இடஒதுகீட்டைப் பாதுக்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
No comments:
Post a Comment