வளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதானது, இன்னும் சிலர் தேடப்படுவது முதலியன குறித்து முகநூல் பக்கங்களில் நடை பெறும் விவாதம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. கருத்துச் சுதந்திரம், அதன் எல்லை ஆகியன குறித்துக் காலங்காலமாக நடந்து வருகிற ஒரு விவாதத்தின் தொடர்ச்சியே இது. ஒரு இருபதாண்டுகளுக்கு முன் கற்பனை செய்து கூடப் பார்த்திராத அளவிற்குத் தொழில் நுட்ப வளர்ச்சியும் அதன் விளைவான கருத்து வெளிப்பாட்டு முறையும் பெரிய அளவு வளர்ந்துள்ள சூழலில் இன்றைய விவாதம் இன்னும் சற்று விரிந்த தளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டியதாக மாறியுள்ளது.
அச்சு மற்றும் இதழிய வளர்ச்சி என்பது மிகப்பெரிய ஜனநாயக மாற்றங்களில் ஒன்று என்பது யாரும் மறுக்க இயலாத ஒன்று. அதே நேரத்தில் இந்த ‘ஜனநாயக’ ஊடகங்கள் பெரு முதலாளிகளின் பிடியில் இருந்ததன் விளைவாக, இப்படி உருவான கருத்துச் சுதந்திரம் அதன் வெளிப்பாட்டிற்கு முன்னதாகவே ஒரு தணிக்கையை எதிர் கொள்ள வேண்டியதாக இருந்தது. அரசுகளின் கருத்திற்கும் பெரு முதலாளிகளின் கருத்திற்கும் பெரிய வேறுபாடுகள் இருந்ததில்லை என்பதால் இந்தத் தணிக்கை மிகவும் சக்தி வாய்ந்ததாக செயல்பட்டு வந்தது. சமயத்தில் இத்துடன் கூடுதலாக அரசுத் தணிக்கையும் சேர்ந்து கொண்டது.
இருபத்தோராம் நூற்றாண்டின் அடையாளமாக முளைத்துள்ள சமூக வலைத் தளங்கள் இந்த முன் தணிக்கையை இன்று சாத்தியமில்லாமல் செய்துள்ளன. இந்த வலைத் தளங்களும் கூட உலகின் மிகப் பெரிய கார்பொரேட் நிறுவனங்களால் செயல்படுத்தப்படுபவைதான் என்ற போதிலும் இந்தப் புதிய தொழில் நுட்பம் முன்தணிக்கையைச் சாத்தியமில்லாமல் செய்துள்ளது. இது மிகப் பெரிய கருத்துச் சுதந்திர விகசிப்பிற்கு இன்று காரணமாகியுள்ளது. இதுகாறும் எழுதுவதற்குக் களம் கிடைக்காமற் போயிருந்த பலரும் தங்கள் எழுத்து முயற்சிகளை, அரசியல் வெளிப்பாடுகளை எல்லையற்ற சுதந்திரத்துடன் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய தர வர்க்கத்தின் வளர்ச்சி, இத் தொழில் நுட்பம் நாளுக்கு நாள் மலிவாகிப் பரவலாதல் என்பதெல்லாம் இந்தக் கருத்து விசாலிப்பில் மிகப் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளன. இரண்டாண்டுகட்கு முன் அரபுலகில் ஏற்பட்ட புரட்சிகளில் இந்தப் புதிய ஊடகங்கள் வகித்த பங்கைக் கண்டபின்பு அரசுகள் விழித்துக் கொண்டன. இந்த ஊடகங்களைத் தங்கள் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளிலும் இவற்றைக் கடும் கண்காணிப்பிற்குள் கொண்டு வரும் முயற்சியிலும் இறங்கின. சமூக வலைத் தளங்களைச் செயல்படுத்துகிற கார்பொரேட்டுகள் என்ன இருந்தாலும் கார்பொரேட்கள் தானே. அவை ஒரு குறிப்பிட்ட அளவு எதிர்ப்புக் காட்டியபோதும் ஒரு கட்டத்திற்குப் பின் அரசு கெடுபிடிகளுக்கு வளைந்து கொடுக்க ஆரம்பித்தன.
கூடங்குளம் போராட்டத்தை ஒட்டி இன்று இந்தச் சமூக வலைத் தளங்கள் தமிழகத்தில் கடுமையாகக் கண்காணிக்கப் படுகின்றன. புதிய நபர்கள் யாரேனும் அணு உலைகளுக்கு எதிராக ஒரு பதிவை இட்டால், உடன் அவர்கள் வீட்டிற்கு உளவுத் துறையினர் படை எடுக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
சின்மயி விவகாரத்திற்குத் திரும்புவோம். இது தொடர்பான ஷோபாசக்தியின் முக நூல் பதிவு, அதில் தரப்பட்டுள்ள இணைப்புகள், ‘சவுக்கு’ இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள கட்டுரை, சின்மயி வெளியிட்டுள்ள அறிக்கை, தொடர்புடைய சில ட்வீட்டர் பதிவுகள், சில தொலைக் காட்சி விவாதங்கள் ஆகியவற்றைக் காண நேரிட்டது. ஓரளவு பொறுப்புடனும் நடு நிலையுடனும் தத்தம் விவாதங்களை எல்லோரும் முன்வைத்துள்ளனர்.
சென்ற தலைமுறையைச் சேர்ந்த திரை உலக ‘செலிப்ரிட்டிகள்’ போல் பிரச்சினைக்குரிய விஷயங்களில் தலையிடுவதைக் கவனமாகத் தவிர்த்து ஒதுங்கியிராமல், இவர் வளர்ந்து வரும்போதே பல பிரச்சினைகளில் தலையிட்டுக் கருத்துச் சொல்லும் ஆர்வமிக்கவராகத் தெரிகிறது. இதுவும் கூட இந்தத் தலைமுறை உருவாகிவரும் சூழலின் விளை பொருளாக இருக்கலாம். எனினும் இவர் முன்வைக்கும் கருத்துக்கள் பெரும்பாலும் அவரது உயர் சாதி, உயர் மத்திய தர வர்க்கப் பின்னணியின் எல்லைகுட்பட்டதாகவே இருந்துள்ளது. மதவாதம், இட ஒதுக்கீடு முதலிய பிரச்சினைகளில் அவரது கருத்துக்கள் அடித்தள மற்றும் இடது சாரி மனநிலை உடையோரால் ஏற்க முடியாதவையாகவே இருந்துள்ளன. அந்த வகையில் மீனவர் பிரச்சினையில் அவர் நிலைபாடு என்னவாக இருந்திருக்கும் என்பதையும் நம்மால் ஊகிக்க முடிகிறது.
சவுக்கு இணையத் தளம் சரியாகவே சுட்டிக் காட்டியிருப்பதுபோல சின்மயியை ‘வென்றெடுக்கக்’ களம் இறங்கியவர்களின் நோக்கம் அரசியலாக வெளியில் தோற்றமளித்தாலும், ஒரு செலிப்ரிடி, அதுவும் பெண் செலிப்ரிடியுடனான நெருக்கம் என்பதே அவர்களின் முக்கிய லட்சியமாக இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் சின்மயா தன் கருத்துக்களில் பிடிவாதமாக இருந்தபோது அவர்கள், வழக்கமாக ஒரு பெண் இப்படியான சந்தர்ப்பங்களில் எப்படி எதிர் கொள்ளப் படுவாளோ, அப்படியே எதிர் கொண்டுள்ளனர். அவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட ட்வீட்கள் நமக்குக் காணக் கிடைக்கின்றன. சின்மயி சொன்னதாகச் சொல்லப்படும் விவாதத்திற்கு உரிய கருத்துக்களுக்கு நம்பத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. சில இட்டுக் கட்டப்பட்டவையாக உள்ளன.
தன் தரப்புக் கருத்தை சின்மயி வெளிப்படுத்திய பின்பாவது அவர்கள் விட்டிருக்கலாம். அல்லது அவரும் அவரது தாயாரும் தொலை பேசி மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் வேண்டிக் கொண்ட போதிலாவது நிறுத்தியிருக்கலாம். அவர்கள் தமது சீண்டல்களைத் தொடர்ந்துள்ளனர். ஆக, சின்மயி தரப்பினர் காவல்துறையை நாடுவதற்கு எதிர்த் தரப்பினர் ஒரு நியாயத்தை வழங்கியுள்ளனர்.
காவல்துறை படு தீவிரமாகக் களம் இறங்கியதற்குப் பல காரணங்களை ஊகிக்க முடிகிறது. சின்மயியைக் குற்றம் சாட்டுபவர்கள் சொல்வதுபோல அவர் தரப்பில் செய்யப்பட்ட ‘லாபி’, அவரது செலிப்ரிடி அந்தஸ்து, சின்மயியுடன் சேர்த்து முதலமைச்சர் ஜெயலலிதாவையும் ட்வீட்டியவர்கள் அசிங்கமாக எழுதியது…
பொது வெளிக்கு வரக்கூடிய பெண்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் சமூக வலைத் தளங்களில் பங்கேற்கும் பெண்களும் சந்தித்துக் கொண்டிருப்பதை இவற்றைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்போர் உணர முடியும். பாதிக்கப்படும் சிலர் இதை வெளிப்படையாகச் சொல்லி விடுகின்றனர். பலர் இதைச் சொல்வதில்லை. வெளிப்படையான பாலியல் வக்கிரங்களோடு துன்புறுத்துவோர், தமது அரசியல் கறார்த் தன்மை அல்லது ‘புரட்சி’த் தன்மையில் ஒளிந்து கொண்டு துன்புறுத்துவோர் என இவர்களில் குறைந்தபட்சம் இரு ரகங்கள் உண்டு. இன்றைய பிரச்சினையில் சின்மயிக்கு எதிராகக் களம் இறங்கியுள்ளவர்கள் பெண்களுக்கு எதிரான இந்தச் சூழலைக் கவனத்தில் இருத்தத் தவறக்கூடாது.
சின்மயிக்கு எதிராக இன்று முன்வைக்கப்படும் வாதங்களில் ஒன்று, அவர் ஆபாச நடனக் காட்சிகளுக்குப் பாட்டிசைக்கவில்லையா? அவர் ஆபாசப் பாடல் வரிகளைப் பாடவில்லையா என்பது. இது மிகவும் மோசமான ஒரு விவாதம். தாம் வன்புணர்ச்சி செய்யப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படையாகக் குற்றம் சாட்டும்போது நமது ஆணாதிக்கக் கலாச்சாரம் வழக்கமாகச் சொல்லும், ”அவள் என்ன யோக்கியம்? அவள் நடத்தை தவறியவள் தானே?” என்கிற எதிர்க் குற்றச் சாட்டுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? அவள் மீனவர் பிரச்சினையில் தவறாகப் பேசினாள், விளம்பரத்திற்காகப் புகார் கொடுத்தாள் என்றெல்லாம் சொல்வதும் இத்தகையதே. அவரது தவறான கருத்துக்களை எதிர்த்து நாம் கருத்துப் போராட்டம்தான் செய்திருக்க வேண்டுமே ஒழிய அதற்காக மிரட்டுவது, அசிங்கமாக எழுதுவது என்பதெல்லாம் எப்படிச் சரியாகும்?
முன்தணிக்கை சாத்தியமில்லாத இந்த ஊடகத்தில் பங்கு பெறும் நமக்கு அதிகப் பொறுப்புணர்ச்சி வேண்டும். என்ன வேண்டுமானலும் அவதூறுகளை அள்ளி வீசுவது, பொய்க் குற்றச்சாட்டுகளைக் கக்குவது, பெண்களாயின் அவர்களின் ஒழுக்கத்தைப் பொது வெளியில் கேள்விக்குள்ளாக்குவது, இவற்றை எப்படி நியாயப்படுத்த இயலும்?
புகார் கொடுப்பதன் மூலம் கருத்துச் சுதந்திரதிற்கு ஆப்பு வைக்கப் படுகிறது என்பது சின்மயி எதிர்ப்பாளர்களின் இன்னொரு விவாதம். ஒரு பெண்ணை இப்படித் தாக்கி அவளை வாய்மூட வைப்பதும். சமூக வலைத் தளத்திலிருந்து ஓடவைப்பதும் மட்டும் கருத்துச் சுதந்திரப் பறிப்பு இல்லையா? சுப்பிரமணிய சாமி ட்வீட்டரில் சோனியாகாந்தியை ‘விஷக் கன்னி’ எனச் சொல்வதை சோனியா தாங்கிக் கொள்ளவில்லையா, பொது வெளிக்கு வந்த நீயும் ஏன் சும்மா இருக்கக் கூடாது? என்பது இன்னொரு விவாதம். ஒரு முழு நேர அரசியல்வாதியைப் பார்த்து ‘விஷக் கன்னி’ அல்லது ‘அமெரிக்க அடிவருடி’ எனச் சொல்வதற்கும் வலைத் தளத்தில் எழுதத் தொடங்கியுள்ள ஒரு பெண்ணைப்பார்த்து, “நீ வேசி” எனச் சொல்வதற்கும் வேறுபாடுகள் உண்டு. ஒருவரது நேர்மை குறித்துப் பொய்க் குற்றச் சாட்டுகள் வைப்பது, அவரது அனுமதியின்றி அவரது படங்களை இழிவு செய்யும் நோக்குடன் வெளியிடுவது எல்லாமும் இத்தகையதே. இணையத் தளத்தில் எழுத வந்தவர்களுக்கு அற உணர்வு சார்ந்த சுய தணிக்கை தேவை. அரசியல் கறார்த் தன்மை, கொள்கை உறுதிப்பாடு முதலான எதன் பெயராலும் இந்த அற உணர்வை இழக்கலாகாது.
எள்ளளவும் இது குறித்துக் கவலைப்படாமல் எதை வேண்டுமானலும் எழுதுவது, பின் இதுபோலப் பிரச்சினையை எதிர் கொள்ள நேர்ந்தால் பம்மிப் பின் வாங்குவது என்பது வழக்கமாகிவிட்டது.
சின்மயிக்கு ஒரு வார்த்தை. பொதுக் களத்திற்கு வரும்போது பல மாதிரியானவர்களையும் சந்திக்க நேரும். இன்று இந்தப் பிரச்சினை பெரிய அளவில் பேசப்பட்டுவிட்டது. உங்களைத் துன்புறுத்தியவர்களுக்கு இதுவே போதிய தண்டனை. உங்கள் புகாரை இந்தக் கணத்தில் நீங்கள் திரும்பப் பெறுவது ஒரு நல்ல முடிவாக இருக்கும்.
இந்தப் புகாரின் அடிப்படையில் இந்தப் பிரச்சினையில் அவ்வளவாகத் தொடர்பில்லாத சிலரை சின்மயி கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தொல்லை செய்வதாக நேற்று காலை ஒரு நண்பர் கூறினார். அது உண்மையாயின் மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று இது. ஏற்கனவே பெண்கள் கொடுத்துள்ள 19 புகார்களில் ஒன்றும் நடவடிக்கை இல்லாதபோது, இதில் மட்டும் ஏன் இந்தத் தீவிரம் என்கிற கேள்விக்கே பதிலளிக்க இயலாத காவல்துறை இத்தகைய அத்துமீறல்களை, அவை உண்மையாயின் கைவிட வேண்டும்.
பார்க்க:
1. சின்மயியிடம் சில கேள்விகள்
2. சின்மயி செய்தது சரியா? – பி.பி.சி. தமிழ்
3. ஷோபா சக்தி
4. ட்விட்டர்ஸ் கைது (ராஜன் லீக்ஸ்) - சொல்லும் பாடம் என்ன?
5. சின்மயி - சவுக்கு
6. இணையத் தளத் தணிக்கை சரியா? சாத்தியமா? ஒரு குறிப்பு - அ.மார்க்ஸ்
3 comments:
நேற்றும் இன்றும் சில பேர் சின்மயி விவகாரத்தை பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் விவகாரமாக்க கடும் முயற்சி செய்வது அல்லது அவ்வாறு செய்ய விரும்புவது தெரிகிறது. சின்மயியின் பிறப்பு குறித்து அவருக்கு இல்லாத அக்கறை இவர்களுக்கு எதற்கு? இந்த முற்போக்குவாதிகள் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்ன பெரியாரை என்ன சொல்வார்களோ? ஆணாதிக்க அடாவடித்தனத்தை வெளிப்படுத்தி விட்டு நான் முற்போக்காளன் சமூகப் போராளி என்றெல்லாம் பீலா விடுவது இப்போதெல்லாம் ஃபேஷன் ஆகி விட்டது. இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பார்த்து வருகிறேன். சாதியைப் பார்த்து கருத்து சொல்வது கூட நடக்கிறது. இன்ன சாதியாருக்கு இன்னக் கருத்துத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணுவது திராவிட அரசியல் பண்போ? பேரறிஞர் அண்ணாவிடம் அத்தகைய அரசியல் அறிவு இருந்ததாக தெரியவில்லை.. இக்கால பார்ப்பனரல்லாதார் எனத் தன்னைக் கருதிக் கொள்ளும் அரசியல் சிந்தனையுடைய ஆண்/பெண் இருவருக்கும் கடுமையான மன அழுத்தம் இருக்கும் போல! ஏதோவொரு நிச்சயமின்மையுடனே அவர்களால் பேச முடிகிறது... அது என்னவென்று தெரிந்தால் பரவாயில்லை.. தங்கள் கருத்துக்களை ஒருவர் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களை வைரிகளாக ஏற்பது எப்படியோ? வைகோ, நெடுமாறன் போன்ற முதிர்ந்த தலைவர்கள் இது குறித்தும் சிந்திக்க வேண்டும். இதர சிந்தனையாளர்களும் இது குறித்து பொதுக் கருத்தை எட்ட முயல வேண்டும். மனித உரிமை பேசுவோரும் இதில் ஈடுபட்டால் நல்லது.
நல்ல பதிவு..உங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்..
நன்றி..
கேள்வி என்னவெனில் "அந்த ஹசந்த விஜேநாயக என்னும் சிங்கள கார்டுனிஸ்ட் நாயிற்கும், ராஜன் லீக்ஸ் அன்ட் கோவிற்கும் என்ன வித்தியாசம்?". அவனாவது ஒரு கார்டூன் படத்துடன் நின்று விட்டான்/ அல்லது நிறுத்தப்பட்டு விட்டான். ஆனால் இவர்கள் மீண்டும் மீண்டும் தமிழக முதல்வரை, ஒரு மாநிலத்தின் முதல் பெண்மணியை, அவர்களது தாயினும் வயதில் மூத்தவராக இருக்க கூடிய ஒரு பெண்மணியை மிகவும் வக்கிரத்தனமாக, மிகவும் ஆபசாமாக , அருவருப்பாக, தரக்குறைவாக ட்வீட்டி உள்ளார்களே. இதற்கு காரணம் என்ன? அவனாவது துவேஷ இனவெறி பிடித்தவன், தமிழர்களையே இழிவாக எண்ணுபவன். ஆனால் பச்சை தமிழர்களாகிய, தமிழ் நாட்டில் வாழும் இவர்கள் தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக இவ்வாறு ஆணாதிக்க ஆபாச கருத்துகளை வெளியிட்டதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? இவர்களும் அந்த நாய்களின் கூடாரத்தை சேர்ந்தவர்களோ? . தான் ஒரு ஆண், தான் ஒரு பெண்ணை பற்றி, அவர் நாட்டின் முதல்வராகவே இருந்தாலும் என்ன வேண்டுமானாலும், எவ்வளவு ஆபாசமாக வேண்டுமானாலும் கூறலாம் என்று இவர்களை எண்ண வைத்த காரணி என்ன? இதுதான் நீங்கள் கூறும் கருத்து சுதந்திரமோ? பதிவர்களே, டிவிட்டர்களே?
Post a Comment