"கொங்கு நாடு" என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழைத் திட்டித் தீர்த்து பலரும் கோவத்தை வெளிக்காட்டி உள்ளனர். இது என்ன தினமலர் நாளிதழின் சதியா? இல்லை.
இந்திய ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் "கொங்கு நாடு" என்று குறிப்பிட்டது, தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டது என்ற பின்னணியோடு இச்செய்தியைப் பார்க்க வேண்டும். அதோடு, "Pushing For Kongu Nadu — BJP Backers Needle Ruling DMK With Separate State Question" என்ற தலைப்பில் ஆர்.எஸ்.எஸ். இதழான "Swarajyam" ஒரு குறிப்பு எழுதியுள்ளது.
மொழிவழி மாநிலம் என்பது மகாத்மா காந்தியின் எண்ணம் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் இராமச்சந்திர குகா. 1918-இல் மொழிவழி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்று காந்தி கூறியுள்ளார். ஆனால், நேரு 1950 வரையில் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. முதலில் காங்கிரஸ் கமிட்டிகளை மொழிவழியில் பிரித்து அமைக்கிறார் காந்தி. அதற்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்துள்ளது. மேலும், மொழிவழி மாநிலம் அமைய அந்தந்தப் பகுதிகளில் நடந்த போராட்டங்களும் உயிர் ஈகங்களும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது. இதுவொரு நீண்ட வரலாறு.
இந்திய ஒன்றியத்தைக் கூறுபோடுவது என்பது ஆர்.எஸ்.எஸ். நீண்ட காலமாக வைத்திருக்கும் திட்டம். இந்திய ஒன்றியத்தில் 74 புதிய பிரதேசங்கள் உருவாக்க வேண்டுமென்பதே ஆர்.எஸ்.எஸ். கொள்கை. இதை நோக்கியே, இந்திய ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது. ஒருபுறம் காந்தியின் கொள்கையைச் சிதைப்பது. மறுபுறம் தேசிய இன அடையாளத்திற்கு அடித்தளமாக இருக்கும் மொழிவழி மாநிலங்களைக் கூறுபோடுவது. இதன் மூலம் தேசிய இன ஓர்மையைச் சிதைத்து தன் மதவாத அரசியலை நிலைநாட்டுவது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் நான்கு அல்லது ஐந்து பகுதியாக பிரித்து எல்லாவற்றுக்கும் "நாடு" என்ற பெயரைச் சூட்டுவது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நீண்ட காலத் திட்டம். தற்போது, இத்திட்டத்தைக் "கொங்கு நாடு" என்றிலிருந்து தொடங்க உள்ளனர். இதற்கான கருத்தியல் மோதல் (Ideological conflict) உருவாக்கவும் செய்வார்கள். இப்போழுதே, கொங்கு நாட்டிற்கு ஆதரவாக பேசுகிறவர்கள் சென்னைக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கிவிட்டனர். தமிழ்நாடு அரசியல் ரீதியாக பாஜகவிற்குச் சாதகமாக இல்லாததும், தமிழர்களிடத்தில் தமிழ், தமிழினம், தமிழ்நாடு என்ற உணர்வு வேரூன்றி இருப்பதும் இந்தப் பிரிவினைத் திட்டத்திற்கு மூலமான காரணம்.
ஏற்கனவே, பாமக நிறுவநர் மருத்துவர் இராமதாசு வடநாடு X தென்னாடு என்ற முரணை முன்நிறுத்தி "வட தமிழ்நாடு" தனியாக பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறார். சிறியவை சிறந்தது என்று தொடர்ந்து எழுதி வருகிறார். வட தமிழ்நாடு கோரிக்கைக்கு வன்னியர்கள் மத்தியில் கணிசமான ஆதரவும் உள்ளது. இது ஆர்.எஸ்.எஸ். அரசியலுக்குத் துணைபுரிகிறது.
காஷ்மீர் நிலப்பரப்பை மூன்றாக பிரித்ததுடன் இந்திய அரசியல் சட்டம் பிரிவு 370-இன்படி வழங்கப்பட்ட சிறப்புத் தகுதியையும் நீக்கப்பட்டதற்குக் காஷ்மீர் தவிர்த்து இந்திய ஒன்றியத்தில் பெரும் எதிர்ப்புக் கிளம்பவில்லை என்பதில் இதுபோன்ற மாநிலங்களைக் கூறுபோடுவதில் பாஜகவினர் ஊக்கமடைந்துள்ளனர்.
பாஜக அரசியலுக்குப் பின்னால் கார்ப்பரேட் நலன் அரசியல் இருக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். "கொங்கு நாடு" அரசியலுக்குப் பின்னால் கார்ப்பரேட்களின் மிகப்பெரும் வலைப்பின்னல் கொண்ட கனிம வள சுரண்டலும் உள்ளது. எட்டு வழிச் சாலைத் திட்டம் செயல்படுத்த முடியாமல் போனதும் இப்பிரிவினை நோக்கத்திற்கு முக்கிய காரணம். இதுகுறித்து இன்னமும் ஆய்வு செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டு திமுக அரசு இந்தப் பிரிவினை முயற்சியை எப்படி தடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment