Tuesday, October 23, 2012

குறைந்த மதிப்பெண் எடுத்ததைக் காரணம் காட்டி கல்விக் கடன் மறுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு!


வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா, கர்நாடகா, கோலார் மாவட்டத்திலுள்ள நூரி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் ரூ. 3.15 லட்சம் கல்விக் கடன் வேண்டி பஞ்சாப் நேஷனல் வங்கியில் விண்ணப்பம் செய்துள்ளார். அந்த வங்கி அவர் பள்ளியில் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளதைக் காரணம் காட்டி அவருக்கு கல்விக் கடன் வழங்காமல் மறுத்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவ்வழக்கை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் 'பள்ளிக்கூடத்தில் மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளதைக் காரணம் காட்டி வங்கி கல்விக்கடன் வழங்க மறுக்கக் கூடாது. இதுகுறித்த வங்கியின் சுற்றறிக்கையில் எங்கும் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு கடன் வழங்கக் கூடாது எனக் குறிப்பிடப்படவில்லை.

மத்திய அரசு பொருளாதாரத்தில் பலவீனமானவர்களுக்கு வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. ரூ. 4 லட்சம் வரை வழங்கப்படும் கடன்களுக்கு முன்றாவது நபரின் கேரன்டி தேவையில்லை. எனவே, அந்த வங்கி கல்விக் கடனை நான்கு வாரத்திற்குள் வழங்க வேண்டும்' எனத் தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதால், நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் 'அம்பேத்கர் மெட்ரிகுலேஷன் தேர்வில் 750க்கு 287 மதிப்பெண் தான் எடுத்துள்ளார். அதனால்தான் அவருடைய படிப்பிற்கு பரோடா மன்னர் பொறுப்பேற்றுக் கொண்டார்' எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு!

1 comment:

Anonymous said...

நாளை அந்தப் பெண் போதிய மதிப்பெண்கள் பெறாமல் தேர்வுகளில் தோல்வியுற்று அக்கடனை திரும்ப கட்டமுடியா நிலை ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள்.வங்கிக் கடன் என்பதை ஊரான் வீட்டு நெய்யே என் கையே என்று நினைத்தபடி வழங்க முடியாது.அரசே நேரடியாக கடன் தரலாமே, எதற்கு வங்கிகள் தர வேண்டும்.வங்கிகளில் உள்ள பணம் பொதுமக்கள் தங்கள் சேமிப்பாக இட்டுள்ள பணம் என்பதையும் நினைவில் கொள்க.அதை பயன்படுத்தி கடன் தரும் போது பொறுப்புணர்வு தேவை.